காரிகை கனவுகள் 02

சென்னையின் மிக முக்கியமான பல்கலைக் கழகம் ஒன்றின் வளாகம் அது. அங்கு அமைந்திருந்த விளையாட்டு மைதானத்தின் ஓரம் இருந்த ஓர் இருக்கையில் அமர்ந்தபடி எதையோ தீவிரமாக படித்துக் கொண்டிருந்தாள் அவள்.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த புத்தகம் ஒன்று அவள் கைகளில் இருக்க, அவ்வபோது அலைபேசியைப் பார்த்தும் எதையோ குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவள் கிட்டத்த மூன்று மணி நேரமாக அந்த இடத்தை விட்டு அசையவே இல்லை.

அவளுடன் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த அவள் நண்பர்கள் புத்தகங்களை அவள் பொறுப்பில் விட்டுவிட்டு கேன்டீன் சென்றிருக்க, பாதியில் விட்டுவிடும் எண்ணமில்லாமல் தொடர்ந்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள் அவள்.

அவர்கள் கேன்டீனில் இருந்த சமோசா, சிப்ஸ் என்று அத்தனையும் நொறுக்கி முடித்து திரும்பி வரும் வரையும் கூட அவளின் கவனம் வேறு எங்கும் திரும்பவே இல்லை. அவள் நண்பர்களுக்கு அவள் அப்படித்தான் என்று தெரியும் என்பதால், அவளைப்பற்றி கவலை கொள்ளாமல் உண்டு முடித்து அவளுக்கும் பாதம் பால் ஒன்றை வாங்கி வந்திருந்தனர்.

அவள் தோழி ஸ்வாதி அவள் கையில் இருந்த புத்தகத்தை பிடுங்கிக்கொண்டு அவள் கையில் பால் டம்ளரை திணிக்க, “அஞ்சு நிமிஷம் தான் ஸ்வாதி. முடிச்சுடறேனே” என்றாள் இனியாழ். அதே கல்லூரியில் பி டெக் கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கும் மாணவி.

“ஓவர்டி இது. ஒழுங்கா குடிச்சு முடி” என்று ஸ்வாதி கண்ணை உருட்டி முறைக்க,

“நிஜமா இது உனக்கே ஓவரா இல்ல இனியாலு. சுமாரா படிக்கிற நாங்களே ஜாலியா இருக்கோம். நீ சூப்பரா படிக்கிற ஆளு. ஆனாலும், புக்கை விட்டு நிமிராம இருக்க. எக்ஸாம் மேல அவ்ளோ பயமா உனக்கு?” என்றான் அவள் தோழன் தீபக்.

“டேய் உனக்கு அவளைப் பத்தி தெரியாதா.” என்று சரத் அவனை மிரட்ட,

“இருந்தாலும் இவ பண்றதெல்லாம் அநியாயம்டா” என்று வாயில் கைவைத்து காண்பித்தான் தீபக்.

இனியாழ் பதில் பேசாமல் அவனை முறைக்க, “சரி சரி விடு. நோட்ஸ் முடிஞ்சதா. கிடைக்குமா” என்றான் எதுவுமே நடக்காதது போல்.

“ஒன்னும் கிடையாது. நீயே உட்கார்ந்து எடு. ஸ்வா அவனுக்கு கொடுத்த, பார்த்துக்கோ” என்று இருவரையும் சேர்த்து மிரட்டினாள் இனியாழ்.

“செல்லம் செல்லம் தப்புடா. என் உயிர் நட்பு நீ. நீ இப்படி என்னை கைவிடலாமா?” என்று தீபக் உடனே சரண்டர் ஆக,

“இப்போ கொஞ்சம் முன்னாடி என்னவோ சொன்னியே?”

“நானா… ம்ம்ம்ம்… வாயைத் திறக்கவே இல்ல இனியாலு. ” என, அவனை முறைத்தவள்,

“என் பேர் என்ன?” என்றாள்.

“இனியாளு…” என்று இழுத்தவன், அவள் பார்வையில் இருந்த அனலில், “இனியாழ்… யாழ்” என்றான் திருத்தி.

இனியாழ் அப்போதும் முறைக்க, “ஏதோ சின்னப்பிள்ளை தெரியாம பண்ணிட்டேன். அதுக்கு முறைச்சுட்டே இருப்பியா? விட்டுட்டு போம்மா.” என்றவன் ஸ்வாதியின் கையில் இருந்த நோட்டை வாங்கிக்கொண்டு அடுத்த சிமெண்ட் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

இனியாழ் அவனை சிரிப்புடன் பார்க்க, “மானங்கெட்டவன்” என்று வெளிப்படையாகவே திட்டினாள் ஸ்வாதி.

“தேங்க் யூ” என்றவன் அவன் வேலையைப் பார்க்க, அவனை பார்த்து சிரித்தபடியே மற்றவர்களும் மீண்டும், படிக்க தொடங்கினர்.

“எல்லாம் கவர் பண்ணிட்டியா? ஓகே வா இனியாழ்” என்று சரத் கேட்க, ஆமென தலையசைத்தாள் இனியாழ்.

“கண்டிப்பா நீ நினைச்சபடி நல்ல மார்க்ஸ் வரும்டா.” என்று சரத் ஆருடம் சொல்ல,

“வந்தே ஆகணும் சரத். ஒழுங்கா படிப்பை முடிச்சு, ஒரு நல்ல கம்பெனில பிளேஸ் ஆகணும். அப்பாவை இதுக்குமேல கஷ்டப்படுத்த முடியாது.” என்றவளுக்கு தந்தையின் நினைவு.

தென்காசியைச் சேர்ந்த வெண்ணியூர் அவளது சொந்த ஊர். அவர்களது தாத்தா காலத்தில் இருந்தே விவசாயத்தை பூர்விகமாக கொண்டது அவள் குடும்பம். ஊரில் வீடு, நிலம் என்று இருந்தாலும், சொல்லிக்கொள்ளும்படியான வருமானம் இல்லாத நிலை தான்.

இதில் இவள் அக்காவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்து இருக்க, அதில் வாங்கிய கடனுக்காகவும் சேர்த்து ஓடிக் கொண்டிருக்கும் தன் தந்தையை நினைத்துக் கொண்டவளுக்கு சங்கடமாக இருந்தது.

முடிந்தவரை தன் தேவைகளுக்கு தந்தையை நச்சரிக்காமல் தானே பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற வெறி எப்போதுமே இனியாழுக்கு உண்டு.

அதன் பொருட்டே, படிப்பில் மிகவும் கவனமாக இருப்பாள் அவள். பள்ளி காலத்தில் இருந்தே அவள் அப்படித்தான்.

இப்போது கல்லூரியிலும் அதையே தொடர, முதல் ஆண்டு நுழைவுத் தேர்வு நடந்த நேரம் மட்டும்தான் அவள் தந்தையிடம் இருந்து பணம் வாங்கியது. அதன்பின்னான மொத்தமும் அவள் கல்லூரியைச் சேர்ந்த ட்ரஸ்ட் ஒன்று ஏற்றுக் கொள்ள, அதற்கும் குறிப்பிட்ட மதிப்பெண் சதவீதம் நிபந்தனையாக இருந்தது.

இதுவரை அவர்கள் விதித்திருந்ததை விட அதிகப்படியாகவே மதிப்பெண் பெற்று, ஒவ்வொரு வருடமும் தவறாமல் அந்த ஊக்கத்தொகையை பெற்று விடுவாள் இனியாழ்.

இது அவளின் கடைசி வருடத்தின் முதல் செமெஸ்டராக இருக்க, இப்போதும் அவளால் முயன்ற அளவு கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறாள் அந்த படிப்பாளி.

இந்த நிமிடம் அவளுக்கு அவள் படிப்பைத் தவிர்த்து வேறு கவலையில்லை.

வேறு எதுவும் அவளை சலனப்படுத்தவும் முடியாது. பெற்றவர்கள் இருவரும் பக்கபலமாக இருக்க, அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற உந்துதலை மட்டுமே வைத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறாள் அவள்.

அவளைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், கடிவாளம் கட்டிக் கொண்ட குதிரை அவள். தன் குறிக்கோளை பிடிக்க ஓயாது ஓடிக் கொண்டிருக்கும் அழகி.

இன்றைய gen z இளைஞர்கள் கூட்டத்தோடு ஒட்டாமல், விதிவிலக்காக விடுபட்டு போன அழகி அவள்.

அவளை பொறுத்தமட்டில் இந்த அழகு, ஆடம்பரம், பொழுது போக்கு இதற்கெல்லாம் இடமில்லை.

அழகான காட்டன் சுடிதார்கள்… நெற்றியில் எப்போதும் இருக்கும் வட்ட வடிவ பொட்டு… அன்னையின் பராமரிப்பில் இடுப்புவரை அடர்ந்து நீளும் தலைமுடி. காதில், கழுத்தில் மெல்லிய தங்க நகைகள். கையில் எப்போதும் இருக்கும் அவளின் வாட்ச் என்று அவளின் அலங்கார பட்டியல் மாறுவதே இல்லை.

அதிகம் ஆடம்பரமில்லாத, கலப்புகள் இல்லாத அமைதியான அழகு அவளுடையது. பார்த்த நிமிடம் நிச்சயம் மனதில் ஒட்டிக்கொள்ள சொல்லும் அவள் விழிகள்.

ஆனால், இதை குறித்தெல்லாம் எந்த யோசனையும் இல்லாமல், அவளுக்கென சேர்ந்திருந்த நண்பர்கள் கூட்டத்தோடு பேசி சிரிப்பது, படிப்பது என்று அவள் நாட்கள் கழிந்து கொண்டிருக்கிறது.

அவர்களுக்கான தேர்வுக்கு முந்தைய விடுமுறை நேரம் இது. கல்லூரி விடுதியில் தங்கி இருப்பதால், அவளும், ஸ்வாதியும் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து படிக்க, சரத்தும், தீபக்கும் வந்து சேர்ந்து கொண்டிருந்தனர்.

அன்றைய தினம் மாலை நேரம் வரை படித்தவர்கள், அதன் பின் வந்த நாட்களிலும் அதையே தொடர, அடுத்த நான்கு நாட்களில் அவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் தொடங்கி இருந்தது.

எந்த அலட்டலும் இல்லாமல், படித்ததை எல்லாம் நினைவு கூர்ந்து, அமைதியாக மனதை ஒருநிலையில் வைத்து தன் தேர்வுகளை முடித்து இருந்தனர் நண்பர்கள்.

நான்கு பேருமே நன்றாக எழுதி இருக்க, நிச்சயம் நல்ல மதிப்பெண்கள் வரும் என்ற நம்பிக்கை இருந்தது. அதே நம்பிக்கையோடு அவரவர் விடுமுறையை கழிக்க, சொந்த ஊர்களுக்கு பயணமாக, இனியாழும் தென்காசிக்கு கிளம்பியிருந்தாள்.

இருபது நாட்கள் கல்லூரி விடுமுறையாக இருக்க, ஊரில் என்ன செய்ய வேண்டும், எங்கெல்லாம் செல்ல வேண்டும் என்று கனவு கண்டு கொண்டே ரயில் ஏறி இருந்தாள் அவள்.

‘முதல்ல கிருஷ்ணாவை வர சொல்லணும். அவனும் கூட இருந்தா, இன்னும் ஜாலி ஆஹ் இருக்கும்” என்று நினைத்தவள் தன் அக்காவை அழைக்க,

“சொல்லுடா” என்று மெதுவாக வந்தது அவள் அக்கா தமிழினியின் குரல்.

“அக்கா… கிருஷ்ணாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விடு. எனக்கு லீவ் முடியுற வரைக்கும் அவன் என்னோட இருக்கட்டும்” என்ற தங்கையை நினைத்து சிரித்துக் கொண்டு,

“எக்ஸாம் நல்லா பண்ணி இருக்கியா?” என்றாள் தமிழ்.

“அதெல்லாம் எப்பவும் போல தான். நீ பாப்பாவை எப்போ கூட்டிட்டு வர சொல்லு” என,

“இங்கே கொஞ்சம் சூழ்நிலை சரியில்ல இனிம்மா. சரியாகவும் நானே வர்றேன். நீ அம்மாகிட்ட விவரம் கேட்டுக்கோ. நான் உனக்கு அப்புறம் பேசறேன்” என்று அழைப்பைத் துண்டித்தாள் மூத்தவள்.

“என்னவா இருக்கும்?” என்று சில நிமிடங்கள் மூளையை கசக்கியவள், “முக்கியமா இருந்தா அவளே சொல்லி இருப்பா” என்று தன்னை சரி செய்து கொண்டாள்.

அடுத்தநாள் காலையில் தென்காசி ரயில் நிலையத்தில்  இறங்கிய மகளை அழைத்துச் செல்ல, தணிகாச்சலம்  வந்து காத்திருந்தார்.

அப்பாவை பார்த்ததும் மகள் துள்ளி குதிக்க, மகளை மகிழ்வுடன் கண்களில் நிறைத்துக் கொண்டார் தணிகாச்சலம். அவரின் கர்வம் அவள் மகள். எப்போதும் போல, மகள் தந்தையை அணைத்து கொள்ள, சில நிமிட நல விசாரிப்புகளுக்குப் பிறகு இருவரும் கிளம்பினர்.

வழியில் அவளுக்குப் பிடித்த பலகாரங்களை வாங்கி அவள் கையில் கொடுத்தவர் மகளை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர, அவள் அன்னை சங்கரி மகளுக்குப் பிடித்தது எல்லாம் சமைத்து வைத்திருந்தார்.

இனியாழ், “அம்மா” என்று அவரையும் கட்டிக்கொள்ள, “ஆடாம ஒரு இடத்துல நில்லு இனியா. என்னையும் சேர்த்து தள்ளி விட்டுடுவ போல” என்று மகளை அதட்டினார் சங்கரி.

அதற்கெல்லாம் கவலைப்படாமல், அன்னையை பின்னிருந்து அணைத்தபடி அவர் பின்னே சுற்றி வந்தவளை குளிக்கச் சொல்லி அனுப்பியவர் மகளுக்கு உணவு எடுத்து வைக்க, நீண்ட நாட்களுக்குப் பிறகான வீட்டு சாப்பாடு இழுத்தது அவளை.

ரசித்து ருசித்தவள், “ம்மா… ம்ம்ம்ம்ம்..” என்று ராகமிழுக்க,

“கையை காய வைக்காம எந்திரிடி. போக்கிரி” என்று மகளின் தோளில் தட்டினார்.

இனியாழ் உணவை முடித்து, வீட்டின் ஹாலில் இருந்த சோஃபாவில் படுத்தபடி தொலைக்காட்சியில் மூழ்கிவிட, தந்தை இதற்குள் வயலுக்கு கிளம்பியிருந்தார்.

இனியாழ் தொலைக்காட்சியை பார்த்தபடி இருந்தவள் அப்படியே உறங்கியிருக்க, சிரித்தபடி தொலைக்காட்சியை அமர்த்திவிட்டு சென்றார் சங்கரி.

அன்று மாலை வரையும் உறங்கி எழுந்த இனியாழ் மாலையில் தாயுடன் கோவிலுக்குச் சென்று வர, அவளின் நாட்கள் மிகவும் மகிழ்ச்சியாகவே சென்றது.

விடுமுறையின் முதல் ஐந்து நாட்கள் கழிந்திருந்த நிலையில் தான் அவள் வீடு வந்து சேர்ந்தாள் அவளது அக்கா தமிழினி.

அவள் வந்த நேரம், இனியாழ் தன் அன்னையுடன் வீட்டின் வாசலில் தான் அமர்ந்திருந்தாள்.

தமிழினி அவர் கணவருடன் இருசக்கர வண்டியில் வந்து இறங்கியவள், பிள்ளையோடு வர, அவள் கணவர் வாசலுடன் கிளம்ப பார்க்க, “உள்ளே வாங்க மாமா” என்றாள் இனியாழ்.

“கொஞ்சம் வேலை இருக்கு இனி. நாளைக்கு வரேன்” என்று பட்டும்படாமல் பேசிச் சென்றார் அந்த வீட்டின் மூத்த மாப்பிளை.

சங்கரி யோசனையுடன் மருமகனைப் பார்த்து நின்றவர் மகளிடம் திரும்ப, அவள் முகமும் கொஞ்சம் வாடித்தான் இருந்தது.

“என்ன தமிழ்…” என,

“அவருக்கு வேற வேலையில்ல. நீங்க வாங்கம்மா” என்று தங்கையுடன் வீட்டிற்குள் நுழைந்துவிட்டாள் அவள்.

அதன் பின்னான நேரங்கள் அக்கா மகனுடன் கழிய, இனியாழ், கிருஷ்ணாவின் சத்தம் தான் உரத்துக் கேட்டது அந்த வீட்டில்.

சங்கரி சமையல் அறையில் வேலையாக இருக்க, தமிழினி அவருடன் இருந்தாள்.

“உனக்கும் மாப்பிள்ளைக்கும் ஏதாவது சச்சரவா?” என்று அன்னை மனம் தாங்காமல் கேட்டு வைக்க,

“உங்க மருமகனுக்கு கிறுக்கு பிடிச்சிருக்கும்மா” என்றாள் மகள்.

“தமிழ்”

“அட போங்கம்மா” என்றவள் அங்கு நிற்காமல் நகர,

“என்னனு தெளிவா சொல்லேண்டி.” என்றார் தாயார்.

“இப்போவே எதுக்கு. பொறுமையா சொல்றேன். இப்போதைக்கு சீக்கிரம் சமைச்சு முடிங்க. சாப்பிடுவோம்” என்றாள் மகள்.

அவள் வெகு இயல்பாக இருக்க, அன்னையாக சங்கரிக்குத் தான் மூளை குழம்பியது போல் இருந்தது.