“டேய் தாத்தா கூப்பிடறார் பக்குவமா பேசி வா” என்று அனுப்பினார்.
“நான் போகலை” என்று அவன் மறுக்க, “போடா நீ” என்று அதட்டி அனுப்பினார்.
“என்ன பேசின நீ?” என்று அவன் வந்தவுடனே கேட்க…
எந்த பதிலும் சொல்லாமல் கை கட்டி அமைதியாக நின்றான்.
“இப்ப எதுக்கு இந்த விசாரனையெல்லாம்” என்று நிலா பேசினாள். அவளுக்கு மக்கள் முன் எதுவும் வெளி வருவதில் விருப்பமில்லை.
“டேய், பாப்பாவைக் கூட்டிட்டு ரூம் உள்ள போய் படிங்க” என்று அதட்டலிட, அடுத்த நொடி மக்கள் சென்றுவிட்டனர்
“பசங்க முன்னாடி எதுவும் பேச வேண்டாம், அவங்களுக்கு இந்த மாதிரி பேச்சு தெரிய வர்றதுல எனக்கு விருப்பமில்லை” என்றாள் கறாராக.
அவளுக்கு எதுவும் சொல்லாமல் பெரியவர் ராஜ் நாராயணனை ஒரு பார்வை பார்க்க, “அது நான் தொகுதிக்கு போகணும்னு கேட்டேன், இவர் கூட்டிட்டுப் போகலை. அந்த கோபத்துல ஏதோ சொல்லிட்டேன்” என்று சொல்லிவிட்டான்.
“அரசியல்வாதி ஆகணும்னு நினைக்கிற. இந்த கோபம், அதுல விடற வார்த்தையெல்லாம் உன்னை அதுக்கு தகுதியில்லாதவனாக்கிடும் புரியுதா?” என்று அவனிடம் சொன்னவர்,
“நம்ம பையன் தான் கண்ணு, தெரியாம பேசுவான், அவன் மேல கோபத்தை வளர்த்துக்காதே” என்றார் தணிவாகவே.
பெரியவரின் பரிமாணத்தில் ராஜ் நாராயணன் அப்பா சொன்னது நூற்றுக் நூறு உண்மை என்று உணர்ந்தான்.
“என்ன பஞ்சாயத்தா?” என்றாள் சற்று திமிராகவே.
“கண்ணு புரிஞ்சிக்கோ, எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு”
“நான் புரிஞ்சிக்கறது இருக்கட்டும், அவங்க புரிஞ்சிக்கணும். வேலை செய்ய வீட்டுக்குள்ள வந்தவர் இவனோட அப்பா, இன்னைக்கு என்ன நிலமையில இருக்கார்ன்னு அறிஞ்சு புரிஞ்சு தெரிஞ்சு நடக்கணும். இல்லை அவனுக்கு தெரியவரலைன்னா நான் தெரிய வைக்க வேண்டி இருக்கும்”
“சும்மா எல்லா நேரமும் எல்லாரையும் என்கிட்டே இருந்து காப்பாத்த முடியும்னு நினைக்காதீங்க. பார்த்து நடக்கச் சொல்லுங்க” என்றாள். பேச்சு தாத்தாவிடம் இருந்தாலும் பார்வை செந்தாமரையைப் பார்த்தது.
தமிழ்செல்வனுக்கு இந்த பேச்சுக்கள் எல்லாம் பிடித்தமில்லை. ஆனால் அவன் செய்வதற்கு ஒன்றுமில்லை. அமைதியாய் நின்றான்.
எல்லாம் அவளினது தானே.
இத்தனை வருடங்கள் அமைதியாய் தான் இருந்தாள், இப்போது எதற்கு இவ்வளவு பிரச்சனை தானாய் செய்கிறாள் என்று புரியவில்லை.
என்ன இவள் இப்படி பேசுகிறாள் என்று பெரியவருக்கும் அதிருப்தி தான். ஆனால் இன்று அவளின் வீட்டிற்கு வந்திருக்கிறார். வெகு வருடங்களுக்கு அமர்ந்து பேச்சுக்கள்.
வருவார். வெளியில் உட்காருவார். இரண்டொரு வார்த்தைகள் குழந்தைகளுடன் பேசுவார் தான். ஆனால் ராஜ் நாராயணன் போல வாசவி போல பேச்சுக்கள் இருக்காது.
நிலா, அவராய் எதுவும் பேசினாலும் தேவையென்றால் பேசுவாள் இல்லையென்றால் இல்லை தான்.
அம்மா தள்ளி நிற்பதினால் குழந்தைகளும் அப்படியே. இவர் என்ன கேட்டாலும் ஆம், இல்லை என்ற பதில் மட்டுமே.
வாங்கி அடுத்த நொடி அண்ணனின் கைகளில் கொடுத்து விட்டாள்.
மனதினில் யாரிடமும் எதுவும் வாங்காத பழக்கத்தை மெச்சிக் கொண்டார். சிரித்தபடி திரும்பி நடக்க ஆரம்பித்தார். செந்தாமரையும் ராஜநாராயணனும் அவரைப் பின் தொடர்ந்தனர்.
அவர் கேட்டை நெருங்கும் சமயம், “தாத்தா” என்றாள் அழைப்பாய்.
அவர் நிற்கவும், அவள் அருகில் செல்ல, மற்றவர்களும் நின்றனர்.
அங்கே சென்று அவள் தாத்தாவை பார்த்தபடி நிற்க, செந்தாமரை இங்கிதம் அறிந்து மகனை அழைத்து எதிர் வீடு செல்ல, எதிரில் இருந்து பார்த்த கேசவ நாராயணனுக்கு தான் ரத்த அழுத்தம் எகிறியது.
அவரின் அருகில் வந்தவள், “அப்புறம் காசி எப்படி இருந்தது” என்றாள் கூர்மையான பார்வையோடு.
அவளுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்று அனுமானித்து “என்ன தெரியணும் உனக்கு?” என்றார் உடனே.
“எனக்கு எதுவும் தெரிய வேண்டாம். தெரிஞ்சிக்கணும்னு அவசியமுமில்லை” என்று வார்த்தைகளை கடித்துத் துப்பினாள்.
“கண்ணு இவ்வளவு கோபம் தேவையில்லை. நம்ம மனசு அமைதி தான் போகும்” என்று கனிவாக சொல்ல,
மலுக்கென்று கண்களில் நீர் நிறைந்தது, “அமைதி, ம்ம், அமைதி, அதை வெச்சு நான் என்ன பண்ண போறேன்” என்றாள் கண்களில் நீர் நிறைந்த போதும் திமிரான குரலில்.
“கண்ணு” என்றார் இயலாமையோடு.
அவள் அவரையே பார்வையால் துளைக்க…
“என்ன கண்ணு உனக்குக் குறை. கண் நிறைஞ்ச புருஷன், தங்கமான புள்ளைங்க, நல்லா தொழில் பண்ற, சொத்து சுகம் இருக்கு, எதுக்கும் உனக்கு குறை இருக்காது” என்றவர்,
தமிழ் செல்வனை பார்வையால் அழைக்க, அருகில் வந்து விட்டான் உடனே,
எதுவும் அவனிடம் சொல்லாமல் “பார்த்துக்கோ” என்று மட்டும் சொல்ல,
நிலாவை பார்த்தவன் கண்டது கண்களில் கண்ணீர்.
அவ்வளவு தான் பொங்கி விட்டான் பெரியவரிடம், “ஏன் கண்ணு கண்கலங்குது. என்ன சொன்னீங்க?” என்று.
“இவன் எனக்கு அடியாளா? உனக்குத்தான் அவன் அடியாள்” என்று சொல்லி சென்றார்
“என்ன? என்ன நடக்குது?” என்றான் எதுவும் புரியாமல்.
“என்ன நடந்தா உனக்கென்ன?” என்று மீண்டும் திமிராய் பதில் சொன்னாள்.
“இப்படி எல்லாம் என்கிட்டே பேசாத கண்ணு. மனசுக்கு கஷ்டமா இருக்கு” என்றுவிட்டான் வருத்தமாய்.
“அடியாள் ன்ற, அடிப்பேன்ற, சூடு வெச்சேன்னு சொல்ற, எதுக்கு வெச்சேன், சொல்ற பேச்ச கேட்கற பழக்கம் உனக்குக் கிடையாது. எல்லாம் உனக்கு தான் தெரியும்ன்ற எண்ணம்”
“சொல்லச் சொல்ல சிக்கல் பண்ணிட்டே இருந்த, எவனும் எதுக்காகவும் உன்னை தொடக் கூடாதுன்னு தான் அதை நான் வெச்சேன். நான் வெக்கலைன்னா இன்னும் உனக்கு நிறைய காயம் ஆகியிருக்கும். அதுவும் உனக்குத் தெரியும்”
“ஆனாலும் இன்னும் என்னைப் பேசற…”
“ஏதோ பேசினேன்னு இன்னம் அதைப் பிடிச்சு தொங்கிட்டு நிக்கற, இந்த பதினஞ்சு வருஷதுல ஒரு நாள் ஒரு பொழுது கூட என்னை நல்ல மாதிரி நினைச்சதில்லையா”
“என்னை வீட்டு விட்டு போ. நான் என்ன வேணுமோ உனக்கு செய்யறேன்னு சொல்ற. வேற கல்யாணம் பண்ணிக்கோ சொல்ற…” என்றவன்… அதற்கு மேல் பேச இயலாமல், பேச்சே வராமல் துக்கம் தொண்டையை பிடிக்க,
தாள இயலாமல் செருப்பை போட்டு வீட்டை விட்டு விறுவிறு வென நடந்து விட்டான்.
பயம்! எங்கே பிள்ளைகள் முன் கண் கலங்கி விடுவோமோ என்று.
“என்ன இவன் புதுசா பெரிய இவன் மாதிரி பண்ணிட்டு இருக்கான். எவ்வளவு பேசினாலும் அப்படியே போயிடுவான். இன்னைக்கு என்னவாம்” என்று தோன்றிய போதும் கலங்கிய கண்களை சீராக்கி திரும்பி மக்களிடம் உள்ளே சென்றுவிட்டாள்.
தமிழ் செல்வனோ கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தான்.
யாருமே இல்லாதது போல ஒரு உணர்வு, எதற்கு இருக்க வேண்டும் என்ற உணர்வு…
வைகை கரைக் காற்றே நில்லு, வஞ்ஜிதனைப் பாா்த்தா சொல்லு, மன்னன் மனம் வாடுதென்று, மங்கைத்தனை தேடுதென்று, காத்தேப் பூங்காத்தே, என் கண்மணி அவளை கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு.