“சாப்பிட்டேனே. ஏன் நீ சாப்பிடலையா” என்று சக்தி கேட்க,
“பாட்டி, தேனு, வெற்றி, வேல்விழி யாரும் இன்னும் சாப்பிடல” என்றாள் தகவலாக.
“ஏன்” என்று சக்தி அதிர்ச்சி காட்ட,
“எல்லாருக்கும் மொத்தமா பசிக்கலையாம்”
“ஏய்… விளையாடாம சொல்லு. என்ன நடந்தது?” என்று சக்தி அதட்ட, அவனை முறைத்தபடியே நடந்தது மொத்தமும் சொல்லி முடித்தாள் அவள்.
“கொஞ்சம் கோபம் இருக்கும் தானே. அவன் செஞ்சது பெரிய விஷயம். உடனே மாறணும்னு எல்லாம் எதிர்பார்க்க முடியாது இல்ல,” என்று சக்தி நிதர்சனம் பேச, மனைவி தலையாட்டிக் கொண்டாள்.
“நீ போய் சாப்பிட கூப்பிடு.” என்று மனைவிக்கு வேலை கொடுக்க,
“எதுக்கு… அப்புறம் நீங்க என்னை பேசவா. வேண்டாம் சாமி. நான் இனி வாய் திறக்கிறதா இல்ல” என்றாள் மனைவி.
“மீனு” என்று கணவன் அதட்ட,
“எனக்கு உங்க சோறே வேண்டாம் மாமா. ஆனா, என்னை இதுக்குள்ள இழுத்து விடாதீங்க. கண்டிப்பா நான் யாரையும் கூப்பிடமாட்டேன். ஏற்கனவே என் மாமியார் என்னை முறைச்சுட்டு இருக்காங்க. இப்போ இதுவும் சேர்ந்தா, நான் தான் பேச்சு வாங்குவேன்” என்றவள் அமைதியாக கட்டிலில் படுத்து விட்டாள்.
‘அவள் நகரமாட்டாள்‘ என்று புரிந்துவிட, சக்தி அறையை விட்டு வெளியே வந்தான். வெற்றியின் அறைக்கதவை தட்டப் போனவன் கடைசி நொடியில் நின்றுவிட்டான். வேண்டாம் என்று திரும்பி கீழே பாட்டியின் அறைக்கு வந்தவன், “ஏன் பாட்டி சாப்பிடல?” என்று ஆரம்பிக்க, சொக்கநாதர் பேரனை பாவமாக பார்த்தார்.
மனோன்மணி அப்போது தான் அவருக்கான பூஜையை முடித்திருக்க, தானே வந்து சிக்கி கொள்ளும் பேரனைத் தான் பார்த்திருந்தார் சொக்கநாதர்.
“நீயும் உன் தாத்தனும் சாப்பிட்டு முடிச்சிட்டீங்க இல்ல கண்ணு. அதுவே இந்த கிழவிக்கு வயிறு நிறைஞ்சு போச்சு” என்றார் மனோன்மணி.
“ம்ச்… என்ன பாட்டி”
“பின்ன என்னடா? என்ன செஞ்சுட்டான் என் பேரன்? ஆசைப்பட்டவளை கட்டிக்கிட்டான். இது ஒரு குத்தமா?” என்றவர், பேரனின் முறைப்பில், “சரி… உங்ககிட்ட சொல்லாம செஞ்சது தப்பு தான். அதுக்காக தானே இத்தனை நாள் அவனை ஒதுக்கி வச்சது. இன்னைக்கு நான் கூப்பிட்டு தானே என் பேரன் என் வீட்டுக்கு வந்தான். அவனுக்கு ஒரு வாய் சோறு போட இந்த வீட்ல ஆள் இருக்கா. அவ என்ன சொத்துக்கு வழி இல்லாமலா இங்கே வந்தான். எனக்காக வந்தான்டா. உன் அம்மாவுக்கு அப்படி என்னடா கோபம்? அதுக்கு மேல உன் அப்பன். அம்மான்னு என்கிட்டே வரட்டும் அவன். என் பேரனை அவன் பொண்டாட்டி துரத்தின மாதிரி, இவனை நான் விரட்டுறேன்” என்றவர் கலங்கிவிட்ட கண்களை துடைத்துக் கொண்டார்.
“அழாத பாட்டி” என்று சக்தி அவரை சமாளிக்கப் பார்க்க,
“என் பேரனை ரொம்ப அழ வைக்கிறீங்கடா நீங்க. இது எல்லாம் சரி இல்ல சொல்லிட்டேன். நீயும் தான் என்ன? வந்தவன் அவன் என்ன செய்றான்? என்ன எதுன்னு ஒரு வார்த்தை கேட்டியா?” என்று சக்தி மீதும் குற்றம் சொல்ல,
“நீ உன் பேரனை சாப்பிட வைக்க வேண்டியது தானே?” என்றான் பேரன்.
“அழுதுட்டே போயிட்டான் சக்தி. மனசே ஆறலய்யா எனக்கு” என்று பேரனை நினைத்து கண்ணீர் வடிக்க ஆரம்பித்தார் மனோன்மணி.
சக்தி ஒரு வழியாக அவரை கொஞ்சி, கெஞ்சி சமாளித்தவன் சுந்தரவடிவை சென்று பார்க்க, அவரும் கண்ணீருடன் தான் படுத்திருந்தார்.
“ம்மா” என்று மகன் அழைக்க,
“வாப்பா” என்று எழுந்து அமர்ந்தார்.
தந்தையும் அந்த அறையில் இருக்க, “என்னம்மா” என்று அவர் அருகில் அமர்ந்தான் மகன்.
“என்னால முடியல சக்தி. அவன் பண்ணதை அத்தனை சுலபமா மறக்க முடியல” என்று அழுதார் அவர்.
“அதுக்கு ஏன்மா அழுதுட்டு இருக்கீங்க. விடுங்க… என்ன? அவனை மறுபடியும் வெளியே அனுப்பிடவா? அங்கே தோட்டத்து வீட்டுக்கே போக சொல்லிடவா?” என்றான் சக்தி.
“வேண்டாம் வேண்டாம்” என்று வேகமாக சொல்லிவிட்டவர், “உன் பாட்டி தாங்கமாட்டாங்க சக்தி. விடு” என, அவரை மெல்லிய சிரிப்புடன் பார்த்து வைத்தான் மகன்.
“அவனை விட்டு கொடுக்கவும் முடியல. விட்டுடவும் முடியல சக்தி என்னால” என்று மகனின் கைபிடித்து அழுதுவிட்டார் வடிவு.
“ம்மா. போனதெல்லாம் போகட்டுமேம்மா. இந்த நிமிஷத்தை பாருங்க. அவன் மேல கோபம் இருக்கத்தான் செய்யும். நான் கோபப்பட வேண்டாம்னு சொல்லலையே. ரெண்டு அடி அடிங்க, திட்டுங்க. உங்களுக்கு எல்லாத்துக்கும் உரிமை இருக்கும்மா. ஆனா, ஒரே வீட்டுக்குள்ள இப்படி பேசமா இருந்தா, அவன் தாங்க மாட்டான்மா.”
“உங்களுக்கு அவனை எவ்வளவு பிடிக்கும்னு எனக்கு தெரியும். அவன் மேல ரொம்ப கோபமா இருந்த நேரத்துல கூட, உங்களை யோசிச்சு தான் அவனை தோட்டத்து வீட்ல தங்கவச்சேன். அவனுக்கு வேண்டியது எல்லாம் பண்ணி கொடுத்தேன்.”
“இப்போ நம்ம வீட்லயே இருக்கான். ஆனா, பசியோட இருக்கான்ம்மா. அவன் பசி தாங்க மாட்டான். உங்களுக்கு தெரியாதா? நீங்க இப்படி அவனை விட்டுடுவீங்களாம்மா. யோசிங்க. உங்களால இது முடியுமா?” என்று கேட்டவன் அதற்குமேல் எதுவும் பேசாமல் எழுந்து கொண்டான்.
தங்கவேலுவுக்கும் கண்கள் கலங்கி இருக்க, அவரையும் அணைத்து விடுவித்தவன் தனது அறைக்கு வந்து படுத்துவிட்டான்.
மீனுவுக்கு என்ன நடந்தது என்று கேட்கும் ஆவல் தான்.
ஆனால், நிச்சயம் பதில் சொல்லமாட்டேன் என்று புரிய, அமைதியாக படுத்திருந்தாள் அவள்.
ஆனால், சக்தி அப்படியில்லையே. மனதில் இருந்த பாரம் எல்லாம் இறங்கியது போல் இருந்தான் அவன். எப்படியும் வடிவு அவர்களை உண்ண வைத்து விடுவார் என்பது தெரியும் அவனுக்கு. எனவே, அதை குறித்து அவன் கவலையை விட்டுவிட்டான்.
அருகில் படுத்திருந்த மனைவி அவன் எண்ணத்தை ஆக்கிரமிக்க தொடங்க, படுத்திருந்த இடத்தில் இருந்து புரண்டவன் ஒரே நொடியில் அவளை அள்ளி தன்மீது போட்டுக் கொண்டான்.
“அயையோ” என்று கத்தி விட்டவள், அதன்பிறகே, “விடுங்க மாமா” என்று விலகப் பார்த்தாள்.
“ஏன் விடணும்?” என்று கேள்வி கேட்டவன், அவள் சுடிதாரின் இடைவெளியில் கையை நுழைத்து அவள் இடையை பற்றிக் கொள்ள,
“என்ன பண்றிங்க நீங்க. நான் கோபமா இருக்கேன் விடுங்க” என,
“நீ கோபமாவே இரு அம்மு. மாமா உன் கோபத்தை குறைக்கிறேன்” என்று கையை அவள் உடலில் அலையவிட,
“கொன்னுடுவேன் மாமா உங்களை” என்று அவனை தடுக்கப் பார்த்தாள் அவள்.
அவள் முயற்சியில் கடுப்பானவன், பட்டென அவளை கீழே தள்ளி, அவள்மீது அழுத்தமாக படிந்து விட்டான்.
“மாமா”
“மாமா தான்” என, மீனு முறைக்க,
“என்ன தங்கம்.” என்றவன் அவள் நெற்றியில், கண்களில், கன்னத்தில் என்று முத்தமிட தொடங்க,
“அன்னைக்கு அடிக்க வந்தீங்க இல்ல. இப்போ மட்டும் என்ன?” என்று அவள் முகம் திருப்ப, அவள் தன்னைப் பார்க்கும்படி திருப்பியவன், அழகாக அவள் இதழ்களை கொள்ளை கொண்டான்.
மீனு அதன்பின் பேச்சை மறந்துவிட, சில நிமிடங்கள் நீண்டது அந்த ஆழ்ந்த முத்தம்.
முத்தத்தின் முடிவில், தன் கன்னங்களை அவள் உதட்டின் மீது அழுத்தமாக புரட்டி எடுத்தவன், அவள் திணறலில் அவளது கன்னத்தை அழுத்தமாக கடித்துக் கொண்டான்.
“மாமா” என்று மீனு முனக, “உன் மாமன்தான்டி” என்றவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து, அவள் ஆடையை விடுவிக்க, “மாமா” என்றாள் மீண்டும்.
சக்தியை அவளது ‘மாமா‘ மேலும் போதையேற்ற, அதற்குமேல் தாங்காமல் அவளை முழுதாக கொள்ளையிடும் வேலையில் இறங்கிவிட்டான் சக்தி.
அவன் கொள்ளையிட்டு முடித்த நேரம், மாலை கவிழ்ந்து இரவு ஏறியிருக்க, மூச்சு வாங்கியபடி அவன் அருகில் கிடந்தது அவன் புதையல்.
அள்ள அள்ள குறையாத அவன் பொக்கிஷம்.
சக்திக்கு அவளை விடும் எண்ணமே இல்லாமல் மீண்டும் அவள்மீது படிய. “ஐயோ மாமா.. பசிக்குது எனக்கு” என்றாள் மனைவி.
“போடி” என்று அலுப்புடன் அவளை விடுவித்தவன், “சரி வா.. குளிச்சுட்டு சாப்பிட போவோம்” என்று அவளை அழைக்க, “ரெண்டு பேருமா” என்று சிரித்தாள் மனைவி.
“ஆமா”
“உங்களோட குளிக்க வந்தா மருமடியும் விடிஞ்சிடும் மாமா. விடுங்க என்னை” என்று அவனிடம் இருந்து விடுபட்டு ஓடிவிட்டாள் மனையாள். சக்தியின் முகத்தில் அழகான புன்னகை ஒன்று குடிகொண்டது அவள் பேச்சில்.