பத்து இலக்கங்கள் பரிமாறப்பட்டிருக்க,
காலை மற்றும் இரவு வாழ்த்தில் துவங்கிய குறுஞ்செய்திகள் யாவும் இப்போது குறுஞ்சிரிப்புகளாய் மாறிப் போயிருந்தன. கைபேசியின் திரை மிளிர்ந்தாலே அந்த ஒருவருடைய செய்தியை மனம் எதிர்பார்க்கத் துவங்கியது.
இருவரின் தினசரிகள், பழக்க வழக்கங்கள் பழகிப் போயிருந்தன. அதோடே நாளொன்றிற்கு அன்பும், அக்கறையும் கூடிக்கொண்டே போனது.
தினமும் ஒருமுறையேனும் இருவரது குரல்களும் சந்தித்துக்கொள்ள விரும்பின. குறுஞ்செய்திகள் மறைந்துபோய் இப்போது அழைப்புகளுக்காய்க் காத்திருக்க வேண்டியிருந்தது.
அதுவும் ஒரு கட்டத்தில் நீண்ட காத்திருப்பாய் மாறிப்போய் இருக்க.. வார சந்திப்புகள் அதன் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளத் துவங்கின.
வாரத்தின் ஏழு நாட்களும் ஏழு மலைகளாய்த் தோன்ற.. சந்திப்புகள் அதன் இடைவெளியைக் குறைக்கத் துவங்கின.
மகிழினியின் ஒரு நாள் என்பதில் முக்கால்வாசி கெளதம் என்றாகிப் போனான்.
அவளது வட்டங்கள் எல்லாம் இப்போது நீளக் கோடுகளாய் உருமாறி அவளை எல்லைகளில்லாத உலகத்தில் உல்லாசமாய் உலவ விட்டிருந்தது.
அந்த நீளக் கோட்டின் உடன் கோடாய் கெளதம் பயணித்தான்.
அவனால் அவளது உலகத்தைப் பற்றியான கண்ணோட்டத்தை மாற்ற முடிந்ததா என்று தெரியாது. ஆனால் அவளது உலகமாய் மாற முடிந்தது.
ஏதோ ஒன்றில் தொலைந்து மீள்வதில் தான் வாழ்க்கையின் சுவாரசியம் அடங்கியிருக்கும். அப்படி அவள் இத்தனை நாட்களாய் அவளையே தொலைத்து இன்று அவனுள் அவளைக் கண்டெடுத்தாள்.
அவனோடான கடந்த ஆறு மாத பயணத்தின் முடிவில், அவள் வாழ்க்கை அழகானதாய்.. அர்த்தமானதாய்  மாறியிருந்தது.
அன்றைய தினம் அழகாய்ப் புலர்ந்திருக்க,
ஒரு நீல நிறத்திலான சல்வாரில் தன்னை அழகாய்த் தயார்படுத்திக் கொண்டு கௌதமைச் சந்திக்கத் தயாரானாள் மகிழினி.
‘என்னை மறந்துட்டியே’ என அவளுக்கு நினைவுபடுத்தியது அந்தப் புத்தகம்.
‘உன்னை மறப்பேனா’ என அதை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள்,
அந்தப் புத்தகத்தோடு சேர்த்து அவளையும் அவனிடம் கொடுத்துவிடும் எண்ணத்தில் அவனை வழக்கமாய்ச் சந்திக்கும் மனு’ஸ் கஃபேவிற்கு வரச் சொல்லியிருந்தாள்.
அவனுக்கு முன்பே அவ்விடத்தை நெருங்கியவள், வழக்கமாய் இருவரும் அமரும் இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டு அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.
“ஹலோ! கெளதம். எங்க இருக்கீங்க?”
“பக்கத்துல வந்துட்டேன். டூ மினிட்ஸ்” என்ற மறுமொழியில்,
“ஓகே. வாங்க” என வைத்தவள் மனதில் ஆயிரம் ஆயிரம் ஆசைகளோடு காத்திருந்தாள்.
சில மணித்துளிகளில்,
“மகிழினி” என அவளுக்குப் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்கவும், மெல்லத் திரும்பிப் பார்த்தாள்.
கைகளைக் கட்டிக்கொண்டு அவளை கூர்துளைக்கும் விழிகளோடு சுவரில் சாய்ந்தவாறு நின்றிருந்தவனைக் கண்டதும், அவள் விழிகள் பெரிதாய் விரிந்தது.
யாரை வாழ்நாளில் இனி சந்திக்கவே கூடாது என நினைத்தாளோ அவனை இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அன்று சந்திக்கிறாள்.
அவள் மனதில் இருந்த வெறுப்பும், அருவெருப்பும் துளியும் குறைந்திருக்கவில்லை.
“நீயா” என்றாள் அதை முகத்தில் வெளிப்படுத்தி.
“வேற யாரை எதிர்பார்த்த?” என்ற வினோத்தின் கேள்விக்கு,
“அதை உன்கிட்ட சொல்லணும்னு அவசியம் இல்லை” என்றாள் பல்லைக் கடித்துக்கொண்டு.
அவளை நன்கு ஆராய்ந்தான் வினோத். எப்போதும் தான் பேசினாலே பயந்து போய் அமைதியாய் நிற்கும் மகிழினியைப் பார்த்துப் பழகியவனுக்கு இந்த மகிழினி புதிதாய்த் தெரிந்தாள்.
“பரவாயில்லை நல்லா பேசுறியே” என,
அவன் முகத்தைக் காண விரும்பாதவளாய்த் திரும்பிக் கொண்டாள்.
“சரி கிளம்பு. போலாம்” என்றான் வினோத்.
“எங்க?” என்றாள் எரிச்சலாய்.
“நம்ம வீட்டுக்கு தான்”
“எது நம்ம வீடு? முதல்ல நீ யாரு எனக்கு? என்கிட்ட உனக்கு என்ன உரிமை இருக்கு? உன் முகத்தைக் கூட பார்க்க பிடிக்காம தானே இவ்வளவு தூரம் விலகி வந்திருக்கேன்” என்றதில்,
வாய்விட்டுச் சிரித்த வினோத்,
“நீ இந்த உலகத்தோட எந்த மூலைல இருந்தாலும் உன்னை தேடி கண்டுபிடிப்பேன்னு சொன்னனே” என்று அவளை நெருங்கி,
“நான் யாருனா கேட்ட? என்ன உரிமைனா கேட்ட? என்னைவிட வேற எவனுக்கு உன்மேல உரிமை இருக்கு?” என்று சீர,
“மகிழ்” என்ற அழுத்தக் குரலில் இருவரும் திரும்ப, அங்கே கெளதம் நின்றிருந்தான்.
அப்போது தான் மகிழினிக்கு உயிரே வந்தது.
“யாரு இவரு?” என கெளதம் விசாரிக்க,
“மரியாதை கொடுக்குற அளவுக்கு பெரிய ஆளெல்லாம் இல்லை கெளதம். இவன் ஒரு கேடுகெட்ட ஜென்மம்” என்றாள் வெறுப்பாய்.
“நீ யாரு முதல்ல?” என தெனாவெட்டாய் வினோத் கேட்க,
கெளதம் பதிலளிக்கும் முன் மகிழினியே,
“இவன் கிட்ட பேசி உங்க தரத்தை குறைச்சுக்காதிங்க. நீங்க வாங்க கெளதம் நாம கிளம்பலாம். இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தாலும் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என அவன் கையைப் பிடித்து அழைக்க,
அவள் கையைத் தட்டிவிட்ட வினோத்,
“என்ன அவன் கையைப் பிடிக்குற? இந்த அவளுக்கு வந்துட்டியா நீ. அப்போவே உன் காலை ஒடச்சிருக்கணும். அன்னைக்கு உன்னை சாதாரணமா நெனச்சு விட்டதுக்கு திரும்பவும் ஓடிப்போய் கழுத்தை அறுத்துட்ட” என கட்டுக்கடங்காத ஆத்திரத்தில் அவளருகே செல்ல,
மகிழினியின் தோளைப் பற்றி தன்னிடம் இழுத்திருந்தான் கெளதம்.
“அவ மேல இருந்து முதல்ல கையை எடுடா” என வினோத் கத்தியதில் அங்கிருந்த அனைவரது பார்வையும் அவர்கள் மீது பதிய,
“எடுக்கலைன்னா என்ன பண்ணுவ?” என்ற கெளதம் அவனது மிரட்டலுக்கு எல்லாம் அலட்டிக்கொள்ளவே இல்லை.
“அவளுக்காக நான் என்ன வேணாலும் செய்யுவேன். கொலை பண்ணக் கூட தயங்க மாட்டேன். கையை எடு” என வினோத் சொன்ன மறுநொடி, அவன் கன்னத்தில் பளாரென்று ஒன்றை வைத்திருந்தாள் மகிழினி.
அதில் அதிர்ந்துபோய் வினோத் பார்க்க,
“என்ன சொன்ன.. கொல்லுவியா?” என அவனை எரிப்பதுபோல் பார்த்தவள்,
“நீ கொலைகாரன் தானே. எத்தனை பேரை உயிரோட கொன்னிருக்க. எனக்கு உன்கிட்ட தீர்க்கவேண்டிய கணக்கு நிறைய இருக்கு. ஆனா உன்னை மாதிரி பிச்சைல வாழுறவன் கிட்ட போய் என் பலத்தை காட்ட விரும்பல” என்றவள்,
அவன் கண்களை நேராய்ச் சந்தித்து,
“நீ வாழுறதே எங்க அப்பா அம்மா உனக்குப் போட்ட பிச்சை. அதை மறந்துறாத” என்றுவிட்டு,
“வாங்க கெளதம்” என திரும்பியும் பாராது கௌதமை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
சற்றே நிலை தடுமாறித்தான் போனான் வினோத்.
அவன் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு வேகமாய் வெளியே வந்து பார்த்தபோது அவர்கள் அங்கிருக்கவில்லை. மீண்டும் அவளைத் தவறவிட்டதை நினைத்து தன்னை நொந்துகொண்டான்.
கடற்கரையை ஒட்டிய சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது கௌதமின் கார்.
அதில் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் மகிழினி.
மிதமான சத்தத்தில் பாடல் மட்டும் ஒலித்துக் கொண்டிருக்க,
“அவன் யாரு என்னன்னு கேட்க மாட்டிங்களா கெளதம்?” என மகிழினியே பேச்சை ஆரம்பித்தாள்.
“உனக்கு சொல்லத் தோணுனா சொல்லு. இல்லை நான் தெரிஞ்சுக்க வேண்டாம்னு நெனச்சா தெரிய வேண்டாம்” என்றான்.
அதற்குள் வர வேண்டிய இடத்தை அடைந்திருந்த கெளதம், “இறங்கு மகிழ்” எனவும்தான் அது எந்த இடமென்பதையே கவனித்தாள்.
இருவரும் சென்று ஓரிடத்தில் அமர்ந்தனர்.
அலைகள் ஆர்ப்பரித்து வருவதும் திரும்பிப் போவதுமாய் இருக்க.. அதை சிறிதுநேரம் அமைதியாய்ப் பார்த்திருந்த மகிழினி,
“இந்த அலைகளைப் போலதான் கெளதம் என் வாழ்க்கையும்” என்றாள் பார்வையை விலக்காது.
அதில் அவன் அவள் புறம் பார்த்திருக்க,
“ஒரு கஷ்டம் போய்டுச்சுன்னு ஆசுவாசப் படுறதுக்குள்ள அதைவிட பெருசா இன்னொன்னு திரும்ப வந்துட்டே இருக்கு” என்றவள்,
அவள் கடந்து வந்த பாதையை அவனுக்குக் காட்டினாள்.
எத்தனை நாழிகைகள் அப்படியே நகர்ந்ததென்று இருவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அனைத்தையும் ஒன்று விடாமல் கொட்டித் தீர்த்திருந்தாள் மகிழினி.
கடலலைகளை விட அவள் அகவலைகள் சுனாமிபோல் பெரிதாய் எழுந்து அடங்கமறுத்து உள்ளே பல சேதங்களைச் செய்து சீறிக்கொண்டிருந்தன.
அதை அறிந்தவன் அவள் சற்றே இளைப்பாற தன் தோளில் இடம் கொடுத்தான். தன்னிரு கரங்களால் அவன் கையை ஆதரவாய்ப் பற்றியபடி அவளும் தஞ்சம் புகுந்தாள்.
மேலும் சில மணித்துளிகள் நகர்ந்திருக்க வானம் தூறல் போட ஆரம்பித்தது.
“மகிழ்”
“ஹ்ம்ம்”
“இனி நீ எதைப் பத்தியும் கவலைப்படாத” என்றான் கெளதம்.
அவள் பதிலற்று இருக்க,
“நான் இருக்கேன்” என்றான் ஆறுதலாய் அவள் கரம்பற்றி.
“எவ்வளவு நாளைக்கு கெளதம்?” என்றாள் கடலைப் பார்த்தவாறு.
அதில் எதிர்பார்ப்பு.. ஏமாற்றம்.. விரக்தி எல்லாம் இருந்தது.
அவள் அம்மா, அப்பாவைத் தொடர்ந்து அவள் மாமாவும் அப்படித்தானே கூறினார். நேசித்தவர்களின் பிரிவை இனியொரு முறை அவளால் தாங்கிக்கொள்ள இயலாதவளாய்க் கூறினாள்.
“காலத்துக்கும். உன் கையை விடாம” என்றான் அழுத்தமாய் அகத்திலிருந்து.
அதில் அவன் விழிகளைச் சந்திக்க.. அவள் சொல்ல நினைத்த அனைத்தையும் அவன் சொல்லியிருந்தான்.
“நாம கல்யாணம் செய்துக்கலாமா?”
என்ன சொல்வதென்றே தெரியவில்லை மகிழினிக்கு.
அவள் மனம் அவனுக்குத் தெரியும். அவள் அமைதியும் அவனுக்குப் புரியும். அதனால் அவள் பதில் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவளை அவன் முழுதாய் அறிவான்.
“கொஞ்ச நாள் போகட்டும். எங்க வீட்டுக்கு உன்னை அழைச்சிட்டு போறேன். அப்பா அம்மாகிட்ட விசயத்தை சொல்லி சம்மதம் வாங்கி கல்யாணம் செய்துக்கலாம்” என்றான் தீர்க்கமாய்.
அத்தனை ஆர்ப்பரிப்புகளுக்கு மத்தியில் அவளின் அகம் பாயும் அமைதியாய் அவன்.
“நீ என்ன நினைக்குற மகிழ்?” என்றதில்,
தன் கண்களைத் துடைத்துக் கொண்டவள் அவளது கைப்பையைத் தேடி அதிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
‘We are there for each other’
“இனி நீங்களே வெச்சுக்கோங்க”
புத்தகத்தைப் பார்த்திருந்த கெளதம் இப்போது மகிழினியைப் பார்க்க,
“புக்க மட்டும் இல்லை….” என்றவாறே எழுந்தவள் உடையில் படிந்திருந்த மணலைத் தட்டிவிட்டு நடக்க,
மெல்லப் புரிந்தது அவனுக்கு.
“மகிழ்….!”
“நில்லு…”
“என்ன சொன்ன….?”
அவனுக்கு மனம் நிறைந்த புன்னகை ஒன்றை பரிசளித்து காரில் ஏறிக்கொண்டாள் மகிழினி.
அடுத்தடுத்து வந்த நாட்கள் அனைத்தும் அவர்களுக்கு சவாலான நாட்களாய் அமைந்தன.
கௌதமின் வீட்டில் சத்யமூர்த்தி உறுதிப் பேச்சு நிகழ்வை  அவனது விருப்பத்தையும் மீறி ஏற்பாடு செய்திருந்தார்.
வினோத்துக்கு மகிழினியை விடும் எண்ணமே துளியும் இல்லை. அவளைத் தேடி எங்கெங்கோ அலைந்து இறுதியில் அவளது பிஜி வரையுமே வந்திருந்தான்.
விசயம் தெரிந்து கெளதம் அங்கு வரவும், இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு இறுதியில் காவல்துறை தலையீடு வரை சென்றுவிட்டது.
அவர்கள் வினோத்தை எச்சரித்து அனுப்ப,
“நீ எனக்கு தான். எழுதி வெச்சுக்கோ” என்று மகிழினியிடம் ஆக்ரோஷமாய்ச் சொன்னவன்,
“எனக்கு கிடைக்காததை வேற எவனுக்கும் கிடைக்க விடமாட்டேன்” என்று இறுதியாய் கௌதமை ஒரு பார்வை பார்த்துச் சென்றான்.
வினோத் உதிர்த்துச் சென்ற வார்த்தைகள், கௌதமை ஒரு முடிவை நோக்கி நகர்த்தி இருந்தன.
“மகிழ்! உனக்கு என்மேல நம்பிக்கை இருக்கில்ல?” என அவளிடம் கேட்க,
“என்ன இப்படி கேட்குறீங்க” என்றாள்.
“இருக்கா..? இல்லையா..?”
“நீங்க தான் எனக்கு இருக்குற ஒரே நம்பிக்கை” என்றாள்.
“நான் எது செஞ்சாலும் நம்ம நல்லதுக்குத்தான் செய்வேன்னு உனக்கு நம்பிக்கை இருந்தா அடுத்து நான் செய்யப்போற காரியத்துக்கு நீ மறுக்காம என்கூட நிற்கணும்” என்றான்.
அவளும் என்னவென்று தெரியாத போதிலும் அவன் மீதிருந்த நம்பிக்கையால் ஒப்புக்கொண்டாள்.
அதன் பின் அங்கிருந்து கிளம்பி தனது அப்பார்ட்மெண்ட் வந்திருந்த கெளதம், நேரம் தாமதிக்காது விஜய்க்கு அழைத்து
“மாமா! நான் ஒரு பொண்ணை விரும்புறேன். உடனே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணலாம்னு இருக்கேன். நீங்க என்ன நினைக்குறீங்க?” என,
மறுமுனையில் அவனுக்குப் புரை ஏறியது.
“என்னடா சொல்லுற? விளையாடுற நேரமா இது. நான் மீட்டிங்ல இருக்கேன்” என,
“விளையாடுற மாதிரி தெரியுதா உங்களுக்கு. நான் சீரிஸா பேசுறேன்” என்றான் கெளதம்.
விசயத்தின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு,
“ஸாரி. ஒன் எமெர்ஜென்சி” என்று மீட்டிங் அறையிலிருந்து வெளியே வந்த விஜய், கௌதமிடம் என்னவென்று தெளிவாகக் கேட்டான்.
“அவளுக்கு ஒரு பிரச்சனை மாமா. அவளோட மாமா பையன் ஒருத்தன் சைக்கோ மாதிரி அவ எங்க போனாலும் வந்து தொல்லை கொடுக்குறான். அவளை ஏதாவது செஞ்சிடுவானோன்னு பயமா இருக்கு” என,
“வேற வழி இருக்கான்னு பாரு கெளதம்” என்ற விஜய்க்கு,
“அவ வாழ்க்கைல ரொம்ப கஷ்டப்பட்டுட்டா மாமா. இனி அவளுக்கு ஒன்னுனா என்னால தாங்க முடியாது” என்றதில் அவன் பரிதவிப்பைப் புரிந்த விஜய்,
“சரி எது வந்தாலும் பார்த்துக்கலாம். நீ எல்லாம் முடிச்சிட்டு வீட்டுக்கு வா. நாங்களும் வந்துடுறோம். மாமா கிட்ட நான் பேசுறேன்” என்ற விஜய்,
“கீர்த்துக்கு?” எனத் தயங்க,
“அக்காவுக்கு இப்போதைக்கு தெரிய வேண்டாம். நாளைக்கு நானே சொல்லிக்குறேன்” என்றான் கெளதம்.
அதன்பின் சரியென்று விஜய்யும் அழைப்பை வைத்துவிட்டான்.
அப்படித்தான் கெளதம் மகிழினியைத் திருமணம் செய்து வீட்டிற்கும் அழைத்து வந்திருந்தான்.
“அப்பறம் என்ன ஆச்சு?”
கீர்த்தனாவின் குரலில் அனைவரும் அவரவர் நினைவலைகளில் இருந்து நிகழ்காலத்திற்குத் திரும்பினர்.
“அப்பறம் என்ன.. அவ்வளவுதான் கீர்த்து” என்று கெளதம் சொல்ல,
கதையின் முடிவில் விஜய்யைப் பார்த்தாள் கீர்த்தனா.
அவளை கவனித்த விஜய்யோ,
“நீ என்ன கீர்த்து அவனை இன்வெஸ்டிகேட் பண்ணுறதை விட்டுட்டு என்னையவே குறுகுறுன்னு பார்த்துட்டு இருக்க” என,
“அது ஒண்ணுமில்ல.. என்னை மாதிரி ஃபர்ஸ்ட் டைம் அவன் கதையை கேட்குற மாதிரியே கேட்குறீங்களே அதான் பார்த்தேன்” என்றாள்.
“கீர்த்து! நான் தான் உன்கிட்ட சொன்னனே. கடைசி நிமிஷத்துல தான் கெளதம் எனக்கே சொன்னான். அதுவும் ரெஜிஸ்டர் மேரேஜ் பத்திதான். மத்தபடி நீ நினைக்குற மாதிரி எல்லாம் இல்லை” என விஜய் ஆயாசமாய்ச் சொல்ல,
“இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு” என்றாள் அலட்சியமாய்.
அதில் கொஞ்சம் முகம் சோர்ந்துதான் போனது விஜய்க்கு.
இந்தப் பிரச்சனை ஒன்றுதான் கீர்த்தனாவுக்கு விஜய் மீதான நம்பிக்கை சற்று குறையக் காரணமாக அமைந்தது.
தனது தம்பி தன்னிடம் கூட சொல்லாத விசயத்தை விஜய்யிடம் பகிர்ந்திருக்கிறான் என்ற ஏமாற்றமும், அதை விஜய் தன்னிடம் மறைத்துவிட்டான் என்ற ஆதங்கமும் சேர்ந்து கொண்டது அவளுக்கு.
இன்று வரை அது அவள் மனதை விட்டுப்போகாது இப்படி அவர்களுக்குள் தவறான புரிதலைக் கொடுத்திருந்தது.
இதை அப்போது தான் கெளதம் கவனித்திருந்தான்.
தன்னால் அவர்களுக்குள் இப்படியொரு பிரச்சனை உண்டாகியிருப்பது அவனுக்குப் புரிந்தது.
அன்றைய இரவு அவன் விஜய்யோடு பேசிக் கொண்டிருந்ததை கீர்த்தனா கேட்டுவிட, அவளிடம் நடந்ததை எடுத்துக் கூறி விஜய் புரிய வைத்திருப்பான் என்று தான் எண்ணியிருந்தான் கெளதம்.
அவர்களுக்குள் என்ன நடந்தது என்று தெரியாது போக இன்று தான் அது வெளிப்பட்டது.
“அக்கா!”
கௌதமின் இந்த திடீர் அழைப்பில் கீர்த்தனா அவனைப் பார்க்க,
“உனக்கு இப்படி ஒரு தாட் இருக்குன்னு எனக்கு தெரியாம போய்டுச்சு. நீ என்னை புரிஞ்சுப்பன்னு தான் நெனச்சேன். சொல்லக் கூடாதுன்னு எல்லாம் இல்லை” என்றவன்,
“நீ நினைக்குற மாதிரி மாமா மேல எந்த தப்பும் இல்லை. எனக்கு உன்கிட்ட சொல்லி டிஸ்கஸ் பண்ணுற அளவுக்கு டைம் இல்லை. சொன்னாலும் நீ இதுக்கு ஒத்துக்க மாட்டன்னு எனக்கு நல்லாத் தெரியும். சோ நானே டிசைட் பண்ணிட்டு தான் மாமாவுக்கு இன்பார்ம் பண்ணுனேன்” என்றான்.
அவளுக்கு அவன் சொல்வதும் ஏற்புடையதாய் தான் இருந்தது. இருந்தும் மனதின் ஒரு ஓரத்தில்,
“எல்லாம் சரிடா. ஆனா.. இவரு என்கிட்ட மறைப்பாருன்னு நான் எதிர்பார்க்கலை” என வருத்தத்தை வெளிப்படுத்தியவள் கண்களும் கலங்கிப் போனது.
கீர்த்தனாவின் கோணத்தையும் புரிந்து கொண்ட விஜய்,
“சாரி கீர்த்து. நான் சொல்லாம விட்டது உன்னை இந்த அளவுக்கு ஹர்ட் பண்ணியிருக்கும்னு நான் நினைக்கலை.  இனி இப்படி ஒரு விசயம் நடக்காம பார்த்துக்குறேன். அம் ரியலி சாரி” என மனதாரக் கூறினான்.
“என் மேலையும் தப்பு இருக்கு விஜய். அன்னைக்கு ஏதோ கோபத்துல உங்ககிட்ட அப்படி பேசிட்டேன். மனசுல வெச்சுக்காதீங்க” என்றாள் கீர்த்தனா அவள் கூறிய,
‘உங்க ரத்தம்னா இப்படி பண்ணியிருப்பீங்களா’ என்ற வார்த்தைகளை நினைவு கூர்ந்து.
இருவரும் அவரவர் தவறை உணர்ந்து இதுவரை அவர்களுக்குள் இடையே இருந்த மனக்கசப்பை போக்கிக் கொள்ளவும் தான் கௌதமுக்கும், மகிழினிக்கும் நிம்மதியாய் இருந்தது.