கீர்த்தனாவும், விஜய்யும் வரவேற்பு நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாய் செய்துகொண்டு இருந்தனர்.
கடந்த இரண்டு நாட்களாய் முக்கியமான உறவினர்கள் மற்றும் நண்பர்களை கைபேசியில் தொடர்பு கொண்டு நடந்ததை விளக்கி, வரவேற்புக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தனர்.
காலையில் இருந்து ஒவ்வொருவருக்காய் அழைத்துப் பேசிப்பேசியே தலைவலி வந்துவிட்டது கீர்த்தனாவுக்கு.
கலைச்செல்வியை பேசச் சொன்னால்,
“அதை ஏன் கேட்குறீங்க அண்ணி.. அவன் இப்படிப் பண்ணுவான்னு நாங்களே எதிர்பார்க்கல. எப்போ எப்படி பழக்கம்ன்னு எல்லாம் தெரியல. திடீர்னு கூட்டிட்டு வந்து நிக்குறான். இனி என்ன பண்ணுறது? திருப்பியா அனுப்ப முடியும்?” எனப் பேசி பிரச்சனையை இழுத்துக் கொண்டிருக்க,
“ம்மா! நானே பேசிக்குறேன் நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க” என்று கீர்த்தனாவே மேற்கொண்டு பேசத்துவங்கி விட்டாள்.
அடுத்த ஒருவருக்கு அழைத்தவள்,
“ஹலோ அத்தை! நான் கீர்த்தனா பேசுறேன்”
“….”
“நல்லா இருக்கேன். நீங்க மாமா எல்லாரும் எப்படி இருக்கீங்க?”
“…”
“அது ஒரு முக்கியமான விசயம் அதுதான் போன் பண்ணுனேன். நம்ம கெளதம்க்கு மேரேஜ் ஆகிடுச்சு” என,
“என்ன சொல்ற கீர்த்தனா? எப்படி எங்ககிட்ட கூட சொல்லாம? லவ் மேரேஜா அவனா பண்ணிக்கிட்டு வந்துட்டானா?” என மறுமுனையில் அவர் அதிர்ச்சியின் உச்சிக்கு சென்றிருக்க,
“அது அவன் ஆன்சைட் போறதால சீக்கிரம் ரெஜிஸ்டர் பண்ணிடலாம்னு பண்ணிட்டான் அத்தை. அவன் விருப்பம்னு அப்பாவும் அம்மாவும் ஏத்துக்கிட்டாங்க. அதான் நம்ம அளவுல ஒரு ரிசப்ஷன் வெச்சிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம். நீங்களும் மாமாவும் கண்டிப்பா வரணும். அம்மா அப்பா நேர்ல வர்ற சூழ்நிலை இல்லை. நீங்க புரிஞ்சுக்குவீங்கனு நம்புறேன்” என்றாள்.
“சரி சரி நேர்ல வந்து பேசிக்கலாம். நாங்க வந்துடுறோம்” என வைத்துவிட்டார்.
“உஃப்ப்…” என ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றினாள் கீர்த்தனா.
ஒவ்வொருவருக்கும் பதில் கூறியே ஒருவழி ஆகிவிட்டது அவளுக்கு. அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள் மகிழினி.
சிறு பொழுதில் எடுக்கும் முடிவுகளின் பின்னால் எவ்வளவு பேர் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
உறவுகளில் இருக்கும் சிக்கல்களைக் கொண்டே உறவுகளைக் கையாளும் விதமும் மாறுபடுகிறது. அப்படி இருக்கையில் கலைச்செல்வியின் இந்தப் பரிமாணம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று தான்.
காலம் காயங்களை ஆற்றும் வரை பொறுமையும், நம்பிக்கையுமே துணை என்று எண்ணினாள் மகிழ்.
“டீ எடுத்துக்கோங்க அண்ணி”
மகிழினியின் குரலில் நிமிர்ந்த கீர்த்தனா, அவள் கையில் இருந்த ட்ரேவில் இருந்து ஒரு கப்பை எடுத்துக்கொண்டாள்.
“நானே கேட்கலாம்னு இருந்தேன் மகிழ். தேங்க்ஸ்” எனப் புன்னகைக்க,
“ரொம்ப சாரி அண்ணி. எங்களால உங்களுக்கு எவ்வளவு சிரமம்” என வருந்தினாள்.
“ப்ச்… மகிழ். கெளதம் என் கூடப்பொறந்தவன். நாளைக்கு எனக்கு என்ன நடந்தாலும் அவன் தான் முன்ன வந்து நிற்பான். அவனுக்கு ஒன்னுன்னா நான் தான் வருவேன். இதுல வருத்தப்பட ஒண்ணுமே இல்லை” என்றாள் ஆதரவாய்.
“எனக்கு நெஜமா இவ்வளவு விசயம் இருக்கும்னு தெரியலை அண்ணி. நான் வாழ்ந்த விதம் வேற. எமோசனல் ஸ்டேட்ல நானும் கொஞ்சம் அவசரப்பட்டுட்டனோன்னு தோணுது” என மனவருத்தம் கொள்ள,
குடித்து முடித்த டீ கப்பை வைத்த கீர்த்தனா,
“டெசிசன் எடுக்குறக்கு முன்னாடி பல தடவை யோசிக்கலாம் மகிழ், ஆனா ஒன்ஸ் டிசைட் பண்ணிட்டா எது வந்தாலும் பார்த்துக்கலாம்னு ஸ்ட்ராங்கா இருக்கணும். சரியா. நீ ப்ரீயா விடு. நான் பார்த்துக்குறேன்” என்றாள் ஆறுதலாய் அவள் கையைப் பற்றி.
இரண்டு நாட்கள் வீட்டிலேயே இருந்த சத்யமூர்த்திக்கு அறையில் மூச்சு முட்டுவது போல் இருக்க.. இன்று தான் நடைப்பயிற்சி மேற்கொண்டுவிட்டுத் திரும்பியிருந்தார்.
அவர் சந்தித்த மனிதர்கள், அவர்கள் எழுப்பிய கேள்விகள், அதற்கு இவரது பதில் என அனைத்தையும் அசைபோட்டுக் கொண்டே வராந்தாவில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் வந்தமர்ந்தார்.
“என்ன சத்யமூர்த்தி ரெண்டு நாளா ஆளையே பார்க்கமுடியலை? பையன் கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டானாமே” என்று உடன் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் ஒருவர் விசாரிக்க,
“ஆமாப்பா. என்ன பண்ணுறது” என்றார்.
“ஒரு நல்ல இடமா நீயே பார்த்திருக்க வேண்டியது தானே” என மற்றொருவர் சொல்ல,
“அவன் விருப்பப்பட்டுட்டான். நாம பார்த்தா என்ன அவங்களே தேர்ந்தெடுத்தா என்ன, கடைசி வரைக்கும் ஒத்துமையா நல்லா வாழ்ந்தாங்கனாவே போதும்” என்றவர்,
மேலும் அவரை நோக்கி வந்த கேள்விகளுக்கு லாவகமாய் பதிலளித்து,
“அதான் சின்னதா ஒரு வரவேற்பு வைக்கலாம்னு இருக்கோம். நீங்க எல்லாரும் கட்டாயம் வரணும்” என்று அழைப்புவிடுத்து நகர்ந்து வந்திருந்தார்.
நடந்தவற்றை மனம் மெல்ல ஏற்றுக்கொள்ளத் துவங்கி இருந்தது. வேதனைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை என்று உள்ளம் உணர்த்த, கவலைகளை கடந்து வரத் துவங்கினார்.
“டீ எடுத்துக்கோங்க” என்ற குரலில் நிமிர,
தட்டை நீட்டியபடி மகிழினி தான் நின்றிருந்தாள்.
மறுப்பேதும் தெரிவிக்காமல் ஒரு கப்பை கையில் எடுத்துக்கொண்டார். அதுவே அவளுக்குப் போதுமானதாய் இருந்தது.
கடந்த இரண்டு நாட்களாய் கலைச்செல்வி அவளிடம் முகம் கொடுத்தும் பேசவில்லை. அவளாகப் பேசினாலும் எந்தவொரு பதிலும் இருக்காது.
இப்போது கூட அவருக்கும் தேநீர் எடுத்துச் சென்றவள் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு இறுதியில்,
“இங்க வைக்குறேன். எடுத்துகோங்க” என டேபிளின் மீது தான் வைத்துவிட்டு வந்திருந்தாள்.
அப்படியே சில நாழிகைகள் நகர்ந்திருக்க வெளியே சென்ற விஜய்யும், கௌதமும் வைஷ்ணவியோடு வீடு திரும்பியிருந்தனர்.
“அம்மா!” என்று மகிழ்ச்சியாய் அழைத்துக்கொண்டே உள்ளே ஓடி வந்தாள் வைஷ்ணவி.
“வைஷு குட்டி வந்தாச்சா? என்ன வாங்குனீங்க?“ என கீர்த்தனா கேட்கவும்,
“மாமா எனக்கு பட்டுப்பாவாடை, பெரிய ப்ராக் எல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க” என கண்களை விரித்துக் கூறியவள்,
“அப்பா எனக்கு டூ ஐஸ்க்ரீம் வாங்கி கொடுத்தாரு” என்றதில் விஜய்யை முறைத்துப் பார்த்தாள் கீர்த்தனா.
‘போச்சிடா’ எனப் பார்த்தவன்,
“வைஷு நீ எல்லாருக்கும் உன் டிரெஸ்ஸை எடுத்து காட்டு” என சமாளித்தான்.
“உங்க பர்சேஸ் எல்லாம் முடிஞ்சுதா?” என்று கௌதமிடம் கேட்க,
“எல்லாருக்கும் முடிஞ்சுது கீர்த்து. மாமா உனக்கு மட்டும் எக்ஸ்ட்ரா ஒன்னு எடுத்திருக்காரு” என விஜய்யை ஓரக்கண்ணால் பார்த்துச் சொன்னவன்,
மகிழினியைத் தேட, அவள் அப்போதுதான் சமையல் அறையிலிருந்து வெளியே வந்தாள்.
“மகிழ்! இதை எடுத்துட்டு மேல வா” என சில பைகளைக் காண்பித்துவிட்டு அவனும் சிலதை மேலே எடுத்துச் செல்ல, அவனைப் பின்தொடர்ந்தாள் மகிழினி.
“வைஷு! வா குளிச்சிட்டு ட்ரெஸ் மாத்திக்கலாம்” என்று மகளைத் தூக்கிக்கொண்டு தன் அறைக்குச் சென்றாள் கீர்த்தனா.
அவளைப் பின்தொடர்ந்த விஜய்யோ,
“உனக்கு இந்த கலர் ஓகேவான்னு பாரு கீர்த்து” என்று அவள் முன்பொருநாள் ஆசைப்பட்டது போல் நீல நிறத்திலான பட்டுப்புடவையை எடுத்துக் காண்பிக்க,
அதைக் கண்டுகொள்ளாது மகளுக்கு உடை மாற்றுவதில் கவனம் வைத்தாள் கீர்த்தனா.
அன்றைய தினம் இருவருக்கும் இடையில் உண்டான ஊடல் சற்றும் குறையவில்லை.
அதை எண்ணிப்பார்த்தான் விஜய்.
கீர்த்தனா கோபமாய் கட்டிலின் மீது வந்தமர, விஜய் கூறிய சமாதானங்கள் எதுவும் அவளிடம் எடுபடவில்லை.
“இதுவே உங்க ரத்த சொந்தமா இருந்திருந்தா இப்படி பண்ணியிருப்பீங்களா விஜய்?” என்றாள் அனல் பறக்க,
அவள் வார்த்தைகளில் அதிர்ந்துதான் போனான்.
“நான் கௌதமை என்னைக்குமே பிரிச்சு பார்த்ததில்லை கீர்த்து. தெரிஞ்சும் நீயா இப்படிப் பேசுற?” என்றான் அதிர்ச்சி குறையாது.
“அவன் உங்ககிட்ட பேசியிருந்தா.. நீங்க என்ன செஞ்சு இருக்கணும்? நல்ல விதமா எடுத்துச்சொல்லி புரிய வெச்சிருக்கணும். அதை விட்டுட்டு ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ண அட்வைஸ் கொடுத்திருக்கீங்க”
“………….”
“இதுனால எங்க அப்பா அம்மா எவ்வளவு அப்செட்ல இருக்காங்க தெரியுமா.. இந்த விசயம் எங்க அப்பாவுக்கு தெரிஞ்சா தாங்கமாட்டாரு. உங்க மேல இருந்த மரியாதையே போய்டுச்சு”
“………………”
“சொந்த அக்கா என்கிட்ட கூட சொல்லலை அவன். ஆனா உங்ககிட்ட சொல்லிருக்கான். அப்போ உங்கமேல எவ்வளவு நம்பிக்கை வெச்சிருக்கணும்.. நீங்க அதை காப்பாத்த வேண்டாமா விஜய்?” என்றாள் கண்களில் நீர் பெருக.
கீர்த்தனாவிடம் இதை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை விஜய்.
அவளிடம் மறைக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லை. சூழல் சரியானதும் ஒருநாள் நடந்தவற்றை எடுத்துக் கூறினால் நிலைமையை புரிந்துகொள்வாள் என்றுதான் எண்ணியிருந்தான்.
இன்று அவன் சொல்லும் முன்னர் அவளே அவற்றைத் தெரிந்துகொண்டதில் உண்டான வருத்தமும், கோபமும் சேர்ந்துகொண்டது.
விஜய்யின் அகமும் முகமும் சோர்ந்து போய்விட,
“உங்கிட்ட மறைச்சது தப்பு தான் கீர்த்து. நான் ஒத்துக்குறேன். ஆனா கெளதம் நல்லா இருக்கணும்னு மனசார நினைக்கிறவங்கள்ல நானும் ஒருத்தன்” என்றுவிட்டு படுத்துக்கொண்டான்.
அதிலிருந்து கீர்த்தனா வெளியே பட்டும்படாமல் பேசிக்கொண்டும் அறைக்குள் விஜய்யிடம் பேச்சை தவிர்த்தும் வருகிறாள்.
அதை எண்ணிப்பார்த்த விஜய் ஒரு பெருமூச்சை வெளியிட்டபடி அறையை விட்டு நகர்ந்தான்.
அவன் வெளியே சென்றதும் கட்டிலின் மேலிருந்த பட்டுப்புடவையை மெல்ல கையிலெடுத்துப் பார்த்தாள் கீர்த்தனா.
“எனக்கு பிடிச்ச ப்ளூ கலர் பீக்காக் டிசைன்” என ஆசையாய் வருடியவள் அதைத் தோள்மீது போட்டவாறு கண்ணாடியின் முன்பு நின்று பார்த்திருக்க,
“நல்லா இருக்கா?”
ரசனையாய் ஒரு குரல்,
“ஹ்ம்ம்..” என்றவள் மறுநொடியே திடுக்கிட்டுத் திரும்ப,
அழகிய புன்னகையோடு கதவோரம் விஜய் நின்றிருந்தான்.
எம்பாரசிங்!
‘ஐயோ ஐயோ’ அவள் மானசீகமாய் தலையில் அடித்துக்கொள்ள,
“அங்க இன்னொன்னு இருக்கு. அதுவும் உனக்குத்தான்” என்றான்.
“தேவையில்லை” முகத்தை சுழித்துவிட்டு,
“வா வைஷு” என்று வைஷுவை அழைத்துக்கொண்டு நகர,
“சரி அப்பறம் வந்து தனியா பாரு” என்று பின்தொடர்ந்த விஜய்யின் குரலில் வேகமாய் வெளியே ஓடிவிட்டாள்.
கை நிறைய பைகளைத் தூக்கிக்கொண்டு மூச்சு வாங்க மேல் அறைக்கு வந்தாள் மகிழினி.
“என்ன கெளதம் இவ்வளவு பேக் இருக்கு?” என,
“வா வா. இதெல்லாம் உனக்கு பிடிச்சிருக்கா பாரு” என்று கட்டிலின் மேல் அனைத்தையும் பரப்பிவைக்க ஆரம்பித்தவன்,
“எல்லாம் உனக்குத்தான்” என்றதில்,
“இவ்வளவுமா?”என கண்களை விரித்துப் பார்த்திருந்தாள்.
“ஆமா! இது ரிசப்ஷன் காஸ்ட்யூம். கூடவே கொஞ்சம் சல்வார் அப்பறம் சாரீஸ். லிஸ்ட்ல எதாச்சும் விட்டுப் போயிருக்கா பாரு” என,
“இதெல்லாம் லிஸ்ட்லயே இல்லையே?”
அவனை செல்லமாய் முறைத்தவள் அவன் கையில் வைத்திருந்த தங்க நகைகள் அடங்கிய பெட்டியைப் பார்த்ததும் உள்ளுக்குள் லேசாய் அதிர்ந்து போனாள்.
அதற்கேற்ப கெளதமோ,
“இங்க வா மகிழ்.. இதைப் போட்டுப்பாரு” என ஒரு நெக்லஸை எடுத்து நீட்டினான்.
அவள் அப்படியே நிற்க,
“இரு நானே போட்டு விடுறேன்” என்று அதை அவள் கழுத்தில் அணிவித்து அழகு பார்த்தான்.
அது ஒரு ஆன்டிக் பீஸ். அதற்கு ஜோடியாய் ஜிமிக்கிகளும் வளையல்களும் இருந்தன.
அவனது செய்கையால் அவளது நினைவலைகள் மெல்ல காலையில் நடந்த சம்பவத்தைத் தொட்டு மீண்டது.
திடீரென ஏற்பட்ட அவளது முகவாட்டத்தைக் கண்டவன்,
“என்னாச்சு மகிழ்!” என,
“இல்லை கெளதம்.. எல்லாருக்கும் எவ்வளவு டென்சன் எவ்வளவு அலைச்சல். எல்லாம் நம்மனால தான்னு நினைச்சா கஷ்டமா இருக்கு” என்றாள்.
“இங்க வா” என அவளை அழைத்து வந்து கட்டிலில் அமர்த்தியவன் அவளருகில் அமர்ந்தவாறு அவள் கையைப் பற்றிக்கொள்ள,
அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள் மகிழினி.
அவனுக்குமே வருத்தமாய் தான் இருந்தது. விஜய்யும், கீர்த்தனாவும் ஓய்வின்றி அலைகிறார்கள். அவன் இதுவரை நினைத்ததற்கு மாறாக சத்யமூர்த்தியின் செயல்பாடுகள் இருக்கிறது. கலைச்செல்வியோ நாளுக்கு நாள் புரியாத புதிராக விளங்குகிறார்.
இன்று காலையில் கூட அவரால் ஏற்படவிருந்த பெரிய பிரச்சனையை கீர்த்தனா தலையிட்டு தடுத்திருந்தாள்.
“அம்மா! நீங்க எடுத்து வெச்சிருந்த நகைகளைக் கொடுங்க. நாளைக்கு வீட்டில் இருந்து கிளம்பும்போது மகிழினிக்கு போட்டு விடலாம்”
அப்படி கீர்த்தனா கேட்டது தான் தாமதம்,
“அதெல்லாம் நானும் என் வீட்டுக்காரரும் கஷ்டப்பட்டு சம்பாரிச்சது. அதை யார் யாருக்கோ தூக்கிக் கொடுத்திட முடியாது” எனப் பட்டென்று சொல்லிவிட்டார்.
“அம்மா! அதெல்லாம் இந்த வீட்டுக்கு வர்ற மருமகளுக்குன்னு வாங்கினது தானே.. அப்பறம் என்ன?”
“என்னால ஏத்துக்க முடியாது கீர்த்தனா. அப்போ இதுக்கு ஆசைப்பட்டு தான் அவ இங்க வந்ததா? அவளைக் கூப்பிடு நான் கேட்குறேன்” என்றார் எரிச்சலாய்.
“ம்மா ம்மா.. நானா தான் கேட்டேன். விருப்பம் இல்லைன்னா விட்டுடுங்க. அதுக்கு ஏன் மகிழை இழுக்குறீங்க.. கெளதம் காதுல விழுகப்போகுது. கொஞ்சம் அமைதியா பேசுங்க” என்றாள் படபடக்க.
“விழுந்தா விழுகட்டுமே. இது என் வீடு. நான் எப்படி வேணுனாலும் பேசுவேன். அவன் பொண்டாட்டி வெறும் கழுத்தோட இருக்கக் கூடாதுன்னா அவனை சம்பாரிச்சு வாங்கிப் போடச்சொல்லு” என்றுவிட,
“நான் உங்ககிட்ட கேட்டதே தப்பு மா. நீங்க நகையெல்லாம் ஒன்னும் தரவேண்டாம். தயவு செய்து பிரச்சனை பண்ணாம இருங்க” என்றுவிட்டு வெளியே வந்தவள்,
அங்கு நின்றிருந்த கௌதமைக் கண்டதும் உள்ளுக்குள் அதிர்ந்தாள்.
“அ..அது அம்மா ஏதோ கோபத்துல பேசிட்டு இருக்காங்க டா” என்றாள் அவன் அவர்களது உரையாடலைக் கேட்டிருக்கக்கூடுமோ என்ற எண்ணத்தில்.
“வைஷு எழுந்துட்டா. நீ அவளைப் பாரு க்கா”
அவன் இயல்பாய் நகர்ந்தாலும் அவனது ‘அக்கா’ என்ற அழைப்பே அவன் மனதை அவளுக்கு உணர்த்தியது.
பின் வாசலில்! அலுவலக ரீதியாக கைபேசியில் பேசிக்கொண்டிருந்த மகிழினியும் சற்று முன் நடந்த உரையாடல்கள் அனைத்தையும் கேட்டுவிட்டாள்.
ஒரு கசந்த முறுவலோடு அவள் அதைக் கடந்துவிட, கெளதமோ அதை மனதில் வைத்துதான் அவனது சேமிப்பில் பெரிய தொகையை இழந்து இந்த நகைகளை வாங்கியிருக்க வேண்டும் என்று புரிந்துகொண்டாள்.
ஒருபுறம் தனக்காக எந்த எல்லைக்கும் செல்கிறான் என்பதில் பெருமிதமாய்.. அளப்பரிய ஆனந்தமாய் இருந்தாலும் அவனது சுமைகளில்.. சுக துக்கங்களில் தானும் பங்குவகிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுத்தது அவளுக்கு.
“என்ன மகிழ்! நீ எதுவுமே சொல்ல மாட்டிங்குற. உனக்கு இதெல்லாம் பிடிக்கலையா?” என்ற குரலில் நினைவுக்கு வந்தவள்,
அவன் முகம் பார்த்து,
”எனக்காக பார்த்துப் பார்த்து வாங்கியிருக்கீங்க அதெப்படி பிடிக்காம போகும் கெளதம். எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு” என்றாள் நிறைந்த புன்னகையுடன்.
“எல்லாம் என் செலக்சன் ஆச்சே..” என அவன் காலரைத் தூக்கிவிட,
“இருந்தாலும் என் செலக்சன் அளவுக்கு வராது” என்றாள் பெருமிதமாய்.
கெளதம் புரியாமல் பார்க்க,
கண்களில் குறும்புடன் அவன் நெஞ்சில் ஒரு விரல் பதித்து ‘நீதான்’ என சுட்டிக்காட்ட.. மறுநொடி தன் கரங்களால் விலங்கிட்டு இருவருக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்திருந்தான்.
காதல் பார்வைகளிலும் பரிமாற்றங்களிலும் அப்படியே நாழிகைகள் நகர்ந்திருக்க..
“எவ்வளவு நேரம் இப்படியே நிற்கறதா உத்தேசம்?” என்றவளின் காதோரக் கூந்தலை விலக்கி,
“இருப்போம்.. காலத்துக்கும்.. யாரு கேட்கப் போறா” என மெல்லக் கிசுகிசுக்க,
“ஆசை தான்” என்று அவன் முதுகில் ஒரு அடியை வைத்து அவனிடமிருந்து விலக முற்பட,
“ஆசை என்னவோ நெறைய இருக்கு. நேரம் தான் கைகூட மாட்டேங்குது” என்று குரலில் சோகத்தை நிறுத்தி அவளை தன்னிடமிருந்து விலக்கியவனின் விழிகள் என்னவோ குறும்பாய் சிரித்தது.
“அடி வாங்குவீங்க. இப்படியே நிற்காம இதெல்லாம் எடுத்து வைங்க. போங்க முதல்ல” என்று அவன் முதுகில் கைவைத்துத் தள்ள முடியாது தள்ள,
அவளது இந்தச் செய்கையால் சிரித்தவன்,
“சரி சரி போறேன். நீ உன் கையை உடைத்துக்காத மகிழ்” என்றதில் தலையணை பறந்துவந்து அவன்மீது விழுந்தது.
பின் இருவரும் கட்டிலின் மீதிருந்த நகைகள் துணிகள் அனைத்தையும் பார்வையிட்டு பின் பத்திரமாய் எடுத்து உள்ளே வைத்தனர்.
சில நிமிடங்கள் நகர்ந்திருக்க,
“கெளதம்” என்ற அழைப்பில் கைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் புறம் பார்வையைப் பதிக்க,
“நீங்க மறுக்க மாட்டிங்கங்கற நம்பிக்கைல நான் உங்களை கேட்காமலே ஒரு முடிவு எடுத்திருக்கேன்” என்று புதிர் போட்டாள்.
‘என்ன முடிவு’ என அவன் புரியாது பார்க்க,
“ஆபிஸ்ல லோன் அரேன்ஞ் பண்ணியிருக்கேன்” என்றாள்.
“லோனா? அதுக்கு என்ன அவசியம் மகிழ்” என,
“இல்லை கெளதம் நாளைக்கு பங்கசன் எக்ச்பென்ஸ் எல்லாம் நம்மளே பார்த்துக்கலாம். அத்தை மாமாவ சிரமப்படுத்த வேண்டாம். என்னோட சேவிங்க்ஸ் இருக்கு அதோட பேலன்ஸ் அமௌன்ட் லோன் எடுத்துட்டேன்” என்றாள்.
“எனக்குமே அவங்க கிட்ட இருந்து வாங்குற ஐடியா இல்லை மகிழ். நான் எல்லார்த்துக்கும் அரேஞ்ச்மென்ட் பண்ணிட்டேன். லோன் எல்லாம் வேண்டாம்” என்றான்.
“இல்லை கெளதம். இப்ப இருக்குற கோல்ட் ரேட்டுக்கு நீங்க இந்த நகையை வாங்கவே நிறைய இன்வெஸ்ட் பண்ணியிருக்கணும்” எனத் தயங்க,
“அதுக்கு?”
“நானும் என் சைடுல இருந்து உங்களுக்கு மேக்சிமம் சப்போர்ட் கொடுக்கணும்னு நினைக்றேன். எனக்கும் ஒரு சேடிஸ்பேக்ஸன் இருக்கும்” என,
அவன் யோசிக்க,
“இப்போ என்ன.. நான் கொடுத்தா வாங்கிக்க மாட்டிங்களா? அப்போ நீங்க கொடுத்ததை நானும் வாங்கிக்க மாட்டேன்” இதெல்லாம் என்னை கேட்டா வாங்கிட்டு வந்தீங்க?”
“அப்படி இல்லை மகிழ்”
“………….”
அவள் முகத்தை திருப்பிக்கொள்ள,
“சரி சரி ஓகே. உன் விருப்பம்” என்றுவிட்டான் முடிவாய்.
‘அப்படி வாங்க வழிக்கு’ எனப் பார்த்திருந்தாள்.