“ரொம்ப நேரம் போட்டுருந்தா அது அரிக்கும் டா. ஸ்கின் அலர்ஜி மாதிரி வந்துரும். அதனால தான் அப்ப அப்ப கழட்டி காத்து கொடுக்கணும் முகத்துக்கு. அப்படி பட்ட கெமிக்கல்ல செஞ்சது தான் இந்த முகமூடி. அதனால தான் யாராலயும் கண்டு பிடிக்க முடியலை”
“சரி சார் இப்ப என்ன பண்ணுறது?”
“இவங்க கிட்ட சிக்குனா அப்புறம் நம்ம தப்பிக்கவே முடியாது. ஸ்ரீ எங்க இருக்கா?”
“நம்ம இடத்துல தான்”
“சரி இப்ப இங்க இருந்து தப்பிக்கணும். நான் அவங்களை திசை திருப்பி என் பக்கம் அவங்க கவனத்தை மாத்துறேன். நீ அந்த நேரம் வேற பக்கம் ஓடிரு. அப்புறம் நான் வேற பக்கம் போயிருவேன்”
“சார் மாட்டினா நீங்க முகத்தை மாத்தி தப்பிச்சிருவீங்க. நான் என்ன பண்ணுறது?”
“எப்படியாவது தப்பிச்சு நம்ம இடத்துக்கு வந்துரு. உன்னோட முகத்தையும் மாத்திரலாம். நாம இன்னும் ரெண்டு நாள்ல இந்த நாட்டை விட்டே போயிறலாம். அதுக்கு முன்னாடி அந்த சத்யாவுக்கு நல்ல பாடம் கத்துக் கொடுக்கணும். ஸ்ரீ யை ஒரு வழி பண்ணினா அந்த குடும்பமே அழும். என்னை என் குடும்பத்துல இருந்து பிரிச்சிட்டு அவங்க மட்டும் குடும்பமா இருப்பாங்கலாமா? சரி வா கிளம்பலாம். சிக்கிறாத. சிக்கினாலும் உளறிறாத. மாலினி கண்டிப்பா சொல்ல மாட்டா. சொன்னா அவளோட தப்பு அவ குடும்பத்துக்கு தெரிஞ்சிரும்னு பயந்து சொல்ல மாட்டா. நீயும் எதுவும் உளறாத. நம்ம ஈஸியா தப்பிச்சிறலாம். ஓகே வா?”, என்று சொன்ன அகில் அங்கிருந்து ஓட ஆரம்பிக்க குணா மற்றொரு புறம் ஓடி விட்டான்.
போலீஸ் அந்த இருட்டில் அவர்களை பிடிக்க திணற இருவரும் வெகு தூரம் சென்றார்கள்.
இந்த தகவல் எஸ்பிக்கு போக அவர்களுடன் இருந்த மற்ற அனைவருக்கும் அதிர்ச்சி தான். அவருடன் தான் சத்யா, மிதுன், குல்கர்னி மற்றும் தீனா நால்வரும் இருந்தார்கள்.
“இப்ப என்ன மாமா பண்ணுறது?”, என்று கேட்டான் சத்யா.
“கைல கிடைச்சும் கோட்டை விட்டுடோமே? இன்னும் ரொம்ப உஷாரா இருப்பானே? நம்ம அவனை அனுப்பிட்டு பின்னாடி போலீசை பாலோ பண்ண சொல்லிருக்கணுமோ?”, என்று காலம் கடந்து ஐடியா சொன்னார்.
“நம்பிக்கையை இழக்க வேண்டாம். தப்பிச்சு போனவனுங்க எப்படியும் அந்த இடத்துல தான் இருப்பாங்க. நம்ம அங்க போவோம்”, என்று தீனா சொல்ல வண்டி இன்னும் வேகம் எடுத்தது.
அவர்கள் நல்ல நேரம். அவர்கள் காரில் ஏறுவதற்கு லிப்ட் கேட்டான் குணா. “மாம்ஸ் இவன் தான் குணா”, என்று மிதுன் சொன்னது தான் தாமதம் குணா அவர்கள் யார் என்று கிரகிப்பதற்குள் உள்ளே இழுத்து போடப் பட்டான்.
வண்டி நிற்காமல் செல்ல உள்ளே குணாவை அடி பின்னி விட்டான் சத்யா. குல்கர்னியும் ஸ்ரீ எங்கே என்று கேட்டு அடிக்க குணா முதலில் வாயைத் திறக்கவே இல்லை.
ஆனாலும் விடாமல் போட்டு வெளுக்க ஒரு கட்டத்தில் ஸ்ரீ இருக்கும் இடத்தை சொல்லி விட்டான். அவனால் அடி தாங்க முடியவில்லை. தப்பிக்கவும் வாய்ப்பு இல்லை என்னும் போது உண்மையை சொல்லி விட்டான். ஆனால் அகில் இருக்கும் இடம் தெரியாது என்று சொல்லி விட்டான்.
ஸ்ரீயை அடைத்து வைத்தருக்கும் இடத்தின் அருகே இருந்த போலீஸ்க்கு அழைத்து அவளைக் காப்பாற்றி விட்டார்கள். போதை மயக்கத்தில் இருந்த ஸ்ரீ மீட்கப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டாள். ஆனால் அகில் தான் எங்கே என்று கிடைக்க வில்லை.
அனைவரும் சரியைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்து விட்டார்கள்.
“இப்ப என்ன பண்ண போறீங்க?”, என்று கேட்டார் எஸ்.பி.
“தெரியலை மாமா”, என்றான் சத்யா.
“நீங்க புகார் கொடுக்கலைனா அந்த அகிலை கண்டிப்பா எங்களால கண்டு பிடிக்க முடியாது. இப்பவே தவறான இன்பர்மேஷன்னு சொல்லி தான் கேசை முடிக்க போறேன். எனக்கு என்குயரி வரும். வேற வழி இல்லை. ஆனா அவன் வெளிய இருக்குறது உங்களுக்கு என்னைக்குனாலும் ஆபத்து”
தந்தைக்கு தெரிந்தாலும் பரவாயில்லை என்று எண்ணிய சத்யா “ஸ்ரீயை அவங்க கடத்த மட்டும செய்யலை மாமா. ரொம்ப நாளா போதைக்கு அடிமையாக்கி வச்சிருக்காங்க. இப்ப நாங்க கம்பலைண்ட் கொடுத்தா அவ பேர் தவறா வெளிய வரும்”, என்று சொல்ல அதிர்ந்து போனார் தீனா.
அவர் கண்கள் கண்ணீரை பொழிய ஆதரவாக அவர் கையை பற்றிக் கொண்டார் குல்கர்னி.
“சரி கொஞ்சம் கவனமா இருங்க. அவன் இருக்குற இடம் எதாவது தெரிஞ்சா சொல்லுங்க. வேற ஏதாவது கேஸ் போட்டாவது உள்ள தள்ளிறேன். ஸ்ரீக்கு ஒரு மெடிக்கல் செக்கப் நார்மலா தான் பண்ண சொல்லிருக்கேன். இப்ப டாக்டர் வந்து சொன்னதும் வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்”, என்று சொன்னவர் “ஸ்ரீ கிட்ட எதுவும் தெரிஞ்ச மாதிரி கட்டிக்காத டா. அவ கிட்ட இயல்பா இரு டா தீனா”, என்றார்.
தீனா சரி என்று தலையசைக்க சற்று நேரத்தில் வந்த மருத்துவரும் “போதை அவங்க உடம்புல கலந்துருக்கு. மாத்து மருந்து கொடுத்துருக்கேன். வேற எந்த பிரச்சனையும் இல்லை. தூங்கி எழுந்தா சரியாகிருவாங்க. அனா இனி அவங்களை கவனமா பாத்துக்கணும். இன்னைக்கு ஒரு நாள் இருக்கட்டும். நாளைக்கு மதியம் போல வீட்டுக்கு கூட்டிட்டு போங்க”, என்று சொல்லி விட்டுச் சென்றார்.
ஸ்ரீ மயக்கத்தில் தான் இருந்தாள். அவளுக்கு அந்த அளவுக்கு போதை ஊசியை அவள் உடலில் செலுத்தி இருந்தார்கள்.
“அவங்க இந்நேரம் ஆட்டோ பிடிச்சு வரணும். அது சேப் இல்லை மாமா. நான் அத்தையை கூட்டிட்டு வரேன்”, என்று சொன்னான் மிதுன்.
“உன் வண்டி வீட்ல இருக்கு. இந்த மிதுன் கார் சாவி”, என்று சொல்லி கொடுத்தான் சத்யா.
அவன் சென்றதும் இவர்கள் மூவரும் மட்டும் இருந்தார்கள். அப்போது குல்கர்னி மொபைல் ஒலித்தது. பேசியது வீணா தான். சத்யா அதை கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
“சொல்லு டா பாப்பா”
“எங்க இருக்கீங்க பா? அங்க எல்லாம் ஓகே வா? ஸ்ரீ கிடைச்சிட்டாளா? பிரச்சனை ஒண்ணும் இல்லையே?”
“ஒண்ணும் இல்லை டா. எல்லாம் ஓகே தான். ஸ்ரீ பத்திரமா எங்க கிட்ட தான் இருக்கா. காலைல அம்மா கூட வந்து பாரு”
“சரிப்பா”
“சரி டா பாப்பா தூங்கு, அம்மா கிட்ட சொல்லிரு”
“அப்பா”
“என்ன மா?”
“அவங்க எப்படி இருக்காங்க?”
“யாரு மாப்பிள்ளையா? கொடுக்கவா பேசுறியா?”
“இல்லை வேண்டாம் பா, அப்புறம் பேசுறேன்”, என்று சொல்லி போனை வைத்தாள்.
“ஏன் என் கிட்ட மேடம் பேச மாட்டீங்களோ?”, என்று அவளுக்கு மெசேஜ் அனுப்பி வைத்தான். அதைப் பார்த்தவள் பதில் அனுப்பவா வேண்டாமா என்று யோசனையில் இருக்க “சாரி வீணா, என் சிட்டிவேஷன் அப்படினாலும் நான் கொஞ்சம் நிதானமா இருந்துருக்கணும். இனி இப்படி நடக்காது. யாரையும் குறைச்சு மதிப்பிட மாட்டேன். அவசரப் பட்டு வார்த்தையை விட மாட்டேன். யாரையும் மட்டம் தட்ட மாட்டேன். இந்த நல்ல குணம் எல்லாம் வந்தது உன்னால மட்டும் தான். நீ எனக்கு வேணும். உன்னை என்னால இழக்க முடியாது”, என்று அனுப்பி வைத்தான்.
அதற்கு அவள் ம்ம் என்று மட்டும் அனுப்பி வைக்க “ஏய் பேசுடி? கால்ல வேணும்னா விழட்டுமா? அப்பவாது மன்னிப்பியா? உன் தம்பி கிட்டயும் ஆயிரம் தடவை வேணும்னாலும் மன்னிப்பு கேக்குறேன் போதுமா?”, என்றான்.
“பரவால்ல கல்யாணம் பண்ணுறதுக்கு தேவையான அத்தனை குவாலிட்டியும் உங்க கிட்ட இருக்கு. இப்பவே என் காலுல விழத் தயாராகிட்டீங்க. வேற என்ன மச்சான் வேணும்?”, என்று பதில் அனுப்ப “ஏய் கலாய்க்கிறியா டி?”, என்றான்.
“உங்களை நான் என்ன வேணும்னாலும் செய்வேன். யார் கேப்பா?”
“யாரும் கேக்க மாட்டாங்க. என் மேல உள்ள கோபம் போயிருச்சா?”
“கோபத்தை இழுத்து பிடிச்சிக்கிட்டே இருக்க முடியாதுல்ல? உங்க நிலைமையும் சரியா இல்லை. ஆனா இந்த மன்னிப்பு இப்ப மட்டும் தான். எப்பவும் இப்படியே கிடைக்காது. சரி ஸ்ரீயைப் பாத்துக் கோங்க. நான் காலைல உங்க மாமியாரையும் கூட்டிட்டு வரேன்”, என்று தகவல் அனுப்ப இது வரை சத்யாவுக்குள் இருந்த சோர்வு அனைத்தும் அவனை விட்டு விடை பெற்றுச் சென்றது.
அந்த இரவு வேளையில் அவன் முகத்தில் வந்து தென்றல் மோதியதும் வெண் சாமரம் வீசியதைப் போல அவன் மனது அமைதி அடைந்தது. அவளுடைய அருகாமையில் மட்டுமே அவன் உயிர் சரணடையும் என்ற உண்மையும் புரிந்தது.