அத்தியாயம் – 05

மணி இரவு எட்டு கடந்தும் சாப்பிட யாரும் வராமல் இருக்க, வேலையாட்களை அனுப்பி அனைவரையும் உணவு மேசைக்கு அழைத்து வரச் செய்தார் வேதவள்ளி.

அனைவரும் ஒவ்வொருவராக உணவு மேசைக்கு வர, தன் அறையைவிட்டு வெளியே வராமல் உள்ளேயே இருந்தான் சாணக்கியன்.

அனைவரும் உணவு மேசையில் அமர்ந்திருக்க, சாணக்கியன் மட்டும் வராமல் இருப்பதைக்கவனித்த வேதவள்ளி, அவரே எழுந்து சென்று அறைக் கதவைத் தட்ட சிறிது நேரத்தில் கதவைத் திறந்தான் அவன்.

“என்னப்பா, சாப்பிட வரலையா?” என வேதவள்ளி கேட்க, “பசிக்கல அம்மா!” என்றான் அவன்.

“பசிக்கலன்னா பரவாயில்லை, வந்து ரெண்டு வாயாவது சாப்பிட்டுப் போ… வெறும் வயித்துல தூங்கக்கூடாது! சரி, அந்தப் பொண்ணு எங்கே?” என வேதவள்ளி கேட்க, தலையைத் திருப்பி பால்கனி பக்கம் பார்த்தான்.

அவன் பார்வை செல்லும் திசையைப் பார்த்தவர், “அந்தப் பொண்ணையும் கூட்டிட்டு வா… அந்தப் பொண்ணு உன்னை நம்பித்தான் வந்திருக்கா! புது இடம், புது வாழ்க்கை, திடீர்னு கல்யாணம் ஆயிருச்சு… அவ ரொம்பப் பயந்திருப்பாப்பா, நீதான் அவளைப் பார்த்துக்கணும்!” என அவர் சொல்ல அவரை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்தான் சாணக்கியன்.

அவன் பார்வையைக் கவனித்தவர், “என்ன?” என்று கேட்க, “ஒன்றுமில்லை!” எனத் தலையசைத்தவன், “சரி, நான் அவளைக் கூட்டிட்டு வர்றேன், நீங்க போங்க!” என அவரை அனுப்பிவிட்டுப் பால்கனியை நோக்கிச் சென்றான்.

அங்கே நிலவை வெறித்தவாறு நின்றிருந்தவளைப் பார்த்தவன், “உன்னை அம்மா சாப்பிடக் கூப்பிட்டாங்க!” எனச் சொல்ல, அவளும் எதுவும் பேசாமல் அவனுடன் நடந்தாள்.

உணவு மேசையில் சாணக்கியனும் ருத்ராவும் அருகருகே அமர, ருத்ராவின் கன்னத்தில் இருந்த கைவிரல் தடத்தைக் கண்டுகொண்டார் விசலாட்சி. “முதல் நாளே பொண்டாட்டியை கை நீட்டி அடிச்சிருக்கான், சரியான முசுடு! இவனுக்குப் போய் இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணி வச்சாங்க பாரு, அவங்களையெல்லாம் சொல்லணும்!” என அவனை மனதுக்குள்ளேயே வறுத்து எடுத்துக் கொண்டிருந்தார்.

அவள் அருகிலிருந்த சைந்தவியும் அவளது கன்னத்தில் இருந்த கைத்தடத்தைப் பார்த்துவிட்டு, அவனை தான் மனதிற்குள் அர்ச்சித்துக் கொண்டிருந்தாள்.

இரவு உணவை முடித்துவிட்டு அறைக்குள் வந்த சைந்தவி, சக்திவேலிடம் சாணக்கியனை தான்  கிழித்துத் தொங்கவிட்டுக் கொண்டிருந்தாள்.

“அந்தப் பொண்ணு கன்னத்தைப் பார்த்தீங்களா? கல்யாணமான முதல் நாளே கை நீட்டியிருக்கான்! மனுஷனா அவன்? இவனெல்லாம் போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ணி உள்ள தள்ளணும்!” எனச் சைந்தவி பொறுமி கொண்டிருக்க, கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவாறு சாவகாசமாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் சக்திவேல்.

அவள் அவன் பார்வைகண்டு எரிச்சலுற்றவள், “என்ன, நான் பாட்டுக்குப் பேசிக்கிட்டு இருக்கேன், நீங்க பாட்டுக்கு பார்த்துக்கிட்டு இருக்கீங்க? மத்த நாள்ல அவனைத் தலையில தூக்கி வச்சுட்டு ஆடுவீங்க இல்ல? இன்னைக்கு என்னன்னா சைலண்டா இருக்கீங்க?” எனச் சைந்தவி கடுப்பாகக் கேட்க,

“அந்தப் பொண்ணு கன்னத்தைப் பார்த்தியே சாணக்கியனோட கன்னத்தைப் பார்த்தியா?” எனக் சக்திவேல் கேட்க அவனைக் அதிர்ந்து பார்த்தாள் சைந்தவி

“என்னங்க சொல்றீங்க? அப்ப  சாணக்கியனைத் திருப்பி அடிச்சுட்டாளா?” எனச் சைந்தவி ஆச்சரியம் கலந்த சிரிப்புடனும் கேட்க,

“அதுல ஏன் உனக்கு இவ்வளவு சந்தோஷம்?” எனச் சந்தேகமாகக் கேட்டான் சக்திவேல்.

“அதெல்லாம் பல நாள் ஆசை மாமா!” எனச் சைந்தவி அவன் கழுத்தைக் கட்டிக்கொள்ள, அவள் கழுத்தில் முகம் புதைத்தான் சக்திவேல்.

சாணக்கியன் அறையில் கட்டிலில் ஒரு புறம் சாணக்கியன் படுத்திருக்க, அவனுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தாள் ருத்ரா. சிறிது நேரம் தூக்கம் வராமல் புரண்டு படுத்தவள், பின் என்ன நினைத்தாளோ, அப்படியே அவன் முதுகைக் கட்டிக்கொண்டு படுக்க அவளை உதர முயன்றான் அவன் கணவன் ஆனால், அவளோ அவன் முதுகில் பல்லி போல் ஒட்டிக்கொள்ள, என்ன நினைத்தானோ அவனும்  அமைதியாகப் படுத்துக்கொண்டான்.

அடுத்த நாள் காலை அவள் எழும்  முன்னே அவன் எழுந்து அலுவலகம் சென்றிருக்க தூக்கத்திலிருந்து எழுந்தவள் கண்டது என்னமோ தன் அருகில் வெறுமையாக இருந்த படுக்கையை தான்.

ஒரு பெருமூச்சுடன் எழுந்தவள் ப்ரெஷ்ஷாகி வெளியே வர, தன் வீட்டிலிருந்து மாற்று உடை கொண்டு வராததை இப்போதுதான் உணர்ந்து தலையில் அடித்துக்கொண்டாள்.

குளியலறைக்குள் தான் நேற்றிரவு அணிந்திருந்த புடவை இருக்க, அதை எடுக்கத் திரும்பியவள், மேசையின் மேல் இருந்த ஒரு கவரைப் புருவம் சுருக்கிப் பார்த்தாள். அந்தக் கவரின் மேல் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கி நோட்டில், “ஈவினிங்குள்ள உன் டிரஸ் வந்துரும், இப்போ இதைப் போட்டுக்கோ!” என்று எழுதியிருந்தது.

அதைக் கண்டு அவள் உதட்டில் ஒரு புன்முறுவல் பூக்க, அந்தக் கவரைத் திறந்து பார்த்தாள். அங்கே அழகிய ஊதா வண்ணக் காட்டன் சேலையும், அதற்குப் பொருத்தமான அட்ஜஸ்டபிள் பிளவுஸும், அவளுக்குத் தேவையான ஏனைய ஆடைகளும் இருக்க, அதைக் கண்டு அவள் முகம் செவ்வானமாய್ சிவக அதை எடுத்து அணிந்துகொண்டு கீழே சென்றாள்.

அவள் படிக்கட்டில் இறங்கி வர, சோபாவில் அமர்ந்திருந்த விசலாட்சியோ மணியை பார்த்துவிட்டு, “வீட்டோட மூத்த மருமகள் இப்படிப் பத்து மணிக்கு எழுந்திருச்சா வீடு விளங்குமா?” என அருகே இருந்த சைந்தவியிடம் கேட்க

“அதைச் சொல்றவங்களே பத்து நிமிஷத்துக்கு முன்னாடிதான் வந்தாங்கன்னு உங்க அவங்ககிட்ட சொல்லு, சைந்தவி!” என கிச்சனிலிருந்து குரல் கொடுத்தார் வேதவள்ளி.

“மூத்த மருமகன் நேரத்துக்கு எழுந்தா போதும், இரண்டாவது மருமக, மூன்றாவது மருமக எல்லாம் நேரத்துக்கு எழும்பணும்னு இல்லைன்னு சொல்லு, சைந்தவி!” எனப் பதிலுக்குச் சைந்தவியிடம் விசலாட்சி சொல்ல, “இது என்ன புதுப் புரளியா இருக்கு?” என வேதவள்ளி சத்தமாகக் கேட்டார்.

“பின்னே என்ன சைந்தவி? எல்லா இடத்திலயும் மூத்த மருமகன், மூத்த மருமகன்னு அவங்களத்தானே தலையில தூக்கி வச்சு ஆடுறாங்க?” எனப் பதிலுக்கு விசலாட்சி சொல்ல, அவர்கள் இருவரையும் ருத்ரா சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருக்க  சைந்தவியோ இவர்களிடம் மாட்டிக்கொண்டு முழித்துக்கொண்டிருந்தாள்.

“ஐ ஐ ஐயய, குடும்பமா இது? எதுக்குக் காலங்காத்தால ரெண்டு பேரும் கத்திக்கிட்டு இருக்கீங்க?” எனச் சோபாவில் விசலாட்சியின் அருகில் அமர்ந்தவாறு அர்ஜுன் கேட்க சமையலறையுள் நுழைந்து கொண்டாள் ருத்ரா.

அர்ஜுன் வந்ததும் விசலாட்சி தன் முகத்தைத் திருப்பிக்கொள்ள, அவனோ அதைக் கண்டுகொள்ளாமல் சைந்தவியுடன் வாயாட ஆரம்பித்துவிட்டான்.

வேதவள்ளிக்கும் விசலாட்சிக்கும் ஆரம்பத்திலிருந்தே ஒத்துவராது என்பதால், அவர்களின் மகன்களுடனுமே விசலாட்சிக்குப் பெரிதாக ஒட்டுதல் இல்லை. அர்ஜுனோ எப்போதும் கலகலவென இருக்க, அவனுடன் சேர்ந்து சிரிக்காவிட்டாலும், அவனிடம் முறைத்துவிட்டுத் திரும்பும் அவர் இதழ்கள் மட்டும் அவரை அறியாமலேயே புன்னகையில் விரிந்துகொள்ளும்.

அவருக்கு எப்போதுமே அர்ஜுன் மீது ஒரு தனிப் பிரியம் உண்டு; அதை அவர் வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும், அவனுக்கு அது நன்றாகவே தெரியும்! ஆனாலும், அவரிடம் வம்பு வளர்த்து நாலு திட்டுக்களை வாங்கிக்கொள்ளாமல் அவனால் இருக்கவே முடியாது.

ஆனால், சாணக்கியன் எப்போதும் இறுக்கமாக இருப்பதனாலோ என்னவோ, அவருக்குச் சாணக்கியனைச் சுத்தமாகப் பிடிக்காது. அவனைப்பற்றிப் பேச்சுக்கள் வந்தாலே அவர் வாயிலிருந்து “முசுடு, முனாமூஞ்சி, சிறுமூஞ்சி” என்றுதான் முணுமுணுக்கும் ,அவனும் அவருடன் பேசியது இல்லை எப்போதும் இறுக்கமாகவே இருக்கும் அவனுடன் விசலாட்சியும் பேச முற்படுவதில்லை.

அத்தியாயம் – 06

சமையலறையினுள் நுழைந்த ருத்ராவிடம் காபிக் கப்பை நீட்டிய வேதவள்ளி, “இந்தாம்மா, காஃபி என்க அவளும் அமைதியாக அதை வாங்கிக் கொண்டாள்.

இங்க பாருமா, அந்த அரைலூசு  விசலாட்சிஎப்பொழுதும் இப்படித்தான் யாரையாச்சும் நோண்டிக்கிட்டே இருக்கும் அது பேசுறதெல்லாம் சீரியஸா எடுத்துக்காத…” என்றவர் ஒரு நிமிடம் நிறுத்தி, “இருந்தாலும், பத்து மணிக்கு எழும்புறது கொஞ்சம் ஓவர்தாமா!” எனச் சொல்ல, அவளது உதட்டில் லேசான புன்னகை எட்டிப்பார்த்தது.

காஃபிக் கப்பை எடுத்துக்கொண்டு ஹாலில் சென்று அமர்ந்து ருத்ரா காபியைக் குடிக்க”சித்தி, நீத்து அண்ணாவோட கன்னத்தைப் பார்த்தீங்களா?” என ஒரு கண்ணைச் சிமிட்டியவாறே கேட்டான் அர்ஜுன்.

சைந்தவியும் பதிலுக்கு, “ஆமா அர்ஜுன், முதல் நாளே உன் அண்ணன் கை மறுபக்கம் திரும்பிடுச்சு போல!” என்க வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டாள் ருத்ரா

சித்தி மலைமாடு மாதிரி இருக்க சாணக்கியனே அடி வாங்கும்போது, நாமெல்லாம் கொஞ்சம் கேர்ஃபுல்லாதான் இருக்கணும் போலவே என அர்ஜுன் கிண்டலாகக் கேட்க, அவனை கொடூரமாக முறைத்தாள் அவன் அன்பு அண்ணி !

அவள் முறைப்பைக் கண்டவன், “ஐயோ, ஒரு ஃப்ளோல இது வில்லிங்குறதையே மறந்துட்டேனே! என்று எண்ணியவன்  சித்தி… சித்திரை மாசம் சென்னையில பனி பொழியும்ங்கிறாங்களே, அது உண்மையா?” எனப் பேச்சை மாற்ற முயன்றான்.

“டேய், உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா? சித்திரை மாசம் மனுஷனா வெளில போனாலே திரும்பி வரும்போது கருவாடாத்தான் வருவான், அந்த அளவுக்கு வெயில் கொளுத்தும்! இதுல சித்திரையில சென்னையில பனியா? போடா போய் புள்ளைக்குட்டியைப் படிக்க வைங்கடா!” என அவள் போனை நோண்ட

“அதுக்கு முதல்ல எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும் சித்தி! கல்யாணத்துக்கு முன்னாடியே புள்ளைக்குட்டிகளை ஸ்கூலுக்குச் சேர்த்தா அம்மா செருப்புக் கழட்டி அடிக்க மாட்டாங்க?” என அர்ஜுன் கூலாகக் கேட்க, தோசைக் கரண்டியுடன் சமையலறையிலிருந்து வெளியே வந்தார் வேதவள்ளி!

அவர் வந்த மாடலேஷனும், அவர் கையில் வைத்திருந்த ஆயுதமும், அவர் தான் பேசியதைக்கேட்டுவிட்டார் என்பதற்குச் சாட்சியாக இருக்க, ஒரே ஓட்டமாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தான் அர்ஜுன்.

காலையிலிருந்து மதியம் வரை எப்படியோ பொழுதை ஓட்டியவளுக்கு, அதற்கு மேல் பொறுக்க முடியாமல்”அத்தை, ஆபீஸ் போயிட்டு வரவா?” என வேதவள்ளியிடம் கேட்க, “அதை ஏன்ம்மா என்கிட்ட கேட்கிற? வேலை இருந்தா போயிட்டு வா!” எனப் பதிலளித்தார் அவர்.

“சரி அத்தை!” என வெளியே வந்தவள், டாக்ஸி பிடித்து ஆபீசுக்கு வந்து சேர்ந்தாள். அவளைக் கண்டதும் எழுந்து மரியாதை செலுத்தினர் கம்பெனி ஊழியர்கள்.

அதை ஒரு தலையசைப்பினூடே கடந்தவள் தனது கேபினுக்குள் நுழைய, அங்கே அவளது நண்பர்களோ,

“படிச்சுப் பார்த்தா ஏறவில்லை,

முழிச்சுப் பார்த்தா ஏறிடுச்சு!” என மேசையில் தட்டி  பாடிக் கொண்டிருந்தனர்.

அவர்களைச் சுற்றிலும் காலி ஸ்நாக்ஸ் பாக்கெட்டுகள் ஜூஸ் பாக்கெட்டுகள் என குப்பையாகக் இருக்க மேசை முழுவதும் சிப்ஸும் ஜூஸும் கடை பரப்பபட்டிந்திருந்தது. அதைக் கண்டு தன் தலையில் அடித்துக்கொண்டவள், “நான் ஒரு நாள் ஆபீஸுக்கு வரலைன்னா, ஆபீஸையே அல்லோல படுத்துறீங்க இல்ல என எரிச்சலாகக் கேட்டாள்.

அவள் குரலைக் கேட்டுத் திரும்பியவர்கள், அவசர அவசரமாக ஸ்நாக்ஸ் பாக்கெட்டுகளை மறைக்க, “அதான்  பார்த்துட்டேனே என்றவாறே அவர்கள் அருகில் இருந்த சேரை இழுத்துப்போட்டு அமர்ந்தாள்.

அவள் வந்ததும் அனைவரும் அமைதியாகிவிட, “இப்போ எதுக்கு எல்லாரும் இவ்வளவு சைலெண்டா இருக்கீங்க?” என கேட்டாள் ருத்ரா.

“நீ நல்ல மூடுலதானே இருக்க? கடுப்புல இல்லையே?” எனக்கேட்டான் கிஷோர்.

அவள் அவனை முறைக்க, “அவ நல்ல மூடுலதான் இருக்கா! கடுப்புல இருந்திருந்தா இந்நேரம் உன் கன்னம் பழுத்திருக்கும்!” என்றவாறு ஸ்நாக்ஸ் பாக்கெட்டை அவள் பக்கம் நீட்டினான் விக்ரம்.

அதை வாங்கியவள், “அந்த வீட்ல ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகமா இருக்குடா! அதுலயும் நான் கல்யாணம் பண்ணியிருக்கிறது என்ன ரகம்ன்னே தெரியல!” எனப் புலம்ப, “எனக்குத் தெரிஞ்சு சாணக்கியன் நம்ம நினைச்ச அளவுக்குத் டெரரான ஆள் இல்லை!” என்றாள் அனன்யா.

“அது எனக்கு அப்பவே தெரியும்  சாணக்கியன் ஒன்னும் டெரர் பீஸ்லாம் இல்ல… அவன் யாரும் அவனை நெருங்கக் கூடாதுன்னு நினைக்கிறான்; அதுக்காகவே எப்பவும் சிடுசிடுன்னு இருக்கான்!” என அவள் தன் யூகத்தை  சொல்ல, “சரி, அதை விடு… உன் தங்கச்சியை என்ன பண்றதுன்னு சொல்லு?” என நீண்ட நேரமாகத் தனக்குள் உறுத்திக்கொண்டிருந்ததைக் கேட்டான் விக்ரம்.

“அவளோட அம்மா-அப்பா கிட்ட அவளைத் திருப்பி அனுப்ப முடியாது! மானம், மரியாதைன்னு அவளை பிடிச்சு கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க. அவளை முதல்ல ஒரு நல்ல காலேஜ்ல சேர்த்துப் படிக்க வைக்கணும். எப்படியும் இங்க  முடியாது பேசாம அவளை அமெரிக்காவுக்கு அனுப்பிரலாம்னு நினைக்கிறேன்! அவ இங்கிருந்து கிளம்புனதுக்குப் அப்புறம் அவங்க அம்மா -அப்பா கிட்ட சொல்லிக்கலாம்!” என ருத்ரா சொல்ல, அவள் நண்பர்களும் அதை ஆமோதித்தனர்.

“சரி, ரொம்ப போர் அடிக்குது இல்ல? நா போய் என் ஆளுக்கிட்ட ஒரு அட்டென்டன்ஸ போட்டுட்டு வந்துறேன்… அந்த கான்ட்ராக்ட் பேப்பரை எடு!” என விக்ரமிடம் சொல்ல, அவனும் அந்த ஃபைலைத் தூக்கி வீசினான். அதை லாவகமாகப் பிடித்துக் கொண்டவள்,

“சரிடா, அப்ப நான் ‘வி.எஸ். குரூப்ஸுக்குப்’ போயிட்டு வர்றேன்!” என்று தன் நண்பர்களிடம் டாட்டா காட்டிவிட்டுச் செல்ல .

“வில்லங்கத்த விலை கொடுத்து வாங்கப் போறா! பாவம், சாணக்கியன் இவகிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடுபடப் போறானோ?” எனப் புலம்பிய கிஷோர்

“டேய், இங்க இருந்த கார் கீ எங்கடா?” எனத் தன் மேசையில் இருந்த கார் சாவியைத் தேட, “அதுதான் ருத்ரா எடுத்துட்டுப் போயிட்டாளே!” என்றாள் அனன்யா.

ருத்ரா கார் எடுத்துட்டுப் போயிட்டாளா? அதுவும் சாணக்கியன் ஆபீஸ்கு டேய், கார்க்கு இன்சூரன்ஸ் இருக்கா?” என விக்ரம் கிஷோரிடம் கேட்க,

“அவ காரைத் திருப்பித் தரும்போது இன்சூரன்ஸுக்குக் கூட கிளைம் பண்ண முடியாத அளவுக்கு டேமேஜ் பண்ணிதான் தருவா!” எனப் புலம்பினான் கிஷோர்.

கிஷோரின் கார் நேராகச் சென்று ‘வி.எஸ். குரூப்ஸ்’ வாசலில் நுழைய, வண்டியை ஓட்டி வந்தவளைக் கண்ட செக்யூரிட்டி பதறிப்போய் காரை நிறுத்தச் சொன்னார். அவரை ஒரு கேள்வியாகப் பார்த்தாள் ருத்ரா.

“மேடம், நீங்க… நீங்க வந்தா சார் உங்களை உள்ள விடக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு!” என்று அவர் சொல்ல,

ஓ, உங்களுக்கு இன்னும் விஷயம் தெரியாதுல்ல?” என்றவள், தன் கழுத்திலிருந்த தாலியைக் காட்டி,

உங்க பாஸே இப்போ உங்க ப்ராப்பர்ட்டிதான்!” என நக்கலாகச் சொல்ல, அவரோ என்ன சொல்வது என்று தெரியாமல் கைகளைப் பிசைந்தவாறு நின்றிருந்தார்.

“மேடம், ஒரு நிமிஷம்… நான் சார்கிட்ட கேட்டுட்டுச் சொல்றேன்!” என்றவர் அர்ஜுனுக்கு அழைத்து ருத்ரா வந்திருப்பதாகச் சொல்ல ஒரு நெடிய பெருமூச்சை விட்டவன், “உள்ள வரச் சொல்லுங்க… அப்புறம் அவங்ககிட்ட மரியாதையா பேசுங்க அவங்க தான் சாணக்கியன் சாரோட வைப் என்க  அந்த செக்யூரிட்டியும் சரியெனத் போனைத் துண்டித்துவிட்டார்.

“மேடம், உள்ள போகலாம்… சார் உள்ள வரச் சொன்னாரு!” என அந்த செக்யூரிட்டி சொல்ல, திமிராக அந்த ஆபீஸுக்குள் நுழைந்தாள் பெண்ணவள்.

அவளைக் கண்டதும் ஊழியர்கள் அவர்களுக்குள்  கிசுகிசுக்க, அதைக் கண்டுகொள்ளாமல் நடந்தவளின் பார்வை அங்கிருந்த ஒரு கேபினின் மீது நிலைத்தது.

சாணக்கியன் தன் அலுவலக அறையில் கணினியில் மூழ்கியிருக்க, தடாலடியாகக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் ருத்ரா.

அவளைக் கண்டவன் இமைகள் சலிப்பாக மூடித் திறக்க, “கொஞ்சமாவது மேனஸ் இருக்கா?” எனச் சொற்களைக் கடித்துத் துப்பினான்.

“மேனஸா? அப்படின்னா என்ன சார்?” எனப் படுநக்கலாகக் கேட்டாள் அவன் மனைவி.

சலிப்பாக ஒரு பெருமூச்சை விட்டவன், “எதுக்கு இங்கே வந்திருக்க?” என எரிச்சலுடன் கேட்க, அவனுக்கு முன் ஒரு ஃபைலை நீட்டினாள் ருத்ரா.

அந்த ஃபைலைப் புருவம் சுருக்கிப் பார்த்தவன், அவளைக் கேள்வியாகப் பார்க்க, “ஆர்.வி. குரூப்ஸோட கான்ட்ராக்ட் சைன் பண்ணியிருக்கீங்க, ஞாபகம் இருக்கா? ஆர்.வி. குரூப்ஸோட நியூ சி.இ.ஓ நான் தான்!” என அவள் தன் கைகளை நீட்ட

“லைஃப்ல நீ எப்பவும் லாயலா இருக்கவே மாட்டியா?” என எரிச்சலுடன் கேட்டவனை இலக்காரமாகப் பார்த்தவள், “லாயலா இருந்தா எல்லாரும் ஏமாத்துறாங்க பாஸ்! சரி, அது இருக்கட்டும்… லெஃப்ட் சைட் கேபின் ஜான்வி தான, அவ இங்க என்ன பண்றா?” என அவனைக் கூர்மையாகப் பார்த்தவாறு கேட்டாள் ருத்ரா.

“தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிசினஸ்!” எனச் சாணக்கியன் கடுப்பாகச் சொல்ல,

“சார், நான் உங்க வைஃப் சார்! இதைக் கேட்க எனக்கு ரைட்ஸ் இருக்கு. உங்க எக்ஸ் (Ex) லவ்வர் இந்த ஆபீஸ்ல வேலைக்குச் சேர்த்திருக்கீங்க… அஸ் அ வைஃப்ங்கிற முறையில இதைக் கேட்கிறது என் உரிமை இல்லையா?” என நக்கலாகக் கேட்டாள் ருத்ரா.

“இதப் பாரு ருத்ரா, பைத்தியம் மாதிரி பேசாத! இது என் ஆபீஸ்… இங்க யாரை எந்த வேலைக்கு அப்பாயிண்ட் பண்ணனும்னு எனக்கு நல்லாவே தெரியும். ஜஸ்ட் கெட் அவுட்!” என கிட்டத்தட்ட கர்ஜித்தான் சாணக்கியன்.

அவன் பதிலில் அவள் ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிற, “ஓஹோ, கதை அப்படிப் போகுதா? சரி, இதை எப்படி ஹேண்டில் பண்ணனும்னு எனக்குத் தெரியும்! என எழ போனவளை இது என் ஆபீஸ்… இங்க வந்து பிரச்சனை பண்ணினா, யாரு என்னன்னு எல்லாம் பார்க்க மாட்டேன்; கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ள வேண்டி இருக்கும்! நான் பண்ண மாட்டேன்னு நினைக்காத, சொன்னா செய்வேன்னு உனக்கு நல்லாவே தெரியும். கெட் அவுட்!” என்று சீறினான் சாணக்கியன்.

அவன் பேசியதில் அவள் முகம் கருக்க, அங்கிருந்து கோபமாக வெளியே வந்தவள், இடது பக்கமிருந்த கேபினிலிருந்து ஜான்வியை முறைத்தவாறே வெளியே சென்றாள்.

காரில் சென்று அமர்ந்தவள் விக்ரமிற்கு அழைக்க, “என்னடி, இப்பதானே இங்கிருந்து போன? அதுக்குள்ள கால் பண்ணியிருக்க… ஏதாவது பிரச்சனையா?” என விக்ரம் கேட்க,

“விக்ரம், நான் உனக்கு ஒரு பிக் அனுப்பியிருக்கேன்… அந்தப் பிக்ல இருக்கிற பொண்ணைத் தூக்கிரு!” என்று சொல்லியவாறு போனை அணைத்துவிட்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்; அப்போது அவளது கண்முன் பழைய நினைவுகள் நிழலாடின.