தன் அலைபேசியில் யாருக்கோ அழைப்பு விடுத்தான் அஜித். மறுபக்கம் அழைப்பு ஏற்கப்பட்டது.
“இரண்டாவது சாவி கண்டுபிடிச்சேங்களா இல்லையா?” என்ற அதிகாரத் தோரணையுடன் கேள்வி கேட்கப்பட்டது.
தன் குரலைத் தாழ்த்திய அஜித், “இன்னும் இல்லை சார். கண்டுபிடிச்சதும் நானே உங்ககிட்ட சொல்றேன் ” என்றான்.
மறுபக்கம் எதுவும் கூறாமலேயே அழைப்பு துண்டிக்கப்பட்டது.
அலைபேசியை வைத்துவிட்டு மெதுவாக மீண்டும் அறைக்குள் சென்றவன், படுத்துக்கொண்டான்.
மறுநாள் காலை, கதிரவன் தன் ஒளியை எப்பொழுதும்போல் வீசிக்கொண்டிருக்க, கொட்டாவி விட்டுக்கொண்டே எழுந்தான் பரமேஷ். தன் கைக்கடிகாரத்தில் நேரம் ஏழு என்று காட்டியதைப் பார்த்தவன், அருகில் படுத்திருந்த அஜித்தைக் குலுக்கி எழுப்பினான்.
“என்னடா உனக்குப் பிரச்சனை? ஒழுங்கா மூடித் தூங்குடா,” என்று தூக்கக் கலக்கத்தில் உளறிவிட்டு மீண்டும் தூங்க முயன்றான் அஜித்.
அவனை மீண்டும் குலுக்கி எழுப்பிய பரமேஷ், “டேய், விடிஞ்சிடுச்சுடா, எந்திரிடா,” என்று அவன் காதருகே சத்தமாகக் கத்தினான். வேறு வழியில்லாமல் எழுந்து உட்கார்ந்தான் அஜித்.
இதுதான் சரியான நேரம் என்று நினைத்தவள், தன் பையில் கையைவிட்டு ஓலைச்சுவடியை எடுக்க முயன்றாள். சரியாக அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்கவே, ஓலைச்சுவடியை எடுக்காமல் சட்டென்று கதவைப் பார்த்தாள்.
கதவைத் திறந்துகொண்டு பரமேஷும் அஜித்தும் உள்ளே நுழைந்தனர். முகில் குறட்டை விட்டு உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த அஜித், அவளருகில் சென்றான். உறக்கத்தில் இருந்த அவளுடைய முகத்தைச் சிறிது நேரம் ரசித்துப் பார்த்தவன், அவளை எழுப்புவதற்காகக் கையை நீட்டிவிட்டுப் பிறகு தயங்கினான். இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டுமே என்று நினைத்தவனாக, அவளையே பார்த்துக்கொண்டு நின்றான்.
அவனுடைய செயலைக் கவனித்த பரமேஷ், “அடேய், டைம் ஆயிடுச்சுடா! அவளை எழுப்புடா,” என்று சத்தமாகக் கூறினான்.
அதில் தன் நினைவுக்கு வந்த அஜித், முகிலை மெதுவாகத் தட்டி, “முகில், முகில்… எழுந்திரு, டைம் ஆயிட்டு,” என்றான்.
அந்தச் சத்தத்தில் விழித்த முகில், கண்களைக் கசக்கியபடி எழுந்து அமர்ந்தாள். பிறகு, அருகில் படுத்திருந்த ரோஸினியையும் எழுப்பிவிட்டாள்.
கொட்டாவி விட்டுக்கொண்டே எழுந்த ரோஸினி, “ஏண்டி, இவ்வளவு சீக்கிரமாவே எழுப்புற? கொஞ்ச நேரமாவது தூங்க விடேன்,” என்று சலிப்புடன் கூறினாள்.
அதில் முகிலை முறைத்துப் பார்த்தவள், வேறு வழியில்லாமல் போர்வையை விலக்கிவிட்டு எழுந்தாள்.
மூவரும் எழுந்துவிட்டதைப் பார்த்த பரமேஷும் அஜித்தும் தங்கள் அறைக்குச் சென்றனர்.
அனைவரும் தங்களுடைய அன்றாட வேலைகளை முடித்துவிட்டு, சீக்கிரமாகச் சுற்றிப் பார்க்கத் தயாராகினர்.
அறையைவிட்டு அனைவரும் ஒன்றாக வெளியே வந்து, காலை உணவை உண்ண கீழே சென்றனர். முந்தைய இரவில் தங்கள் அறைகளிலேயே உணவை முடித்திருந்ததால், அந்தப் பிரம்மாண்டமான உணவு அருந்தும் அறையை அப்போதுதான் நிதானமாகப் பார்க்க முடிந்தது.
அங்கிருந்த பிரம்மாண்டத்தைக் கண்டு வாய் பிளந்து வியந்தபடியே மற்றவர்களுடன் சென்றாள் ருத்ரா. வரிசையாக மேசைகள் இருக்க, அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அனைவரும் அமர்ந்தனர்.
மேசையில் வைக்கப்பட்டிருந்த ஸ்பூன் மற்றும் மற்ற பொருட்களைப் புரியாமல் பார்த்தாள் ருத்ரா. எல்லாமே அவளுக்குப் புதிதாகவும் வித்தியாசமாகவும் தெரிந்தன.
சிறிது நேரத்தில் அங்கு வந்த சர்வர், அனைவரின் முன்னாலும் ஜூஸ் ஒன்றை வைத்துவிட்டுச் சென்றார். அதனைப் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் ருத்ரா.
அவளுடைய பார்வையிலேயே அவளுக்குப் புரியவில்லை என்பதை உணர்ந்த பரமேஷ், அருகில் இருந்த கியூஆர் கோடைக் காட்டி, “இத ஸ்கேன் பண்ணா என்னென்ன சாப்பாடு இருக்குனு தெரியும்,” என்று விளக்கினான்.
அதற்குத் தலையசைத்து, “ம்,” என்றாள் ருத்ரா.
ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவையான காலை உணவு வகைகளை ஆர்டர் செய்தனர். சிறிது நேரத்திலேயே அங்கு வந்த செஃப், ஒவ்வொருவரிடமும் காரம் சாப்பிடுவதில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா, ஏதேனும் காய்கறி அல்லது உணவுப் பொருட்களால் அலர்ஜி ஏற்படுமா என்று கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றார்.
‘இவர் எதற்காக வந்து இதையெல்லாம் கேட்கிறார்?’ என்று மனதிற்குள் யோசித்துக்கொண்டிருந்தாள் ருத்ரா.
அனைவரும் ஜூஸை மெதுவாக உறிஞ்சிக் குடித்து முடிக்கவும், அவர்கள் ஆர்டர் செய்த உணவுகள் ஒவ்வொன்றாக மேசையில் வைக்கப்பட்டன. தோசை, பூரி என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான உணவை ஆர்டர் செய்திருந்தனர்.
ருத்ராவின் முன்னால் பெரிய தட்டில் இரண்டு இட்லிகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றைச் சுற்றிலும் சாம்பாருடன் நான்கு வகையான சட்னிகள் சிறிய கிண்ணங்களில் வைக்கப்பட்டிருந்தன.
இரண்டு இட்லிக்கு இத்தனை சட்னிகளா என்று வியப்புடன் பார்த்தவள், தன் ஊரில் இட்லியுடன் தரப்படும் சாம்பாரையும் தேங்காய்ச் சட்னியையும் நினைத்துப் பார்த்தாள்.
‘அப்படி இதில் என்ன சுவை இருக்கிறது?’ என்ற கேள்வியுடன் மெதுவாகச் சாப்பிட ஆரம்பித்தாள். ஒவ்வொரு சட்னியையும் தொட்டுச் சுவைத்துப் பார்த்தவள், கடைசியாக ஒரு சட்னியைத் தொட்டுச் சாப்பிட்டபோது அதன் இனிப்புச் சுவை அவளுக்குப் புதிதாக இருந்தது.
‘இது என்ன சட்னியாக இருக்கும்?’ என்று யோசித்துக்கொண்டே தட்டைப் பார்த்தாள். அதற்குள் இட்லி காலியாகியிருந்தது. வயிறும் நிறைந்ததுபோல் இருந்தது.
சாப்பிட்டு முடித்ததும், வழக்கம்போல் கை கழுவும் இடம் எங்கிருக்கிறது என்று பார்ப்பதற்காக எழுந்து நின்றாள் ருத்ரா.
அவள் எழுந்து நிற்பதைப் பார்த்த பரமேஷ், “ஏன் எழுந்துட்ட ருத்ரா? என்னாச்சு? உனக்கு எதுவும் வேணுமா? ஆர்டர் பண்ணவா?” என்று கேட்டான்.
சிறிது தயக்கத்துடன், “அதெல்லாம் வேண்டாம். கையைக் கழுவுற இடம் எங்க இருக்குனு சொல்லுங்க, நான் போய்க் கழுவிக்கிறேன்,” என்றாள்.
அவள் அப்பாவியாகக் கேட்பதைப் பார்த்த பரமேஷுக்குச் சிரிப்பு வந்தது.
அதைக் கவனித்த ரோஸினி, “இதுகூடவா உனக்குத் தெரியாது? இங்கேயே உட்காரு. கைகழுவத் தண்ணி கொண்டு வந்து தருவாங்க,” என்று சற்று அலட்சியமாகக் கூறினாள்.
அவளுடைய பேச்சைக் கேட்டுப் பரமேஷின் முகம் மாறியது.
“ரோஸினி, நீ கொஞ்சம் அமைதியா இரு. அவ இப்பதான் இந்த மாதிரி ஹோட்டலுக்கெல்லாம் வரா. அவளுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்? தெரியாததைச் சொல்லிக்கொடுத்தா அவளே கத்துப்பா,” என்று ருத்ராவுக்காகப் பரிந்து பேசினான்.
அதில் இன்னும் கடுப்பான ரோஸினி, ருத்ராவைப் பார்த்து உதட்டைப் பிதுக்கியபடி, “ஆமா, சாரி ருத்ரா! நீ பட்டிக்காட்டுல இருந்து வந்தவன்னு எனக்கு மறந்தே போச்சு. இங்க இருக்கிறதெல்லாம் உனக்குப் புதுசாத்தான் இருக்கும்,” என்று குத்தலாகக் கூறினாள்.
அவளுடைய வார்த்தைகள் ருத்ராவின் மனதைப் புண்படுத்தின. குறிப்பாக, ‘பட்டிக்காடு’ என்ற வார்த்தை அவளை வெகுவாகப் பாதித்தது. அதை வெளிக்காட்டிக்கொள்ளக் கூடாது என்று நினைத்தாலும், அவளுடைய முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை மறைக்க முடியவில்லை.
அதைக் கவனித்த பரமேஷால் அவளுடைய சோகமான முகத்தைப் பார்க்க முடியவில்லை. உடனே அவளுடைய கவனத்தை மாற்றும் விதமாக, “ருத்ரா, உனக்கு என்ன ஃப்ளேவர் ஐஸ்கிரீம் பிடிக்கும்?” என்று கேட்டான்.
அவனுடைய கேள்வியில் தன் சோகத்தை மறைத்துக்கொண்டு முகத்தில் புன்னகையை வரவழைத்த ருத்ரா, “சாக்லேட் ஃப்ளேவர் ஐஸ்கிரீம்,” என்றாள்.
உடனே பரமேஷ் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தான். சிறிது நேரத்தில் அவளுக்கு முன்னால் ஐஸ்கிரீம் வைக்கப்படவும், அதைப் பார்த்த ருத்ராவின் முகம் மலர்ந்தது. அதுவரை மனதில் இருந்த வருத்தத்தை மறந்தவளாக, அதன் சுவையை ரசித்து உண்ண ஆரம்பித்தாள்.
அவளுடைய முகத்தில் மீண்டும் புன்னகை மலர்ந்ததைப் பார்த்த பரமேஷும் மனதிற்குள் நிம்மதியடைந்தான்.
அனைவரும் சாப்பிட்டு முடித்ததும், வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் சுற்றிப் பார்க்கக் கிளம்பினர்.
அங்கிருந்து ஐந்து நிமிடப் பயணத்திலேயே அவர்கள் செல்ல வேண்டிய இடம் வந்துவிட்டது. காரை ஓரமாக நிறுத்திவிட்டு அனைவரும் கீழே இறங்கினர்.
முன்னால் நுழைவாயில் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு உள்ளே செல்வதற்கான அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தன. ஐவருக்கும் சேர்த்து அனுமதிச் சீட்டுகளை வாங்கிக்கொண்டு வந்தான் பரமேஷ்.
நுழைவாயிலின் முன் அமர்ந்திருந்த காவலர் அனுமதிச் சீட்டுகளைச் சரிபார்த்து அவர்களை உள்ளே அனுப்பினார். உள்ளே சில அடிகள் எடுத்து வைத்ததுமே அழகாகக் காட்சியளித்தது கடற்கரைக் கோவில்.
உடனே அலைபேசியை எடுத்த யூடியூப்பில் நேரலையைத் தொடங்கிய அஜித், கடற்கரைக் கோவிலைக் காட்டியபடி, “நாங்க மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலுக்கு வந்திருக்கிறோம் நண்பர்களே…” என்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினான்.
“இந்தக் கோவில் பல்லவ மன்னர் இரண்டாம் நரசிம்மவர்மர் காலத்தில் கட்டப்பட்டது. அந்தக் காலத்துலேயே எவ்வளவு அழகான சிற்ப வேலைப்பாடுகள் செஞ்சிருக்காங்கனு பாருங்க, பிரண்ட்ஸ்!” என்று அங்கிருந்த சிற்பங்களை ஒவ்வொன்றாகக் காட்டினான்.
அனைவரும் கோவிலின் அழகையும் சிற்பங்களையும் கண்டுகளித்துவிட்டு வெளியே வந்தனர். அதன்பிறகு, அருகிலிருந்த அர்ஜுனன் தபசு மற்றும் கிருஷ்ணரின் வெண்ணெய் உருண்டையைப் பார்க்கச் சென்றனர்.
காரில் சற்று தூரம் சென்றதும் கிருஷ்ணரின் வெண்ணெய் உருண்டை தெளிவாகத் தெரிந்தது. அந்தப் பாறையை முதன்முதலில் தூரத்திலிருந்து பார்த்த ருத்ராவுக்கு ஆச்சரியம் மேலிட்டது.
‘அது எப்படி கீழே விழாமல் அந்தப் பாறை அப்படியே நிற்கிறது?’ என்று அவளுக்குள் ஆர்வம் எழுந்தது.
கார் நின்றதும் மற்றவர்கள் இறங்குவதற்குக்கூடக் காத்திருக்காமல், பாறை இருந்த இடத்தை நோக்கி ஆர்வமாகச் சென்றாள் ருத்ரா. மற்றவர்கள் அர்ஜுனனின் தபசுச் சிற்பத்தைப் பார்க்கச் செல்ல, பரமேஷ் மட்டும் வேறு வழியில்லாமல் அவளைப் பின்தொடர்ந்தான்.
“எப்போது இவளுக்கு இதே வேலையா போச்சு” என்று வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டே சென்றான்.
பாறைக்கு அருகில் சென்றதும் அதைச் சுற்றிச் சுற்றி வந்தாள் ருத்ரா. ஒருபுறம் நுனியில் நிற்பதுபோல் காட்சியளித்த அந்தப் பாறை, எப்படிக் கீழே விழாமல் அப்படியே நிற்கிறது என்று அவளுக்குப் புரியவில்லை.
அதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில், குழந்தைத்தனமாகத் தன் கையால் பாறையைத் தள்ளிப் பார்த்தாள்.
அவ்வளவு பெரிய பாறை ருத்ராவின் சிறிய கைகளுக்குத் தள்ளினால் அசைந்துவிடுமா என்ன?
அவளுடைய செய்கையைப் பார்த்த பரமேஷுக்குச் சிரிப்பு வந்தது. முதலில் சிரிப்பை அடக்க முயன்றவன், முடியாமல் வாய்விட்டுச் சிரித்துவிட்டான்.
அவன் சிரிப்பதைப் பார்த்து முறைத்த ருத்ரா, “இப்ப ஏன் சிரிக்கிறீங்க?” என்று கோபமாக இருப்பதுபோல் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.
“நரசிம்மவர்மராலேயே முடியாததை, ஏன் ஏழு யானைகளால்கூட நகர்த்த முடியாத இந்தக் கல்லை, நீ உன் கையை வச்சுத் தள்ளுனா நகர்ந்துருமா?” என்று அவளைக் கிண்டலாகக் கேட்டான்.
அவன் கூறியதைக் கேட்ட ருத்ராவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.
“என்னது? ஏழு யானைகளாலேயே தள்ள முடியலையா?!”
“ஒரு பிரிட்டிஷ் ஆட்சியாளர் ஏழு யானைகளை வச்சு இந்தப் பாறையை இழுத்து நகர்த்த முயற்சி செஞ்சாராம். ஆனா முடியாமப் போகவே, அப்படியே விட்டுட்டாராம்.”
“ஓஓ!” என்று வியப்புடன் கூறியவளின் பார்வை அங்கிருந்த கம்பீரமான கோவிலின் மீது விழுந்தது.
அடுத்த நொடியே, அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் ஓடத் தொடங்கினாள் ருத்ரா.
அவளுக்குப் பின்னால் சென்ற பரமேஷ், ‘மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டதா?’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.
கோவிலை நோக்கிச் சென்ற ருத்ரா, அங்கிருந்த சரிவான பகுதியைப் பார்த்ததும் மெதுவாக மேலே ஏறத் தொடங்கினாள்.
அவளைப் பார்த்துப் பதறிய பரமேஷ், “என்ன பண்ற நீ? முதல்ல கீழே இறங்கு!” என்று அதட்டினான்.
அவன் கூறியதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல், ருத்ரா தொடர்ந்து மேலே ஏறினாள்.
அவள் கோவிலை நோக்கித்தான் செல்கிறாள் என்பதைப் புரிந்துகொண்ட பரமேஷ், “கோவிலுக்குப் போக அந்தப் பக்கம் படிக்கட்டு இருக்கு. வா, அதுல போகலாம். நீ கீழே இறங்கு ருத்ரா!” என்று மீண்டும் கத்தினான்.
அதற்கும் அசராத ருத்ரா, “படி ஏறுனா அதுல என்ன ஜாலி இருக்கு? இதுதான் சூப்பரா இருக்கு. நீயும் ஏறி வா!” என்று கூறிவிட்டு, அவனுடைய பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து ஏறினாள்.
அவள் கூறுவதும் ஒருவிதத்தில் சரிதான் என்று தோன்றியதால், பரமேஷும் வேறு வழியின்றி அவளைப் பின்தொடர்ந்தான்.
சிறிது தூரம் ஏறியதும், கொடிகள் நிறைந்த பகுதியைப் பார்த்த ருத்ராவுக்கு ஏதோ வித்தியாசமாகத் தோன்றியது. கோவிலை நோக்கிச் செல்லாமல், அந்தப் பகுதியை உற்றுப் பார்த்தபடி மெதுவாக அதை நோக்கி நடந்தாள்.
அவள் கோவிலுக்குச் செல்லாமல் வேறொரு திசையில் செல்வதைப் பார்த்த பரமேஷ், “ருத்ரா, எங்க போற? அது என்ன இடம்?” என்று கேட்டபடியே அவளுக்குப் பின்னால் விரைந்தான்.
அதற்குள் செடி கொடிகளை விலக்கி உள்ளே நுழைந்த ருத்ராவின் கண்கள் விரிந்தன.
தொடரும்…
அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம் நண்பர்களே! 🤗🤗
கதையில் குறைகள் இருப்பின் என்னிடம் தெரிவியுங்கள். திருத்திக்கொள்ள முயற்சிக்கிறேன். ☺️ நன்றி!