தலையாட்டிக் கொண்டவள், “நீங்க எதுக்காக கொல்கத்தா வந்திருக்கீங்க?” என விசாரித்தாள்.
“உன்னை மாதிரியேதான், வேலை தேடி. இண்டர்வியூல செலக்ட் ஆகனும்” என்றான்.
“ஓ, உங்களுக்கு எப்போ இண்டர்வியூ?” எனக் கேட்டாள்.
“டேட் இன்னும் கன்ஃபார்ம் ஆகலை” என சாதாரணமாக சொன்னான்.
“அப்புறம் ஏன் முன்னாடியே வந்திட்டீங்க?”
“வீட்ல சண்டை” என மட்டும் சொன்னான். அதற்கு மேல் அவளும் விசாரிக்கவில்லை. அவனாகவும் சொல்லவில்லை.
“என் ஃபிரெண்ட்தான் இங்க ஜாப்க்கு அரேஞ் பண்ணி தர்றதா சொன்னான். அப்பாவோட சண்டை வந்த உடனே எங்க போறதுன்னு தெரியலை, கொல்கத்தா கிளம்பிட்டேன். உனக்கு ஒரு முடிவு பண்ணிட்டு பொறுமையா இண்டர்வியூ அட்டென்ட் பண்ணினா போச்சு” என்றான்.
தன்னால் இவனுக்கு தொந்தரவு என நினைத்தாள். ஆனால் இவனை விட்டால் இப்போது தனக்கு ஆதரவுக்கும் வழியில்லையே என யோசித்தவள் அமைதியாக இருந்து கொண்டாள்.
நேற்று அவள் சொன்ன கதையிலிருந்து சந்தேகம் கேட்கிறேன் என அவன்தான் அவளை பேச வைத்துக் கொண்டிருந்தான்.
திடீரென நினைவு வந்தவனாக கார்த்திகேயனின் வாட்ஸ் ஆப் முகப்பு படத்தை பார்த்தான். அவரது படம்தான் இருந்தது. மீராவிடம் காண்பிக்க அவர்தான் என உறுதி செய்தவளுக்கு வார்த்தைகளே வரவில்லை.
நடப்பது நிஜம்தானே என அவளுக்கு சந்தேகமாகத்தான் இருந்தது.
சில நிமிடங்களில் கார்த்திகேயனிடமிருந்து சஞ்சய்க்கு அழைப்பு வந்தது.
சஞ்சய் சொன்னதையெல்லாம் கேட்க கேட்க அவருக்குமே வியப்புதான். மீரா என்ன ஆனாள் என நினைத்து இரவெல்லாம் அவருக்கும் சரியான உறக்கமில்லை. சில நாட்களுக்கு தன்னை பார்க்க வர வேண்டாம் என சுபாவிடம் சொல்லியிருந்தார். ஆகவே சுபாவுக்கு மீராவின் நிலை பற்றி ஏதும் தெரியாது. மகள் நன்றாக இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்.
நேற்று மீராவை அழைக்க வந்த நபருக்கு விபத்தாகி விட்டதாம். பயப்பட எதுமில்லை என்றாலும் இன்னும் மருத்துவமனையில்தான் இருக்கிறார், உடனடியாக அவரால் ஏதும் உதவ முடியுமா என தெரியாது, ஆகவே அவரை இனி அணுக வேண்டாம் என சொன்னவர் மீராவிடமும் பேசினார்.
“கவலை படாதம்மா, நேத்திக்கு உன்னை கூப்பிட வந்தவர் கூட என் ஃபிரெண்டோட ஃபிரெண்ட். எல்லாம் சரியா நடக்கணுமேன்னு ஒரு டென்ஷன் இருந்திட்டே இருந்தது. பட் சஞ்சய் அப்படியில்லை, எனக்கு ரொம்ப நல்லா தெரிஞ்ச பையன். நீ ஸேஃபா இருக்கம்மா” என்றார்.
பின்னர் சஞ்சயிடம், “டேய் அந்த பொண்ணுக்கு ஜாப்’க்கும் தங்குறதுக்கும் ஏற்பாடு பண்ணி கொடுத்திட்டுதான் நீ அங்கேருந்து கிளம்பனும் சரியா?” என உரிமையாக கேட்டார். அவர்கள் பேசிக் கொண்ட விதத்திலேயே இருவருக்குள்ளும் நல்ல பழக்கம் என்பதை புரிந்து கொண்டாள் மீரா.
“ஹ்ம்ம்… ஏதாவது தேவை பட்டாதான் என்கிட்ட பேசுவீங்க இல்லை?” என செல்லமாக கோவித்துக் கொண்டான் சஞ்சய்.
“ஆமாம், ஸார் மட்டும் தினம் ஒரு தடவ கால் பண்ணி பேசிட்டு இருந்தாரு! எனக்கு கிளாஸ் இருக்குடா, ஈவ்னிங் பேசுறேன், பார்த்துக்க” என அவசரமாக சொல்லி பேச்சை முடித்துக் கொண்ட கார்த்திகேயனுக்கு இப்போதுதான் ‘அப்பாடா’ என இருந்தது.
அவரது மனைவியும் மீராவை நினைத்து கவலையில்தான் இருந்தாள். உடனே அவளுக்கு அழைத்தார். முதல் அழைப்பு எடுக்க படாமல் போகவும் இரண்டாவது முறையாகவும் அழைத்தார். இப்போது நீரஜா அழைப்பை ஏற்றுக் கொள்ள, மீரா நன்றாக இருக்கிறாள் என்பதை மட்டும் வேகமாக தெரிவித்தவர், பின்னர் பேசுவதாக சொல்லி அழைப்பை துண்டித்து விட்டு வகுப்புக்கு சென்று விட்டார்.
முதல் வேலையாக வங்கியின் வாடிக்கையாளர் சேவைக்கு தொடர்பு கொண்டு, மீராவின் வங்கி சேமிப்பு அட்டையை யாரும் உபயோகிக்க முடியாதபடி பிளாக் செய்தான் சஞ்சய்.
“ஃபோன் வேற வாங்கிக்கலாம். ஆதார், பான் எல்லாமே அப்ளை பண்ணி வாங்கிடலாம்” என்றான்.
“சீக்கிரம் கிடைக்குமா? ஜாப் கிடைச்சா கூட இதெல்லாம் கேட்பாங்கல்ல?”
“கம்ப்ளைண்ட் காபி காட்டி சொல்லிக்கலாம். இதெல்லாம் பிரச்சனை இல்லை. இங்கேருந்தே எல்லாத்தையும் வாங்கிடலாம்” என நம்பிக்கையாக சொன்னான்.
“தேங்க்ஸ்” என்றாள் மீரா.
“சும்மா சும்மா சொல்லிட்டே இருக்காதே”
“இல்லை எவ்ளோ தேங்க்ஸ் சொன்னாலும் போதாது. நைட் நீங்க இல்லைனா… யோசிச்சு கூட பார்க்க முடியலை. இப்போ ஸாருக்கும் தெரிஞ்சவங்கங்கிறதுல நிம்மதியா இருக்கு”
“ஸார் சொல்லலைனா கூட அப்படியே விட்டுட்டு போயிருக்க மாட்டேன். இப்போ அவரே சொன்னப்புறம்…” என்றவன் அந்த வாக்கியத்தை நிறைவு செய்யவில்லை. ‘நான் பார்த்துக் கொள்கிறேன், பயப்படாதே’ எனும் செய்தியை பார்வை வழியாக கடத்தினான்.
மீராவுக்கு எவ்வளவு சமாதானமாக இருந்தது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, அவனைப் பார்த்து நன்றியாக புன்னகைத்தாள்.
பதிலுக்கு அவனும் சிரித்தான். “ஓகே மீரா, கம்ப்ளைண்ட் காபி வாங்க போகணும், நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன், ரெடியா இரு” என சொல்லி அவனது அறைக்கு சென்று விட்டான்.
மீரா சென்னையில் இல்லாமல் வேறு எங்கோ தப்பி சென்று விட்டாள் என்பது பாஸ்கருக்கும் ராஜசேகரனுக்கும் தெரிந்து விட்டது. அம்மா அதிகம் அதிர்ச்சி அடையாததிலேயே அவர்தான் மீராவை தப்பி செல்ல வைத்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டான் பாஸ்கர்.
வயதானவரை என்ன செய்து உண்மையை வாங்க முடியும். மகளுக்காக எனும் போது உயிரை கூட விடுவாரே தவிர்த்து உண்மையை வாங்க முடியாது என்பதால் அம்மாவிடம் தன் கோவத்தை வெளிப்படுத்தினானே தவிர அதிகம் விசாரிக்கவில்லை.
மீராவின் திருமண பேச்சு ஆரம்பித்த பின் வீட்டில் நடந்தவை பற்றி பாஸ்கரிடம் விசாரித்தார் ராஜசேகரன். கார்த்திகேயன் வீட்டுக்கு உணவு கொடுக்க சுபா சென்ற விவரம் தெரியவும், தனது ஆட்களை கார்த்திகேயன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
அந்த ஆட்கள் நீரஜாவிடம் மீரா பற்றி கேட்க, தனக்கு ஏதும் தெரியாது என்றே சாதித்தாள் அவள்.
நேற்றுதான் தன் ஊரிலிருந்து திரும்பியிருந்தாள். பதினோராம் வகுப்பு பயிலும் அவளது மகனுக்கு லேசான காய்ச்சல் என அன்று பள்ளிக்கு அனுப்பவில்லை. இரவெல்லாம் மீரா பற்றிய கவலையில் கணவனுடன் சேர்ந்து இவளுக்குமே பதற்றம்தான்.
அந்த நேரம் பார்த்து கார்த்திகேயனிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. அவளது மகன் உறங்கிய அறையில் போய் நின்று கொண்டான் ஒருவன். நீரஜா அவனை வெளியில் வரச் சொல்ல, தலையணை ஒன்றை கையில் எடுத்து உறங்கிக் கொண்டிருக்கும் பையனின் முகத்துக்கு நேராக பிடித்துக்கொண்டான்.
நீரஜா அதீதமாக பயந்து போனாள்.
கார்த்திகேயனிடமிருந்து அடுத்த அழைப்பு வந்தது. இன்னொருவன் அழைப்பை ஏற்று நீரஜாவை பேசும் படி கண்களால் மிரட்டினான்.
அவ்வளவுதான் மீரா கொல்கத்தாவில் பாதுகாப்பாக இருக்கிறாள் என்ற விவரம் அவர்களுக்கு தெரிந்து போனது.
ராஜசேகரனுக்கு உடனடியாக தெரிவித்து விட்டனர். நீரஜாவிடம் எந்த இடம் என இன்னும் தெளிவாக விசாரிக்க சொன்னார்.
நீரஜா நல்ல தைரியமான பெண்தான், ஆனால் இப்படி நடப்பதெல்லாம் அவளுக்கு முற்றிலும் புதிது.
“உங்க முன்னாடித்தானே பேசினேன். வேற விவரம் எல்லாம் எங்களுக்கு தெரியாது” என்றாள் நீரஜா.
அங்கிருந்து தனது ஆட்களை திரும்பும் படி சொல்லி விட்டார் ராஜசேகரன். அடாவடி செய்பவர் என்றாலும் அவர் பினாமியாக இருக்கும் அரசியல் புள்ளிக்கு தெரிவிக்காமல் எதையும் செய்தது இல்லை. சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருக்கும் ஆசிரியரின் வீட்டில் பிரச்சனை செய்தது தெரிந்தால் எதிர்வினை எப்படி இருக்குமோ என்ற பயம் அவருக்கு.
மீராவை வேறு எப்படி இங்கு கொண்டு வருவது என தீவிரமாக யோசிக்க ஆரம்பித்திருந்தார் ராஜசேகரன்.