“ஏன்? உனக்கு பயமா இருக்கா? மறுபடி என்னை பிடிக்கும்னு? இல்லை பால்டப்பாக்கு பயமா?”, புருவம் உயர்த்தி லேசான ஒரு சிரிப்பை சிந்தினான். அவளுக்கு அது பிடிக்கும் என்று தெரிந்தே செய்தான்.
உதட்டை சுழித்து ஒரு வறண்ட பார்வை பார்த்தவள், “ஜெய் உன்னை பிடிச்சு , கல்யாணம் பண்ணா என்ன ஆகும்னு ஏற்கனவே நல்லா வலிக்க வலிக்க பாடம் கத்துக்கிட்டேன். அதை திரும்ப பண்ண வேண்டிய அவசியமில்லை. இதுல அவினாஷை இழுக்காதே.”, எச்சரித்தாள்.
“என்ன பாடம்? யார் சொல்லிக்குடுத்தாங்கற? கண்டிப்பா நான் இல்லை. உன்னை எவ்வளவு தூரம் லவ் பண்ணேன்னு உனக்கே தெரியும். நாலு வரி லெட்டர்ல முடிச்சு பாடம் கத்துக்குடுத்தவ நீ! சரி…இப்பதான் நினைச்சதை அடைஞ்சிட்டியே? இப்ப திரும்ப எங்கிட்ட வராம ஏன் விலகற?”, உடல் மொழி இலகுவாக இருந்தாலும் அவன் கண்ணில் ஒரு வலி வந்து சென்றதைப் பார்த்தாள் குமுதினி. அதை மறைக்கவெல்லாம் முயற்சிக்கவில்லை சிம்மன்.
“பாடம் இரண்டு பேருக்கும்தான். பிரிஞ்சதுக்கான காரணம் எதுவும் மாறலை. மாத்தவும் முடியாது. இத்தனை வருஷத்துல நம்ம இரண்டு பேர் பிடித்தங்களும் நிறைய மாறியாச்சு. நீ எப்படியோ, ஆனா நான் அடுத்த கட்டத்துக்கு போக நினைக்கறேன். நிம்மதியா போக விடு.”, மனதை கல்லாக்கிக்கொண்டு பேசினாள்.
முன்னொரு காலத்தில் அவன் வலி பார்க்கப் பொறுக்காதவள், இன்று பார்த்தும் பார்க்காதது போல தன் வரையில் சுயனலமாகப் பேசியது சிம்மனுக்கு அதிர்வாகத்தான் இருந்தது.
“பிரிஞ்சதுக்கான காரணம்னு நீ சொன்னது மாறிடுச்சே? இப்ப நீ தமிழ் நாடு பூரா தெரிஞ்ச ஒரு பேரு. உன் ஷோல நீ பேசினதை சட்டசபையில கோட் பண்ணி பேசற அளவு பிரபலம். என்னைக் கல்யாணம் பண்ணி கிராமத்துலேயே முடங்கிப்போயிருவன்ற கட்டம் தாண்டியாச்சு. இன்னும்..”
“ப்ளீஸ்…. நிறுத்து. நீ என்ன சொன்னாலும் திரும்ப சேர வாய்ப்பில்லை. அதனால இந்த கேம் எல்லாம் விட்டுட்டு அடுத்து நடக்கறதை பேசுவோமா?”
“ஹ்ம்ம்… எனக்கு புரியற வரை பேசித்தான் ஆகணும். இதுல வலியும் வேதனையும் எனக்கும்தான் இருக்கு. சரி, அடுத்த மீட்-அப் எப்ப என்னன்னு சொல்றேன். ஒரு நாள் ஃப்ரீயா இருக்க மாதிரி பார்த்துக்கணும். அடுத்த மாசத்துல…”
“மூணு வாரம் கழிச்சுதான் அடுத்த மாசம். அதுவரை எதுக்கு வெயிட் பண்ணனும்?” வேகமாக இடை புகுந்தாள்.
“எனக்கு இருக்கற வேலையில நான் ஒரு நாள் ஃப்ரீ ஆகணும்னா பிரபாக்கு ஒரு மாசம் முன்ன சொல்லணும்.”
“எதுக்கு அவ்வளவு நேரம்? ஒரு மணி நேரம் போதாதா பேசி முடிக்க? சும்மா நீ டைம் வேஸ்ட் பண்ற ஜெய்.”, முகம் சுருக்கினாள்.
“அவனை கல்யாணம் செய்ய அவ்வளவு அவசரம்? உனக்கா இல்லை அவனுக்கா?” கேலியாகக் கேட்டவனை வெட்டவா குத்தவா என்று பார்த்தவள், “ம்ம்…அவன் அம்மாக்க! ஏற்கனவே நிச்சயம் கேன்சலானது, கல்யாணம் தள்ளிப்போனதுன்னு பிபி எகிறிப்போய் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆனாங்க. இப்ப நீ இன்னும் இன்னும் இழுத்தா..”
“என்னாலாதான்னு சொல்லிட்டு போயேன்?”, என்றவன், “ஆமா அவங்களுக்குத் தெரியுமா நீ இன்னும் என் பொண்டாட்டின்னு?”, தாடையை தடவியபடி கேட்டவனைப் பார்த்து பல்லைக் கடித்தவள், இல்லை என்று உண்மையைச் சொன்னால் அதையும் வைத்து மிரட்டக் கூடும் என்று, “அதனாலதான் டென்ஷன் ஆகறாங்க. நாம டைவர்ஸ் ஃபைல் பண்ணிட்டா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவாங்க. சம்மந்தமில்லாம அவங்க பாதிக்கப்படறாங்க.”, என்று மடை மாற்றினாள்.
அது என் பிரச்சனை இல்லை என்பதாகத் தோளைக் குலுக்கியவன், “சில நேரம் அப்படித்தான் கோலாட்ரல் டாமேஜ் ஆகும். அவங்களுக்கு நீ வேணும்னா காத்திருக்கணும். இல்லைன்னா பால்டப்பாக்கு ஏத்த மாதிரி ஒரு பன்னீர்துண்டை கட்டி வெக்கச் சொல்லு!”
அத்தனை எரிச்சலிலும் அவன் பன்னீர்துண்டு வர்ணனையில் வந்த சிரிப்பை மறைத்தவள், “பாலோட இந்த காஃபி டிகாக்ஷந்தான் சேரணும்னு நினைக்கறாங்க பாவம்”, என்றாள் பல்லைக் காட்டிய ஒரு பெரிய புன்னகையோடு.
சிம்மன் காதில் புகை மட்டும்தான் வரவில்லை. அவன் கடுப்பானதைக் கண்டு இந்த முறை நிஜமாகவே சிரித்தாள்.
எழுந்து கொண்டவன், “ஹ்ம்ம்.. கசப்பான டிகாக்ஷன்தாண்டி நீ”, என்று கடிய,
“என்னவா வேணாலும் இருந்துக்கறேன். ரொம்ப டிலே பண்ணாம ஒரு சண்டே சொல்லு. பார்த்து இதை பேசி முடிப்போம்.”, என்று சொல்லி அவனுடன் நடந்து வந்தாள்.
வாசலில் அவன் கார் முதலில் வர, “பால்டப்பாகிட்ட நம்ம ஜோடிப் பொருத்தம் எப்படின்னு கேளு!”, என்றதோடு காரில் ஏறிக் கிளம்ப, அவினாஷுக்கு எப்படித் தெரியும் என்று நினைத்து முடிக்கவில்லை, அவனிடமிருந்து அழைப்பு வந்தது.
“அவினாஷ்?”
“இன்னும் உன் கூடத்தான் இருக்கானா?”, பல்லிடுக்கிலிருந்து வந்தது கேள்வி என்று குமுதினிக்குப் புரிந்தது.
“இல்லை. கிளம்பிட்டான். நான் என் கார் வர வெயிட் பண்றேன். என்னாச்சு?”
“உன் ட்ரெஸ் கலர் எப்படி மாட்ச் பண்ணி சட்டை போட்டுட்டு வந்தான்?”, அவினாஷ் கேள்வியில் புருவம் ஏற்றியவள், “அது உனக்கெப்படி தெரியும்?” பதில் கேள்வி கேட்டாள்.
“ம்ம்… அந்த காட்டுமிராண்டி நீங்க ஜோடியா வரதை போட்டோ எடுத்து எனக்கு அனுப்பிட்டு, ஜோடி பொருத்தம் சும்மா அள்ளுதில்லன்னு மெசேஜ் அனுப்புறான்.”, கெட்ட வார்த்தை ஒன்றை உதிர்த்தான்.
அவள் கார் வர, சாவியை வாங்கிக்கொண்டு காரில் அமர்ந்தவள், ப்ளூ டூத்தில் இணைப்பை சேர்த்து, “ஹ்ம்ம்…இப்ப சொல்லு”, காரை ஓட்டியபடி பேசினாள்.
“நீதான் சொல்லணும். எதாவது பேசினானா?”, இன்னும் உர்ரென்றுதான் வந்தது அவினாஷின் குரல்.
“சீரியஸ்லி? என்ன பிரச்சனை உங்களுக்கு? அன்னிக்கு நீ கலர் மாட்ச் பண்ணலாம்னு சொல்லி, பிங்க் கலர் இருக்கற டீ-ஷர்ட் போட்டுட்டு வந்த. அதைப் பார்த்து அவனும் இப்படித்தான் கடுப்பானான். இப்ப நீ!”, கண்களை உருட்டினாள் குமுதினி.
“ஓஹ்… அப்படியா? நீ சொல்லவே இல்லை. என்ன சொன்னான்?”, சற்று உற்சாகமாக வந்தது கேள்வி.
“ம்ம்…இனிமே டைவர்ஸ் ஆகற வரை, கலர் மாட்ச் பண்ணனும்னு நீ ஆசைப்பட்டா, அந்த கலர்ல ம்ம்.. அண்டர்வேர் வேணா போடலாமாம், வேற போடக்கூடாதாம்.” சிரிப்புடன் கூறினாள்.
“ஓ… சரி பீச் ரிசார்ட் போவோம். எங்கிட்ட ஒரு குட்டி பிங்க் ஸ்விம்மிங் ஷார்ட்ஸ் இருக்கு, அதை போட்டுக்கறேன். நீ ஸ்விம் பண்ண மாட்ட, சரி ஒரு பிங்க் ட்ரெஸ் போடு, போட்டோ எடுத்து நீ ஆசைபட்டு கேட்டியாமேன்னு நான் அனுப்பறேன் அவனுக்கு.”, வேகமாய் திட்டம் போடவும், “கடவுளே! நீங்கல்லாம் பிசினஸ் மென்னு வெளிய சொல்லிடாதீங்க. என்னது இது சின்னபுள்ளத்தனமா? நீயாவது கொஞ்சம் மெச்சுரிட்டியோட இரு அவினாஷ்!” அவள் திட்டவும் சற்றே இறங்கி வந்தான். ஜோடிப் பொருத்தம் நன்றாக இருந்ததுதான் அவினாஷின் எரிச்சல், ஆனால் அதை காட்டமுடியாதே. எந்த விதத்திலும் குமுதினிக்கு சிம்மன் பொருத்தமாக இருப்பதாக அவினாஷ் சொல்ல விரும்பவில்லை.
“சரி விடு. டைவர்ஸ் ஃபைல் பண்றதைப் பத்தி இன்னிக்கு என்ன சொன்னான்? அதை சொல்லு.”
ஒரு நாள் முழுக்க அவனுடன் இருந்து பேசவேண்டும் என்று கேட்டதை மட்டும் கூறினாள். ஜெய் சொன்ன ஸ்பார்க் அது இது என்று விவரம் சொன்னால் தேவையில்லாமல் அவினாஷ் குழப்பமடைவான் என்று தவிர்த்துவிட்டாள்.
“நீங்க வாழ்ந்ததே நாலு நாள், அதை பேச ஒரு நாள் வேணுமா? என்ன நினைச்சிட்டு இருக்கான்? நீ என்ன சொன்ன குமுதினி?”, கோபம் எட்டிப்பார்த்தது அவினாஷின் குரலில்.
“ஒரு மணி நேரம் போதும்னு நானும் அதைத்தான் சொன்னேன். இல்லை சண்டை வரும், கொஞ்ச நேரம் பிரேக் எடுக்கணும், திரும்ப பேசணும், அதுக்கு எந்த அப்பாயிண்மென்ட்டும் இல்லைன்னாதான் சரி வரும்னு சொல்றான்.”, அவன் அடுத்த மாதம் என்றதும் முடிவில் அவினாஷின் அன்னைக்குத் தெரியுமா என்பது வரையில் கூறி முடித்தாள்.
அதைக் கேட்டவனுக்கு குமுதினி இதற்கு மேல் ஒன்றும் செய்திருக்க முடியாது என்பது புரிந்தது. “ஹ்ம்ம் நீ அம்மாக்கு தெரியும்ன்னு சொன்னது கரெக்ட் . அவனுக்கு எந்த லூப் ஹோலும் குடுக்கக் கூடாது.” ஆமோதித்தான். கூடவே, “நான் விசாரிச்சது எப்படி அவனுக்கு தெரிஞ்சுது? செக்யூரிட்டி டீம் வெச்சுதான் விவரம் கலெக்ட் பண்ண சொன்னேன்.”
“அது சின்ன கிராமம் அவினாஷ். வெளியாளுங்க யாரும் பேசினாலே செய்தி பரவிடும். விடு. அவனும்தான் உன் குடும்பம் பத்தியெல்லாம் விசாரிச்சிருக்கான். கீதவர்ஷினி பத்தி கூட தெரிஞ்சு வெச்சிருக்கான் “, என்று அவன் முதல் மனைவியை குறிப்பிட்டாள்.
விசிலடித்தவன், “ஹ்ம்ம்… காட்டுமிராண்டி என்ன செஞ்சிடுவான்னு ஈசியா விடக்கூடாதுன்னு நினைக்கறேன் குமுதினி. ஹீ கான் பீ டேஞ்சரஸ்.”, அவினாஷிற்கு முதல் முறையாக சிம்மனிடம் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று தோன்றியது.