அந்த முகமூடி உண்மையிலே மனித தோலினால் செய்யப்பட்டது என்பதால் முகத்தில் எளிதில் ஒட்டிக் கொள்ளும். ஆனால் வெகு நேரம் வைத்திருந்தால் ஒரு மாதிரி ஊறல் எடுக்க ஆரம்பிக்கும். அதனால் அவ்வபோது கழட்டி கழட்டி மாட்டிக் கொள்வான். அந்த விஷயத்தில் தான் சத்யாவிடம் மாட்டிக் கொண்டான்.

இப்போது எப்படி தப்பிக்க என்ற பயங்கர குழப்பத்தில் இருந்தான். அப்போது அவன் மொபைல் அடித்தது. எடுத்துப் பார்த்தான். சர்வேஷ் என்று வந்தது.

அவன் அவனுடைய தலைவன். அதை எடுத்தவன் “சொல்லுங்க ஜி”, என்றான்.

“எங்க இருக்க அகில்?”, என்று கேட்டதும் அவன் நடந்த அத்தனையையும் சொல்ல “முட்டாள் முட்டாள், இப்படியா மாட்டுவ? கொஞ்சம் பொறுமையா இருன்னு எத்தனை தடவை சொன்னேன்? இப்ப அந்த மாலினி குணா வேற மாட்டிக்கிட்டாங்க போல? என்ன பண்ணுறது?”, என்று கோபத்துடன் கேட்டான் சர்வேஷ்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல ஜி. அவங்க எதுவும் சொல்ல மாட்டாங்க. இன்னும் சொல்லப் போனா அவங்களுக்கு உங்களைப் பத்தியோ நம்ம தொழில் பத்தியோ எதுவும் தெரியாது”

“அது தெரியாது தான். ஆனா நீ குணா கிட்ட தானே டிரக்ஸ் கொடுத்து அந்த பொண்ணுக்கு கொடுக்கச் சொன்ன? அது மூலமா டிரெஸ் பண்ணா நம்ம சாம்ராஜியம் எல்லாம் சரிஞ்சிரும். மாலினி, குணாவை நான் பாத்துக்குறேன். ஆனா உனக்கு ஒரு நாள் டைம் தரேன். உன் பர்சனல் வெஞ்சன்சை முடிச்சிட்டு நம்ம இடத்துக்கு வந்து சேர். நாளைக்கு நைட் எட்டு மணிக்கு உனக்கு பிளைட். நம்ம டாக்டர் உனக்கு ஒரு புது முகமூடியை தருவார். அந்த முகத்துக்காக செஞ்ச பாஸ்போர்ட் கூட வந்துரும். எனக்கு நீ வேணும். உன்னை என்னால மிஸ் பண்ண முடியாது. கொஞ்ச நாள் நீ சிங்கப்பூர்ல இரு. அப்ப தான் எல்லாம் சரியா வரும்”, என்று சொல்ல அகில் சரி என்று சொன்னதும் போனை வைத்து விட்டான்.

ஒரு நாள் இது போதுமே அகிலுக்கு. அந்த சத்யாவைப் பழி வாங்க. ஒரு நாள் அவனுக்கு தாராளமாக போதும். ஆனால் முன்பு போல அவசரப் பட முடியாது. நிறுத்தி நிதானமாக அடிக்க வேண்டும். இத்தனை நாள் அவன் சந்தோஷம் தான் அகிலுக்கு கோவமாக இருந்தது. இப்போது அந்த சத்யாவே உயிரோடு இருக்க கூடாது என்று முடிவு எடுத்தான்.

என்ன செய்யலாம்? இப்போது அந்த சத்யாவும் கொஞ்சம் கவனமாக இருப்பான். எளிதில் சிக்க மாட்டான். ஸ்ரீ விஷயத்தில் அனைவரும் உஷார் ஆகியிருப்பார்கள் என்று அவனுக்கே தெரியும்.

தந்திரமாக தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தான். “கொஞ்ச நேரம் சிரி சத்யா. இன்னும் கொஞ்ச நேரம் நல்லா சிரிச்சிக்கோ. அதுக்கப்புறம் நீ இந்த உலகத்துலே இருக்க மாட்ட. நீ இல்லைன்னா உன் அப்பன் அழுவான். எனக்கு அது போதும்”, என்று சொல்லிக் கொண்டான்.

ஆனால் அடுத்த நாள் அந்த பெரிய பள்ளத்தாக்கு அருகே ஒரு ஆக்ஸிடெண்ட் நடந்திருப்பதாக நியூஸ் வந்தது. தீவிர விசாரணையில் அது சாரதாவின் மகன் அகில் என்ற தகவல் சாரதாவுக்கு போனது.

உடன் இல்லை என்றாலும் அவன் அவளுக்கு மகன் அல்லவா? அவள் கதறித் துடிக்க சொந்த பந்தம் அனைவரும் அங்கே கூடி விட்டனர்.

அகிலின் தங்கை வேறு ஒரு பக்கம் அலறித் துடித்தாள். தீனா குடும்பம் அகிலின் இன்னொரு மாமா குடும்பம் என அனைவரும் அவனுக்காக அழுதார்கள்.

மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்து கொண்டிருந்தது. அதீத போதையில் கார் வேகமாக செல்லும் போது நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து நடந்திருக்கிறது என்று ரிப்போர்ட் வந்தது.

பிரேத பரிசோதனை முடிந்து அவனது உடலை மருத்துவமனையில் ஒப்படைக்க வீட்டுக்கு மூத்தவரான தீனா தான் கையெழுத்துப் போட்டு வாங்கினார்.

திரும்ப முடியாத தூக்கத்தில் இருந்த அகிலைப் பார்க்கும் போது அவர் கண்கள் கலங்கியது. “ஐயோ நீ பிறந்தப்ப உன் அப்பன் ஊர்ல இல்லைன்னு தாய்மாமாவான என் கிட்ட தானே கொடுத்தாங்க. பூரிச்சு போனேனே டா. இப்ப செத்த பிணமாவும் என் கிட்ட தானே கொடுக்குறாங்க. சாக வேண்டிய வயசா டா உனக்கு? இப்படி  எங்களை எல்லாம் அழ வச்சிட்டு போய்ட்டியே?”, என்று தீனா கதறி அழ மற்றவர்களும் அழுதார்கள்.

அனைவருக்கும் அகிலின் இறப்பு கஷ்டமாக தான் இருந்தது. ஆனாலும் விதியை ஏற்றுக் கொண்டு தானே ஆக வேண்டும்.

சர்வேஷ்க்கு தகவல் செல்ல அவனுக்கும் கஷ்டமாக இருந்தது. “கொஞ்சம் பொறுமையா இருன்னு சொன்னேனே டா?”, என்று மட்டும் எண்ணிக் கொண்டான். ஆனாலும் அவனுக்கு கண்டிப்பாக தெரிந்திருந்தது இது ஆக்ஸிடெண்ட் இல்லை என்று. ஏனென்றால் அவ்வளவு போதை எல்லாம் அகில் எடுக்க மாட்டான். ஆனால் இதை அவன் விசாரிக்க முடியாது. அவனே மறைமுகமாக போதை கடத்தல் செய்து கொண்டிருக்கிறான். அதனால் இதை அப்படியே விட்டுச் செல்வது தானே அவனுக்கு நல்லது. அந்த ஒற்றை இரவில் அகிலுக்கு என்ன ஆனது என்று யாருக்கும் எதுவும் தெரிய வில்லை.

மற்ற யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை. ஏனென்றால் அவர்கள் அறிந்து அகில் ஒரு போதைக்கு அடிமையான ஒரு ஆள். அதனால் நிச்சயம் இது விபத்து என்றே நினைத்தார்கள்.

அகிலின் கடைசி காரியம் எல்லாம் நல்ல படியாக முடிந்தது. ஒருவன் எதற்கு பிறந்தான் எதற்காக வளர்ந்தான் எதற்காக இறந்தான் என்று தெரியாமலே அவன் சகாப்தம் முடிவடைந்திருந்தது.

சாரதாவை தவிர மற்ற யாருக்கும் அந்த அளவுக்கு மனதை பாதிக்க வில்லை. என்ன இந்த சின்ன வயதில் அவனுக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம் என்று மட்டும் எண்ணிக் கொண்டார்கள். சில விஷயங்களையும் சில மனிதர்களையும் நம்மால் எளிதில் கடந்து விட முடியும். அப்படி தான் அகிலும்.

அடுத்த பத்து நாட்களில் குல்கர்னி மற்றும் அம்சவேணியைத் தேடி வந்து விட்டார்கள் தீனாவும் பாமாவும்.

“வாங்க வாங்க”, என்று அவர்களை வரவேற்று அமர வைத்தார்கள்.

“எங்க என்னோட மருமக?”, என்று கேட்டார் தீனா.

“வீணா இங்க வா. யார் வந்திருக்கான்னு பாரு?”, என்றார் குல்கர்னி.

அங்கே வந்த வீணா “வாங்க மாமா, வாங்க அத்தை”, என்றாள்.

            அவளுக்கு கோபம் சத்யா மீது தானே தவிர இவர்கள் மீது இல்லையே. “இங்க வா மா, வந்து உக்காரு”, என்று பாமா அழைக்க அவள் அருகில் சென்று அமர்ந்தாள்.

            வாங்கி வந்திருந்த மல்லிகைப் பூவை அவளுக்கு அணிவித்த பாமா “ஸ்கூல்க்கு போய்ட்டு வந்துட்டியா டா?”, என்று கேட்டாள்.

            “ஆமா அத்தை, பசங்களுக்கு எக்ஸாம் நடக்குது. அதனால சீக்கிரம் விட்டுட்டாங்க? ஸ்ரீயையும் கூட்டிட்டு வந்துருக்கலாம்ல?”

            “உனக்கு அவளைப் பத்தி தெரியாதா? நீங்க தான் தினமும் பேசுறீங்களே? அவ இப்ப சாதாரணமா இருந்தாலும் முழுசா அதுல இருந்து வெளிய வரலை. எக்ஸாம் வரைக்கும் வீட்ல இருந்து படிக்கிறேன்னு சொல்லிட்டா. அந்த குணாவைக் கூட யாரோ கொன்னுட்டாங்க. அகிலும் இப்ப உயிரோட இல்லை. ஆனாலும் பயப்படுறா. இதுல ஒரே ஒரு நல்ல விஷயம் அந்த அகில் ஸ்ரீக்கு செஞ்சது, எங்களை பழி வாங்க நினைச்சது எல்லாம் சாரதாவுக்கு தெரியாது. தெரிஞ்சா துடிச்சு போயிருவா. எதுக்கு செத்துப் போனவனை பத்தி பேசணும்னு விட்டுட்டோம்”, என்றாள் பாமா.

            “மறக்க வேண்டிய விஷயங்களை பேசாத பாமா”, என்று சொன்ன தீனா “என்ன மா மருமகளே, எங்க மகளை மட்டும் கேக்குற? எங்க மகனைப் பத்தி எதுவும் கேக்க மாட்டிக்கிற? இன்னும் அவன் மேல இருக்குற கோபம் போகலையா?”, என்று கேட்டார்.

            “அது எப்படி மாமா உடனே போகும்? என்ன தான் சிட்டுவேஷன் அப்படி ஆனாலும் மிதுனை எப்படி அவங்க அப்படி சொல்லலாம்?”, என்று கேட்க “என்ன என் பேர் அடிபடுது?”, என்ற மிதுன் குரல் கேட்டது. அனைவரும் அங்கே திரும்ப மிதுன்  அங்கே புன்னகையுடன் நிற்க அவன் தோள் மீது கை போட்டவாரே சத்யாவும் நின்றான்.

            அங்கே சத்யாவை எதிர்பார்க்காததால் வீணா அமைதியாக சத்யாவும் அவளைப் பார்த்த படியே வந்து அமர்ந்தான்.

            “இங்க பாரு வீணா நீயே சொல்ற சிட்டுவேஷன் அப்படின்னு. மாம்ஸ் என் கிட்ட பல தடவை மன்னிப்பு கேட்டுட்டாங்க. நானும் அதை பெருசா எடுக்கலை. இன்னும் சொல்லப் போனா உன்னை யாராவது அப்படி பண்ணினா நானும் சந்தேகத்துல அப்படி தான் பண்ணிருப்பேன். அதுக்குன்னு நீ இன்னும் மாம்ஸ் மேல கோபமா இருப்பியா?”, என்று மிதுன் கேட்க அனைவரின் முன்னிலையிலும் அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை.

            அவள் அமைதியாக இருக்க “நாங்க இப்ப உங்க கல்யாண விஷயம் பேச தான் மா வந்தோம். இன்னும் பத்து நாள்ல நல்ல முகூர்த்தம் இருக்கு. அன்னைக்கே உங்க கல்யாணம் வச்சிக்கலாம்னு தோணுது. அது பத்தி பேச தான் வந்தோம். ஆனா நீ முறுக்கிட்டு இருக்குறதைப் பாத்தா இன்னும் உனக்கு நாள் தேவைப் படும் போலயே?”, என்றார் தீனா.

            “அப்படி எல்லாம் இல்லை மாமா. அப்படியே கோபம் இருந்தாலும் கூட தானே இருக்க போறார்? பழி வாங்க எனக்கு சந்தர்ப்பமா வராது?”, என்று அவள் சிரிப்புடன் கேட்க அனைவருக்கும் சிரிப்பு வந்தது.

            “மாம்ஸ் கொஞ்சம் கவனமா இருங்க”, என்று மிதுன் சொல்ல சத்யா புன்னகையுடன் இருந்தானே தவிர வாயே திறக்க வில்லை.

            “இவன் என்ன நாம இப்படி சொல்லியும் அமைதியா இருக்கான். இவன் அப்படிப் பட்ட ஆள் இல்லையே”, என்று எண்ணிக் கொண்டாள் வீணா.

            அடுத்து வந்த  நிமிடங்கள் அவர்கள் திருமணம் பற்றிய பேச்சு வார்த்தையாக தான் இருந்தது. ஏற்கனவே பேசி வைத்த படி அனைத்து காரியங்களையும் எப்படிச் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள்.