10

ஆதித்த கரிகாலன் நல்லவனா கெட்டவனா?அவனை நம்பலாமா? நம்பக் கூடாதா?ஒரு நாளில் ஒருவரை கணிக்க முடியுமா? இந்த திருமணமே புதிராக இருந்தது ஐஸ்வர்ய நந்தினிக்கு.

பாத்ரூமில் இருந்து தலையை வெளியே நீட்டினாள். ஆதி உடலில் ட்ரெக் பேண்ட் மற்றும் டி ஷர்ட் இடம் பிடித்திருந்தது. நிம்மதியோடு வெளியே வந்தவள் அறைக் கதவை
மீண்டும் திறக்க போக சட்டென்று அவளை பிடித்து சுவரில் சாற்றினான் ஆதி. இதை ஐசு எதிர்பார்க்கவில்லை.அவள் ஓடி விடாமல் இருக்க இருபக்கமும் தனது கரத்தால் அணைக் கட்டினான். அவன் குடிந்திருந்த விஸ்கியின் வாசம் ஐசுவை முகம் சுழிக்க வைத்தது.

“ஃபோரின் சரக்கு தான்மா. பட்ட சாராயம் இல்ல. எதுக்கு மொகர முக்கா மொழம் போய்ட்டு வருது”

“அய்யோ ப்ச் தள்ளிப் போங்க. எதுக்கு இப்படி பண்றிங்க?எங்கப்பா உங்கள பத்தி என்ன நெனைப்பாரு? “

“ஆமா உங்கப்பன் உண்மையாவே லாயரா? புருஷன் பொண்டாட்டி இருக்குற ரூம்ல கதவு தட்டிட்டு வரணும்னு ஒரு பேசிக் மேனஸ் இல்ல. தொறந்த வீட்ல ஏதோ நொலையுற மாறி வந்துட்டு ஓவர் சீன்”

அவன் தன் தந்தையை நாய் என்றது அவளுக்கு பிடிக்கவில்லை.

“பேசுறத பாத்து பேசுங்க. அவரு என்ன உங்க வீட்டு வேலைகாரனா? சகட்டு மேனிக்கு மரியாதை இல்லாம பேசுறீங்க. அவரோட தொழிலுக்கும் வயசுக்கும் மரியாதை கொடுங்க மொத”

“யாருக்கு என்ன கொடுக்கணும்னு எனக்கு தெரியும் ஐஸ். சரி உன்கிட்ட ஒன்னு சொல்லனும்”

“என்ன”

“என்ன பாரு அப்பதான் சொல்லுவேன்”

“ஐயோ ப்ளீஸ்ங்க கீழ எல்லோரும் வெயிட் பன்றாங்க.”

“பண்ணட்டும். ஒண்ணே ஒன்னு சொல்லனும்.என் கண்ண நிமுந்து பாரேன் ஐஸ்”.

ஒரு வினாடிக்கும் குறைவாக அவனது கண்களை பார்த்தவளுக்கு வெட்கம் வர

“ம்ஹும் முடியாது”

கண்களை இறுக்கமாக மூடி கொண்டால் ஐசு. பயம் ஒருபுறம் பதற்றம் ஒரு புறமாக இருந்தது அவள் மனதிலே. ஆதி சிரித்துக்கொண்டே அவள் முகத்தருகே நன்றாக குனிந்து

” காலையிலேயே சொல்லணும்னு நினைச்சேன். உனக்கு இந்த பிம்பிள்ஸ் ரொம்ப அழகா இருக்கு”

குடங்குடமாய் சுடுதண்ணீரை முகத்தில் ஊற்றியதை போல கண் விழித்தாள் ஐசு. அவன் தன்னை பரிகசிக்கிறான் என்றே அவள் நினைத்தாள்.

அவளது கண்களில் ஓரளவு அவளது மனநிலையை புரிந்து கொண்டவன்

” நான் உன்னை கேலி பண்றதா நீ நினைக்கலாம். அது உன்னோட பாயிண்ட் ஆஃப் வியூ. ஆனா என்னோட பாயிண்ட் ஆப் வியூல இருந்து பார்க்கும் போது  நெத்தி கன்னம் மூக்கு தாடை, இப்படி முகம் பூரா பிம்பிள்ஸ். பிங்க் கலர்ல. காலையில எந்திரிச்சு பார்க்கும்போது அந்த வெயிலுக்கும் இந்த பிங்க் கலருக்கும் அவ்ளோ அழகா இருந்துச்சு.

இப்பவும் விண்டோ வழியா வர வெயில் உன் முகத்தில் பட்டு இந்த பிம்பிள்ஸ அழகா காட்டுது.”

அவளை அறியாமல்

” வேணுமுன்னே என்ன வெறுப்பேத்தறீங்க. இந்த மூஞ்சிய பாத்து யாராச்சும் இப்படி சொல்லுவாங்களா? உங்கள மாதிரி பசங்களுக்கு எல்லாம்  கிளீன் ஸ்கின் தானே புடிக்கும்”..

” எவனுக்கு எது பிடிக்குதோ எனக்கு அதைப் பற்றி அக்கறை கிடையாது. நீ என்ன கொரியனா? பளப்பளனு கிளீயர் ஸ்கினோட இருக்க?மூஞ்சிய கழுவுனா தான் ஒவ்வொருத்தியோட வள்ளல் தெரியும்..கதையில வருமே பளிங்கு முகம், தாமரை கன்னம்னு இதெல்லாம் எனக்கு இண்டெர்ஸ்ட் இல்ல.”

அவன் சொல்லிவிட்டு கீழே செல்ல முதன்முதலாக அவளது முகத்தை ஒருவன் நல்லபடியாக சொல்லியதைக் கேட்டு ஆனந்தத்தோடு கீழே சென்றாள் ஐஸ்வர்ய நந்தினி.

ஈஸ்வரனுக்கு உள்ளுக்குள் ஆத்திரம் பொங்கியது. இருந்தும் தன்னைவிட பன்மடங்கு செல்வாக்கு மிகுந்த ஒருவனை பகைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை. ஆதித்த கரிகாலன் திமிர் பிடித்தவன் என்று தெரிந்தே அவனுக்கு பெண்ணைக் கட்டிக் கொடுத்தார். ஈஸ்வரனுக்கு, ஆதித்த கரிகாலனின் மாமனார் என்ற பெயர் வேண்டும். வெளியே சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும்.கோபத்தை எல்லாம் மனதில் அடக்கி மரியாதையாக மாப்பிள்ளையை மறு வீட்டுக்கு அழைத்தார்  ஈஸ்வரன்.

நாளை வருவதாக அமர்த்தலாக கூறிய ஆதி வெளியே கிளம்பி விட்டான். அமர்ந்து வந்தவர்களிடம் ஒரு வார்த்தை நல்லபடியாக பேசவில்லை. நர்மதாவை பார்த்தாவது சிறு புன்னகை பூத்தான். ஈஸ்வரனுக்கு புன்னகையே பஞ்சமாகி விட்டது. அமுதனுக்கு அவனின் செயல் சங்கடமாக இருந்தாலும்  மகனை சம்பந்தியிடம் விட்டுக் கொடுக்க மனமில்லை. அவன் கிளம்பிய மறு நொடி ஈஸ்வரன் நர்மதாவை இழுத்துக் கொண்டு கிளம்பி விட்டார்.

ஐசுவுக்கு அவளது பெற்றோரை ஆதி அவமானப்படுத்தியதை போல இருந்தது. அவளது முகமே வாடி விட்டது.. அதனைப் பார்த்த அமுதன்

” அம்மாடி ஐசு.. ஏம்மா மூஞ்சி எல்லாம் வாடி கிடக்கு.. உன் அப்பா அம்மா கிட்ட அவன் ஒரு வார்த்தை பேசாம போறான்னு அவன் மேல கோவமா இருக்கியா?”

” கோவம் எல்லாம் இல்ல மாமா. எனக்கு இந்த கல்யாணமே எப்படி நடந்துச்சுன்னு புரியல. இதுவரைக்கும் நான் உங்ககிட்ட பேசினா அளவு கூட என் அப்பா கிட்ட பேசினது கிடையாது. எனக்கு அந்த உரிமையும் இல்லை. நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா”

” தாராளமா கேளுமா அது ஏன் அங்க நின்னுகிட்டு கேக்குற. இங்க வா பக்கத்துல வந்து உட்காரு.”

அமுதன் அருகே அமர்ந்து கொண்டாள் ஐசு. அவளது வலது கையை எடுத்து தன் உள்ளங்கைக்குள் வைத்துக் கொண்டார் அமுதன்.

” உங்க அத்தைக்கு பொம்பள புள்ள பொறக்கணும்னு ரொம்ப ஆசை. கடைசி வரைக்கும் இவன் ஒத்த பிள்ளையா தங்கிட்டான். பரவால்ல வர மருமகள விதவிதமா ஜோடிச்சு பாக்கணும்னு சொல்லிட்டே இருப்பா. அப்போ நாம இந்த அளவுக்கு வசதி எல்லாம் இல்லடா. ஒரு நகை வாங்கணும்னா கூட கூட்டு கட்டி தான் வாங்கணும். இவன் கார் ரேஸ் இந்த மாதிரி போய் தான்  இந்த வசதி வாய்ப்பு எல்லாம். அப்பவே உன் மாமியார் மருமகளுக்காக விதவிதமான கவரிங் செட்டெல்லாம் வாங்கி வைப்பா. ஏண்டி இப்பவே கல்யாணம் நடக்க போகுதா உன் மகனுக்குன்னு கேட்டா?

எனக்கு பாக்குறது எல்லாம் புடிச்சிருக்கு. அவன் கல்யாணம் பண்ற காலத்துல இதெல்லாம் அன்டிக் செட்டாயிரும். அப்போ மருமக இதெல்லாம் போட்டா பாக்க நல்லா இருக்கும்லனு கேப்பா. அவ வாங்கி வச்சதெல்லாம் உனக்கு நான் அப்புறம் காட்டுறேன்.

அவ போய்ட்டா. அவளுக்கு மகளோட இருக்க கொடுப்பினை இல்லை. ஆனா எனக்கு இருக்கு. நீ எனக்கு மருமக மட்டும் இல்ல. மகளும் கூட. உங்க வீட்டில எப்படி இருந்தியோ எனக்கு தெரியாதுடா. ஆனா இங்க நீ முழு சுதந்திரத்தோட இருக்கலாம். உனக்கு என்ன வேணுமோ நீ என்கிட்ட கேளு. என்ன செய்யனுமோ செய். என்ன கேட்கணுமோ கேள். அத விட்டுட்டு இந்த மாதிரி பர்மிஷன் எல்லாம் கேட்டுட்டு இருக்க கூடாது புரியுதா”

தொண்டையை அடைத்துக் கொண்டது ஐசுக்கு.

இப்படி ஒரு வார்த்தையை இப்படி ஒரு கனிவை அவள் ஈஸ்வரனிடம் பார்த்ததே இல்லை. அவரைப் பார்த்தாலே பத்தடி தள்ளி போய் விடுவாள். தொண்டையில் அடைத்ததை விழுங்கி கொண்டு

” மாமா.. உங்க மகனுக்கு பொண்ணு கொடுக்க எத்தனையோ பணக்காரங்க வரிசைல நின்னு இருப்பாங்க. அதெல்லாம் விட்டுட்டு எப்படி என்ன பொண்ணு கேட்டு வந்தீங்க”

” நான் எங்கம்மா உன்ன பொண்ணு கேட்டு வந்தேன். இவன கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி சொல்லி என் வாய் வலிச்சது தான் மிச்சம். திடீர்னு என்ன ஆச்சுன்னு தெரியல. உன் அக்கா கல்யாணத்துக்கு நாங்க வந்திருந்தோம். அங்க வச்சு உன்ன பாத்திருப்பான்னு நினைக்கிறேன். ஒரு ரெண்டு வாரம் எதையோ யோசிச்சுக்கிட்டே இருந்தான். திடீர்னு என்கிட்ட உடனே கிளம்பு. போயி லாயர் ஈஸ்வரனோட ரெண்டாவது பொண்ண எனக்கு பேசி முடினு சொல்லிட்டான். எனக்கு ஒன்னும் புரியல. அது எப்படி டா எடுத்தோம் கவுத்தோம்னு ஒரு கல்யாணத்தை பேசறதுனு கேட்டா கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது ஈஸ்வரனோட பொண்ணு கூடதான்னு சொல்லிட்டான்.

பையன் ஒருவேளை லவ்வுல விழுந்துட்டான்னு எங்க கொஞ்சம் விட்டா கூட மனசு மாறிடுவானோனு பயந்து உடனே வந்து உங்க வீட்டில பொண்ணு கேட்டேன். இப்போ நீ என் மருமகளா இந்த வீட்ல இருக்க. ஏன்டா திடீர்னு இந்த கேள்வி”

” இல்ல மாமா கேக்கணும்னு தோணுச்சு அதான்.”

அமுதன் குளிக்க செல்ல வீட்டில் மூச்சு முட்டுவதைப் போல தோன்றவும் தோட்டத்தில் நடந்தாள் ஐசு. புதுமண தம்பதிகளிடம் இருக்கும் குறுகுறுப்பு அவர்களிடம் இல்லாமல் இருந்தது. ஆண்களின் நெருக்கமும் ஸ்பரிசமும் அவளுக்கு புதிதாக இருக்கலாம். ஆனால் ஒருவரின் பார்வையில் இருந்து அவர்களின் மன நிலையை அவளால் புரிந்து கொள்ள முடியும். அப்படி பார்க்கும்போது, ஆதித்த கரிகாலனின் பார்வை அவளிடம் சொல்வது என்ன?

தொடரும்❤️