சத்யா அவனின் புகைப்படத்தை அவருக்கு அனுப்ப “அதை என் கிட்ட கொடுங்க”, என்று கேட்ட மிதுன் அந்த போனை வாங்கி புகைப்படத்தைப் பார்த்தான். பார்த்ததும் அதிர்ந்து போனான்.

“நான் இவனைப் பாத்துருக்கேன்”, என்றான்.

அனைவரும் திகைப்பாக அவனைப் பார்க்க “அன்னைக்கு நம்ம சாப்பிட போனோம்ல அந்த ரெஸ்டாரன்ட்ல வச்சு நான் இவனைப் பாத்தேன். அந்த குணா கூட பேசிட்டு இருந்தான்”

“அன்னைக்கா?”

“ஆமா. நம்ம டேபிள்க்கு எதிர் டேபிள்ல தான் உக்காந்துருந்தான்”

“நான் அங்க தானே இருந்தேன்? நான் பாக்கலையே? சந்தேகப் படுற மாதிரி யாரையும் பாக்கலையே? தேடிப் பாத்தேனே? ஆனா அந்த அகில் அங்க இருந்து தான் எனக்கு போன் பண்ணினான். ஒரு வேளை நாங்க போன அப்புறம் வந்துருப்பானோ?”, என்றான் சத்யா.

“இல்லை இதுல ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கு. நீங்க கிளம்பும் போதும் அவன் அங்க தான் இருந்தான். ஆனா அப்ப அவனை நான் கவனிக்கலை. அந்த குணாவை பாத்த அப்புறம் தான் அகில் முகத்தை நான் நல்லா பாத்தேன். கண்டிப்பா இது அவன் தான்”

“இது எப்படி சாத்தியம்? அப்படின்னா நான் பாத்துருக்கணுமே?”

“இதை யோசிக்கிறதை விட எஸ்பி கிட்ட சொல்லி அங்க இருக்குற சிசிடிவி பாக்க சொல்றது நல்லது”, என்றார் குல்கர்னி.

ஒரு வழி கிடைத்ததும் யாரும் அமைதியாக இருக்க வில்லை. போலீஸ் இவர்களுக்கு பக்கபலமாக இருப்பதால் அங்கே சென்று அந்த சிசிடிவி பார்ப்பது அவ்வளவு கடினமாக இல்லை.

அது நடந்து சில நாட்கள் தான் ஆகிறது என்பதால் புட்டேஜ் தெளிவாக இருந்தது. ஆனால் அதைக் கண்டவர்கள் அதிர்ந்து தான் போனார்கள்.

ஏனென்றால் சத்யா மற்றும் வீணா இருவரும் வந்து அங்கே அமர்ந்த பிறகு தான் அகில் அங்கே வந்து அமர்ந்திருக்கிறான். தலையில் ஒரு தொப்பி அணிந்திருக்கிறான். ஆனால் அவன் முகம் வேறு மாதிரி இருந்தது.

“இது அகில் இல்லையே?”, என்றான் சத்யா.

“ஆமா இது அவன் இல்லை. ஆனா நான் அவனைப் பார்த்தேன், கொஞ்சம் ஓட விடுங்க”, என்றான் மிதுன்.

அதற்கு பின் சத்யா வீணா கிளம்பிச் சென்ற பின் அந்த ஆசாமி பாத்ரூம் செல்வதும் திரும்பி வரும் போது அகில் வேறு ஒரு ஆளாக வருவதும் தெளிவாக தெரிந்தது.

இப்போது அவன் தலையில் தொப்பியும் இல்லை. குணா அங்கே வந்ததும் உணவு அருந்தி விட்டு இருவரும் பேசிய படி கிளம்பிச் செல்வது வரை தெளிவாக இருந்தது.

அகில் அனைவரையும் முட்டாளாக ஆக்கி இருபது நன்கு தெரிந்தது. ஒரே ஆள் தான் ஆனால் ரெட்டை உருவம். அங்கே இருக்கும் பணியாளர்கள் இதைக் கவனிக்க வாய்ப்பு இல்லை என்று தெரிந்தே இதைச் செய்திருக்கிறான்.

ஏன்? எதற்கு? எப்படி? என்று பல கேள்விகள் அவர்களுக்குள். “நான் பாத்திருந்தா அவனைக் கண்டு பிடிச்சிருப்பேன்னு தான் அவன் முகத்தை மாத்திருக்கான். இன்னும் சொல்லப் போனா நானும் வீணாவும் அங்க வந்ததைப் பாத்து எங்களை மிரட்டி பயமுறுத்த தான் அவன் அங்க வந்துருக்கணும். நாங்க கிளம்பினதும் அவன் அவனுடைய உண்மையான முகத்துக்கு வந்துட்டான். அது மட்டும் இல்லாம மிதுன் அவனை கவனிக்க வாய்ப்பு இல்லைன்னு அவனுக்கு தெரியுமே. ஆனா குணாவை பாத்ததுனால தான் மிதுன் அவனைப் பாத்துருக்கான். இல்லைன்னா அகிலை மிதுன் கவனிக்க வாய்ப்பு இல்லை”, என்றான் சத்யா.

“கரெக்ட் இப்ப என்ன பண்ணுறது? அவனை எப்படி கண்டு பிடிக்க போறோம்?”, என்று கேட்டான் மிதுன்.

“கடைக்கு வெளியே இருக்குற சிசிடிவியையும் பார்க்கிங்லயும் பாருங்க. கொஞ்சம் ஓட விடுங்க. முதல்ல அவன் வந்ததை போடுங்க”, என்றார் எஸ்பி.

அதை போல அவர்கள் அதைப் போட சத்யா காரைப் பார்த்து தான் அகில் அங்கே வந்திருப்பது நன்கு தெரிந்தது.

பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு ஒரு ஐந்து நிமிடம் கழித்து தான் அகில் கடைக்கு வந்தான். அப்போது அவன் முகம் வேறு ஒருவனாக மாறி இருக்கிறது.

பின் மீண்டும் சத்யா அங்கிருந்து சென்ற பிறகு அவன் உண்மையான அடையாளத்துக்கு வந்தவன் போகும் பொது அந்த குணாவுடன் அகிலாக தான் காரில் ஏறிச் சென்றிருக்கிறான்.

அவன் ஏன் உடனே அப்படி மாற வேண்டும்? அப்படி மாற வேண்டும் என்றால் காரில் ஏறிய பிறகு கூட மாறியிருக்கலாமே என்றும் தோன்றியது.

சிசிடிவியை ஆராய்ந்ததில் ஒரு நல்ல விஷயம் வரும் போது சரியாக பதிவாகி இராத அகிலின் கார் போகும் போது தெளிவாக தெரிந்தது. அதன் நம்பர் பிளேட் கூட தெளிவாக தெரிந்தது. அதை வைத்து தேட ஆரம்பிக்க அந்த கார் ஓனர் பற்றிய தகவல் அனைத்தும் பொய்யானது என்று தெரிந்தது.

அடுத்த நொடி பரபரப்பாக வேலை ஆரம்பித்தது. ஆளைத் தேடுவதற்கு தான் தேவையில்லாத புரசிஜர் எல்லாம் உள்ளது. காருக்கு இல்லையே? கண்ட்ரோல் ரூமுக்கு அழைத்த எஸ்.பி கார் நம்பரை சொல்லி “இந்த நம்பர் கார்ல தான் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்துறதா ஒரு இன்பர்மேசன் வந்தது. புல்லா சர்ச் பண்ணுங்க”, என்று தகவல் கொடுத்து விட்டார்.

அந்த தேடுதல் வேட்டையில் உடனடியாக இல்லாமல் போனாலும் அடுத்த நான்கு மணி நேரத்தில் அகில் காரை சுற்றி வளைத்தது போலீஸ்.

இன்னும் ஐந்து நிமிடம் தாமதித்திருந்தாலும் அவனது கார் பாண்டிச்சேரி நோக்கிச் சென்றிருக்கும். தெய்வம் இவர்கள் உடன் இருந்ததோ என்னவோ? சரியாக சிக்கி விட்டான். அவனுடன் இருந்த குணாவும் தான்.

பிடிபட்டதும் அகிலுக்கும் குணாவுக்கும் ஒன்றுமே புரிய வில்லை. இது எப்படி சாத்தியம் என்று குழம்பித் தவித்தார்கள்.

“என்ன ஆச்சு சார்? இது எப்படி?”, என்றான் குணா.

“அமைதியா இரு. நீயா எதுவும் உளறாத. நம்ம மாட்ட வாய்ப்பு இல்லை. இது வேற ஏதாவது தேடுறதா கூட இருக்கும்”, என்றான்.

“வெளிய வாங்க ரெண்டு பேரும்”, என்று போலீஸ் சொன்னதும் இருவரும் வெளியே சென்றார்கள்.

“என்ன ஆச்சு சார்? எதுக்கு எங்களை பிடிக்கிறீங்க?”, என்று கேட்டான் அகில்.

“உங்க கார்ல போதை மருந்து இருக்குறதா எங்களுக்கு தகவல் வந்திருக்கு. உங்க காரை சோதனை போடணும்”, என்று சொல்ல அப்பாடி என்று இருந்தது இருவருக்கும்.

            “செக் பண்ணிக்கோங்க சார்”, என்றான் அகில். போலீசார் முழு சோதனை நடத்த காரில் இருந்து எதுவும் கிடைக்க வில்லை.

            உடனே எஸ்பியை அழைத்த இன்ஸ்பெக்டர் “கார்ல நம்ம சந்தேகப் படுற மாதிரி எதுவும் இல்லை சார். காரை விட்டுறவா? பாக்க பெரிய ஆள் மாதிரி இருக்கான் சார். எதுவும் பிரச்சனை வரப் போகுது”, என்றார்.

            “உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன? நான் தேடுற குற்றவாளியே அவன் தான். அவனை எப்படியாவது நாங்க வர வரைக்கும் அங்க நிறுத்தி வைங்க. சும்மா வம்பு இழுத்து கூட நிப்பாட்டி வைங்க. நாங்க இன்னும் முக்கா மணி நேரத்துல வந்துருவோம்”, என்றார்.

            இன்ஸ்பெக்டர் என்ன செய்ய என்று யோசித்துக் கொண்டிருக்க “சார் நாங்க கிளம்பலாமா? கார் சாவி தாங்க? செக் பண்ணிட்டீங்க தானே? நாங்க போகணும்”, என்றான் சத்யா.

            “இரு யா? எங்க அவ்வளவு அவசரமாக போக போற? என்ன வெட்டி முறிக்கிற வேலை?”, என்று கேட்டார் அந்த இன்ஸ்பெக்டர்.

“சார் என்ன மரியாதை தேயுது? ஒழுங்கா பேசுங்க”, என்றான் குணா.

            “ஓஹோ சார்க்கு மரியாதை வேற கொடுக்கணுமோ? மாலை வேணும்னா வாங்கிட்டு வரவா? எங்க இஷ்டத்துக்கு தான் விடுவோம். உன்னால முடிஞ்சதை செய்”, என்ற இன்ஸ்பெக்டர் மத்த காரை விடுங்க”, என்று சொல்லி விட்டு அகிலுடைய கார் சாவியை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சென்று விட்டார்.

            “இப்ப என்ன சார் பண்ணுறது? இவங்க வேணும்னு பண்ணுற மாதிரி இருக்கு”, என்றான் குணா.

“எனக்கும் அது தான் தோணுது. எங்கயோ தடையத்தை தவற விட்டுட்டேன்”

“அப்படி எங்கயும் நீங்க முகமூடி இல்லாம வர மாட்டீங்களே? இப்ப கூட போட்டுருக்கீங்களே”, என்று குணா சொன்னதும் தான் பொறி தட்டியது.