வார்த்தைகள் பரிமாறிக்கொள்ளவில்லை, கண்களால் களவாடிய பொழுதுகளில்லை, ஸ்பரிசங்கள் தீண்டிக்கொள்ளவில்லை, எனினும், உன் பேச்சும், உன் குரலும், உன் அருகாமையும், அன்றும், இன்றும், என்றும் நினைவுகளாக என்னை தழுவிக்கொள்ள
“தேனு, ட்யூசனுக்குப் பிள்ளைங்க வந்துட்டாங்க பாரு…” அப்பாவின் குரலைக் கேட்டதும், எழுதிக்கொண்டிருந்த நோட்புக்கைச் சட்டென்று மூடி மேஜையில் இருந்த டிராயரில் வைத்துப் பூட்டிவிட்டு, சாவியைத் தன் கைப்பைக்குள் போட்டுக்கொண்டாள். “ஹான்… வந்துட்டேன் ப்பா…” என்று சொல்லிக்கொண்டே, தன்னை ஒருமுறை கண்ணாடியில் சரிபார்த்து வேகமாக வெளியே திண்ணைக்கு விரைந்தாள். அவள் தேன்மொழி. கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறாள். தினமும் மாலையில் அந்த ஊர் பிள்ளைகளுக்கு இலவசமாகப் பாடம் கற்பிக்கிறாள். திண்ணைக்கு விரைந்தவள், “டேய்! எங்கடா சிட்டைக் காணோம்… நீங்க நாலு பேரு மட்டும் வந்திருக்கீங்க?”
“சிட்டுக்கு இன்னைக்குத் தலை நோவுதாம்… அதான் வரலை…”
“தெரியுதுல்ல தேனு கா… அப்புறம் எதுக்குக் கேள்வி கேட்குற…”
“மொட்ட… உனக்கு வர வர வாய் கூடிப் போச்சு… சரி… நேத்துக் கொடுத்த கணக்குல எதாவது சந்தேகம் இருக்கா?” என்று அவள் பாடத்திற்குத் தாவ, சிட்டு என்று அழைக்கப்பட்ட சித்ரா அவளது தாயுடன் வந்து சேர்ந்தாள்.
“தேனு… இவளை என்னனு கேளு… இன்னைக்கு இங்க வர மாட்டேன்னு ஒரே அழுகை… பரீட்சையில் ஃபெயில்…” என்று அவளின் அன்னை அவளைக் குறைபாட,
“நான் பார்த்துக்கிறேன் அக்கா, நீங்க போங்க… சிட்டு இங்க வா…” என்று அவளைத் தன் அருகே அமர்த்திக்கொண்டாள். “மாறா, உனக்குத்தான் இது…” என்று அவனிடம் ஒரு புத்தகத்தை நீட்டினாள்.
அதை வாங்கியவன், “அக்கா… தேங்க்ஸ் அக்கா…” என்று மகிழ்ச்சியுடன் கூறினான்.
“எனக்குத் தெரிஞ்ச சார்கிட்ட உனக்காகப் பேசியிருக்கேன். இப்போலிருந்து ‘நீட்’டுக்குப் படிக்க ஆரம்பி… ஞாயிற்றுக்கிழமை ஆன்லைன் கிளாஸ் எடுப்பாரு… வீட்டுக்கு வந்துடு டா… அக்கா எல்லாம் ரெடி பண்ணி வைச்சிடுறேன், சரியா…” என்று சொல்ல, சரி என்று தலை அசைத்துக்கொண்டான்.
“நீங்க மூணு பேரும் படிங்க…” என்று மற்றவர்களையும் படிக்கச் சொல்லிவிட்டு, “சிட்டு… இப்போ சொல்லு… எதுக்கு அழுகை?” அவள் மீண்டும் பொங்கி வந்த கண்ணீரைத் துடைக்க,
“அழுகை எதுக்குமே தீர்வு இல்லை சித்ரா… உனக்குக் கணக்கு வரலை… அக்காவுக்கும் புரியுது… நீ பத்தாவது மட்டும் பாஸ் பண்ணிடு… போதும்… அடுத்து நாம டிப்ளமோ கோர்ஸ் பண்ணலாம்… கேட்டரிங் படி… உங்க அப்பா கடையை நீயே எடுத்து நடத்தலாம்… தோல்விக்குப் பயப்பட கூடாது… அடுத்து என்னன்னு பார்க்கணும். இப்ப பேப்பர் எங்கே? என்ன தப்புன்னு பார்ப்போம்… பாஸ் மார்க் வாங்கினா போதும்… அதுக்கு என்ன செய்யணுமோ அதை மட்டும் பார்ப்போம்… நாளைக்கு நீ ஒரு கடையோட ஓனர். அதை மனசில் வச்சுக்கோ. சின்னத் தோல்விக்கே துவளக்கூடாது…” என்று நம்பிக்கையூட்டும் வார்த்தைகளால் அவளைச் சமாதானப்படுத்திப் படிக்க வைத்தாள். மூன்று மணி நேரம் சடுதியில் கடந்துவிட, மணி எட்டரை என்று காட்ட, “கிளம்புங்க டா… டைம் ஆச்சு… நைட் சீக்கிரம் தூங்கிக் காலையில எழுந்து படிங்க…” என்று சொல்ல, மற்ற நால்வரும் கிளம்ப, சித்ரா மட்டும் கிளம்பாமல் அங்கே நிற்க, “பசிக்குதா? சாப்பிடுவியா?” என்று அவளிடம் கேட்டாள் தேன்.
போகும் அவளைப் பார்த்தவள் பெருமூச்சுடன், “நடக்கும்…” என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு இரவு உணவு செய்ய அடுப்பறைக்குச் சென்றாள். பழக்கம் போல தங்கைக்கு அழைத்துப் பேசி, அவள் ஊருக்கு வர பேருந்தில் ஏறிவிட்டாள் என்று உறுதி செய்துகொண்டு, உணவை முடித்துவிட்டு, தந்தைக்காகக் காத்திருக்க, அவரும் வந்து சேர்ந்தார்.
“கனி பஸ் ஏறிட்டாளா தேனு?”
“ஏறிட்டாளாம் ப்பா…”
“அவகிட்ட விஷயத்தைச் சொல்லிட்டீயா?”
“ஹ்ம்ம்… அன்னைக்குச் சொன்னது தான் ப்பா… அப்புறம் நான் பேசல… நிலன் அத்தான் பேசியிருப்பாங்க. கண்மணி அக்கா சொன்னாங்க.”
“ம்ம்ம்… கண்மணி சொல்லித்தான் இந்த ஏற்பாடு பண்ணியிருக்கேன்… உன்னை விட்டுட்டு அவளுக்கு முடிக்க மனசு ஒப்பல…”
“அப்பா நான் சொன்னேனே… எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்கப்பா…”
“இதையே தான் கண்மணியும் சொல்றா… அப்பாக்குத்தான் ஏத்துக்க முடியல…” என்றவர், மகள் முகம் வாடியதைப் பார்த்துவிட்டு அதன்பின் அந்தப் பேச்சை விட்டு மற்றதைப் பேசினார்.
உறங்கச் சென்றவளுக்கு ஏனோ அவனின் நினைவுகள். சரியாகத் தூக்கம் வராமல், அதிகாலையிலேயே விழித்துவிட்டாள். எழுந்தவள் படுத்திருக்க விரும்பாமல், வாசல் தெளித்துக் கோலம் போட, கனிமொழியின் அழைப்பு. இன்னும் பத்து நிமிடத்தில் ஊர் எல்லையில் இறங்கிவிடுவேன் என்று.
குளிருக்கு இதமாக ஒரு ஜாக்கெட்டை எடுத்து மாட்டிக்கொண்டவள், அப்பாவின் வண்டி சாவியை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டாள். கனியுடன் வீடு வந்து சேர, சுந்தரமும் எழுந்துக் கொண்டார்.
மகளை வரவேற்றவர், “முகம் கழுவிட்டு வா கனி… கொஞ்சம் பேசணும்…” என்றவர் தேனைப் பார்க்க,
“நான் சொல்றேன் ப்பா…” என்னும் விதமாகத் தலையசைத்து, “உங்களுக்கு டீ எடுத்துட்டு வரேன்… கனி நீயும் ப்ரஷ் பண்ணிட்டு வா…” என்று சொல்லிவிட்டுத் தேநீர் தயாரிக்கச் சென்றாள்.
தேன்மொழி தேநீருடன் வருவதற்குள், சுந்தரம் கனியிடம் பேசியிருந்தார்.
“அப்பா அன்னைக்குச் சொன்னது தான் இன்னைக்கும்… எங்க ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல கல்யாணம் செய்தா எனக்கும் ஓகே” என்றவள் தேனை முறைத்துக்கொண்டே அவள் நீட்டிய தேநீரை வாங்கிக்கொண்டாள்.
இரு பிள்ளைகளையும் முறைத்த சுந்தரம், “நான் வாக்கிங் போயிட்டு வரேன்… ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க… அப்புறம்தான் மாப்பிள்ளை வீட்ல பேசணும்.” என்றவர் தோளில் கிடந்த துண்டை உதறி மீண்டும் தோளில் போட்டுக்கொண்டு வாசல் நோக்கிச் சென்றார்.
வெளித்திண்ணையில் அமர்ந்து தேநீர் பருகிக்கொண்டிருந்த தேனை நெருங்கி, “இன்னுமா நீ அப்பாகிட்ட விஷயத்தைச் சொல்லல?” என்ற தன் உடன்பிறப்பின் கேள்விக்கு, “இன்னும் சம்பந்தப்பட்டவங்க கிட்டயே என் மனசைச் சொல்லல… அதுக்குள்ள அப்பாகிட்ட எப்படி?” என்றவளிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்த கனி, அவளின் கைபேசியுடன் பின் கட்டிற்குச் சென்றாள்.
தன் அறைக்குள் வந்த தேன்மொழிக்கு அதிகத்திற்கும் அதிகமாக அவனின் எண்ணங்கள்.அந்த எண்ணப்போக்கில் இருந்தவள் பாடலை ஒலிக்கவிட்டு, கல்லூரிக்குக் கிளம்ப ஆயத்தமானாள்.
அலைபேசியில் பேசிவிட்டு வந்த கனிமொழி, “தேனு இன்னைக்கு காலேஜ் இருக்கா?”
“ம்ம்….”
“சரி என்ன முடிவு பண்ணியிருக்க?”
“நான் தான் தெளிவா சொல்லிட்டேனே கனி… நீ கல்யாணம் பண்ணிக்கோ… எனக்கு கொஞ்சம் டைம் வேணும்….”
“உனக்கு பிரச்சனை என்ன தேனு? ருத்ரன் அத்தான் வீட்டுல பெண் கேட்டு வந்தாங்க தான…. அப்பா தான் அன்னைக்கு அவசரப்பட்டு வேணாம் சொல்லிட்டாங்க…. உனக்கு இதுல விருப்பம்னு தெரிஞ்சா அப்பா ஓகே சொல்லிடுவாங்க…. நீ தான் இதை பெரிசாக்குற….” என்று கூறிய கனியைப் பார்த்தவள்,
“கனி…. உனக்கு சிலது புரியல… அப்பாக்கு நம்மள விட்டா யாரும் இல்லை. நீ கல்யாணம் முடிஞ்சு நிலன் அத்தான் கூட ஆஸ்திரேலியா போய்டுவ… நான் எல்லாத்தையும் யோசிக்கணும்…” என்று சொல்லவும், கனி கண்களில் கண்ணீருடன்,
“என்ன சொல்ல வர தேனு? உன்னைப் பத்தியும், அப்பா பத்தியும் நான் கேர் பண்ணலனா? என் சுய விருப்பம் தான் பெருசுனு நடந்துகிறேனு சொல்றியா?”
“ஹே! லூசு… அப்படி நான் சொல்லல…. அப்படி நீ யோசிச்சிருந்தா போன வருஷமே நீ கல்யாணம் பண்ணிருப்ப…. எனக்காகப் பாத்து தான் நீ இப்படி இருக்க… அதை தான் சொன்னேன்… நிலன் அத்தான்…. அப்பா உனக்கு பார்த்த மாப்பிள்ளை…. அதுல உனக்கு முழு சம்மதம்… அது மாதிரி தான் எனக்கும் இருக்கணும் என் ஆசை…”
“அதுக்குத் தான் அப்பாகிட்ட சொல்ல சொல்றேன்…”
“எப்படி கனி… அப்பா அன்னைக்கு எல்லார் முன்னாடி தானே காரணத்தை சொன்னாங்க… இப்ப நான் சொல்லி இந்தக் கல்யாணத்துக்கு அப்பா சரின்னு சொன்னாலும்…. அப்பா தினமும் பயத்துல தான இருப்பாங்க… என்னால எப்படி அப்பாவை கஷ்டப்படுத்த முடியும்.”
“அதுக்கு என்ன பண்ணலாம்னு இருக்க… நீ இப்படியே இருந்தாலும் அப்பாக்கு கஷ்டம் தான்….”
“அதான் நானும் சொல்றேன்… நீ மொத உன் கல்யாணத்துக்கு ஓகே சொல்லு… அப்பா சந்தோஷப்படுவாங்க…. எனக்கு கொஞ்சமே கொஞ்சம் டைம் கேட்கிறேன் அவ்வளவு தான். எனக்கு என்னைய புரியல… மனசுல ஆசை இருந்தாலும் அப்பா வேணாம்னு சொன்னதுக்கு அப்புறம் அதை எப்படி நினைக்கிறதுனு கூட எனக்குத் தெரியல… உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்க….” என்று வேதனையாக அவள் கண்கள் மூடிக்கொள்ள,
கனி பதில் சொல்லாது அவளையே பார்க்க, “என்னை விடு கனி… அப்பா வந்ததும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லு…” என்று குளிக்கச் சென்றுவிட்டாள்.
யோசனையோடு சமையல் அறை சென்றவள் காலை உணவை தயாரித்தாள். தேன்மொழி கிளம்பி வர, அவளுக்குச் சாப்பாட்டைத் தட்டில் வைத்துவிட்டு அவளும் குளிக்கச் சென்றாள்.
தேன்மொழி உண்டு முடித்து, தன் பையுடன் கிளம்ப, சுந்தரம் உள்ளே வந்தார்.
சுந்தரம் இரு மகள்களையும் என்னவாயிற்று என்பதைப் போல பார்க்க,”தேனுக்கு ருத்ரன் அத்தான் மேல விருப்பம் தான்… நீங்க நோ சொன்னதால உங்ககிட்ட அதை சொல்ல யோசிக்கிறா…” என்று சொல்லிவிட்டாள் கனிமொழி.
தேன்மொழி அவளை முறைத்துப் பார்க்க, சுந்தரம் ‘அப்படியா’ என்பதைப்போல தேனைப் பார்த்தார்.அவரின் விழிகளில் தப்பு செய்துவிட்டோமே என்ற கலக்கம். மகளின் எண்ணம் புரியாது அன்று பேசிவிட்டோமே என்ற குற்றவுணர்வு. இது கண்மணிக்கும் தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் அன்றைக்குத் தன்னை கடிந்துக் கொண்டாளோ என்று அவர் சிந்தித்தார்.
கனியைத் தீயென முறைத்தவள், அப்பாவின் தவிப்பை காண இயலாது, “பஸ்’க்கு டைம் ஆகிடுச்சு…. நான் கிளம்புறேன்….” என்று சொல்லியவள், விறுவிறுவென்று வெளியேறிவிட்டாள். போகும் அவளை வெறித்துப் பார்த்த சுந்தரத்திற்கு இதை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை. தன் இன்னொரு மகளை பார்க்க,
“சாரி பா…. உங்களை கஷ்டப்படுத்தச் சொல்லல… தேனு ரொம்ப வேதனைப்படுறா…. உங்ககிட்ட உண்மையைச் சொல்ல முடியாம… அவளே சொல்லுவானு தான் நான் இவ்ளோ நாள் வெயிட் பண்ணேன்…. அவ சொல்லுவானு தோணல…. மறக்கவும் முடியாம கஷ்டப்படுறா ப்பா….” என்று அப்பாவின் தோள் சாய்ந்தாள் கனிமொழி இரட்டையர்களில் இளையவள்.
கனியின் தலையை ஆதுரியமாய் வருடியவர், “கனி மா… அப்பாகிட்ட சொல்லியாச்சுல…இனி அப்பா பார்த்துக்கிறேன்…. நீ சாப்பிடு… இன்னைக்கு நிலன் வீட்ல பேசுறேன்… அப்பா குளிச்சிட்டு கடைக்குக் கிளம்பனும் மா… வெற்றி இப்ப வருவான் அவன்கிட்ட கடைச் சாவி கொடுத்துவிடு…” என்றவர், பாத்துக்கலாம் என்னும் விதமாக அன்றைய அன்றாடத்தில் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தார்.