காரிகை கனவுகள் 03

வீட்டிலேயே அடைந்து கிடைக்கும் தம்பியைக் கண்டுகொண்டு பார்க்க முடியாமல் வேதனையில் உழன்று கொண்டிருந்தாள் எழிலரசி. தனது தந்தை அவனை சீராட்டி வளர்த்த விதம் கண்ணுக்குள் வந்து செல்ல, ‘அத்தனையும் இவனை இப்படி பார்க்கவா?” என்று நொந்து கொண்டாள் அவள்.

திவ்யஜோதி மட்டும் கையில் கிடைத்தால், அவளே கொன்றுவிடுவாள். உண்மையில் அந்த நிலையில் தான் இருந்தாள் எழில்.

‘என்ன குறை அவனுக்கு? ஏன் இப்படி செய்தாள்?’ என்று இந்த பதினைந்து நாட்களில் அவள் யோசிக்காத நிமிடங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

நாகரத்தினமும்- ரேகாவும் மற்ற அண்ணன் தம்பிகளோடு வந்து மன்னிப்பு கேட்டபோது கூட, அவர்கள் முகத்தை திரும்பி பார்க்கவில்லை எழில்.

வீட்டிற்கு வந்தவர்களை வாவென்றும் அழைக்கவில்லை. இதில் கணவன் வேறு அவளிடம் கோபம் கொள்ள, “என் தம்பிக்கு என்ன வழி?” என்று நிதானமாக பெண் கேட்ட விதத்தில், வாய்மூடிக் கொண்டான் ராஜேஷ்.

என்னவோ, யாரின் முகத்தையும் பார்க்க பிடிக்காத நிலையில் தான் இருந்தாள் பெண். அவள் பெற்று வளர்த்த பிள்ளையை கூட சரிவர கவனிக்கவில்லை இந்த நாட்களில்.

எப்போதோ ஒரு முறை என்றிருந்த செல்வாவின் குடிப்பழக்கம் கணக்கே இல்லாமல் பெருகிக் கொண்டிருக்க, அவனை எப்படி இயல்பாக்குவது என்று புரியவில்லை பெண்ணுக்கு.

கோபமாக கத்தி, அடித்து, திட்டிவிட வேண்டும் என்று அவனை நெருங்கினாலும், அவன் முகத்தை பார்த்துவிட்டால் அவனிடம் ஒன்றையும் பேச முடிவதில்லை அவளால்.

அதற்குமேல் அவளின் வேதனை தொடங்கிவிட, தான் தனியே வந்து கண்ணீர் வடிக்க தொடங்கி விடுகிறாள். தந்தையும், அண்ணனும் ஒரு வாரம் முன்பு ஊருக்கு கிளம்பியிருக்க, ‘செல்வாவை அழைத்துச் செல்கிறேன்’ என்று அவர்கள் அழைத்தபோது கூட, மறுத்து தம்பியை தன்னுடன் இருத்திக் கொண்டது இப்போது தவறாகப் பட்டது.

ஆனால், அந்த நிலையில் தம்பிக்காரனை வீட்டை விட்டு அனுப்புவதெல்லாம் அவளால் யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை.

‘என் பிள்ளை’ என்று மனதோடு நினைத்துக் கொண்டவள் தன்னால் அவனை சரிசெய்து விட முடியும் என்று பூரணமாக நம்பினாள். ஆனால், இந்த இடைப்பட்ட நாட்களில் அவளின் நம்பிக்கை அடியோடு குறைந்து கொண்டே வர, தன் முடிவு குறித்தே அவளுக்கு சந்தேகமாக இருந்தது.

இதே யோசனையில் அமர்ந்து விட்டவள் அடுப்பில் வைத்திருந்த பாலை மறந்து போயிருக்க, அவள் மகன், “ம்மா” என்று அழைக்கவும் தான், அவன் முகம் பார்த்து வேகமாக அடுப்பை அணைத்தாள்.

“ஒண்ணுமில்ல சர்வா. அம்மா கவனிக்காம விட்டுட்டேன். நீ மாமா என்ன பண்றான் பார்த்துட்டு வா” என்று பிள்ளையை தம்பியின் அறைக்கு அனுப்பினாள்.

சர்வா, சில நிமிடங்கள் கழித்து ஓடி வந்தவன், “மாமா தூங்குறான்” என்றுவிட்டு ஓடிவிட, காலை உணவு நேரம் ஆகி இருந்தது.

‘இன்னும் என்ன தூக்கம்’ என்று யோசித்தபடியே கணவனுக்கான உணவை எடுத்து வைத்தவள், அவன் உண்டு முடித்து அலுவலகம் கிளம்பவும், தம்பியின் அறைக்கு வந்துவிட்டாள்.

வெளிச்சம் என்பதே துளியும் இல்லாமல், முழுதாக அறையை அவன் இருட்டாக்கி வைத்திருக்க, அறையின் கதவை நன்றாக திறந்து வைத்தவள், அந்த அறையின் விளக்குகளை உயிர்ப்பிக்க, மெல்ல அங்கே ஒளி பரவியது.

ஆனால், இதை குறித்து எந்த கவலையும் அற்றவனாக உறங்கிக் கொண்டிருந்தான் செல்வா. நேற்று இரவிலும் குடித்திருக்கிறான் என்பதை அவன் அருகில் இருந்த பாட்டில்களை வைத்து புரிந்து கொண்டவள், அவன் எழுவதற்குள் அந்த அறையை ஒழுங்குப்படுத்தும் வேலையில் இறங்கிவிட்டாள்.

சுத்தமாக பெருக்கி முடித்து, தண்ணீர் கொண்டு அவள் துடைத்தெடுக்கும் நேரம், செல்வா விழித்து எழ, அக்காவை காணவும், தலையை திருப்பிக் கொண்டான். அவள் முகம் பார்க்க முடியாத குற்றவுணர்ச்சி அவனுக்கு.

எழில் ஒன்றுமே நடவாதது போல், “குளிச்சுட்டு வா செல்வா” என, கோடியில் கிடந்த துண்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

அவன் குளித்து வருவதற்குள், அந்த அறையில் இருந்த அவனது அழுக்கு உடைகளை எடுத்து வந்து வாஷிங் மெஷினில் போட்டு விட்டவள், அவனுக்கு உணவை எடுத்து வைத்து விட்டு காத்திருக்க, செல்வா கீழே இறங்கி வரவில்லை.

“செல்வா” என்று எழில் இரண்டு முறை அழைத்த பின்னே அவன் கீழே வர, அவனுக்கான உணவை பரிமாறினாள் எழில்.

அரைகுறையாக உண்டவன் தட்டில், வேகமாக உணவை நிரப்பியவள், “சாப்பிட்டு முடி” என்று அதட்ட, வாய் திறக்காமல் உண்டு எழுந்தான் செல்வா.

மீண்டும் அவன் மாடியேறப் பார்க்க, “இந்த காரை என்ன செய்யப் போற?” என்றாள் அவனிடம்.

செல்வா புரியாமல் பார்க்க, “இல்ல… உனக்கு இதைப்பற்றி நினைப்பு இருக்கிறதா எனக்கு தெரியல. உனக்கு வேணும்னா வச்சுக்கலாம். இல்ல, இப்படியே குடிச்சுட்டு ரூம்ல தான் அடைஞ்சு கிடக்க போறதா இருந்தா, நல்ல விலைக்கு கொடுத்திடலாம். கடனாவது முடியும் இல்ல” என்றுவிட்டாள் எழில்.

செல்வா அவளை கோபத்துடன் பார்க்க, ‘உன் பார்வை என்னை என்ன செய்து விடும்?’ என்பது போல் பார்த்திருந்தாள் எழில்.

“என் நிலைமை உனக்கும் புரியலையா?” என்று செல்வா வெறுப்புடன் கேட்க,

“உன் நிலைமைக்கு என்னடா  குறைச்சல்?”

“ஏதோ குறை இருக்கவும் தான, விட்டுட்டு போயிட்டா. பைத்தியம் பிடிக்குது எழில். என்னால வேற எதையும் யோசிக்கக்கூட முடியல” என்றவனை கண்டு இறங்கத் துடித்த மனதை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் எழில்.

இப்போது விட்டால் அவனை பிடிக்கவே முடியாது என்று புரிய, “உனக்கு அப்பா கதை தெரியும் இல்ல செல்வா” என்றாள் எழில்.

அவன் அமைதியாக நிற்க, “அம்மாவோட பதிமூனு வருஷம் குடும்பம் பண்ணவர் அவர். நீ பிறந்து கொஞ்ச நாள்ல அவங்க இறந்து போனப்ப, அவர் உன்னை மாதிரி நிற்கல. அவரோட பசங்களை நினைச்சு அவரே தெளிஞ்சு வந்தார்.”

“முக்கியமா உனக்காக… அவர் கையில மட்டும் தான் நீ அழாம இருப்பன்னு, உன்னை கையிலேயே தூக்கிட்டு திரிவார் அந்த மனுஷன். உனக்கு அம்மா முகம் கூட நினைவிருக்க வாய்ப்பில்ல. உன்னை அப்படி  பார்த்த மனுஷனுக்கு இதெல்லாம் தெரிஞ்சா என்ன ஆவார் யோசிச்சியா?” என்றாள் உரைக்கும்படியாக.

“என்ன கொஞ்ச நாளைக்கு விட்டுடு எழில். அப்பா விஷயமும் என் விஷயமும் ஒன்னு இல்ல. உனக்கு புரியுதா?”

“ஏற்கனவே பதினைஞ்சு நாள் ஆகிடுச்சு செல்வா. இதுக்கு மேல உன்னை உன் போக்குல விட முடியாது. உன்னை வேண்டாம்னு போனவ, செத்துப் போனதா தான் அர்த்தம். இதை மட்டும் உன் மனசுல பதிய வை. அவளை பத்தின விஷயங்களை அடியோடு தூக்கிப் போடு.”

“கேட்க நல்லா இருக்கு.”

“நீ மனசு வச்சா, செயலும் நல்லா இருக்கும். ஓடிப் போனவளுக்காக என் தம்பி ஏன்டா அவன் வாழ்க்கையை தொலைக்கணும்”

“லவ் பண்ணி இருக்கேன் எழில் அவளை. ஈஸியா இல்ல” என்றவனுக்கு தன்னைமீறி கண்ணீர் வர,

“அதே காதல் அவளுக்கும் இருந்திருந்தா, உன்னை ஏன் விட்டு போனா செல்வா?” என்றாள் எழில்.

“தெரியலையே” என்று அவன் தவிக்க,

“தூக்கிப் போடுடா அவளை. தகுதியில்லாத ஒருத்திக்காக நீ தவம் கிடக்க தேவையில்ல. உன் தொழிலை பாரு.

இடையில வந்தவ இடையிலேயே போய்ட்டதா நினை. நீ முதலாளி ஆகணும்னு தானே கார் வாங்கின. இப்படி கேட்பாரற்று கிடக்கவா இதை வாங்கிக்கொண்டு வந்து நிறுத்தி இருக்க. இதை என்ன செய்யுறதுன்னு இன்னைக்கே நீ முடிவெடுக்கணும். இல்ல எதுவும் வேண்டாம்னு நினைச்சாலும் சொல்லிடு. அப்பாவை வரச்சொல்லி உன்னை அவரோட அனுப்பி வைக்கிறேன்”

“நான் இங்கே இருக்கிறது உனக்கு பிரச்சனையா இருக்கா எழில்?” என்று புரியாமல் கேட்டவனை, கன்னம் கன்னமாக அறைய வேண்டும் போல் ஆத்திரம் வந்தது எழிலுக்கு.

தன்னை அடக்கி கொண்டவள், “ஆமா… என் தம்பி வாழ்க்கையை நானே கெடுத்துட்டேன்னு குற்றவுணர்ச்சியா இருக்கு. தப்பு செய்துவிட்டோமோன்னு தினம் தினம் வேதனையா இருக்கு. அதனால தான் உன்னை என் வீட்டை விட்டு துரத்தி விடணும்னு நினைக்கிறேன். அதுவும் நீ இப்படி குடிச்சே சீரழியறதை என்னால பார்க்க முடியல. அதனால தான் உன்னை போக சொல்றேன். வெளியே போயிடு” என்றவள் தம்பியை திரும்பிக்கூட பார்க்காமல் மொட்டைமாடிக்குச் சென்றுவிட்டாள்.

செல்வாவுக்கு அவளது நிலை புரிய, அவனும் சோகமாகவே அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்துவிட்டான்.

கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழித்து எழில் கீழே இறங்கிவர, அதுவரையும் தம்பிக்காரன் அந்த இடம் விட்டு அசையாமல் தான் அமர்ந்திருந்தான்.

எழில் அவனை கண்டுகொள்ளாமல் சமையல் அறைக்குச் செல்ல, “என்னை என்ன செய்ய சொல்ற எழில்” என்று அவளிடமே வந்து நின்றான் செல்வா.

“போய் பொழப்பை பாருடா மடையா” என்று அவள் கத்த, ‘அக்கா நல்லாதான் இருக்கா’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, மேலேச் செல்ல படிகளில் ஏறினான் செல்வா.

எழில் செல்லும் அவனையே பார்த்து நிற்க, பதினைந்து நிமிடங்களில் அவனது வழக்கமான வெள்ளைநிற ஓட்டுநர் உடையுடன் படிகளில் இறங்கினான் செல்வா.

பூஜை அறையில் இருந்து திருநீறு எடுத்து வந்து அவன் நெற்றியில் பூசிவிட்டவள், தம்பியை நிம்மதியாக வெளியே அனுப்பி வைத்தாலும், உள்ளுக்குள் தடதட வென்ற உணர்வுதான்.

அவளின் உதறல் சரியே என்பதுபோல் அன்றிரவும் குடித்துவிட்டு தான் வந்து நின்றான் செல்வா.

‘கடவுளே’ என்று முனகிக் கொண்டவள் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

செல்வாவுக்கான உணவு அவனது அறையில் ஏற்கனவே எடுத்து வைத்திருக்க, அவனும் அமைதியாக உண்டுவிட்டு உறங்கி இருந்தான்.

அடுத்தநாள் காலையில் எழில் பூஜையை முடிக்கும் நேரமே செல்வா கீழே இறங்கிவிட, எழிலுக்கு வியப்பு தான்.

‘அவன் வேலைக்கு செல்லமாட்டான்’ என்று தான் நினைத்திருந்தாள் அவள்.

அவனே கிளம்பவும், அமைதியாக நின்று கொண்டாள்.

இதுவே தினசரி வழக்கமாக, பத்து நாட்கள் கடந்த நிலையில் மீண்டும் அவள் தம்பியிடம் நிற்க, “மொத்தமா எல்லாம் மாற முடியாது எழில். எனக்கு நைட்ல நிம்மதியா தூக்கம் வரல. தூங்காம நான் எப்படி அடுத்தநாள் வேலைக்கு போறது சொல்லு. குடிச்சுட்டா எதுவும் ஞாபகம் இல்லாம தூங்கிடறேன். ப்ளீஸ். கொஞ்சநாள் என்னை விடு” என்றவனை கண்டு வேதனை கொண்டாலும் பதில் பேசாமல் விலகிச் சென்றாள் அக்காக்காரி.

செல்வா அவனது பழைய வழக்கத்திற்கு திரும்பி ஐந்து நாட்களில், காவல் நிலையத்தில் இருந்து நாகரத்தினத்துக்கு அழைப்பு வந்தது.

‘பெண்ணை காணோம்’ என்று இவர்கள் ஏற்கனவே புகார் கொடுத்திருக்க, மகள் இப்போது காவல் நிலையம் வந்திருந்தாள்.

நாகரத்தினத்துடன் அவரது சகோதரர்களும் சென்றிருக்க, காவல் நிலையத்தில் வைத்தே மகளை அடிக்கப் பாய்ந்தார் நாகரத்தினம்.

அவளுடன் நின்றிருந்த அவளது நண்பன் ராகேஷையும் ஒரு அறை விட்டவர், “உன் வீட்டு பொண்ணை இப்படி கூட்டிட்டு போனா, என்னடா பண்ணி இருப்ப?” என்று அவன் சட்டையைப் பிடித்து இருந்தார்.

“எதுக்காகம்மா வீட்டை விட்டு ஓடின?” என்று காவல் நிலையத்தில் கேட்க,

“எனக்கு அப்போ கொஞ்சம் குழப்பமா இருந்தது. எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்ல. என்ன பண்றது தெரியாம,” என்று நிறுத்தியவளை இடையிட்ட ஆய்வாளர், “என்ன கட்டாய கல்யாணமா?” என்றார் பெற்றவரிடம்.

“அட ஏன் சார் நீங்க வேற. இவ தான் சார் அவனை கையை காட்டினா. இவளால அவனும் அசிங்கப்பட்டு நிற்கிறான்” என்றுவிட்டார் ராஜேஷ்.

நாகரத்தினத்துக்கு தம்பியின் வார்த்தைகள் தைக்க, மகளை அருவருப்பாக பார்த்து நின்றார் அவர்.

காவல் நிலையத்தில் திவ்யஜோதியிடம் ஏகப்பட்ட கேள்விகள் கேட்கப்பட, எதற்கும் பதில்கூற முடியாமல் தலையைக் குனிந்து நின்றிருந்தாள் அவள்.

ஒருவழியாக அனைத்தும் முடிந்து அவளை நாகரத்தினத்துடன் அனுப்பி வைக்க, ராகேஷ் காவல் நிலையத்துடன் கழன்று கொண்டான்.

நாகரத்தினமும் அவளை அழைத்துச் செல்ல முடியாது என்றுதான் நின்றார். ஆனால், அவரின் தம்பிகளும், காவல் ஆய்வாளரும் பேசியதில் விருப்பமே இல்லாமல் அவளைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார் அவர்.

வீட்டில் அவள் அன்னையும் அவர் பங்குக்கு மகளை வெளுத்துவிட, அத்தனையையும் வாங்கிக்கொண்டு அமைதியாகவே நின்றாள் மகள்.

உண்மையில் அவளும் அவசரப்பட்டுவிட்டோமோ என்று யோசிக்கும் நிலையில் தான் இருந்தாள். அவளுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த ஆன்சைட் வாய்ப்பு வேறொருவருக்கு கிடைத்து விட்டிருக்க, அவள் உடன் நிற்பான் என்று எதிர்பார்த்திருந்த ராகேஷ், அவளை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

நட்பின் எல்லை என்ன என்பதை அவன் சரியாக அவளுக்கு அறிவுறுத்திவிட, செய்த தவறு தாமதமாக புரிந்தது அவளுக்கு.

தன் வீட்டை விட்டால் வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தவள், நேரே வீடு வர துணிச்சல் இல்லாமல் தான் காவல் நிலையத்தில் சரண் அடைந்தது.

அவர்களும் அவள் எதிர்பார்த்தது போலவே, அவளை வீட்டில் சேர்த்துவிட, இனி என்ன செய்வது என்ற யோசனை தான் அவளுக்கு.