நன்மதி வந்து பேசிவிட்டு சென்ற இரவு மகிழ்நன் மனைவியை அலைபேசியில் அழைத்தான். முன்பு போலவே அழைப்புகளில் இவன் பேச்சுக்கள் அதிகமிருந்தாலும் பதில்கள் என்று வரும்போது ஒருவித குழைவோடு வரும் சமுத்திராவின் குரல், அதில் பெரிய மாற்றத்தை கண்டான் மகிழ்நன். எப்பொழுதும் மனைவியின் குரலில் இருக்கும் இணக்கம் இப்போதில்லை, கேட்டால் கேட்டதற்கு பதில் என விலக்கி நிறுத்துகிறாள். தளராது இவனும் அழைக்கிறான், பேசுகிறான் ஆனாலும் அதில் பொதுவான பேச்சுக்கள்தான் அடக்கம். என்னவோ தங்களுக்கு இடையில் குறைகிறது என மெல்ல உணரத் துவங்கிய சமயம், அடுத்து பேச எதுவுமே இல்லையா என்று திகைத்து நிற்கும் நாழிகைகளும் வந்தது.
சமுத்திராவுக்கோ நன்மதி வந்து சென்றதை சொல்வோமா வேண்டாமா என்ற யோசனை. குடும்பத்தில் வெளிப்படையாக சொல்ல முடியாமல்தான் அவர்களே இத்தனை நாள் வீட்டில் எதையும் காட்டிக்கொள்ளாமல் இருக்கின்றனர். தன்னை நம்பி சொன்ன அவர்களின் தனிப்பட்ட விஷயத்தை பகிர்ந்து கொள்வதா என்ற குழப்பத்திற்கு அவள் மனமே வழி காட்டியது.
சமுத்திரா மதி பேசிச் சென்றதை மேலோட்டமாக சொல்ல, நம்ப முடியாமல் விழித்தான் மகிழ்நன்.
“அவங்களா இவ்ளோ பேசுனாங்க? நிஜமாவே இதெல்லாம் சொன்னாங்களா?” அவன் குரலில் இருந்த நம்பிக்கையற்ற தன்மையில் எரிச்சலுற்றவளாய்,
“நான் எதுக்கு பொய் சொல்லணும்? அவங்களுக்கு எவ்வளவு அக்கறை இருந்திருந்தா இப்படி கிளம்பி வந்து பேசிட்டு போவாங்க? வரவேண்டியவங்களே வராதப்போ அவங்க வரணும்னு என்ன இருக்கு?” பேச்சினூடே குத்த, இவனுக்கு தலை சுற்றியது.
“சமு…”
“அவங்க தரப்பை சொல்லிட்டு போயிட்டாங்க, கடைசியில நான் அமைதியா எல்லாத்தையும் அனுசரிச்சு போனது தப்புங்குற மாதிரி ஆகிடுச்சு. இப்போ உங்களுக்கு ஓகேவாங்க?”
“சமு?”
“நீங்கதான் அவங்ககிட்ட பாத்து இருந்துக்கோன்னீங்க, அத்தை வார்த்தைக்கு வார்த்தை வேற மாதிரி சொன்னாங்க. கடைசியில மதி அக்கா ஒன்னு சொல்றாங்க. அவங்களும் பாவம்தான். என்கிட்ட எல்லாரும் அரட்டுறீங்கல்ல அதேமாதிரி மதி அக்கா அந்த வீட்டுக்கு வந்தப்போவே நீங்க எல்லாம் என்ன பிரச்சனைன்னு பார்த்து சரி பண்ணி இருந்தீங்கன்னா இன்னைக்கு நானும் இப்படி இருந்திருக்க மாட்டேன்.”
“சமு, இதெல்லாம் எனக்குத் தெரியாதுடி.” பேச அவகாசமே கிடைக்காது என்பது போல் சமு விட்ட இடைவெளியில் ஒரு வாக்கியத்தை வெற்றிகரமாக இடைசொருகிவிட்டான் மகிழ்நன்.
“என்னதான் தெரியுங்க உங்களுக்கு?”
“நான் அவ்வளவா கவனிச்சது இல்லை.” அவன் குரல் உள்ளே சென்றுவிட்டது.
“உண்மையா இருக்குறது அதுஇதுனு எல்லாம் பேசுற? நான் அப்படி…” என சொல்ல வந்தவனால் பேச்சுக்கு கூட நான் அப்படி இல்லை என சொல்ல முடியவில்லை. ஆகப்பெறும் விஷயமாக மனைவிக்கு சொல்லாமல் நகைக்கு பணம் கொடுத்ததே முன்னால் வந்து நிற்க பட்டென்று வாயை மூடிக்கொண்டான். இதுபோன்று பேச முடியாமல் போகும் என்று கனவிலும் எண்ணியதில்லை அவன். எல்லாம் புதிதாக இருந்தது.
அவன் சொல்ல வந்ததை கண்டுகொண்ட மனைவியிடம் வெற்றுச்சிரிப்பு, “இந்த விஷயம் உங்களுக்கு முன்னாடியே கூட தெரிஞ்சிருக்கும். உங்க அண்ணன் சொல்லியிருப்பாங்க, இவளுக்கு எதுக்கு சொல்லணும்னு இருந்திருப்பீங்க நீங்க.”
“ஹேய் சமு, அதெல்லாம் இல்லை. நீ சொல்லித்தான் இதெல்லாம் எனக்குத் தெரியும்.” பதறினான் கணவன்.
“அவங்ககூட சொல்லிட்டாங்க வீட்டு வேலைக்கு ஆள் வச்சிக்கலாம்னு.” சமுத்திரா அப்படியே நிறுத்த, அவளின் எதிர்பார்ப்பு அவனை பொசுக்கியது. நீ முன்வந்து சொல்ல வேண்டிய சமாதானங்களை வேறொருவர் முந்திக்கொண்டு வந்து சொல்லிவிட்டார் என்ற செய்தி பொதிந்திருக்க, நெற்றியை தேய்த்து விட்டுக்கொண்டவன்,
“எங்கேயோ நான் உன்னை தப்பா ஜட்ஜ் பண்ணிட்டேன். இப்போ எது நீன்னு எனக்கு குழப்பமா இருக்கு சமு. குடும்பம்னு முகம் சுழிக்காம செஞ்ச சமு உண்மையா இப்போ என்கிட்ட வார்த்தைக்கு வார்த்தை பேசிட்டு இருக்குற சமு உண்மையான்னு எனக்குப் புரியல.” உன்னை அணுகத் தயக்கம், சமாளிக்கத் தெரியவில்லை என்பதை அத்தனை நாசுக்காக வெளிப்படுத்தினான் மகிழ்நன்.
“ரொம்ப சீக்கிரம் என்னை புரிஞ்சிக்கிட்டிங்க.” நக்கல் வழிந்தோடியது. இப்படியெல்லாம் பேச வரும் என்று அவளுக்கே அவள் புதிதாய் தெரிந்தாள். இதில் அவனை சொல்லி என்ன என்று பெருமூச்சும் எழுந்து அடங்கியது.
“வைக்கவா?” இவள் கேட்டாள், அவன் சுணங்கினான்.
“அதுக்குள்ளவா?”
“வேற என்ன இருக்கு?” என்றாள் வேண்டுமென்றே. தன் மனதில் இருந்தவற்றை கொட்டியாகிவிட்டது. இனி நான் என்ன செய்ய முடியும் என்பது போல் இருந்துகொண்டாள்.
“ஒன்னும் இல்லையோ…” அவனுக்கும் உள்ளுக்குள் எதுவோ உருண்டது. தயக்கமின்றி மனைவியிடம் பேச தன்னிடம் எதுவுமில்லையா? என்ன வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன் என தன் மீதான அலசலுக்குள் சென்றுவிட்டான்.
“என்ன பண்றா? என்னை தேடுனாளா?” மகளின் புறம் அவன் கவனம் சென்றுவிட அவனுக்கு பதில் சொல்லிய சமுத்திராவுக்கு வேறு எண்ணங்கள். மகள் அவனைத் தேடினாளா என்று கேட்கிறான் மனைவி தேடினாளா எனக் கேட்கவில்லையே, நான் மனைவியைத் தேடினேன் என்றும் சொல்லவில்லையே. அப்படியே முகமும் மனமும் கூம்பிப்போனது.
உமையாளை அழைத்து அவளிடம் அலைபேசி கொடுத்துவிட்டு இவள் கொஞ்சம் நகர்ந்துவிட்டாள். மகளிடம் அவன் அதிகம் பேசியதை விட மகள் அவனிடம் நிறைய பேசினாள். தந்தைக்கு முத்தம் கொடுப்பதாக எண்ணி அலைபேசி திரையில் முத்தம் வைத்தாள். கவனித்துக்கொண்டிருந்த சமுத்திராவுக்கு பெருமூச்சு எழுந்தது. திரும்பி அப்படியே தன் பெற்றோரைப் பார்த்தாள்.
தூரத்தில் அமர்ந்து என்னவோ சலசலத்துக் கொண்டிருந்தனர். கலைவாணியின் குரல் உயர்ந்திருக்கிறது என அவரின் உடல்மொழி பறைசாற்ற தந்தையின் உடல்மொழியோ பணிவது போலவுமின்றி எதிர்ப்பது போலவுமின்றி இயல்பாக உரையாடுவது போல் இருந்தது. தன்னையும் திரையில் தெரியும் கணவனையும் பார்த்தாள். இப்பொழுதாவது கைக்கெட்டா தூரம், கைக்கெட்டும் தூரத்தில் இருந்தபோது கூட தங்களுக்கிடையில் இடைவெளிகள் அதிகம் தானோ? குடும்பத்தை பார்த்தோம், மனம் கோணாது நடந்தோம், தேவைகள் அறிந்து நிறைவேற்றினோம் இதில் அன்னியோனியம் இல்லையே… மனம் வலித்தது. இதெல்லாம் கணவனுக்கு புரிகிறதா அலைபேசி திரையைப் பார்த்தாள் இவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான் மகிழ்நன். உமையாள் எப்போதோ அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.
“என்ன?” அவன் பார்வையின் அர்த்தம் புரியாது இவள் கேட்க, கண்களை சிமிட்டி பெயருக்கு இதழை சிரிப்பது போல் வளைத்தவன், “நல்லா தூங்கு. கண்ணெல்லாம் உள்ள போயிருக்கு.”
குரலில் அக்கறை இருந்ததோ தேடிப் பார்த்தாள் சமுத்திரா, பின் அவளே அலுத்துப்போய் அழைப்பை துண்டித்தாள். சில நொடிகள் மனதிற்குள் எதையும் அண்டவிடாமல் சுவாசத்தை சீர் செய்த வண்ணம் பெற்றவர்களை நோக்கி நடை போட, இவளைப் பற்றி தான் பேசுகிறார்கள் என்று புரிந்தது. பதட்டத்துடன் மீதி தூரத்தை நிரப்பினாள். இவள் வரவும் அய்யாவு அமைதியாகிவிட,
“இங்க பாருங்க என் பொண்ணு அவளுக்கு எவ்வளவு நாள் இங்க இருக்கணும்னு தோணுதோ அவ்வளவு நாள் இருப்பா. அவ மேல தப்பிருந்தா சிலுப்பிகிட்டு போற அந்த நன்மதியே நம்ம பொண்ணை தேடி வந்து பேசிட்டு போவாளா? நீங்களும் சும்மா அவளை நச்சு பண்ணாதீங்க. பொறந்த வீட்டுக்கு நிம்மதி தேடி வந்த பொண்ணை நிம்மதி இல்லாம பண்ணிடாதீங்க.” என்று கலைவாணி பேச்சை முடித்து வைக்கவும் இவள் தவிப்பாக பார்த்தாள்.
“அவர் பேசுறது எல்லாம் கண்டுக்காத. அவ்வளவு நேரம் பேசுனீங்க அந்த நன்மதி என்ன சொன்னான்னு கேக்குறேன் மழுப்புறியே நீ…” என்று மீண்டும் சமுத்திராவிடம் போட்டு வாங்கப் பார்க்க, மகளுக்கு தூக்கம் வருகிறது என கழண்டுகொண்டாள்.
விழிப்பு தட்ட அலாரமே தேவையில்லை என்பது போல் நடைபெற்ற கச்சேரியில் சோம்பலாய் எழுந்து வெளியே வந்தான் மகிழ்நன். வழக்கம் போல் பத்மா பாத்திரத்தை உருட்ட, இவன் கண்களை உருட்டினான்.
“தினம் ஏம்மா படுத்துற?”
“நீதான்டா என்னை படுத்துற. வருஷக்கணக்கா இதே நேரத்துக்கு எந்திரிச்சி என் வேலையை ஆரம்பிச்சிடுவேன், அப்போல்லாம் குப்புற அடிச்சி நல்லா தூங்கிட்டு இப்போ என்ன திடீர்னு தினம் எழுந்து வந்து என்னை கேள்வி கேக்குற?”
‘அதானே இத்தனை நாள் எப்படி இதெல்லாம் நமக்கு கேக்கல?’ என்று யோசனையானவனுக்கு விடையை கேள்வி தொடுத்தவரே கொடுத்தார்.
விழித்துவிட்டால் திரும்ப அவனுக்கு உறக்கம் வராது. அதனாலேயே காலை நேரமே எழும் சமுத்திராவிடம் சத்தம் கூட்டாதே விளக்கை போடாதே என்று பழக்கப்படுத்தி இருந்தான். இப்போது அந்த நிபந்தனைகள் எல்லாம் அவன் முன் கைகட்டி சிரிப்பது போல் தோன்றியது. அயற்சியாக தலையை பின்னே சாய்த்துக்கொண்டான்.
என்னவோ முணுமுணுப்புடன் காபி போட்டு வந்து கொடுத்தார் பத்மா. இவன் பல் தேய்க்கவில்லை என்று மறுக்க,
“அப்புறம் ஆறிடுச்சு திரும்ப சூடு பண்ணி குடுன்னு கேக்காத. போய் சீக்கிரம் முகம் கழுவிட்டு வா.” மகனை உசுப்ப, அவரையே சுணக்கத்துடன் பார்த்தான் மகிழ்நன்.
இதே பத்மா இவனது பதின்பருவத்தில் ஆறினாலும் பரவாயில்லை என்று குடிக்கப் போனவனைத் தடுத்து சூடு செய்து எடுத்து வந்து பழக்கிவிட்டது எங்கிருந்தோ நினைவடுக்கில் இருந்து துள்ளிக்குதித்து வந்தது. பெருமூச்சுடன் எழுந்து சென்று முகம் கழுவி வந்தான்.
எப்போதும் குடிக்கும் பதத்தை விட கொஞ்சம் சூடு தணிவாய் இருந்தது. ஒன்றும் சொல்லாமல் இவன் குடிக்க, செழியன் அறைக்கதவு திறக்கும் ஓசையில் அன்னிச்சையாக கண்கள் அங்கு செல்ல, முதலில் நன்மதியும் தொடர்ந்து செழியனும் வந்தனர்.
இவன் புருவம் உயர்ந்தது செழியன் சமையலறை செல்வதைப் பார்த்து. தொடர்ந்து பத்மாவின் முணுமுணுப்புகள் கொஞ்சம் வேகம் எடுக்க, செழியனும் என்னவோ சொன்னான். எழுந்து சென்று இவன் பார்க்க,
“தினம் எல்லாருக்கும் புடிச்ச மாதிரி எப்படி’மா செய்ய முடியும். நேத்தி நீ சொன்னதைதான் மதி செஞ்சா, இன்னைக்கு காய் வீணாப்போற மாதிரி இருக்குன்னுதான வேற செய்யுறேன்னு சொல்றா.” என்று வாதாடிக் கொண்டிருந்தான் செழியன்.
“பொம்பளைங்க சமையக்கட்டுல உனக்கு என்ன வேலைங்குறேன்?”
“ப்ச், ம்மா…”
“விடுங்க, வீணா போனா போட்டும். குப்பையிலே போட்டுடுறேன். நீங்க சொல்றதை செய்யணும் அதுதானே அத்தை. செஞ்சிடலாம். காலையில செய்யுற தக்காளி குருமாவ நைட் செஞ்சிக்கலாம், இப்போ சட்னியும் மதிய சாம்பாரும் போதும்.” என உடன்படுவது போல் வந்து உணவுப்பட்டியலில் சிறிது மாற்றம் செய்தாள் நன்மதி.
“மகிழுக்கு குருமானா புடிக்கும். வாரத்துல மூணு நாள் செஞ்சிடுவா சமு. செழியனுக்கு கொஸ்து பிடிக்கும்னு சிரமம் பாக்காம அதையும் மத்த மூணு வேளையில செஞ்சிடுவா.” என்று மல்லுக்கு நிற்க, மகிழ்நனுக்கு யாரோ தன் கண்கட்டை அவிழ்ப்பது போல் பிரம்மை.