அறியாமல் தொலைந்தேனே -4

அத்தியாயம் -4

கைப்பை வேறெங்கும் விழுந்து கிடக்கிறதா என அந்தப் பக்கம் தேடிப் பார்த்து விட்டு எங்கேயும் தென்படாமல் போகவும், மீராவின் கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது. தளர்ந்து போனவளாக அப்படியே இருக்கையில் அமர்ந்து விட்டாள்.

அம்மா மற்றும் அண்ணன் இருவரது கைப்பேசி எண்களை தவிர வேறு யாருடையதும் அவளுக்கு நினைவில் இல்லை. இவ்வளவு ஏன்.. சற்று முன்பு வரை அவள் உபயோகித்த புதிய சிம் கார்டின் எண் கூட அவளுக்கு நினைவில் இல்லை.

சென்னையில் அவள் வேலை பார்த்த மருத்துவமனையில் உள்ளவர்கள் யாரின் எண்ணையும் கண்டுபிடித்து உதவி கேட்கலாம் என்றாலும் இந்த நடு சாமத்தில் சரியாக வராது என நினைத்தவளுக்கு இன்னுமின்னும் அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.

அவளை கடந்து சென்ற இரு ஆடவர்கள் ஏதோ போல இவளை பார்த்து செல்வதை கவனித்தவள் கண்களை வேகமாக துடைத்துக் கொண்டாள். முதலில் தன்னையும் தன்னுடைய மூளையையும் இந்த அதிர்ச்சியிலிருந்து மீட்டு கொண்டு வந்தாள்.

தண்ணீர் கூட கையில் இல்லை. டிராலியை தள்ளிக் கொண்டு குடிநீர் கிடைக்கும் இடத்துக்கு சென்று நன்றாக நீர் பருகிக் கொண்டாள். முகத்தையும் கழுவி துப்பட்டா வைத்து துடைத்துக் கொண்டவளுக்கு எல்லாமே சூனியமாக தெரிந்தது.

கைப்பேசி இல்லாமல் தன்னை தேடி வருபவரை எப்படி அடையாளம் காண்பது என வேறு கவலையானது.

வருபவர் தனக்கு அழைத்துப் பார்த்து விட்டு இந்த நடைமேடைக்கு வந்து தேடுவாரோ, அப்போது தான் இங்கு இல்லா விட்டால்? என தோன்ற பெரும் குழப்பத்துடன் அங்கேயே ஓர் இருக்கையில் மீண்டும் அமர்ந்து விட்டாள்.

அரை மணி நேரமாகி விட்டது. யாரும் அவளை தேடிக் கொண்டு வரவில்லை. இந்த சூழலை எதிர்கொள்ள ஓரளவு மனதை தயார் படுத்தியிருந்தாள்.

காவலர்களின் உதவியை நாடலாம் என எண்ணிக் கொண்டே அவள் எழ, தூரத்திலிருந்து சஞ்சய் வருவது அவளுக்கு தெரிந்தது. இவளை நோக்கித்தான் வந்து கொண்டிருந்தான். தன்னை பார்க்கதான் வருகிறானா என அவள் யோசிக்கையிலேயே, அவளுக்கு உறுதியாக தெரியாத அவனது கரிசனையில் அவளுக்கு மீண்டும் கண்கள் கரித்துக் கொண்டு வந்தன.

இருவருக்கும் இடையில் சில அடி தூரம் இருந்தது. “இன்னும் இங்கேயே என்ன பண்ணிட்டு இருக்க நீ? உன்னை கூப்பிட வர்றவர் இன்னுமா வரலை? கால் பண்ணி கேட்டியா?” என விசாரித்துக் கொண்டே அவளை சமீபித்தான் சஞ்சய்.

தனக்காகத்தான் வந்திருக்கிறான் என தெளிவாக தெரிய, மீராவுக்கு அத்தனை திடமாக இருந்தது.

“ஏய் என்னாச்சு, அழுதிருக்கியா என்ன?” குழப்பத்துடன் விசாரித்தான் சஞ்சய்.

“எனக்கு சுத்தமா டைம் சரியில்லை. என் ஹேண்ட் பேக் காணாம போயிடுச்சு, அதுலதான் எல்லாமே இருந்தது” என கலங்கிய குரலில் சொன்னாள் மீரா.

சஞ்சய்க்கும் அதிர்ச்சிதான். ரயிலில் தன்னிடம் கூட அத்தனை கவனமாக இருந்தாளே, எப்படி கை தவற விட்டிருப்பாள் என யோசித்தவன், கேட்கவும் செய்தான்.

அவள் விவரம் சொல்லவும், “ம்ம்… குழந்தைய தூக்க போன நீ பேகையும் கையோட எடுத்திட்டு போயிருக்கலாம்” என்றான்.

“ம்ம்… சின்ன குழந்தை, விழவும் எதையும் யோசிக்காம ஓடிப் போனேன். இப்படி ஆகும்னு நினைக்கல. நீங்க என்ன திரும்பவும் இங்க வந்திருக்கீங்க?” எனக் கேட்டாள்.

“ஸ்டேஷன் என்ட்ரன்ஸ் வரை போயிட்டேன். என்னவோ நீ போக விடாம அங்கேயே பிடிச்சு வச்சிட்ட” என வேடிக்கையாக சொன்னான்.

அவள் இறுக்கமாகவே இருக்க, “உன்னை கூப்பிட வந்தவரோட நீ கரெக்ட்டா கிளம்பிறத பார்த்திட்டு போகலைனா எனக்கு தூக்கம் வரும்னு தோணலை. டிஸ்டர்ப்டு ஸ்லீப்லாம் எனக்கு சுத்தமா புடிக்காது. ஸோ…” என்றவன் இங்கு வந்து விட்டேன் என்பதை சைகையில் சொன்னான்.

“தேங்க்ஸ்!” என அவள் சொல்லும் போதே அவளின் குரல் கமறியது.

“ஹேய் டிராவல் அப்போ இப்படிலாம் நடக்கிறதுதானே? உன் மொபைல் நம்பர் சொல்லு” என சொல்லிக் கொண்டே அவனது கைப்பேசியை கையில் எடுத்தான்.

தெரியாது என்றவள் கண்டிப்பாக அவனை ஆச்சர்யப் படுத்தினாள்தான். கேள்வியாக பார்த்தவனிடம், “புது சிம், ட்ரெயின் ஏறின அன்னிக்குத்தான் வாங்கினேன்” என்றாள்.

அதை வைத்தே அவனிடம் நிறைய கேள்விகள் எழுந்தன. ஆனால் அதையெல்லாம் கேளாமல், “உன் வீட்ல யார்கிட்டேயும் பேசுறியா, உனக்கு பெட்டெரா இருக்கும்” என்றான்.

மறுப்பாக தலையாட்டியவள், “ஃபர்ஸ்ட் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிடலாமா?” எனக் கேட்டாள்.

“டூ லேட், இந்நேரத்துக்கு நீ பண்ணியிருக்கணும். எடுத்தவன் கண்டிப்பா எஸ்கேப் ஆகிருப்பான்”

“நான் பயந்து போயிட்டேன், என்னை கூப்பிட வந்தவர் இங்க வந்து தேடி, நான் இல்லைனு திரும்ப போயிடுவாரோன்னு நினைச்சு இங்கேயே இருந்தேன். ப்ச்… ஆனா யாருமே வரலை” என்றாள்.

“நீ சொல்ற விஷயங்களை வச்சு ஒரு மிஸ்ட்ரி த்ரில்லர் கதை எழுதலாம். பட் ஸ்டோரி எழுத எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை. ஸோ என்ன விஷயம்னு நேரடியாவே சொல்லிடேன்” என்றான் சஞ்சய்.

“என்ன!”

“பிச்சு பிச்சு சொல்லாம உன்னை பத்தி ஒரு கிளியர் பிக்சர் கிடைக்குறது மாதிரி விளக்கமா சொல்லுன்னு சொல்றேன்”

இந்த பெரும் நகரத்தில் இந்த நேரம் இவனை விட்டால் அவளுக்கு தெரிந்தவர்கள் யாருமே இல்லையே. ஆகவே தன்னை பற்றி அவனிடம் சொல்லி விடுவதுதான் சிறந்தது என முடிவு செய்தவள் சுருக்கமாக தன் கதையை சொன்னாள்.

நிச்சயமாக இப்படியொன்றை சஞ்சய் எதிர் பார்த்திருக்கவில்லை. இயல்பிலேயே இளகிய மனம் கொண்டவன், அதன் பொருட்டே நிறைய சிக்கல்களையும் இழுத்து வைத்துக் கொள்வான். மீரா அவனுக்கு மிகவும் பாவப்பட்ட பெண்ணாக தெரிந்தாள்.

இரவில் செயல்படும் இரயில்வே காவல் அலுவலகத்துக்கு சென்றனர் இருவரும். மீரா கைப்பையை தவற விட்ட பகுதியில் கண்காணிப்பு கேமரா பழுதாகியிருந்தது.

கைப்பேசி எண் எப்படி தெரியாமல் போகும், நண்பன் என்கிறாய், உனக்கும் தெரியாதா? வேறு யாரும் உறவுகள் இல்லையா? இங்கு எதற்கு வந்தாய்? எங்கு போய் தங்குவாய் என பல கேள்விகள்.

புகார் எடுத்த காவலருக்கு ஆங்கிலம் சரியாக தெரியவில்லை. இவர்கள் இருவருக்கும் பெங்காலி சுத்தமாக தெரியவில்லை. சஞ்சயின் ஹிந்தி கூட அரைகுறைதான். உறக்க கலக்கத்தில் இருந்த அந்த காவலருக்கு பொறுமை பறந்து விட்டது.

இருவரும் காதலர்கள், சொந்த ஊரில் எதிர்ப்பு இருந்திருக்க, இங்கு ஓடி வந்திருக்கின்றனர் என அவராகவே முடிவு கட்டி விசாரணையை நீட்டிக்காமல்  புகாரை பெற்றுக் கொண்டார். தொடர்புக்கு சஞ்சயின் கைப்பேசி எண்ணை வாங்கிக் கொண்டு, கிடைப்பது அரிதுதான் என்றாலும் முயல்கிறோம், நாளைக்கு பகலில் வந்து கம்ப்ளைண்ட் காபி வாங்கிக் கொள்ளுங்கள் என சொல்லி அவர்களை அனுப்பி வைத்து விட்டார்.

ரயில் நிலையதுக்குள்ளேயே இருந்த தேநீர் கடையில் தங்கள் இருவருக்கும் தேநீர் வாங்கினான் சஞ்சய். மிகவும் சுமார் ரகம். ஒரு வாய் பருகிய இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.