செவ்வாய் காலை சமத்துப் பிள்ளையாக பிரபஞ்சன் குமுதினிக்கு செய்தியை சொல்ல மறுபுறம் அமைதி. “மேடம்?”

“என்னிக்கு திரும்பறார் உங்க பாஸ்?”

“அது ஒரு பத்து நாளாவது ஆகும் மேம்.”

“ஒரு நாள் ஃப்ரீ பண்ணிக்க உங்ககிட்ட ஒரு மாசம் முன்னாடி சொல்லணும், அவ்வளவு பிசின்னு அலட்டினார்? இப்ப எப்படி அங்க பத்து நாள் போய் உட்கார முடியும்?”, அதிகாரமாக வந்தது குமுதினியின் குரல்.

அதில் முழித்த பிரபஞ்சன், ‘இது எப்போன்னு தெரியலையே? ஒரு மணி நேரம் முன்னாடிகூட சொல்ல மாட்டார், இதுல என்னை கோர்த்து விட்டாரே’, என்று உள்ளுக்குள் புலம்பியவன், “அது ஜூம்ல கால்ஸ் அடென்ட் பண்ணுவார் மேடம். வேலை எதுவும் நிக்காது. அங்க திருநெல்வேலி ஆஃபீஸ்ல அந்த பக்க வேலை எல்லாம் பார்த்துக்குவார். அங்கதான் நாங்க ஆரம்பிச்சது. இப்பவும் இரண்டு மால்ஸ் கட்டறோம் மேடம்.”, வேகமாக சமாளித்தான்.

ஊஃப் என்று காற்று வெளியேறும் சத்தம் மட்டுமே கேட்டது. “தாங்க்ஸ்”, என்றதுடன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. வேகமாக சிம்மனை அழைத்து பேசியதைக் கூறினான். “ம்ம்.. சரி வை”, என்ற பதிலில் தோளைக் குலுக்கிவிட்டு வேலையைப் பார்க்கச் சென்றான்.

சிம்மன் யோசனையாய் நடந்துகொண்டிருந்தான். வீட்டிற்கு வந்து தந்தையை காண அவர் கேட்ட முதல் கேள்வியே குமுதினியைப் பற்றித்தான். யூட்டூப் வீடியோ அவருக்கும் வந்தடைந்திருந்தது. அவருடன் இருக்கும் முத்தையாவை முறைத்தான்.

“அது என் பேரன் உங்களைப் பத்தின்னு போட்டுக் காமிச்சான் சின்னய்யா. அதுல…”,என்றவர் அவனின் பார்வையில் பேசாமல் இருந்துகொண்டார்.

குழறலாகப் பேசினாலும், சற்று சிரமப்பட்டால்  நரசிம்மன் பேசுவது புரியும். குமுதினியை எப்படி பார்த்தாய், உடன் இருந்தவன் யார் என்று விசாரித்தார்.

முத்தையனைப் பார்த்தான். ஆமாம் என்று தலையசைத்ததிலேயே குமுதினி அவினாஷ் கல்யாணம் செய்யப்போவது வரை தெரிந்து வைத்திருக்கிறார் என்று உணர்ந்தான்.

“நீங்க விசாரிச்சு தெரிஞ்சு வெச்சிருக்கீங்க போலருக்கே பா. அவ கல்யாணம் செய்யணும்னா நான் டைவர்ஸ் குடுக்கணும். எங்க கல்யாணம் லீகலா செல்லும். அதுதான் டைவர்ஸ் கேட்க வந்தா.”

அதில் மகிழ்ச்சி தெரிந்தது அவர் முகத்தில். தண்ணீர் தெளிப்பது போல விரல்களை லேசாக மடக்கி விரித்தவர், “குடு..சனி விலகும்” என்று திக்கித் திணறிக் கூறினார்.

“அதெப்படிப்பா… ஏன் போனான்னு தெரிஞ்சுக்காம நான் எப்படி டைவர்ஸ் தருவேன்? அவ எனக்கு ஒழுங்கான காரணத்தை சொல்லணும்.”

அதில் நரசிம்மன் கோபமாக கையை உதறினார். பேச வேணாம் என்று சொல்வதற்குள் எச்சில் தெரித்தது. அவர் அலைபுறுவது கண்டு, “ஒன்னும் இல்லை. நீங்க ரெஸ்ட் எடுங்க. எல்லாம் நான் பார்த்துக்கறேன்.”, என்று சமாதானப்படுத்தினான்.

மறு நாள் முத்தையன், “நீங்க சொன்னதுலர்ந்து ஐயா விசனப்பட்டுகிட்டே இருக்கார் தம்பி. இராத்திரி தூங்கக்கூட இல்லை. லாயரை விட்டு முடிக்கச் சொல்லு. அசிங்கப்படுத்திட்டு போனவ கூட பேசவே வேணாம். இத்தனை வருஷம் பேசாதது இனி என்ன இருக்கப்போவுது தம்பி. அத்துகிட்டு போனது போனதாவே..”, அவன் முறைப்பில் நிறுத்தியவர் “இல்ல தம்பி… இராவெல்லாம் கொஞ்ச கொஞ்சமா பேசி சொன்னது. நான் சொல்லிட்டா திரும்ப உங்ககிட்ட பேச கஷ்ட்டப்பட்டுக்க மாட்டார். அதுதான்…”, என்று விளக்கம் வேறு வைக்க, ஒரு தலையசைப்போடு நகர்ந்தான் சிம்மன்.

இப்போதும் இதைத்தான் யோசித்துக்கொண்டிருந்தான். அவன் தந்தைக்குள்ளும் எவ்வளவு ஆழமான வடுவாக இருக்கிறது. ஊரே வியந்துபார்க்கும் இடத்தில் இருப்பவர் மருமகள் கடிதம் எழுதிவைத்துவிட்டு ஓடிப்போனால் எவ்வளவு அவமானம். அதைக் கொஞ்சம் கூட உணராமல் சென்றுவிட்டாளே. அதனால்தான் இத்தனை வெறுப்போடு சனி விலகும் என்கிறார். ஆனால் அவ்வளவு எளிதாக அவளை விடுவதா?

அடுத்த இரண்டு வாரங்கள் சுத்தமல்லியில் இருந்தான். அவ்வப்போது திருநெல்வேலி அலுவலகத்திற்குச் சென்று வந்தான். வெகு நாட்களுக்குப் பிறகு அவன் தந்தையுடன் நேரம் செலவழித்தான். ஒரு காலத்தில் சிம்ம சொப்பனமாக இருந்தார் நரசிம்மன். அவர் மனைவி கலாவதி சிம்மனின் தாய் இறந்த போது  சிம்மனுக்கு பன்னிரெண்டு வயது. அவன் பாட்டி மறுமணத்திற்கு கேட்டபோதும் ‘சிம்மனுக்கு அம்மா, எனக்கு பொண்டாட்டின்னா அது கலா மட்டும்தாம்மா. வேற யாரும் அந்த இடத்துக்கு வரமுடியாது’ என்று சொன்னது சிம்மனுக்கு நன்றாக நினைவிருக்கிறது. தந்தையை ஒரு ஹீரோவாகத்தான் பார்த்தான் சிம்மன்.

கல்லூரியில் பார்த்துக்கொண்ட காதலர்கள், இறுதித் தேர்வுகள் முடிந்து ரிசல்ட்டிற்காக காத்திருந்த காலத்தில் அங்கே இங்கே என்று பார்த்துக்கொள்ள, பாட்டிக்குத் தெரிந்து விளக்குமாத்தால் குமுதினியை விளாசிவிட்டார். அத்தோடு நில்லாமல் அவர் சொந்தத்தில் ஒரு மாப்பிள்ளையை பரிசம் போட அழைக்கவும், சிம்மனை அழைத்துவிட்டாள் குமுதினி.

பரிசம் போடக் குறித்த தேதியில், சிம்மனின் மனைவியானாள் குமுதினி. குமுதினியை திருமணம் செய்து அழைத்து வந்தபோது நரசிம்மனின் முகத்தில் ஒரு நொடி வருத்தம். அடுத்த நிமிடமே “சிம்மனுக்கு பிடிச்சிருந்தா எனக்கு வேற கருத்து கிடையாது. ஆரத்தி எடுத்து வாங்க மருமகளை அழைக்க”, என்று குரல் கொடுத்தவர். மிக மகிழ்ச்சியோடுதான் குமுதினியை வரவேற்றார்.

இரண்டு வாரத்தில் பெரிதாக வரவேற்பு வைத்து எல்லோருக்கும் அறிமுகப்படுத்தலாம் என்று வேகமாக திட்டங்கள் தீட்டியிருந்தார். குமுதினியின் பாட்டியை வரவழைத்து சமாதானம் கூட செய்து வைத்தார். அப்படிப்பட்டவர் மானத்தைத்தான் காற்றில் பறக்கவிட்டுச் சென்றாள்.

பிரபா பேசும்போது, “சார், குமுதினி மேடம் இன்னிக்கும் போன் செய்தாங்க. நீங்க அவங்க கால் எடுக்கலையாமே? எப்ப சென்னை வருவீங்கன்னு கேட்டாங்க. புதன் கிழமை நீங்க வந்துட்டு உடனே கிளம்பிட்டீங்கன்னு சொல்லவும் கொஞ்சம் அப்செட். எல்லாத்தையும் ஹோல்ட்ல போட்டுட்டு அப்பாவை பார்க்கப் போயிருக்கார் மேடம். எப்ப வருவார்னு தெரியலைன்னு சொல்லி வெச்சிருக்கேன்.”

“ஹ்ம்ம்…நீ என்ன பண்ணு, சீ ப்ரீஸ் மால் ஓப்பனிங்க்கு வரச்சொல்லு. தொழில்துறை அமைச்சர் சீஃப் கெஸ்ட், குமுதினியும் ஒரு கெஸ்ட் ஆஃப் ஆனர், குத்துவிளக்கேத்தி வைக்கணும், இரண்டு நிமிஷம் பேசணும்னு சொல்லு. அந்த விழாவுக்கு  நான் வருவேன் அப்ப எங்கிட்ட பேசிக்கலாம்னு சொல்லு. டேய், அவ கெஸ்ட் ஆஃப் ஆனரா வந்தாதான் நான் பேசுவேன். அதை தெளிவா புரியவை. “

“சார், இன்விடேஷன் பிரிண்ட் பண்ண போயிருக்கு, இப்ப மேடம் பேரை சேர்க்கணும்னா… அவங்களை முதல்ல கேட்கணும்…”, மலைப்பாக பிரபஞ்சன் பேச, “போய் அந்த வேலையை கவனி. நாளைக்கு இன்விடேஷன் எல்லார் கைக்கும் போயிடணும். முக்கியமானவங்களுக்கு நான் இங்கருந்தே பேசிக்கறேன்.”, வைத்துவிட்டான்.

“விளையாடறீங்களா? “, சீறலாய் வந்தது குமுதினியின் குரல்.

“மேம். நீங்க சார் கூட பேசணும்னு ட்ரை பண்ணதைச் சொன்னதும் எங்க சார் இதுதான் சொன்னார். உங்களுக்கு வேணும்னா கூட ஒரு கெஸ்ட் அழைச்சிட்டு வரலாம். பட் உங்க பேர் இன்விடேஷன்ல போடணும். அதுதான் பிரின்ட் ஹோல்ட் பண்ணிட்டு உங்ககிட்ட கேட்க வந்தேன்.”

சிம்மன் என்ன நினைத்து செய்கிறான் என்று பிரபஞ்சனுக்கு சத்தியமாகப் புரியவில்லை. ஒரு நேரம் குமுதினி போடும் ட்ரெஸ் கலர் மேட்சாகப் போடவேண்டும் என்று எல்லா கலரிலும் சட்டை எடுக்கிறான். ஹோட்டல் அழைத்துச் செல்கிறான். அடுத்து கண்ணில் சிக்காமல் சுற்றலில் விடுகிறான். இப்போது குத்துவிளக்கேற்றி வைக்க அழைக்கிறான். பிரபஞ்சன் ஏன் எதற்கு என்று கேட்டு சொன்ன வேலையை மட்டும் பார் என்று திட்டு வாங்கியதுதான் மிச்சம்.

‘இவரு கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலையே!’, என்று புலம்பத்தான் முடிந்தது.

மறுபுறம் போனில், “ஹ்ம்ம்… வரேன். வந்துத் தொலையறேன். “, என்று குமுதினி குமுறுவது கேட்டு நடப்பிற்கு வந்தவன், “தாங்க்ஸ் மேடம். இன்விடேஷன் பிரிண்ட் ஆகி வந்ததும் உங்களுக்கு வரும். உங்க ப்ளஸ் ஒன் யாருன்னு டீடெயில் தந்தீங்கன்னா அவங்களுக்கும் அனுப்பிவிட வசதியா இருக்கும்.”, பிரபஞ்சம் கேட்கவும், “என் ப்ளஸ் ஒன் அவினாஷ்தான். அவர் ஆஃபீசுக்கு அனுப்பிடுங்க. நான் தகவல் சொல்லிடறேன். எதுக்கும் ஃபங்கஷன்ல உங்க பாஸ் கொஞ்சம் அடக்கி வைங்க பிரபஞ்சன். இன்னொரு தகராறு நடந்துச்சு நான் உங்களைத்தான் பொறுப்பாக்குவேன்.”, அவன் பதில் சொல்லும்முன் அழைப்பு துண்டிக்கபட்டிருந்தது.

“ம்க்கும்…  நானு அவரை அடக்கி வெக்கறதாம். நடக்கற காரியமா அது? தகராறு நடந்தா அடிச்சிகிட்ட இரண்டு பேரை விட்டுட்டு அப்புராணியை பிரிச்சு மேயறது. சாருக்கேத்த மேடம்தான். “ சிலுப்பிக்கொண்டு சென்றான்.