காலை உணவாக மருமகளும் மாமனாரும் பேசிக்கொண்டே இட்லிகளும் தோசைகளையும் தயாரித்து சுட சுட உணவு மேஜையில் அடுக்கி கொண்டிருக்கும் போதே ஆதி இறங்கி வந்தான். அவனைப் பார்த்ததும் அமுதன் ஒரு வினாடி திடுக்கிட்டு பின் மௌனமாக தனக்குள் சிரித்துக் கொண்டார். காரணம் சில ஆண்டுகளாக அவன் காலையில் இவ்வளவு விரைவாக எழுந்ததே கிடையாது.
பூஜை அறை பக்கம் திரும்பியும் பாராதவன் வேகமாக வந்து உணவு மேஜையில் அமர்ந்து விட அவன் அருகே நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தார் அமுதன். ஐசு அமுதனுக்கு மட்டும் தட்டு வைத்து பரிமாற
” ஏன் எங்களுக்கெல்லாம் சாப்பாடு போட கூடாதுன்னு சட்டம் இருக்கா”
மேஜையில் தாளம் போட்டுக் கொண்டே கேட்டான்.
ஐசு திருத்திருவென விழித்து
” இல்ல நீங்க இன்னும் சாமி கும்பிடவே இல்லையே”
ஆதி அவளைப் பார்த்த பார்வையில் அனல் அடித்தது. அமுதன் கூட அவளை பரிதாபமாக பார்த்தார். இப்போது தான் என்ன சொல்லிவிட்டேன் என்று இந்த இரு ஆண்களும் இப்படி மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது சுத்தமாக புரியவில்லை அவளுக்கு. அவள் அடுத்த பேச வாய் எடுப்பதற்கு முன் அமுதன் வேகமாக ஆதியிடம் கண்களால் ஏதோ சமிஞ்சை காட்டினார். அதாவது எதுவும் சொல்லி விடாதே என்று கெஞ்சினார்.
அப்பாவின் கண்கள் சொன்ன செய்தி அவனுக்கு புரியாதா என்ன?
இருந்தாலும் அதை அலட்சியப்படுத்தி முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு
” இங்க பாரு ஐஸ். நீ எவ்வளவு வேணாலும் சாமி கும்பிடு விரதம் இரு அங்கேயே படுத்து உருளு. நீ எக்கேடு கேட்டாலும் எனக்கு அக்கறை கிடையாது. இன்னொரு தடவை என் முன்னாடி சாமி பூதம் அப்படின்னு சொல்லாத.”
அவள் முகம் வாடி நிற்பதை கண்டும் காணாதவன் போல தனக்கு தட்டு வைத்துக் கொண்டு அவனே பரிமாற முற்படுக்கையில் ஐசு அவனுக்கும் சேர்த்து பரிமாறினாள்.
அமுதனுக்கு அய்யோ என்று இருந்தது. வந்த முதல் நாளே சுடு சொல் கேட்க வேண்டியதாகி போயிற்றே. இதைப்பற்றி அவளிடம் எச்சரிக்காத தனது முட்டாள்தனத்தை மானசீனமாக மனதில் துப்பிக் கொண்டார். ஒரு வாய் இட்லியை வில்லள் பிய்த்து சம்பாரில் தோய்த்து வாயில் போட்டவன்
” ஐஸ் இன்னிக்கு நீயா சமைச்ச”
ஐசு மீண்டும் அமுதன் முகத்தை பார்த்தாள்.
” உனக்கு காது கேட்காதா? என் அப்பாவோட வாயை என்ன கடன் வாங்கி இருக்கியா? எதுக்கு உன்னை கேள்வி கேட்டா அவர் மூஞ்ச பாக்கற? நீ சமைச்சியா இல்லையா”
மீண்டும் ஏதாவது துடுக்காக சொல்லி விடப் போகிறான் என்று பயந்து
” ஏன்டா சாப்பாடு நல்லா தானே இருக்கு”
” அப்பா உன்கிட்ட யாரு இப்ப கேட்டா? பேசாம சாப்பிடு. ஐஸ் உன்கிட்ட தான கேக்குற. பதில் சொல்ல இஷ்டம் இருந்தா சொல்லு இல்லன்னா பரவால்ல”
இப்போதும் வாயை மூடி சும்மா நிற்பது நன்றாக இருக்காது என்பதால்
” நான் தான் சமைச்சேன்”
காற்றுக்கும் வலிக்காத குரலில் பேசினாள் ஐசு. அவளை ஒரு பார்வை பார்த்தவன் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தான். அவள் நின்று கொண்டே இருப்பதை கவனித்தவன்
“ஐஸ் எங்களுக்கு கை இருக்கு. நாங்களே எடுத்து போட்டு சாப்பிடுவோம். உனக்கு எங்க கூட உட்கார்ந்து சாப்பிட வெக்கமா இருந்தா அப்புறம் சாப்பிடு”
நேரடியாக அமர்ந்து சாப்பிடு என்று கூறாமல் மறைமுகமாக சொல்பவனை என்னவென்று சொல்வது? படக்கென்று அமர்ந்து தனக்கும் தட்டு வைத்து இரண்டு இட்லிகள் வைத்து சாப்பிட ஆரம்பித்தாள் ஐசு.
அமுதன் திருமணத்திற்கு வந்திருந்த அவர்கள் உறவினர்களை பற்றி மகனிடம் பேசிக்கொண்டே சாப்பிட்டார். ஐசு இரண்டு இட்லிகளை சாப்பிட்டு முடித்தவள் எழப் போக
” ஐஸ்.. உனக்கு எத்தனை வயசு”
திடீரென்று சம்பந்தமே இல்லாமல் அவன் இந்த கேள்வியை கேட்க அவனிடம் குத்துப்பட்ட ஞாபகம் வர
மீண்டும் மறைமுகமாக குத்து. பேசாமல் அமர்ந்தவள் இட்லி எடுத்து வைக்க போக
” நெய் தோசை சிரிப்பா சிரிக்கிது. அத சாப்பிட இந்த வீட்ல ஆள காணோம். நெய் விக்கிற விலைக்கு நெய் தோசை தேவையா”
அடுத்த நொடி இரண்டு நெய் தோசை அவள் தட்டில் இருந்தது. மறைமுகமாக மகன் அவளை கவனிப்பது மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது அமுதனுக்கு.
உணவு முடிந்ததும் ஐசு வீட்டை சுத்த பண்ண தொடங்கினாள். அமுதனும் அவளோடு சேர்ந்து சுத்தம் பண்ண வர விடாப்பிடியாக அவரை அமரச் சொல்லி விட்டாள் ஐசு. ஆதி எங்கேயோ கிளம்பி வெளியே சென்று விட்டான். சாய்வு நாற்காலியில் அமர்ந்து
“காவல் கோட்டம்” புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார் அமுதன். இத்தனை காலங்களில் அவர் நினைத்திருந்தால் அந்த வீடு முழுவதும் வேலையாட்களால் நிறைந்து இருக்க முடியும்.
ஆனால் அவரது மனதில் இருக்கும் வெறுமைக்கு உடல் நோக அப்பெரிய வீட்டின் வேலையை செய்தால் மட்டுமே இரவில் தூங்க முடியும். இத்தனை காலங்கள் மனதில் ஏக்கமாய் இருந்த நிகழ்வு மருமகள் வந்த பிறகு நிஜமாய் மாறியது. நிம்மதியாய் சாய்ந்து நாற்காலியில் அமர்ந்து கதை புத்தகம் படித்துக் கொண்டே அந்த நிமிடங்களை ரசித்தார் அமுதன்.
மதிய சமையலுக்கு மீண்டும் அமுதன் முன்னே வந்து நின்றாள் ஐசு
” மாமா என்ன சமைக்கட்டும்”
” உனக்கு என்ன தோணுதோ சமை டா”
” இல்ல உங்களுக்கு என்ன சாப்பிட வேணும்னு”
“ம்ம்ம் உன் புருஷனுக்கு எப்பவும் அசைவம் இருக்கனும். எனக்கு அந்த மாதிரி எதுவும் தேவையில்ல. ஏதாச்சும் துவையல் இருந்தாலே போதும். உனக்கு என்ன தோணுதோ அதை சமைச்சு கொடு. மாமா கண்ண மூடிட்டு சாப்பிடுவேன்”
ஐசு அசத்தலாக மதிய சமையலை முடித்து விட ஆதிக்கு காத்திராமல், அமுதனுக்கு பரிமாறினாள். அவளது சமையலை வெகுவாய் பாராட்டினார் அமுதன். அவளை சாப்பிட சொல்ல ஆதி வந்த பிறகு சாப்பிடுகிறேன் என்று மறுத்து விட்டாள். என்றும் இல்லாத அதிசயமாய் மதியம் சாப்பிட்டதும் கண்ணை கட்டியது அமுதனுக்கு.
அவர் உறங்கச் செல்ல கிடைத்த தனிமையான நேரத்தில் ஐசு யோசித்துப் பார்த்தாள்..இதுவே அவளது வீடாக இருந்திருந்தால் சொல்ல முடியாது காலை உணவையே இப்போதுதான் சாப்பிட்டு இருப்பாள். அந்த அளவிற்கு வேலை நெட்டி முறித்திருக்கும்.. அவளது வீட்டில் அவள் சமைத்திருந்தால் சாப்பாடு என்ன தான் அமிர்தமாக இருந்தாலும் ஈஸ்வரனும் செல்வகுமாரியும் அதனை குறை சொல்லாமல் சாப்பிட மாட்டார்கள்.
அதிலும் ஈஸ்வரன் எத்தனையோ தடவை சாப்பிட்ட கையால் அவளை அறைந்திருக்கிறார். இங்கு மாமனார் தாங்கு தாங்கென்று தாங்கிக் கொண்டிருக்கிறார். கணவன் அவளிடம் சிரித்து பேசவில்லை. அதேசமயம் எரிந்தும் விழவில்லை. நேரடியாக அவளிடம் அக்கறை கொள்ளவில்லை. மறைமுகமாக அவனது அக்கறையை நிரூபிக்க முயலவில்லை. ஆனால் அவனது வார்த்தைகள் அவளை சுற்றி வட்டமடிக்கிறது. நினைவு தெரிந்த நாளிலிருந்து முதன்முதலாக லேசாக சுதந்திர காற்றை சுவாசிக்க ஆரம்பித்தாள் ஐஸ்வர்ய நந்தினி.
அவள் தனியாக அமர்ந்து கனவு கண்டிருக்கும் போதே வீட்டிற்கு வந்து சேர்ந்தான் ஆதி. அவன் பக்கத்தில் நிற்பது கூட தெரியாத அளவு தன்னில் லயித்திருந்தாள் ஐசு. தான் பக்கத்தில் இருப்பது கூட தெரியாத அளவிற்கு அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள். ஐசு காதருகே சொடக்கு போட்டான் ஆதி.
அப்போதும் அவளது சிந்தனை கலையாமல் இருக்க,ஐஸ் என அவள் தோளைத் தொட்டான். சிந்தனை கலைந்து படக்கென்ற எழுந்து நின்றாள் ஐசு. அவள் மிரண்டு விளிக்க
” வீட்டுக்குள்ள ஆளு வந்து நிற்கிறது கூட தெரியாத அளவுக்கு கண்ணை முழிச்சுக்கிட்டே தூங்குறீங்க? இந்த டெக்னிக் ரொம்ப நல்லா இருக்கே எனக்கு சொல்லிக் கொடுக்க முடியுமா?”
அசடு வழிந்தாள் ஐசு.
பார்வையை சுழல விட்டுக் கொண்டு
” அப்பா எங்க”
அவனுக்கு சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டிருந்த ஐசு
” மாமா சாப்பிட்டு தூங்கிட்டாரு” என்றதும்
சற்று பதற்றத்தோடு
” ஏன் என்ன ஆச்சு உடம்புக்கு ஒன்னும் இல்லையா.. “
கேட்டுக்கொண்டு இரண்டு அடி அவரது அறையை நோக்கி எடுத்து வைத்தான்.
” அப்படி ஒன்னும் இல்ல சாப்பிட்டாரு மத்தியானம் தூக்கம் வந்துருச்சு போல. அதான் போய் படுத்துட்டாரு”
அப்போதும் அவளது பேச்சில் நம்பிக்கை இல்லாமல் தந்தையின் அறைக்குச் சென்று அவர் சீராக மூச்சு விடுவதை பார்த்த பிறகே உணவு மேஜைக்கு வந்தான்.
சாப்பிட அமர்ந்தவன் அவளை ஒரு பார்வை பார்க்க, காலையில் வாங்கியது பத்தாதா உடனே அமர்ந்து விட்டாள். சாப்பிடும் போது ஓரக் கண்ணால் அவனது முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தாள். மாமனாரை போல ஆஹா ஓஹோ எனப் பாராட்டாவிட்டாலும் நன்றாக இருக்கிறது எனும் ஒரு வார்த்தை வராதா என்று. இறுதி வரை அவளது ஆசை நிராசை ஆகியது.
சாப்பிட்டு முடித்தவன், எழுந்து சென்று கை கழுவாமல் அங்கேயே வெறுமனே அமர்ந்திருந்தான். அப்படி அவன் அமர்ந்திருக்க
” ஏதாச்சும் வேணுமா”
என்றாள். சாப்பிட்டால் எழுந்து சென்று கை கழுவ வேண்டியதுதானே. எதற்காக இங்கே அமர்ந்திருக்க வேண்டும்?
” டேபிள் மேனஸ்”
அவன் கூறியதும் அவளுக்கு புரிந்து விட்டது. அவள் முழுமையாக சாப்பிடாமல் அவன் எழுந்திருக்க மாட்டான். விரைவாகவே சாப்பிட்டு முடித்தவள் எழ அவனும் எழுந்தான்.
அவ்வளவு பெரிய வீட்டில் அடுத்து என்ன செய்வது என்று அவளுக்கு புரியவில்லை. ஈஸ்வரனுக்கு தவிர்க்க முடியாத கேஸ் ஒன்று இருந்ததால், மாலை வந்து மறு வீட்டிற்கு அழைப்பதாக கூறியிருந்தார் நர்மதா. அதுவரை என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தவளை,
” நான் வாட்ச்மேனுக்கு மாசம் லட்சக்கணக்குல பணம் கொடுக்கிறேன்.அதனால யாரும் வீட்டக் காவல் காக்க தேவையில்ல.”
தன் அறையில் அடைந்து கொண்டான் ஆதி.
அவளுக்குமே மதியம் லேசாக தூக்கம் கண்ணை சுழட்ட சோபாவில் படுத்து விட்டாள். மனதில் பலவிதமான குழப்பங்கள். தாலி கட்டிய கணவனுக்கு தன்னை பிடிக்குமா பிடிக்காதா எனும் அதி முக்கியமான குழப்பம். இப்படி இருக்க தன்னை மறந்து அவள் அயர்ந்து உறங்கிவிட, முதலில் எழுந்தது அமுதன்.
கீழிறங்கி வந்தவர் மருமகள் தூங்குவதை கண்டதும் சத்தம் செய்யாமல், அவளுக்கு ஜூஸ் கலந்து எடுத்து வர அந்த நேரம் பார்த்து வந்து சேர்ந்தார்கள் ஈஸ்வரனும் நர்மதாவும். மகள் சோபாவில் உறங்கிக் கொண்டிருக்க மாமனார் கையில் ஜூஸோடு அவளை தட்டி எழுப்பும் காட்சி ஈஸ்வரனுக்கு ரத்த கொதிப்பை ஏற்படுத்தியது.
மெதுவாக சோம்பல் கலைந்த ஐசு எழுந்து அமர்வதற்குள்
” உனக்கு சேவகம் செய்ய தான் மாமனார் இருக்காரா? வயசு பொண்ணுக்கு என்ன தரித்திரம் புடிச்ச மாதிரி பட்ட பகல்ல தூக்கம்”
ஈஸ்வரன் போட்ட மிரட்டலில் அமுதனே, அதிர்ந்து நிற்க ஐசு அடித்து பிடித்து எழுந்து நின்றாள். அவளது முகத்தில் அப்பட்டமான பயம். புயலில் சிக்கிய வேர் போல அவளது மெல்லிய உடல் தந்தை போட்ட அதட்டலில் நடுங்கி கொண்டிருந்தது.