*16*

மகிழ்நன் புரியாமல் விழிக்க, கலைவாணி பழத்தை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றார். மனைவியை குழப்பமாய் பார்த்து அவளிடம் என்னவோ கேட்கப்போனவனை மகள் இடையிட்டு தடுத்தாள். அவன் முகத்தினில் தட்டி அவன் கன்னங்களை தன் பிஞ்சு விரல்களால் ஏந்திக்கொண்டு அப்பா அப்பா என்று அரற்ற, பெற்றவனுக்கு சகலமும் மகள் ஆனாள். வெளியே கை காட்டி அவள் என்னவோ சொல்ல, “அப்புறம் வெளில போலாம், வெயில் அடிக்குதுடா.”

“பைக்ல ரவுண்ட் கூட்டிட்டு போக சொல்றா.” அவனின் சமாதானத்திற்கு உடன்படாமல் மகள் மீண்டும் மீண்டும் சொல்லி சிணுங்கவும் கணவனுக்கு எடுத்துக் கொடுத்தாள் சமுத்திரா.

“போலாமே. நீயும் வா.” என்று மனைவியை அழைக்க,

“நான் எதுக்கு?” 

“ஏன் நின்னுட்டே இருக்கீங்க. அப்பாவை உக்கார விடுடி செல்லம்.” மருமகனிடம் துவங்கி பேத்தியிடம் முடித்தார் கலைவாணி. 

சங்கடமாக தலையசைத்து அமர்ந்தவனுக்கு உபசரிப்பு நடக்க, அவன் வாங்கி வந்த பழங்களையும் நறுக்கி எடுத்து வந்து மகளிடம் கொடுத்தார் கலைவாணி.

“உனக்கு புடிச்சதை வாங்கிட்டு வந்திருக்காங்க, சாப்பிடு.” சொல்லும் போதே அப்படியொரு மலர்ச்சி கலைவாணி முகத்தில். 

சமுத்திரா கணவனைப் பார்க்க, புன்னகைக்க முயன்றான் மகிழ்நன். கண்டும் காணாதது போல் அவள் குனிந்துகொள்ள, இவன் முகம் சுருங்கியது. மடியில் அமர்ந்திருக்கும் மகளுக்கு கொறிக்க கொடுத்தபடியே மனைவியை அவ்வப்போது பார்த்துக்கொண்டான். ஒரு ஓரத்தில் சென்று அமர்ந்துகொண்டவள் அமைதியாக பழங்களை உண்டாள். 

“பழம் நல்லாயிருக்கா சமு? உங்க ஊர்லதான் வாங்கினேன்.” அவளிடம் பேசும் முயற்சி. வெற்றியா தோல்வியா அறிந்துகொள்ள மகள் விடவில்லை.

வயிறு நிரம்பியதும் அவனை பிடித்திழுத்து வெளியே கூட்டி போகச்கொல்லி அடம் பிடித்தாள். மனைவியை நெருங்க மகளே தடையாக நிற்பதை பாவமாக பார்த்தான் மகிழ்நன். கண்டுகொள்ளவில்லை அவள்.

“அம்மாவை கூப்பிடு, போலாம்.” மகளை இறக்கிவிட்டு உசுப்ப, தாயிடம் மல்லுக்கட்டினாள் உமையாள். 

செல்ல சொல்ல கலைவாணிக்கு வாய் துறுதுறுத்தது. மகளுக்கு அழுத்தம் கொடுப்பது போல் ஆகிவிடுமே என தூரமாக நின்றவர் ஒருகட்டத்தில் வந்துவிட்டார்.

“போயிட்டுதான் வாயேன் சமு.” என்றவரை ஏறிட்டவள் பழக்கம் போல அவர் வார்த்தைக்கு உடன்பட்டு எழுந்துவிட்டு பின் நெற்றியை தேய்த்துக்கொண்டு அறைக்குச் சென்றுவிட்டாள். சிணுங்கிக்கொண்டே உமையாள் அம்மாவை பின்தொடர, மகிழ்நனும் வால் பிடித்துவிட்டான். 

உச்சுக்கொட்டியபடி அறைக்குச் சென்றவள் அழும் மகளை ஆயாசமாக பார்க்க,

“பக்கம்தான், சும்மா வாயேன்.” இறைஞ்சலாய் வந்தது கணவன் குரல். நிமிர்ந்து பார்த்துவிட்டு தலையை திருப்பிக்கொண்டாள்.

“போன்ல பேசுற, நேர்ல முகம் திருப்புற.” என சொல்லிக்கொண்டே மகளை கையில் ஏந்தி தன் வண்டி சாவியை கொடுத்தான். கண்கள் மின்ன அதனை பிடித்துக்கொண்டு அழுகையை நிறுத்திவிட்டு அவனிலிருந்து கீழிறங்கப் பார்த்தாள் உமையாள்.

“சாவி குடுத்தா அமைதியா இருப்பான்னு பாத்தேன்…இவளை சமாளியேன்டி. பாத்துட்டே இருக்க.” மனைவியிடம் முழுதாக சரணடைந்த நிமிடம். புருவம் உயர்த்திய சமுத்திரா, நீங்கதான் பெரிய ஆள் ஆச்சே சமாளிங்களேன் போன்ற பாவனை கொடுக்க,

“நீயில்லாம என்னால எதுவும் முடியாது. போதுமா. எனக்கு உன்கிட்ட பேசணும், இவளை உன் அம்மாகிட்ட விட்டுட்டு வா இல்லைனா வெளில போலாம் கிளம்பு.” என முடிவாய் சொல்ல, அவனது தவிப்பு இவளுக்குள் தித்திப்பை கொடுத்தது. மனமிறங்கினாள்.

துப்பட்டாவை சரியாக போட்டுக்கொண்டு தலையை சரிசெய்துகொண்டவள் மகளுக்காக அவனிடம் கைநீட்ட, பிள்ளையை கைமாற்றியவன் உமையாளிடமிருந்து சாவியை வாங்க, அவள் வீலென்றாள். வெளியில்தான் செல்கிறோம் என்றதை நம்பவில்லை தங்களை விட்டுவிட்டு அப்பா மட்டும் செல்கிறார் என்று புரிந்துகொண்டு அழுகை வலுப்பட, அவளை தூக்கிக்கொண்டு மனைவியின் கைப்பிடித்தான். என்ன இது என்பது போல் சமுத்திரா கைகளை உதற, மகள் அதற்குமேல் அவன் கையிலிருந்தபடியே குதித்தாள். சமாளிக்க முடியாமல் அவன் முதலில் செல்ல, அம்மாவிடம் சொல்லிவிட்டு வந்தாள் சமுத்திரா.

மூவருமாக சென்றால் எப்போதும் மகளை இவளிடம் கொடுத்துவிடுவான். சமுத்திரா இருவருக்கிடையில் அமர வைத்துக்கொள்வாள் இன்று மகளை முன்னே அமர்த்திக்கொண்டு இவளை பின்னே ஏறும்படி சைகை செய்ய, பீடிகை பலமா இருக்கே என்ற எண்ணத்துடன் பின்னே அமர்ந்து வண்டியின் பக்கவாட்டில் பிடித்துகொண்டாள் சமுத்திரா.

“ரெண்டு பக்கம் கால் போட்டு உக்காரலாம்ல?” பின்னே திரும்பிக்கேட்டவன் அவள் முறைக்கவும் வாயை மூடிக்கொண்டான். வண்டியை உயிர்ப்பித்து சிறிது தூரத்தில் இருக்கும் எல்லையம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்றான். சாமி கும்பிட்டுவிட்டு ஓர் ஓரமாக தூணில் சாய்ந்தபடி காற்றாட அமர,

“என்ன பேசணும்?” சமுத்திராவே ஆரம்பித்தாள்.

“ஹான்?” மகளை பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு அவள் சட்டென கேட்கவும் புரியவில்லை.

“ஏதோ பேசணும்னு கூட்டிட்டு வந்தீங்க?”

“நீ ஈஸியா பேசிடுற.” என்றான் முகச் சுருக்கத்துடன். எப்படி ஆரம்பிப்பது என்ன பேசுவது என்று அத்தனை குழப்பம். இவளென்றால் பட்பட்டென பேசுகிறாளே. 

ஆனால் அவளுக்குத்தானே தெரியும் இப்படி பேச அவள் கொடுத்த விலையும் எதிர்கொண்ட சங்கடங்களும் அநேகமென.

“உனக்காக வாங்கிட்டு வந்ததை உன்கிட்ட கொடுக்கலைனு அன்னைக்கு கோவப்பட்ட, இன்னைக்கு கொடுத்தா வாங்க மாட்டேங்குற.” இன்றைய பிரச்சனையிலிருந்து துவங்கினான் மகிழ்நன். 

“என்ன கொடுத்தீங்க?” தெளிவாக வந்தது கேள்வி.

“பழம் கொடுத்தேனேடி, உனக்கு புடிக்கும்னுதான் வாங்கிட்டு வந்தேன்.”   

“ஓ, எனக்காக…” லேசாக சிரித்துக்கொண்டவள், “நான்கூட அப்பா அம்மாக்கு வாங்கிட்டு வந்தீங்களோனு நினைச்சேன். அவங்க வீடுதான அது.”

“சமு என்ன சொல்ற நீ தெளிவா சொல்லு.”

“கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் எங்க போனாலும் கடைசியில வீட்டுக்கு வந்துட்டா நிம்மதியாகிடும். ஆனா எந்த நேரம் கழுத்துல தாலின்னு ஒன்னு ஏறுதோ அப்போவே அவளோட வீடும் மாறிடுது. பொறந்த வீட்டுக்கு கெஸ்ட் மாதிரி வந்துட்டு போறதும் புகுந்த வீட்ல உரிமை எடுத்துக்க முடியாம நம்ம கடமையை நிறைவேத்துறதுனும் இருந்து கடைசியில எது எங்க வீடுன்னே தெரியாம போயிடுது. ரெண்டு வீட்டுக்கு இடையில அல்லாட வேண்டியிருக்கு. கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாமே மாறிடுது.” என்று ஒருமாதிரி பேச, இவனுக்கு என்னவோ போலானது.

“யாருமே இல்லாத மாதிரி என்ன பேச்சு இது? நீ சரியா இல்ல அதுதான் ஏதேதோ யோசிக்குற. உங்க வீட்ல இருந்தா ரிலாக்ஸ் ஆவேன்னு நினைச்சேன் இன்னும்தான் வருத்திக்குற, கிளம்பு நம்ம வீட்டுக்கு போலாம்.” என்றான் உடனே. அதிகம் யோசித்து தன்னையே நிந்தித்துக்கொள்கிறாள் என்று வருத்தம் கொண்டான் மகிழ்நன்.

“எதுவுமே மாறாதுல்ல?” 

“மாத்திக்க தயாரா இருக்குறப்போ எப்படி மாறாம போகும்?” அவன் மனைவியை அழுத்தமாகப் பார்க்க, நம்பிக்கையின்மையில் சமுத்திரா முகம் திருப்பினாள். 

அவள் கைப்பிடித்து தன் புறம் கவனத்தை திருப்பியவன், “என்ன சமு? இன்னும் என்னடி?”

“இன்னும் என்னன்னா? மதி அக்கா பேசுன அளவுகூட நீங்க இன்னும் எங்கிட்ட பேசல. உடனே நான் வந்துடணுமா? இதைதான் சொன்னேன் எதுவுமே மாறல, மாறாது.” என்ற பொழுதே அவள் கண்கள் கலங்கிவிட்டது. தவித்துப்போனவனாய் அவள் கண்ணீரை துடைக்கப்போக, தட்டிவிட்டாள்.

“ஒன்னும் வேணாம் போங்க.”

“சமு.”

“இதை வீட்லையே சொல்லியிருக்கலாம்.” என்றாள் முனகலாய்.

பின்னந்தலை முடிகளை கோதிவிட்டவனாய் மகளை ஒருபார்த்து மனைவியிடம் திரும்பினான்.

“மதி அக்கா வந்துட்டு போனப்புறமாவது வருவீங்கன்னு நினைச்சேன்.” மனதின் எதிர்பார்ப்பை மறைக்காது வெளிப்படுத்தினாள்.

தவிப்பாய் உடலை நகர்த்தி அவள் தோள் உரச நெருங்கி அமர்ந்துகொண்டான்.

“அவ்ளோ பேசுனதுக்கு அப்புறம் என்னை புரியும்னு நினைச்சேன்.”

தன் இரு கைகளால் அவள் கையை பொத்தினாற் போல் பிடித்து தன் மடியினில் வைத்துக்கொண்டான். 

“என்னை சமாதானம் செய்வீங்கன்னு நினைச்சேன்.”

தனக்குள் இருந்த அவள் கையை அழுத்திக்கொடுத்தான்.

“இனி நீ கஷ்டப்படுற மாதிரி எதுவும் நடக்காதுனு உடனே சமாதானம் செஞ்சி உங்ககிட்ட வச்சிப்பீங்கன்னு நினைச்சேன்.”

கிணற்றில் போட்ட கல் போன்று இருந்துவிட்டாயே என்று சொல்லாமல் சொல்லும் அவள் குற்றச்சாட்டில் மனம் கலங்கியவனாய் அவள் தோள் சுற்றி கைபோட்டு அணைவாய் பிடிக்கப்போக, தோள்பட்டை உயர்த்தி அவனை விலக்கியவள் அமர்ந்தவாக்கிலேயே நகர்ந்துகொண்டாள்.

“கோவில்ல இருக்கோம்.” அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னவள் முகத்தை அழுந்தத் துடைத்தாள். மனதில் இருந்ததை கொண்டவனிடம் பகிர்ந்துவிட்ட நிம்மதியில் தெளிந்துவிட்டேன் என்பது போல் எழுந்துகொள்ளப் பார்க்க, பிடித்து அமர்த்திவிட்டான் மகிழ்நன். 

“கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாம் மாறிட்டுனு நீ சொன்னீல்ல. எனக்கு எதுவுமே மாறல சமு. முன்ன எப்படி இருந்தேனோ, அம்மா எப்படி வச்சிருந்தாங்களோ அப்படியே நீயும் என்னை வச்சிருந்த. என்னை நம்பி ஒருத்தி வந்துட்டா, அவளை நல்லா பாத்துக்கணும். என்னோடையும் என் குடும்பத்தோடையும் அவ ஒத்துப்போயிடனும், இவ்வளவுதான் என்னோட யோசனை. நீயும் நான் நினைச்ச மாதிரியே இருந்த, நம்ம வாழ்க்கை ஸ்மூத்தா போகுதுனு நினைச்சிட்டு இருந்துட்டேன்.” பெருமூச்சுடன் இடைவெளிவிட்டான்.

கணவன் தணிந்து பேசுகிறான் என்கவுமே இந்தப் பெண்ணுக்கு நிதானம் வந்துவிட்டது. அவனை பார்த்தவண்ணம் அமர்ந்துகொண்டாள். ஆதரவாக அவள் கைவிரல்களை பற்றி அவன் மெலிதாய் வருடுவது கூட கவனத்தில் பதியவில்லை. 

“என்னை சொகுசாவே வச்சிக்கிட்ட சமு. எப்போதும் வீட்டுக்குனு வந்துட்டா முன்னாடி எப்படி இருப்பேனோ அப்படிதான் கல்யாணத்துக்கு அப்புறமும் நடந்துக்கிட்டேன். அதுக்காக உன்னை கண்டுக்கவே இல்லைனு இல்லை. உனக்கு புடிச்சதை வாங்கிட்டு வீட்டுக்கு வர நேரம் அம்மாதான் முன்ன வருவாங்க, அவங்களை தாண்டிகிட்டு கையில இருக்குற பையை எப்படி உன்கிட்ட கொடுக்கனு சங்கடம். அம்மா பையை பாத்துட்டு என்னனு கேக்க வேற செய்வாங்க, எப்படி அவங்க கையில கொடுக்காம இருக்க?” தன் பக்க நியாயம் என்று அவன் எடுத்துரைக்க, கத்தரித்தாள் சமுத்திரா.

“உனக்குத்தான் வாங்கிட்டு வந்தேன், அம்மாகிட்ட கொடுத்திருக்கேன். சாப்பிட்டியா பாத்தியானு ரூமுக்கு வந்தப்புறம் கேக்கக்கூட கஷ்டமாங்க?”

அவள் கேள்வியில் முகம் கோண, பதில் கூறமுடியாமல் திரும்பிக்கொண்டான். இத்தனை மட்டியாக இருந்துவிட்டோமே அவன் மனம் அவனை கண்டமேனிக்கு சாடியது.

சில நொடிகள் என்ன பேச என்று அமைதியாக கழிந்தது. மகிழ்நன் தொண்டை செருமி தொடர்ந்தான்.

“நம்ம ஊர்ல வீட்டு வாசலை தாண்டுனா கோவில்தான். அதுதான் அடிக்கடி போயிட்டு இருக்கோமே வேற எங்க போறதுன்னுதான் வீட்லையே இருந்துக்குறது. பாப்பா வேற சின்னபுள்ளை, அவளை வெளில தூக்கிட்டு போறது கஷ்டம்… அதுக்காக உன்கூட வெளில போகணும்னு தோணுனதே இல்லைனு நினைச்சிக்காத. சில நேரம் தோணும் பாப்பா வளரட்டும்னு இருந்துடுவேன், இல்லையா எல்லாரும் சேர்ந்து போனா பாப்பாவை பாத்துக்கவும் உதவியா இருக்கும்ல.” என்று அடுத்த கதையை எடுத்துவிட, முறைத்தாள் பெண்.

“என்னடி?”

“பாப்பாவை வீட்ல பாத்துக்குற எனக்கு வெளில பாத்துக்க தெரியாதாங்க? இல்லை அவ உனக்கு மட்டும்தான் பொண்ணு நீதான் பாத்துக்கணும்னு என்கிட்ட விட்டுட்டு நீங்க வேடிக்கை பாத்துட்டு கூட வருவீங்களா.” 

என்னடா இது எப்படி பேசினாலும் நம் பக்கமே திரும்புகிறது என்பது போல் பாவமாக பார்த்தான் மகிழ்நன். உச்சுக்கொட்டி முகம் திருப்பினாள் சமுத்திரா. இடையில் மகள் வந்து இவர்கள் மேல் மோதி விழுந்து கொஞ்சிவிட்டு அங்கிருந்த தூணில் கோலமிட்டு விளையாடினாள்.