“இன்னிக்கு உனக்கு சோதனை போதும்னு நினைக்கிறன், ப்ளீஸ் அதை வச்சிடு” என்றான் சஞ்சய்.

விரக்தியாக சிரித்தவள் இன்னொரு வாய் பருக போனாள்.

“ரிஸ்க் எடுக்காத. மறுபடியும் உனக்கு ஒத்துக்காம போனா அடுத்து ஹாஸ்பிடல்தான் போகணும்” என அவன் சொல்லவும் அவளுக்கும் சரியாக பட தேநீரை பருகவில்லை.

மீரா கேட்டுக் கொண்டதால் மீண்டுமொரு முறை அவர்கள் வந்த ரயில் நின்ற நடைமேடைக்கு சென்று பார்த்தனர். முன்பின் எந்த விவரமும் தெரியாத கார்த்திகேயனின் நண்பரின் நண்பரை தேடிப் பார்த்தனர். தமிழ் முகமாக யாரும் தெரிந்தால் அவர்களிடம் போய் பேசிப் பார்த்தான் சஞ்சய். ம்ஹூம் எதுவும் பிரயோஜன படவில்லை.

“டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கோம் மீரா. இன்னும் கொஞ்ச நேரத்துல விடிஞ்சிடும். நமக்கு ரெஸ்ட் தேவை” என்றவனுக்கு, என்ன பதில் சொல்ல எனத் தெரியாமல் பார்த்தாள்.

“நான் ரூம் எடுத்திருக்க ஓட்டல்லேயே உனக்கும் ரூம் எடுத்து தர்றேன். நாளைக்கு மத்தத பேசிக்கலாம்”  என்றவனை தயக்கமாக பார்த்தாள்.

“என்ன நான் ஏதும் பண்ணிடுவேன்னு பயமா?” அவளை கூர்மையாக பார்த்து கேட்டான்.

“சேச்ச அதில்ல, என்கிட்ட சுத்தமா பணம் இல்லை” என்றாள்.

“அதான் ஹேண்ட் பேக்’கோட எல்லாம் போயிட்டதா சொன்னியே. நல்லா நினைவிருக்கு. யாருன்னு தெரியாத குழந்தைக்கு நீ ஹெல்ப் பண்ணலையா? அப்படி நானும் உனக்கு பண்றதா எடுத்துக்க. போலாமா?” எனக் கேட்டான்.

அவளிடம் வேறு என்னதான் வழி இருந்தது. அவன் சொன்னதற்கு சம்மதித்து அவனுடன் சென்றாள். அடுத்த ஒரு மணி நேரத்தில் சஞ்சய் எடுத்துக் கொடுத்த அறையில் இருந்தாள் மீரா.

கடவுள் மொத்தமாக கைவிட்டு விடாமல் கருணை காட்டியிருக்கிறார் என்ற நினைவுடனே படுத்துக் கொண்டாள்.

மீராவின் இக்கட்டான நிலையில் அவளை பாதுகாப்பாக அழைத்து வந்து விட்டாலும் சஞ்சய்க்கு நிம்மதியாக இருக்க முடியவில்லை.

பிறந்ததில் இருந்து கஷ்டம் என்பதின் அர்த்தம் தெரியாமல் வளர்ந்தவன். தன்னை விட வயதில் சின்ன பெண்ணுக்கு இப்படியெல்லாமா நடக்க வேண்டும்? சினிமா கதையையே மிஞ்சுவது போல கெட்டவர்கள் இருக்கிறார்களே, இவளது அண்ணன் எல்லாம் மானுட பிறவியா என நினைக்கும் போதே தனது உடன்பிறப்புகளின் நினைவில் அவனுக்கு முறுவல் மலர்ந்தது.

இவனது அண்ணன், அக்காக்களுடன் இவனுக்கு வயது வித்தியாசம் அதிகம் என்பதாலோ என்னவோ தம்பியாக அல்லாமல் அவர்களின் செல்ல டெடி போலத்தான் இவனை பாவித்து நடப்பார்கள். இப்போது கூட அப்படித்தான்.

 இவனுக்கு விவரம் வரும் வரையிலுமே ஏதாவது ஒரு அக்காவின் இடுப்பில்தான் இருந்திருக்கிறான்.

பொதுவாக சகோதரர்களுக்கு இடையில் அன்பு இருந்தாலும் சின்ன சின்ன சண்டைகள் வருவது வாடிக்கையாக இருக்கும். ஆனால் இவனது அண்ணனோ முறைத்து கூட பார்த்தது இல்லை இவனை. அம்மாவை பற்றி சொல்லவே வேண்டாம். இந்த அதீத செல்லம்தான் இவனை பொறுப்பில்லாத பிள்ளையாக மாற்றி விட்டது.

அனைத்துக்கும் சேர்த்து வைத்து அப்பாதான் வைத்து செய்கிறார் என நினைத்தவனின் முகம் இறுகியது. எப்போதுமே கடினமான பேசுவார்தான். இந்த முறை ஹரிஷின் திருமணம் ஏற்படுத்திய பிரச்சனையில் மிகவும் அவமானப் படுத்தி விட்டார். இதற்கு மேலும் அங்கிருக்க கூடாது என முடிவோடுதான் வீட்டை விட்டு வந்திருக்கிறான்.

மீராவின் துன்பத்துக்கு முன் தன்னுடையது ஒன்றுமே இல்லை என நினைத்துக்கொண்டே உறங்கிப் போனான்.

காலையில் சஞ்சய்க்கு முன் எழுந்து விட்ட மீரா குளித்து வேறு ஆடை மாற்றிக் கொண்டாள். பசித்தாலும் சாப்பாடு வரவழைத்துக் கொள்ளாமல் மீண்டும் படுத்து விட்டாள்.

அறையிலிருந்த இண்டர்காம் ஒலிக்கவும் எடுத்து பேசினாள், சஞ்சய்தான். இப்போதுதான் விழித்திருக்கிறான் போலும், குரல் அப்படித்தான் சொன்னது. உணவு ஏன் வரவழைத்துக் கொள்ளவில்லை என கடிந்து கொண்டவன் என்ன சாப்பிடுகிறாய் என விசாரித்தான்.

“ரெண்டு இட்லி போதும்” என்றாள்.

“கிடைக்குமான்னு தெரியலையே” என சந்தேகமாக சொன்னான்.

“என்ன கிடைக்குமோ அதை சொல்லுங்க” என சொல்லி விட்டாள்.

தென்னிந்திய உணவு வகைகள் ஏதும் அங்கே கிடைக்காது என சொல்லப் பட்டது. என்ன கிடைக்கும் என விசாரித்தவன் லூச்சி எனும் உணவு வகை நம்ம ஊர் பூரி போல என்பதை தெளிவு படுத்திக் கொண்டே அதையும் உருளைக்கிழங்கு மசாலாவும் தனக்கும் சேர்த்தே ஆர்டர் செய்தான்.

மீராவுக்கு சில நிமிடங்களில் காபி வந்தது. வேகமாக பருகி முடித்தவள் அடுத்து என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தாள்.

அரை மணி நேரத்தில் உணவு வந்தது. நிறைய இருக்கவும் ‘இவ்வளவா, கண்டிப்பாக வீண் செய்ய போகிறேன்’ என இவள் கவலையாக பார்த்தாள். அவள் சாப்பாட்டில் கை வைக்கும் முன் அவனும் வந்து விட்டான்.

“ஃபூட் ரெடியாகி வர டைம் ஆகும்னு சொன்னான், எனக்கும் சேர்த்து இங்கேயே கொடுக்க சொல்லியிருந்தேன்” என அவன் சொல்லவும்தான் அவளுக்கு நிம்மதியானது.

இருவருமாக சேர்ந்தே காலை உணவை முடித்துக் கொண்டனர். அதன் பின் என்ன செய்யலாம் என பேச்சை ஆரம்பித்தான் சஞ்சய்.

அம்மாவுக்கு இப்போது தொடர்பு கொள்வது ஆபத்து என்பதை சொன்னாள் மீரா. சஞ்சய்க்கும் அது சரியாகவே பட்டது.

“நைட் என்னை கூப்பிட வந்தவர் என்ன ஆனார்னு தெரியலை. என்னைப் பத்தி எந்த தகவலும் இல்லாம அம்மா, ஸார் எல்லாம் பயந்து போயிருப்பாங்க” என வருத்தமாக சொன்னாள்.

“அந்த ஸார் பத்தி சொல்லு, அவரை காண்ட்டாக்ட் பண்ண முடியுமான்னு பார்க்கலாம்” என்றான்.

கார்த்திகேயன் வேலை பார்க்கும் பள்ளியின் விவரங்களை சொன்னாள்.

சஞ்சய் ஏதோ யோசனையானான்.

“என்னாச்சு?” எனக் கேட்டாள்.

“கார்த்திகேயன்ங்கிற பேர்ல எனக்கு ஒரு ஸார் தெரியும். சரியா படிக்க மாட்டேங்கிறேன்னு அவர்கிட்டதான் அப்பா ஸ்பெஷல் டியூஷன் சேர்த்து விட்டார். அப்பா அனுப்பி வைக்கிற ஆளுன்னா கண்டிப்பா அப்பா மாதிரியே இருப்பாருன்னு பயந்திட்டேதான் போனேன். பட் ரொம்ப ஸ்வீட் அவரு. அவராலதான் ஸ்கூல் ஃபைனல்ஸ்லாம் ஏதோ ஆவரேஜா ஸ்கோர் பண்ணினேன். நாங்க இன்னும் காண்டாக்ட்ல இருக்கோம். ஒரு வேளை அவர்தான் நீ சொல்ற ஸாரா இருப்பாரோன்னு தோணுச்சு. ஏன்னா அவரும் திருவண்ணாமலை பக்கத்துலதான் டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போனாரு. அது ஏதோ சின்ன ஊர், பேர் மனசுல நிக்கல, ஸோ திருவண்ணாமலைல ஸார் இருக்கார் அப்படின்னே பதிஞ்சு போயிடுச்சு” என்றான்.

கார்த்திகேயனின் மனைவி மகன் பெயர்களை மீரா சொல்லவும் சொடக்கு போட்டு முகம் மலர்ந்தான் சஞ்சய்.

“என்ன அவர்தானா?” ஆவலாக கேட்டாள் மீரா.

“நீ சொல்ற டீடெயில்ஸ் எல்லாம் அவரோட பக்காவா ஒத்து போகுது, இரு கன்ஃபார்ம் பண்ணிடலாம்” என்ற சஞ்சய் உடனே தன் கைப்பேசி வாயிலாக கார்த்திகேயனுக்கு தொடர்பு கொண்டான்.

ரிங் சென்றது, அழைப்பு ஏற்கப் படவில்லை. தளர்ந்து போனாள் மீரா.

“கிளாஸ்ல இருப்பாரா இருக்கும். அவர்கிட்ட பேசினாதானே ஒரு முடிவுக்கு வர முடியும். ரிலாக்ஸ் ப்ளீஸ்” என அவளுக்கு சமாதானம் சொன்னான்.