அத்தியாயம் 13:

‘இந்தத் தடவை வேணா நீ தப்பிச்சியிருக்கலாம் ருத்ரா, அடுத்த தடவை கண்டிப்பா தப்பிக்க மாட்ட. எனக்கும் பரமேஷ்க்கும் நடுவுல யாரும் வரக்கூடாது’ என்று மனதில் நினைத்துக்கொண்டு, ரோஸினி ருத்ராவை முறைத்துப் பார்த்தாள்.

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஆழ்ந்த யோசனையில் வெளியில் பார்த்தபடி இருந்தாள் ருத்ரா.

“நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா?” என்ற ரிங்டோன் ருத்ராவின் அலைபேசியில் ஒலித்து, அவளுடைய யோசனையைக் கலைத்தது.

அலைபேசியை எடுத்துப் பார்த்தவள், தொடுதிரையில் ‘அம்மா காலிங்’ என்று காட்டுவதைக் கண்டு அழைப்பை ஏற்றாள்.

“என்னம்மா, இப்ப கால் பண்ணியிருக்க?”

“அது ஒண்ணும் இல்லைடி மா… நைட் முழுசும் ஏதோ மனசுக்கு ஒருமாதிரி இருந்தது. இப்ப உன்கிட்ட பேசுனதும்தான் நிம்மதியா இருக்குடி. நீ நல்லாயிருக்கதானே? அங்க எதுவும் பிரச்சனை இல்லையே?”

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல மா. இங்க எந்தப் பிரச்சனையும் இல்ல. நீ வீணா மனசைப் போட்டு குழப்பி உடம்பைக் கெடுத்துக்காத மா.”

“நீ பத்திரமா இருடி மா…”

“அதெல்லாம் நான் பத்திரமாத்தான் மா இருக்கேன். குட்டி என்ன பண்றான்? நான் இல்லைன்னு தேடுனானா?”

“அதை ஏண்டி கேட்க? ‘சித்தி, சித்தி’னு அழுது ஒரே அலப்பறைதான்! சித்தி வரும்போது உனக்கு நிறைய பண்டம் வாங்கிட்டு வருவாங்கன்னு சொன்னதும்தான் அமைதியானான்.”

இதைக் கேட்டதும் ருத்ராவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. மறுநிமிடமே குட்டியின் பிரிவை நினைத்து வருந்தினாள்.

“சரி மா, நான் போனை வைக்கிறேன்.”

“சரிடி மா.”

மறுமுனையில் அலைபேசி துண்டிக்கப்பட்டது.

இதுவரை அலைபேசியில் ருத்ரா பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த பரமேஷ், “மகாபலிபுரம் போறதுக்கு முன்னாடி வேணும்னா உங்க ஊருக்குப் போயிட்டு போலாமா ருத்ரா?” என்று கேட்டான்.

அதற்கு ருத்ரா பதிலளிக்கும் முன், “சிவஞானபுரம் என்ன பக்கத்துலயா இருக்கு போக? மாமல்லபுரம் போயிட்டு அப்புறமா அவங்க ஊருக்குப் போவோம்” என்று ரோஸினி முந்திக்கொண்டு பதிலளித்தாள்.

அதைக் கேட்ட ருத்ரா அமைதியாக எதுவும் சொல்லாமல் மௌனம் காத்தாள். பரமேஷும் வேறு வழியில்லாமல் பேச்சை விட்டுவிட்டான்.

மூன்றரை மணிநேரம் பயணித்த பிறகு அனைவரும் மாமல்லபுரம் வந்து சேர்ந்தனர்.

“நல்ல பெரிய ஹோட்டல பார்த்து வண்டியை நிறுத்துடா” என்று அஜித்திடம் பரமேஷ் கூறினான்.

“சரி டா” என்று தலையாட்டியவன், மிகவும் பிரம்மாண்டமான விடுதிக்கு முன்பாகக் காரை நிறுத்தினான்.

வாயிலில் நின்றிருந்த காவலாளி கதவைத் திறக்க, கார் உள்ளே சென்று நின்றதும் அனைவரும் இறங்கினர்.

இறங்கிய இடத்தைப் பார்த்ததும் அசந்துவிட்டாள் ருத்ரா. மிகப்பெரிய அரண்மனைபோன்று காட்சியளித்துக்கொண்டிருந்தது அந்த ஐந்து நட்சத்திர விடுதி. ‘சமுத்ரா உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்ற வாசகத்துடன் அனைவரையும் உள்ளே வரவேற்றது.

எல்லாவற்றையும் சுற்றுமுற்றும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு, அனைவருக்கும் பின்னால் மெதுவாக நடந்து வந்தாள் ருத்ரா.

வரவேற்பறையில் இளம்பெண் ரிசப்ஷனிஸ்ட் ஒருவர் நின்றுகொண்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றனர்.

அனைவரையும் புன்னகையுடன் வரவேற்ற இளம்பெண், “குட் ஈவினிங் சார், மேடம்! வெல்கம் டு சமுத்ரா பேலஸ். ஹவ் மே ஐ அசிஸ்ட் யூ டுடே?” என்று அனைவரையும் பார்த்துக் கேட்டாள்.

“எக்ஸ்கியூஸ் மீ… கேன் யூ ப்ளீஸ் ஸ்பீக் இன் தமிழ்?” என்று பரமேஷ் பதிலுக்குப் புன்னகையுடன் கேட்டான்.

“எஸ் சார். சொல்லுங்க, உங்களுக்கு ரூம் ஏதும் வேணுமா சார்? இல்ல ஆல்ரெடி புக் பண்ணியிருக்கீங்களா?”

“புக் பண்ணலை. இன்டர்கனெக்டிங் ரூம்ஸ் அவைலபிளா இருக்கா?”

“ஒன் மினிட் சார்” என்று கூறிய இளம்பெண், கணினியில் அறைகள் காலியாக உள்ளனவா என்று சரிபார்த்துவிட்டு, “நீங்க கேட்ட மாதிரியே இருக்கு சார்” என்றாள்.

“அப்போ அதுவே புக் பண்ணிடுங்க. ஒரு ரூம்ல எக்ஸ்ட்ரா பெட் ஒண்ணு போட்டுருங்க.”

“ஓகே சார், அப்படியே பண்ணிடலாம்” என்று கூறிய பெண், கணினியில் அறைகளைப் பதிவு செய்துவிட்டு, ஒரு படிவத்தை எடுத்து நீட்டினாள். அதில் கையெழுத்துப் போட்டான் பரமேஷ். பணத்தைச் செலுத்தி முடிக்கவும், இரண்டு கீ-கார்டுகளை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

அவற்றை வாங்கிக்கொண்டு பரமேஷ் முன்னால் நடக்க, ருத்ரா ஒன்றும் புரியாமல் பிரம்மாண்டமான தொங்கும் விளக்குகளையும் கட்டிடத்தையும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு நடந்தாள்.

அறைக்கு வந்ததும், பெண்கள் மூவரும் ஒரு அறையிலும் ஆண்கள் இருவரும் மற்றொரு அறையிலும் நுழைந்தனர்.

அறைக்குள் நுழைந்ததும் சுற்றுமுற்றும் பார்த்தாள் ருத்ரா. பெரிய கிங் சைஸ் படுக்கை ஒன்று ஓரமாகப் போடப்பட்டிருக்க, அதற்குத் தள்ளி ஒரு படுக்கை தனியாகப் போடப்பட்டிருந்தது. தனித்தனியாகக் கபோர்டுகளும் இருந்ததைப் பார்த்தவளுக்கு, அதெல்லாம் கனவுபோல் தோன்றியது.

ரோஸினி ருத்ராவை அலட்சியமாக ஒருமுறை பார்த்துவிட்டு, கபோர்ட்டைத் திறந்தாள். அது ஒரு மினி பிரிட்ஜ்! அதற்குள் அடுக்கடுக்காகக் குளிர்பானங்களும் மதுபான வகைகளும் வைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து குளிர்பானம் ஒன்றை மட்டும் எடுத்துக் குடித்துவிட்டு மெத்தையில் அமர்ந்தாள்.

தனியாக இருந்த மெத்தையில் அமர்ந்த ருத்ராவின் மனம், ‘இன்டர்கனெக்டிங் ரூம்’ என்ற வார்த்தையின் அர்த்தம் புரியாமல் யோசித்தது. எல்லாமே புதுவிதமாக இருக்க, தெரிந்துகொள்ள நினைத்தவள், ‘அதான் நம்ம சாட்ஜிபிடி (ChatGPT) இருக்கிறதே, அதுகிட்ட கேட்போம்’ என்று மனதில் நினைத்துக்கொண்டு அலைபேசியைக் கையில் எடுத்தாள்.

அதேநேரம், இரண்டு அறைகளுக்கு நடுவில் இருந்த கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான் பரமேஷ்.

தனித்தனி அறைகளாக இருக்க, எப்படி இந்தக் கதவைத் திறந்துகொண்டு நுழைந்தான் என்று ஆச்சரியமாகப் பார்த்தாள் ருத்ரா. அப்போதுதான் அவளுடைய மூளைக்கு உரைத்தது.

‘இன்டர்கனெக்டிங் அறைன்னா இதுதான் போல!’ என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டு சிரித்தாள்.

ருத்ராவைப் பார்த்ததும் அவளுடைய எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்ட பரமேஷ், “இதுதானே நீ முதல்ல தங்குற ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்? அதுவும் நீ கிராமத்துப் பொண்ணு. உனக்கு இதெல்லாம் புதுசா இருக்கும். போகப் போக நீயே பழகிடுவ ருத்ரா. ஏதாவது புரியலைன்னா, கேட்கணும்னு நினைச்சா கேளு” என்று இதுவரை அவன் காட்டிய மரியாதை மறைந்திருந்த தோழியா நினைத்து நீ என்று பேசினான்.

 மனதில் அடக்கி வைத்திருந்த கேள்வியைக் கேட்டாள் ருத்ரா.

“அந்த டிரிங்க்ஸ் எல்லாம் எடுத்து குடிக்கலாமா?” என்று சற்றுத் தயக்கத்துடனேயே கேட்டாள்.

“தாராளமாகக் குடிக்கலாம்” என்று அவளுடைய சிறுபிள்ளைத்தனத்தை ரசித்தபடி கூறினான்.

உடனே ஓடிச் சென்று அதிலிருந்த குளிர்பானம் ஒன்றை எடுத்து குடிக்க ஆரம்பித்தாள். மிகவும் சுவையாக இருக்க, ரசித்தே குடித்தாள். சட்டென்று மூளையில் மற்றொரு கேள்வி எழ, பரமேஷை நிமிர்ந்து பார்த்தாள்.

“கேட்க வந்ததைக் கேளு. அது ஏன் யோசிச்சுட்டு என்னைப் பார்த்துட்டு இருக்க?”

“அது வந்து, இங்க உள்ளது எல்லாம் நாம எது வேணும்னாலும் எடுத்து சாப்பிடலாமா? காசு கொடுக்க வேண்டாமா?” என்று கேட்டவளின் கண்கள், பிரிட்ஜுக்குள் இருந்த சாக்லேட்டை நோக்கிச் சென்று மீண்டன.

அதைக் கவனித்தவன், “உனக்கு என்ன தோணுதோ எடுத்து சாப்பிடு, நான் காசு கொடுக்கிறேன்” என்றான்.

“என்னது, இதுக்குத் தனியா காசு கொடுக்கணுமா? இது என்ன பகல் கொள்ளையா இருக்கே?” என்று வாயைப் பிளந்தபடி சற்றுக் கோபத்துடன் கேட்டாள்.

“இதுதான் இங்க ரூல்ஸ். ரூமை விட்டுப் போகும்போது எடுத்ததுக்கும் சேர்த்து பில் பே பண்ணனும்” என்று புன்னகையுடன் கூறினான்.

அதைக் கேட்ட ருத்ரா அவனைப் பார்க்க, அவளுடைய கண்களைச் சந்தித்த பரமேஷின் பார்வை மங்கையின் கண்களை விட்டு அகல மறுத்தது.

இதைக் கவனித்த ரோஸினி ,”பரமேஷ், அஜித் எங்க?” என்று அவனைத் திசைதிருப்ப முயன்றாள்.

அதில் தான் இருக்கும் இடத்தை உணர்ந்தவன், ரோஸினியின் பக்கம் பார்வையைத் திருப்பினான்.

“அஜித் வண்டி ஓட்டிட்டு வந்ததுல, ரூம்ல ரெஸ்ட் எடுக்கான் ரோஸினி.”

“ஓகே டா” என்று அவள் கூறி முடிக்கும் நேரத்தில், அஜித் உள்பக்கக் கதவைத் திறந்துகொண்டு அறைக்குள் நுழைந்தான்.

“என்னடா, ரெஸ்ட் எடுக்கப் போறேன்னு சொன்ன, இங்க வந்திருக்க?” என்று பரமேஷ் கேட்டான்.

“மேல கொஞ்சம் அசதியா இருக்க மாதிரி இருக்குடா. ஸ்விம்மிங் பூல் போய் குளிச்சு என்ஜாய் பண்ணலாம்னு தோணுச்சு. அதான் உங்களை கூப்பிட வந்தேன் டா.”

“நல்ல ஐடியா டா… சரி, நீங்க எல்லாரும் ஸ்விம்மிங் பூல் வரீங்க தானே?” என்று அனைவரையும் பார்த்துக் கேட்டான் பரமேஷ்.

நீச்சல் குளம் என்றாலே படங்களில் காட்டப்படும் அரைகுறை ஆடையுடன் பெண்கள் குளிப்பதுதான் ருத்ராவின் நினைவுக்கு வந்தது. அதனால் அங்கு செல்ல அவளுக்குத் தயக்கமாக இருந்தது. தன் கைகளை பிசைந்து கொண்டு என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

அவள் எதுவும் சொல்லாமலேயே, அவளுடைய முகபாவனையைப் பார்த்து எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்ட பரமேஷ், “நீ அங்க வந்து குளிக்க வேண்டாம், சும்மா வர மட்டும் செய்” என்றான்.

அதைக் கேட்டுத் தலையாட்டியவள், ‘இவனுக்கு எப்படி நம்ம மனசுல நினைக்கிறது எல்லாம் அப்படியே தெரியுது?’ என்று மனதில் நினைத்துக்கொண்டு அவர்களுடன் நீச்சல் குளத்திற்குச் செல்லச் சம்மதித்தாள்.

அனைவரும் நீச்சல் குளத்திற்குச் சென்றனர். பிரம்மாண்டமான நீச்சல் குளம் நீண்டுகொண்டே சென்றது. கடற்கன்னியின் சிலை ஒன்று வைக்கப்பட்டு, அதிலிருந்து தண்ணீர் விழுந்துகொண்டிருந்தது.

இதுவரை நீச்சல் குளங்கள் படங்களில் மிகச்சிறிய அளவில் காட்டப்பட்டிருப்பதைப் பார்த்துப் பழகிய ருத்ராவின் கண்களில் வியப்பு தோன்றியது. நீச்சல் குளம் ஆறுபோல் பெரிதாக நீண்டுகொண்டிருக்க, அதையெல்லாம் ஆச்சரியத்துடன் வாயடைத்துப் பார்த்தாள்.

ஓரமாக ருத்ரா நிற்க, முகிலும் ரோஸினியும் நீச்சல் உடையுடன் நீச்சல் குளத்திற்குள் இறங்கினர். அஜித்தும் அவர்களுடன் சேர்ந்து இறங்கி ஜாலியாகக் குளித்தான். பரமேஷ் மட்டும் ருத்ராவுக்குத் துணையாக அவளருகிலேயே நின்றுகொண்டிருந்தான்.

அப்பொழுது திடீரென்று ஒரு சிறிய படகில் இருவர் செல்வதை ஆச்சரியத்துடன் கண்கள் விரியப் பார்த்தாள் ருத்ரா.

‘நீச்சல் குளத்தில் படகு சவாரியா? பணக்காரர்களுக்கு எல்லாம் கொடுத்து வைத்த வாழ்க்கைதான்!’ என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.

அவள் நினைத்தது பரமேஷிற்குக் கேட்டதோ என்னவோ, “வர்றியா? நாம படகு சவாரி போகலாம்” என்று அழைத்தான்.

அவளுடைய முகமே புன்னகையில் மலர, சம்மதித்தாள். இருவரும் சென்று சிறிய படகில் ஏறிக்கொண்டனர். படகில் இருந்த சிறிய துடுப்பைப் பிடித்துத் துழாவ ஆரம்பித்தான் பரமேஷ்.

படகு மெதுவாக நகர, அங்கிருந்த பிரம்மாண்டமான கட்டிடங்களை ரசித்துக்கொண்டு வந்தாள் ருத்ரா. திடீரென்று அவளுக்கும் துடுப்பைப் பிடித்துப் படகைச் செலுத்த ஆசை ஏற்பட, “கொஞ்சம் அந்தத் துடுப்பைத் தரேங்களா?” என்று கேட்டாள்.

“துடுப்பையா? உனக்கு இதெல்லாம் எப்படிப் பண்ணனும்னு தெரியாது. நீ ஏதாவது பண்ணி படகு கவிழ்ந்திடப் போகுது” என்று சிரித்துக்கொண்டே எச்சரித்தான் பரமேஷ்.

அதைக் காதில் வாங்கிக்கொள்ளாத ருத்ரா, அவனிடமிருந்து துடுப்பைப் பிடுங்கித் துடுப்பு போட ஆரம்பித்தாள். முதலில் சற்றுத் தடுமாறினாலும், விரைவிலேயே துடுப்பை நன்றாக அசைத்து படகை முன்னேறச் செய்தாள்.

அதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட பரமேஷ், “பரவாயில்லையே, உடனே கத்துக்கிட்ட!” என்று கூறினான்.

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் ருத்ராவின் நினைவில் ஏதேதோ வந்து சென்றன. இதற்கு முன்பும் இதேபோல் படகில் பயணம் செய்தது போன்ற உணர்வு ஏற்பட, துடுப்பை நழுவவிட்டு தலையைப் பிடித்துக்கொண்டாள்.

என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் விழித்தவன், “என்ன ஆச்சு ருத்ரா?” என்று அவளைப் பதற்றத்துடன் கேட்டான்.

தன்னிலைக்குத் திரும்பிய ருத்ரா, “ஒண்ணும் இல்லை, லைட்டா தலைவலி” என்றாள்.

“நானும் ஏதோன்னு நினைச்சுப் பதறிட்டேன்.”

துடுப்பு சற்றுத் தள்ளி மிதந்துகொண்டிருப்பதைப் பார்த்த ருத்ரா, அதை எடுக்க முயன்றாள். ஆனால், படகிலிருந்து எழுந்து நின்றால் என்ன ஆகும் என்பதை யோசிக்காமல் எழுந்து நின்றாள்.

அதை எதிர்பார்க்காத பரமேஷ், “உட்காரு, எந்திரிக்காத! படகு கவிழ்ந்திடும்!” என்று எச்சரித்தான்.

அவன் எச்சரித்து முடிப்பதற்குள், ருத்ரா எழுந்ததால் படகு நிலைதடுமாறி, இருவரும் இருந்த படகு கவிழ்ந்திருந்தது.

தொடரும்…

தொடர்ந்து வாசியுங்கள் நண்பர்களே! அடுத்த பாகத்தில் சந்திப்போம். 🤗🤗