யோசனையுடன் வரவேற்ற கலைவாணி மகளை கூப்பிட, என்னவோ என்று வந்த சமுத்திராவும் அங்கு நன்மதியை சுத்தமாய் எதிர்பார்க்கவிலை. அவளைத் தொடர்ந்து ஓடி வந்த உமையாள் நன்மதியை பார்த்து அறிமுகச் சிரிப்பு சிரித்தாள்.
கலைவாணி மரியாதைக்கு காபி போட்டு கொடுக்க, “உன்கிட்ட கொஞ்சம் பேசணும் சமு.” என்றவாறு நன்மதி கலைவாணியைப் பார்க்கவும் அவர் சட்டமாக அமர்ந்துகொண்டார். தேடி வந்து பேச என்ன இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் அவரிடம்.
நன்மதி அவரைப் பார்ப்பதும் சமுத்திராவை பார்ப்பதும் என்று இருக்க, என்ன புரிந்ததோ அவளை அழைத்துக்கொண்டு பின்புறம் வந்துவிட்டாள் சமுத்திரா.
சமுத்திராவுக்கு எல்லாம் புதிதாய் இருந்தது. நன்மதியின் தயக்கம், அவளின் வருகை எல்லாம் எதற்கு என்று புரியவில்லை.
“அக்கா என்ன இவ்வளவு தூரம்?” சமுத்திராவுக்கு இருப்பு கொள்ளவில்லை. வீட்டில் எதுவுமோ? இப்பொழுதெல்லாம் தினமும் கணவன் பேசுகிறான் ஆனாலும்….
“நீ இங்க வந்ததுக்கு அப்புறம் வீடு வீடாவே இல்லை. எல்லாருமே ஒரு மாதிரி இறுக்கமாகிட்டாங்க. உன்னை தப்பு சொல்லல, சில நேரம் நம்மகிட்ட இருக்கறப்பவ விட இல்லாதப்போ அதோட அருமை புரியும். உன் அருமை நீ முதல்ல இங்க வந்து பதினைஞ்சி நாள் தங்குனப்போவே புரிஞ்சிடுச்சு சமு. ஆனா நீ திரும்ப வந்ததும் டேக்கன் பார் க்ரான்டட்டா எடுத்துகிட்டோம் போல…” பார்வை செல்லும் திசையெங்கும் மரங்களும் செடிகளுமாய் கிராமிய சூழல் நிறைந்திருக்க, அது கருத்தில் பதியவில்லை நன்மதிக்கு. தூரத்தில் வெறித்த பார்வை பார்த்திருந்தாள்.
“அக்கா?”
“வீட்ல எவ்ளோ வேலை இருக்கும்னு எனக்கும் தெரியும் சமு. நீ வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் நானும் எல்லாம் செஞ்சிருக்கேன். நான் கல்யாணம் ஆகி வந்தப்போ மகிழ் வெளியூர்ல வேலை பார்த்துட்டு இருந்தாங்க. வாராவாரம் வீட்டுக்கு வந்துடுவாங்க. அன்னைக்கு வீட்டையே புரட்டி போட்டுருவாங்க அத்தை. அவருக்கு புடிச்சதை சமைக்கணும்னு வெள்ளிக்கிழமையே லிஸ்ட் வந்துரும். நீ சொன்ன மாதிரி எல்லார் பொறந்தநாளுக்கும் நானும் செஞ்சிருக்கேன். முதல்ல தெரியல, போகப்போக என் வேலையும் பார்த்துட்டு வீட்லயும் செய்ய கஷ்டமா இருந்துச்சு. ஆள் வச்சிக்கலாம்னு சொன்னதுக்கு இருக்குற நாலு பேருக்கு செய்யுறதுக்கு என்ன கஷ்டம்னு முறுக்கிக்கிட்டாங்க. எதுவும் சொல்ல முடியாம இல்லை, சொல்ல வேண்டாம்னுதான் அமைதியாவே போனேன். ஆனா நீ எப்படி வெடிச்சியோ அதே மாதிரி எனக்கும் ஒரு சூழ்நிலை வந்துச்சு. என்னால முடியல.
மகிழுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சதுலேந்து குழந்தை… குழந்தை எப்போன்னு ரொம்ப போர்ஸ் பண்ணி கேக்க ஆரம்பிச்சிட்டாங்க.” குழந்தை என்றபோது அவள் குரல் பிசிறடித்ததை சமுத்திரா கவனித்தாள்.
“உனக்கு நியாபகம் இருக்கான்னு தெரியல, உனக்கு வளைகாப்பு போட்டப்போ என்னையும் மனையில உக்கார வச்சி வளையல் போட்டாங்க. நல்லது நடக்கணும்னு நினைச்சி ஏதோவொரு நம்பிக்கையில அதை செஞ்சிருந்தாலும் ஊருக்கு முன்னாடி எனக்கு குழந்தை இல்லைங்குறதை பகிரங்கப்படுத்துற மாதிரிதான் அப்போ எனக்கு தோணுச்சு. இப்போவும்…
வேணும் வேணும்னு ஏங்கி ஏங்கிக் காத்திருக்குற விஷயம் நம்மகிட்ட இல்லைனு பொட்டுல அடிச்ச மாதிரி நியாபகப்படுத்துச்சு… வளையல் போட்ட ஒவ்வொருத்தரும் சீக்கிரம் குழந்தை பொறந்துடும், வேண்டிக்கோனு சொல்லிட்டு போனது நம்பிக்கையும் ஆசிர்வாதமும் கொடுக்குறதுக்கு பதிலா நம்மகிட்ட என்னவோ குறைன்னு என்னையே சந்தேகப்பட வச்சுது. குறையில்லைனு எல்லா டெஸ்டும் சொன்னாலும் அன்னைக்கு என் மேல தான் ஏதோ தப்புங்குற மாதிரி என் நினைப்பு போயிடுச்சு…” திக்கித் திணறி நிறுத்திவிட்டாள் நன்மதி.
தங்களின் திருமணத்திற்கு முன்னான கதை போல் துவங்கி திடுமென வளைகாப்பு என்று நன்மதி திசை திரும்பியதிலேயே அவள் எத்தனை உணர்ச்சி வசப்பட்டிருக்கிறாள் என்று புரிந்து போனது சமுத்திராவுக்கு. அவளை தொந்தரவு செய்யாமல் பேச அவகாசம் கொடுத்து காத்திருந்தாள்.
“என்னை மாதிரி இல்லாம உனக்கு கல்யாணம் ஆன உடனே பாப்பா தங்கிட்டான்னு ரொம்ப சந்தோஷப்பட்டேன் சமு. ஏன்னா இல்லாதவங்களுக்குத்தான் அது எவ்வளவு வலிக்கும்னு தெரியும். பின்னாடி அதுவே என்னை குத்துறத்துக்கான காரணியாவும் ஆகும்னு நான் நினைச்சிப் பாக்கல. உன் கொழுந்தன் பொண்டாட்டி மொத மாசமே செய்தி சொல்லிட்டாளாமேன்னு பாக்குற எல்லாரும் கேக்க ஆரம்பிச்சாங்க. இதுல உன் தப்பும் என் தப்பும் எதுவும் இல்லை ஆனா எல்லா இடத்துலயும் நான் குற்றவாளியா ஆன மாதிரி ஒரு நினைப்பு.
எந்த இடத்துக்கு போனாலும் இந்த கோவில் போ, இந்த டாக்டர் பாரு, வேண்டிக்கிட்டு விரதம் இரு, இந்த நேர்த்திக்கடன் பண்ணுனு நொந்துட்டேன் சமு. எவ்வளவுதான் முடியும் சொல்லு. உன்னை மாதிரியே எல்லாம் செஞ்சேன். ஒருகட்டத்துல அதுவே என்னை டிப்ரஸ் ஆக்கிடுச்சு. நாம எதிர்த்து பேசாத வரைக்கும் நம்மள ஏதாச்சு சொல்லிட்டே இருப்பாங்கன்னு புரிஞ்சுது. பட்டுனு எல்லாம் எனக்கு பேச வரல, ஆனா உள்ளுக்குள்ள இருந்த அழுத்தம் என்னை பேச வச்சிது.
அன்னைக்கு சொன்னியே உமையாள் என் பொண்ணு எனக்குத் தெரியும்னு. ஒருநாளும் அப்படியொரு பேச்சு வந்துரக்கூடாதுனு தான் ஆசை இருந்தாலும் நான் உமையாளை நெருங்குனதில்லை. நமக்குன்னு குழந்தை இருந்து அடுத்த குழந்தையை கொஞ்சுனா எதுவும் தெரியாது, அதுவே நமக்கு குழந்தை இல்லைனு வை… நாம பாக்குற குழந்தைக்கெல்லாம் திருஷ்டி பட்டுருங்குற மாதிரி பேசுவாங்க. நம்ம ஏக்கம் அவங்களை தாக்கிடுமாம். பெத்தவங்க சாதாரணமா சொல்ற விஷயம் கூட என்னை குத்துற மாதிரியே இருக்கும்.” விரக்தியாக சொன்னவள் கண்களில் நீர் கோர்த்து வழிந்தது. துடைக்க விரும்பவில்லை நன்மதி.
“க்கா, நான் அந்த அர்த்தத்துல சொல்லல.” என்ற சமுத்திராவின் பேச்சு நன்மதியை சென்று சேர்ந்தது போல் தெரியவில்லை.
“ஆனா தினம் நான் நூத்துக்கணக்கான பிள்ளைகளை பாக்குறேன். என் பசங்க மாதிரி அவங்களுக்கு நல்லது சொல்லிக் கொடுக்கிறேன்.”
“அக்கா…” சமுத்திராவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. திருமணமான புதிதிலேயே கர்ப்பகால அவஸ்தை என பல நேரம் ஓய்வில் இருந்ததால் வீட்டில் இப்படியான பேச்சுக்கள் எழுந்து அடங்கியது கூட அவளுக்குத் தெரியவில்லை.
“இந்த இயற்கையே நமக்கு எதிரா இருக்குல்ல… மாதவிடாய் வலி, பிரசவ வலி, பிள்ளைப்பேருக்கு அப்புறம் வர்ற மனஉளைச்சல், ஹார்மோன் மாற்றம்னால ஏற்படுற மூட் ஸ்விங்ஸ்னு எல்லாமே நமக்குதான்ல…
ஏன் கோவப்படுறோம், எதுக்கு எரிச்சல்படுறோம், ஏன் அழறோம்னு ஒன்னும் புரியாது. ஆனா அழுவோம், கத்துவோம், சண்டை போடுவோம்… வெயிட் ஏறும் இறங்கும்… சில நேரம் எல்லா வேலையும் இழுத்துப்போட்டு செய்யத் தோணும், சில நேரம் போர்வைக்குள்ள அடைஞ்சிக்க தோணும். ஆம்பிளைங்க இவளுக்கு வேற வேலை இல்லைனு உதறிட்டு போயிடுவாங்க. ஆனா கடைசி வரைக்கும் இது எதையும் தவிர்க்க முடியாம எல்லாத்தையும் நாம தாங்கித்தான் ஆகணும்ங்குற மாதிரி படைச்சிட்டான் இந்த கடவுள்.
நீ ப்ரெக்னன்சில அவஸ்தைப்பட்ட நேரம் நான் பிள்ளை சுமக்காமலேயே வேற மாதிரி அவஸ்தைப்பட்டேன் சமு. ஏன் எனக்கு மட்டும் இப்படினு அழுகாத நாள் இல்லை. ஆனா அது உன்னை பாதிச்சிடுமோனு பயந்து பயந்து ஒதுங்க ஆரம்பிச்சிட்டேன். வீட்ல இருந்தாதான் தேவையில்லாம யோசிக்குறோம், பேச்சு வருதுனு ஸ்கூல்ல ஸ்பெஷல் க்ளாஸ் கேட்டு வாங்குனேன்.
பாப்பா பொறந்த அப்புறம் திரும்ப நாங்க டாக்டர்கிட்ட போனோம். வீட்ல சொன்னா டெய்லி அப்டேட்ஸ் கேக்குறாங்க. என்ன சொல்ல முடியும் என்னால? இந்த மாசம் மாத்திரை சாப்பிட்டோம் எல்லாம் சரியாச்சு அடுத்த மாசம் புள்ளை பொறந்துடும்னா சொல்ல முடியும்? நம்ம கையில எதுவும் இல்லையே… மேல மேல அது அழுத்தம்னு சொல்லாம ஹாஸ்பிடல் போக ஆரம்பிச்சோம்.
ஆனா பாரேன்…” என்று நிறுத்தியவள் விரக்தியாக சிரித்தாள்.
“அங்கேயும் இந்த ஆம்பளைங்களுக்கு பிரச்சனைனா மாத்திரை சாப்புடுறதோட அவங்களுக்கு முடிஞ்சிடுது. ஆனா நாம? காலை விரிச்சி மாசம் நாலஞ்சி தடவை ஸ்கேன் எடுக்கணும். புருஷனுக்கு பிரச்சனைனாலும் நாம தான் ஸ்கேனுக்கு போகணும், ஹார்மோன் மாத்திரை சாப்பிடணும், ஊசி வாங்கிக்கணும், பதினைஞ்சி நாள் வெய்ட் பண்ணனும் ரிசல்ட் நெகட்டீவ்னா திரும்பி எல்லாம் ரிப்பீட்டு…
நமக்கு கொடுக்குற மாத்திரைங்க சிலது சைட் எபெக்ட்ஸ் கொடுக்கும். அதை தாங்க முடியாம உங்க கல்யாணத்துக்கு முன்னாடி நான் முதல் முறை எடுத்த ட்ரீட்மெண்ட்ல பிரேக் எடுத்ததுக்கு வீட்ல ஜாடையா அவ்வளவு பேச்சு. பொண்ணு எல்லாத்தையும் தாங்கிக்கணும்னு. அவங்க பையன் மாத்திரை சாப்பிட்டு, பினேன்ஷியல் சப்போர்ட், மாரல் சப்போர்ட் கொடுக்குறதோட அவங்க பங்கு முடிஞ்சுது.
டேப்லேட்ஸ்னால அதிகமான வெய்ட், என் பீரியட்ஸ் பெயின், கட்டி பார்ம் ஆனது, வயிறு பிரச்சனை கொடுத்தது இதெல்லாம் யார் தாங்குறா? இதை எல்லாம் சமாளிக்குற அளவுக்கு எனக்கு மனசுல உடலுல வலு வேணும்ல? அதை புரிஞ்சிக்கல.
என் உடம்புக்கு என்ன பண்ணுது? அதுக்கு என்ன தேவைன்னு முடிவு பண்ற சுதந்திரம் எனக்கில்லையா? குழந்தை வேணும்னு இவங்க பேச்சை கேட்டு எல்லாம் பண்ணிட்டு என் உடம்பை கெடுத்துகிட்டா நாளைக்கு என் புள்ளையை யார் வளப்பா? அவங்களுக்காக நான் ஹெல்தியா இருக்க வேணாம்? அதுக்கு ஒரு இடைவெளி எடுத்தேன் அப்போ அது பெரிய பிரச்சனையாச்சு. வெறுத்துடுச்சு.
இதோ இப்போவும் ட்ரீட்மெண்ட் போய்ட்டு இருக்கு. தினம் ட்ரீட்மெண்ட் இல்லைனாலும் மாசத்துல கொஞ்சம் நாள் போகுற மாதிரி இருக்கும். வீட்ல சொல்லிட்டு போனா திரும்ப எதிர்பார்ப்பு வரும், பதில் சொல்ற மாதிரி ஆகும். அது வேண்டாம்னுதான் நாங்களே ஸ்பெஷல் க்ளாஸ், மீட்டிங்னு காரணம் சொல்லிட்டு டாக்டர் பாக்க போவோம். பதினைஞ்சி நாள் ஹாஸ்பிடல் போவேன் மீதி நாள் க்ளாஸ் எடுப்பேன். என்னால உனக்கு கஷ்டம்னு புரியுது சமு. ஆனா என்னால முடியல.
மாத்திரை போட்டா எனக்கு அதிக தூக்கம் வருது, எழுந்திருக்க முடியல. டாக்டர் நல்லா தூங்குங்க ஸ்ட்ரெஸ் வேண்டாம்னு சொல்றாங்க. இது எல்லாத்தையும் நான் கூட்டுக்குடும்பத்துல சொல்லிட்டு இருக்க முடியுமா சொல்லு? என் ஹெல்த் இஸ்யூவ குடும்பமா பேசுறது எனக்கு ஒருமாதிரி இருக்கு. சொன்னாலும் புரிஞ்சிப்பாங்களா? இல்லை பாவமா என்னை பாப்பாங்களானு எனக்குள்ளேயே சந்தேகம். அதுல உன்னையும் நான் என் வசதிக்கு யூஸ் பண்ணிக்கிட்டேனோனு இருக்கு.
என்னை விட உனக்கு வீட்டை பாத்துக்க நல்லா வருது, ஈஸியா செய்யுறேன்னு நினைச்சுக்கிட்டேன். நீ சொன்ன வரைக்கும் என் மிஸ்டேக் எனக்குப் புரியல. என்னால முடியலைன்னு சொல்லிட்டேன் அதேமாதிரி உனக்கு முடியலைன்னா நீ சொல்லியிருப்பேனு நினைச்சுக்கிட்டேன். ஆனா நீ எல்லாரும் நம்ம குடும்பம்னு இருந்துட்ட… என்ன சொல்றது? ம்ம்…
இந்த மாசம் அட்வான்ஸ் ட்ரீட்மெண்ட் ட்ரை பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க டாக்டர். பணம் சேர்த்துட்டு இருக்கோம், அதுனாலதான் வேதாவுக்கு கூட நான் கம்மியா வாங்க சொன்னேன். ம்ம், எங்க நம்ம பேச்சை கேக்குறாங்க.” பெருமூச்சுடன் திரும்பி சமுத்திராவை பார்த்தாள் நன்மதி. இப்போது அவள் கண்ணீர் தடம் காய்ந்திருந்தது.
“சமையல் கூட எல்லாருக்கும் செட் ஆகுற மாதிரிதான் செய்யுறேன்னு சொன்னீல்ல. அந்த சமையல்ல கூட இது வேணும் அது வேணும்னு நான் சொன்னா அதிகாரம் பண்ற மாதிரி ஆகிடும். நம்மளால வேலை செய்ய முடியல, செய்றவ உரிமையில தலையிடக்கூடானுதான் நான் கிட்சன் விஷயத்துல ஒதுங்கி இருந்தேன் சமு. எனக்கும் புடிச்சதை ஒருநாள் செஞ்சி சாப்பிடணும்னு ஆசையா இருக்கும் ஆனா எதுக்கு வம்புனு நீ செய்யுறதை சாப்பிட்டுப்பேன். நீ நினைக்கலாம் வேலைக்கு போறேன் நினைச்சதை வாங்கிச் சாப்பிடலாம்னு…
நீயும் அநியாயத்துக்கு எங்களை பழக்கி விட்டுட்ட சமு. நீ இல்லாத சமயம் அதுலேந்து வெளிய வர கஷ்டமாதான் இருக்கு. உனக்கு எல்லாம் செய்ய வருதுன்னு நாங்க இருந்துடுறோம்.” இலகுவாக சொன்ன நன்மதியின் இதழ்களில் மெல்லிய புன்னகை.
“குடும்பம், மாமனார் மாமியார்னு இருக்கலாம் தப்பில்லை, ஆனா என்னைக்கும் நம்ம வீட்டுக்காரங்கதான் நமக்கு கடைசி வரைக்கும். அவங்களுக்குள்ள புரிதல் இருந்தா போதும் சமு. இந்த குடும்ப அரசியல் எல்லாம் சமாளிச்சிடலாம். வேலைக்கு போறோம், போகல நம்ம நடந்துக்குற விதம்தான் நமக்கான மரியாதையை வாங்கித் தரும். வேலைக்கு போறதால எனக்கு மதிப்புனு நீ நினைக்குற, வேலைக்கு போயும் நான் நிம்மதியா இருக்கேனானு கேட்டா இருக்கேன்னு முழு மனசோட என்னால சொல்ல முடியாது.
நீ மகிழ்கிட்ட பேசு. வீட்டு வேலைக்கு ஆள் வச்சிக்கலாம். அத்தை அந்த காலத்து மனுஷி என்னவும் சொல்லிட்டு போகட்டும்னு விடு. அவங்க எதிர்பார்ப்பு எல்லாத்தையும் திருப்திப்படுத்தணும்னு இல்லை. திருப்திப்படுத்தவும் முடியாது. நீ, உன் வீட்டுக்காரர், உன் பசங்க அப்புறம்தான் நாங்க எல்லாம்.” சின்னச் சிரிப்போடு சொன்னவள்,
“தீபாவளி பலகாரம்னு இப்போவே ஆரம்பிச்சிட்டாங்க அத்தை. வெளில வாங்கிக்கலாம்னு சொல்லிட்டேன். நீ அவசரப்பட்டு கிளம்பி வந்துறாத. நிதானமா உனக்கு எப்போ தோணுதோ அப்போ வா சமு. யார் ஒத்துக்கிட்டாலும் இல்லைனாலும் நீயும் உமையாளும் தான் அந்த வீட்டோட தூண்.” என சொல்லிவிட்டு கிளம்ப, நன்மதி வாய் திறந்து சொல்லியதே இவ்வளவு என்றால் சொல்லாமல் எவ்வளவு இருக்குமோ என்ற வருத்தத்துடனும் குழப்பத்துடனும் சோர்ந்து போய் அமர்ந்தாள் சமுத்திரா.