பிடித்த உணவுகள் வழமையில் இடம்பெறுவது எதர்ச்சையாக வந்ததில்லை, கவனம் எடுத்து தனக்காக மனைவி செய்திருக்கிறாள். அதுவும் பத்மாவின் உணவு கோரிக்கைளை கருத்தில் கொண்டு மற்றவர்களின் பிடித்ததையும் கணக்கில் எடுத்து அவர்கள் விடுபடாமல் இருப்பது போல் சமாளித்து வந்திருக்கிறாள். தலை சுற்றியது. உலுக்கிக்கொண்டான். சண்டை முடிவது போல் தெரியவில்லை, குரல் உயர்த்திவிட்டான்.

“எனக்கு புடிச்சதை சாப்புடுற நிலைமைலயா நான் இருக்கேன். கசகசன்னு சண்டை போடாம என்னத்தையாச்சு செய்யுங்க.” என்று கடுகடுத்து நகரப் போக, அவனை அப்பொழுதுதான் கவனித்தான் போல செழியன்.

“எழுந்துட்டியா நீ?” என கேட்டுக்கொண்டே வர, உச்சுக்கொட்டி பின்புறம் சென்றான் மகிழ்நன். செழியனும் மனைவிக்கு கண்காட்டிவிட்டு தம்பியை பின்தொடர்ந்தான். 

“என்னமோ கோவம் நம்மளை பேசிட்டால்ல அதோட விடவேண்டியதுதான. எதுக்கு இப்போ அம்மா வீட்ல போய் உக்காரனும். மகிழ் முகமே சரியில்லை.” சமுத்திராவை பேசியவர், “இந்தா நாளைக்கு நீயும் என்னத்தையாச்சும் பேசாத, எதுனாலும் சொல்லிடுங்க சொல்லிப்புட்டேன்.”

“அதுதான் சொல்றேன், குருமா நைட் வைக்குறேன்.” என்று நன்மதி அதிலேயே நிற்க,

“என்னமோ உங்க விருப்பத்துக்கே பண்ணுங்க.” என்றுவிட்டார் பத்மா.

நன்மதி கண்டுகொள்ளவே இல்லை. வேலையில் கவனமாகிவிட்டாள்.

“என்னாச்சுடா? சமு இன்னும் கோவமா இருக்கா?” என்று வந்த செழியனை ஒருபார்வை பார்த்துவிட்டு முகம் திருப்பினான் மகிழ்நன்.

“என்னடா?”

“நேத்தி அண்ணி சமுவை பார்க்க போனாங்களாம்.” என்ற மகிழ்நனை தவிர்ப்பது இப்போது செழியன் முறை.

இருவரும் அருகருகே எதிர் இருந்த மரங்களை பார்த்தபடி நின்றனர்.

“மதிக்கு சங்கடமாகிட்டு, பாத்துட்டு வரேன்னு சொல்லிட்டுதான் போனா.” என்றான் செழியன். நன்மதி பகிர்ந்துகொண்ட விஷயத்தை சமுத்திரா மகிழ்நனிடம் பகிர்ந்துகொண்டாளா தெரியாது, அதை பற்றி தம்பி தன்னிடம் கேட்க வாய்ப்புண்டா தானும் தன் பங்குக்கு சொல்ல வேண்டுமே என்று செழியன் யோசித்து நிற்க, 

“இந்த லேடீஸ் ப்ராப்லம் சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம் போல. எப்படி சமாளிக்குற நீ?” தம்பிக்காரன் யோசனை கேட்டான்.

பட்டென்று சிரித்துவிட்டான் செழியன். மகிழ் திரும்பிப் பார்த்து முறைக்க, 

“ரொம்ப லேட்டா கேக்குற.” என்றான் செழியன் குறையாத புன்னகையோடு.

“பொறுப்பான அண்ணனா இதெல்லாம் நீ எனக்கு முன்னாடியே சொல்லிக் கொடுத்திருக்கணும்.” முகம் சிறுக்க, சிணுங்கலுடன் சொன்னான் சின்னவன்.

“எது? மாமியார் மருமகள் சண்டையை சமாளிப்பது எப்படின்னா?” செழியன் இலகுவாக கேட்க, உச்சு கொட்டி முகம் இறுக நின்றான் மகிழ்நன். 

“ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரிடா. நீயும் நானுமே வெவ்வேற குணம். அப்புறம் எப்படி எனக்கு வந்த பாட்னர வச்சி உனக்கு அட்வைஸ் கொடுக்க முடியும்.” என்று செழியன் சொன்னது முகத்தில் அறைந்தது போல் இருந்தது.

அண்ணி குடும்பத்துடன் ஒத்துப்போகவில்லை நீ அப்படி இருந்துவிடாதே என்று மனைவியை ஆரம்பத்திலேயே முடக்கிவிட்டோமோ. எல்லாம் தாமதமாகப் புரிகிறது.

“உனக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு நானும் ஒன்னும் அவ்வளவு அண்டர்ஸ்டாங்டிங் எல்லாம் இல்லை. ஆரம்பத்துல குடும்பத்துல சலசலப்பு வரக்கூடாதுன்னு மதியை பணிஞ்சி போக சொல்லியிருக்கேன். எப்போ குழந்தைக்குனு நாங்க ஹாஸ்பிடல் போக ஆரம்பிச்சோமோ அப்போ மாறுச்சு எல்லாம். மதியை புரிஞ்சிது, பொண்ணுங்க கஷ்டம் புரிஞ்சிது. நம்ம அனுசரணை, அக்கறை எவ்வளவு முக்கியம்னு உணர்ந்து தெரிஞ்சிகிட்டேன். என்னோட கஷ்டம் வேற மாதிரி, அதை வச்சி நான் என்ன சொல்ல முடியும்? சின்னதுலேந்து என்னை விட நீதான் விவரமா பொறுப்பா இருப்ப. நான் என்ன உனக்கு சொல்றதுன்னு இருந்துட்டேன்.

மதியை பாத்துகிட்ட அளவுக்கு நானுமே வீட்டை கவனிச்சிருக்கணும். வேலைக்கு போறது வர்றதுன்னு மட்டும் இருந்திருக்ககூடாது. நீ பாத்துப்பேன்னு நான் மதிக்கிட்ட அதிக கவனமா இருந்துட்டேன். லேடீஸ் விஷயம் நமக்கு என்ன தெரியும்னு அலட்சியம் வேற.” என்ற செழியனிடமும் வருத்தம் தெரிந்தது.

உச்சு கொட்டி பிடரி முடியை வலிக்க இழுத்துவிட்டுக்கொண்டான் மகிழ்நன். 

“இன்னும் ஏன் போய் பாக்காம இருக்க நீ?” அதுவரை இலகுவாக பேசிக்கொண்டிருந்த செழியனின் குரல் கடுமை ஏறியது போலிருந்தது.

“போகணும்.” வெறுமையாய் சொன்னவன் தோளில் ஒரு தட்டு தட்டினான் செழியன்.

“என்ன மாடுலேஷன் இது? லீவ் போட்டுட்டு மறுநாளே அங்க போய் டேரா போட்டிருக்கணும் நீ.”

“உடனே போய் அவளை மூச்சுவிட முடியாம செய்யணுமா? போவோம், அவ இல்லாம என்ன வாழ்ந்துடப் போறேன்.” அடர்த்தியாக சொன்ன மகிழ்நனின் குரலில் உணர்ச்சிப்பிரவாகங்கள்.

“ஏண்டா இப்படி?”

“கல்யாணத்துக்கு முன்னாடி என்னனாலும் பொதுவா பேசுவோம், வாங்கிட்டு வந்தா பொதுவா கொடுப்போம், மரமண்டையா கல்யாணத்துக்கு அப்புறமும் அப்படியே இருந்துட்டேன் நான். அம்மாகிட்ட இருக்குற மாதிரியே பொண்டாட்டிகிட்ட இருந்திருக்ககூடாது.” படபடவென நெற்றில் அடித்துக்கொள்ள, பயந்துபோய் அவனை தடுத்தான் செழியன்.

“லூசு மாதிரி என்னடா பண்ற நீ?”

“ப்ச், விடு. சட்டையை புடிச்சி அவ கேக்குற வரைக்கும்… ப்ச்…” அண்ணனை நேர்கொண்டு பார்க்க முடியாமல் அவனுக்கு முதுகு காட்டி திரும்பினான் மகிழ்நன்.

“பெரியத்தைக்கு நாளைக்கு சீர் வைக்க போறாங்க, நீ எப்போ சமுவை வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன்னு அப்பா கேட்டாங்க. உன்னை எதுவும் கேக்க கூடாது அவங்கவங்க போக்குல விடுங்கனு சொல்லிட்டேன். சின்னத்தைக்கு சீர் வைக்க நீ போறேன்னு சொன்னீல்ல. இது ஒரு நல்ல சான்ஸ் சமுவை கூட்டிட்டு போய்ட்டு வா. உன் பைக்ல போயிட்டு வாங்க ஒரு சேஞ்சா இருக்கும்.”

“அவ்ளோ தூரம் பாப்பாவை வச்சிக்கிட்டு பைக்ல?”

“இப்போதான் பைபாஸ் போட்டாங்களேடா. இங்க இருக்குற திருச்சிக்கு இரண்டுமணி நேரத்துல போயிடலாம். சமு வீட்லேந்து ஒருமணி நேரம்தான். கூட்டிட்டு போய் அப்படியே சமாதானம் செஞ்சிடு.” என அண்ணன்காரன் யோசனை கொடுக்க, அது சரிவராது என மறுத்தான் மகிழ்நன். சீர் வைக்க செல்வது குறித்து நீங்களாக முடிவெடுத்துவிட்டீர்கள் என்று சமுத்திரா அழுத அழுகையும் அவளது அதிருப்தியும் அவள் வருவாள் என்ற நம்பிக்கையை கொடுக்கவில்லை. 

“சரி அங்க போகலைனா என்ன இப்போ வேற எங்கேயும் அழைச்சிட்டு போ. வருத்தப்பட்டு போயிடுச்சுனு நீயும் வருத்தப்பட்டுக்கிட்டு இங்கேயே எவ்வளவு நாள் சுத்துவ?”

“அவ்வளவு கஷ்டப்படுத்திட்டு உடனே கூப்பிட முடியல. எந்த முகத்தை வச்சிக்கிட்டு போக சொல்லு. நிறைய எதிர்பாக்குறா, அதை சரியா புரிஞ்சிக்குறேனா இல்லையான்னு கூட எனக்குத் தெரியல.”

“ஒதுங்கியே இருந்துட்டா புரிதல் வராதுடா. பேச பேச, சண்டை போட போட, அந்த சண்டையில அடி வாங்கி சட்டை கிழிய கிழிய தான் புரிதல் வரும். அடிவிழும்னு முத ஸ்டெப்லேயே பேக் அடிச்சிட்டா பின்விளைவுகள் விபரீதமா இருக்கும்.” என சொல்லிக்கொண்டிருக்கையில் பத்மாவின் குரலில் செழியன் உள்ளே சென்றான்.

சில நிமிடங்கள் அங்கேயே நின்று யோசித்தவன் வங்கிக்கு கிளம்பி சென்றபின் மனைவிக்கு அழைக்க, அவள் சாதாரணமாக பொதுவான விஷயங்கள் மட்டும் பேசினாள். உண்டது, உறங்கியது, அவனது வேலை நேரம், உமையாள் விளையாடியது என்பது போன்ற பேச்சுக்கள்தான் இடம்பெற்றன. 

முந்தைய நாள் பேசியது போல் கசப்புகளின் சாயல் கூடயின்றிய பேச்சுக்களில் மருந்துக்கும் உயிர்ப்போ இணக்கமோ இல்லை. அதற்கு மேல் அவனுக்கும் தாக்குப்பிடிக்க முடியும் என்று தோன்றவில்லை. விடுமுறை எடுத்துக்கொண்டு செல்லலாம் என்று நினைக்கும் சமயம் வங்கிப் பணியாளர்களின் போராட்டம் குறித்த கூட்டம் இருப்பதாகவும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்றும் வங்கி தொழிலாளர்கள் கூட்டமைப்பிலிருந்து தகவல் வந்தது.

என்னடா இது தலைவலி என்று மண்டையைப் பிடித்தான் மகிழ்நன். என்னவோ முதல் முறை அந்த கூட்டத்திற்கு செல்வது போல் ஒரு எரிச்சல். சில மாதங்களாகவே போராட்டம் குறித்த பேச்சுகளும் இரகசிய கூட்டங்களும் சில சலசலப்புகளும் எழுந்த வண்ணம் இருந்தது. அதில் இவனுடன் பணிபுரியும் சிலர் அந்த சங்கத்திற்கு எதிராகவும் கொடி பிடித்தனர். அவர்களை சங்கத்திற்கு ஆதரவாக பேச வைக்கும்படி இவனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட அதையெல்லாம் எளிதாக சமாளித்தவன்தான். இன்று குடும்பப் பிரச்சனையும் சேர்ந்துகொள்ள வேலையில் முழுதாக ஈடுபட முடியவில்லை. அவனுக்கே புரிந்தது அவனுக்கு கீழ் பணிபுரியும் யாரேனும் சிறு தவறு செய்துவிட்டாலும் அவர்களை கடித்துக் குதறாதது தான் குறை என. 

இத்தனை நாள் மனநிம்மதியுடனும் புத்துணர்ச்சியுடனும் வேலை செய்தது தன் ஒருவனின் புத்திசாலித்தனத்தினாலோ மனக்கட்டுப்பாட்டாலோ அல்ல, முழுக்க முழுக்க வீட்டினில் தன்னை அமைதியாக வைத்துக்கொண்ட சமுத்திராவால் தான் அது முடிந்தது என பளிச்சென்று புரிந்தது. புரிந்த நொடி தலைக்கு கையை முட்டுக்கொடுத்து கண்களை மூடி அமர்ந்துவிட்டான். 

பெண் என்பவள் வீட்டின் சமையலறை, சாமியறை, படுக்கையறை, அனைவர் கூடும் அறை என அனைத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்து சமைப்பது, சுத்தம் செய்வது, துவைப்பது, உலர்த்துவது, உணர்த்துவது எல்லாமே அக்குடும்பத்தினரை கவனம் சிதறவிடாது ஒருவழிப்பாதையில் செலுத்தும். அவள் மகிழ்வாக இருந்தால் குடும்பம் மகிழ்வுறும், அவள் அழுதாள் குடும்பம் சூனியமாகும், அவள் படுத்துவிட்டாள் குடும்பமே நொடிந்துவிடும். அதை உணர்ந்துகொள்ளும் ஆண்கள்தான் வெகு சிலராகிப் போனது சமூகத்தின் தவறான கட்டமைப்புக்கு உதாரணம். 

வேண்டாவெறுப்பாக வங்கி வேலைகள் எல்லாம் முடித்துக்கொண்டு மேலும் இரண்டு நாள் கழித்தே மனைவியை தேடிச் சென்றான் மகிழ்நன். வெறுங்கையோடு கிளம்பியவன் அவள் ஊரை நெருங்கும் சமயம் சாலையோரத்தில் தோட்டத்துப்பழங்கள் என விற்கப்பட்டுக்கொண்டிருந்த நாட்டுப்பழங்களை வாங்கிக்கொண்டு சென்றான். 

அவள் அம்மா வீட்டில் இருக்கும் சமயம் எப்போது இவன் சென்றாலும் வாசல் தேடி வந்து ஆர்வமாக வரவேற்கும் மனைவி இன்று இல்லை. எதிர்பார்க்கவில்லை என்று சொல்லிக்கொண்டாலும் சின்ன ஏமாற்றம்தான். விழிகள் அவளை தேடிக்கொள்ள கால்கள் தன்னால் செருப்பை வெளியே விட்டு உள்ளே நடந்தது.

கலைவாணி பார்த்துவிட்டு ஆர்ப்பாட்டமாக வரவேற்றார். இவனுக்கு சங்கடமாக இருந்தது. தீபாவளி வரிசை வைக்க வந்த போது நேரடியாக மோதிக்கொள்ளவில்லை அவ்வளவுதான், மற்றபடி மாற்றி மாற்றி பேசிக்கொண்டனரே. அந்த தயக்கத்துடன் இப்போது சமுத்திரா மனக்கசப்போடு வந்ததும் சேர்ந்துகொள்ள மாமியாரை நேர்கொண்டுப் பார்க்கவே யோசித்தான். அவருக்கு அதெல்லாம் இல்லை.

“முன்னாடியே வருவீங்கன்னு நினைச்சேன்.” என சொல்லிக்கொண்டே மகளை அழைக்க, பின்னிருந்து வந்தாள் சமுத்திரா. 

அவள் கைப்பிடித்து வந்த மகள் தகப்பனை பார்த்ததும் அவனிடம் ஓடிவர, சிரிப்புடன் அவளை அள்ளிக்கொண்டவன் மனைவியைப் பார்த்தான். வெகு நிதானமாக அவர்களிடம் வந்தாள் சமுத்திரா. அருகில் வரவும் இவன் வாங்கி வந்த பழங்களை அவளிடம் நீட்ட,

“அம்மா வாங்கிக்க.” என்று அவள் நகர்ந்துகொள்ள, இவன் முகம் சுருங்கியது. 

இவள்தானே வாங்கி வருவதை கையில் கொடுக்கக்கூட வலிக்கிறது உங்களுக்கு என்று சண்டைபோட்டாள். இப்போது கொடுத்தால் வாங்காமல் அம்மாவை கைகாட்டுகிறாள் என்று பார்க்க, அவள் முகத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

‘இவள் என் சமு இல்லை.’ அவன் மனம் அடித்துக் கூறியது.