“என்ன சத்யா ஹீரோ மாதிரி கெத்தா இருப்பேன்னு பாத்தா இப்படி பொசுக்குன்னு மன்னிப்பு கேட்டுட்ட? உன் கிட்ட இருந்து நான் இதை எதிர் பாக்கலை?”, என்ற அகிலின் குரலில் நக்கல் வழிந்தோடியது.
“ஹீரோயிசம் காட்டினா நான் வாழ்க்கையில நிறைய பேரை இழந்துருவேன். அப்படி ஒண்ணும் நான் பெரிய ஆள் இல்லை”
“ஆனாலும் நீ ரொம்ப நல்லவன் சத்யா, எதுக்கு இப்படி சொல்றேன்னு பாக்குறியா?”
“ஆமா”
“தங்கச்சியை கண்டு பிடிக்கணும்ன்னு என் கிட்டயே சொல்றியே? ஒரு நிமிஷம் கூட உன் தங்கச்சியை கடத்துனது நான் தான்னு உனக்கு தோணவே இல்லை பாத்தியா?”, என்றதும் அதிர்ந்து போனான்.
“வாட்? நீயா? நீயா ஸ்ரீயை கடத்தின?”
“ஆமா?”
“அப்படின்னா நீ குணாவா?”
“இல்லை, ஆனா குணா என்னோட ஆள் தான். நான் சொல்லி தான் அவன் உன் தங்கச்சியை கடத்தினான். ஆனா நான் அவளை கடத்த எல்லாம் சொல்லலை. அவளை கெடுத்து அவ வாழ்க்கையை கெடுக்க சொன்னேன். ஆனா உன் தங்கச்சி உஷாரு, அவன் கூட எங்கயும் போக மாட்டேன்னு சொல்லிட்டா. அதான் நானே இறங்கிட்டேன்”
“டேய் உன்னை..”
“என்ன சத்யா கோபம் வருதா? என்னைக் கொல்லனும் போல இருக்கா?”
“என் கையில மட்டும் நீ கிடைச்சா உன்னை சும்மா விட மாட்டேன் டா. ஸ்ரீக்கு ஒண்ணும் ஆக கூடாது. அப்படி மட்டும் ஏதாவது ஆச்சு..”
“அவ்வளவு சீக்கிரம் நான் உன் கிட்ட சிக்கிருவேன்னு நினைக்கிறியா?”, என்று அகில் கேட்க நான்கு கெட்ட வார்த்தை போட்டு அவனை திட்டியவன் “இப்ப உனக்கு என்ன தான் டா வேணும்?”, என்றான் சலிப்பாக.
“எனக்கு உன் சந்தோஷம் தான் வேணும். நீ நிம்மதியா இருக்க கூடாது. பிரச்சனைக்குள்ள இருந்துகிட்டே இருக்கணும். அதே மாதிரி நான் யாருன்னு அவ்வளவு சீக்கிரம் உன்னால கண்டே பிடிக்க முடியாது. நீ இப்ப போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து கிளம்புற. அங்க எந்த கம்பலைண்ட்டும் கொடுக்க கூடாது”
“ஸ்ரீ”
“அவ கிடைப்பா. அவளை கண்டிப்பா அனுப்பி வச்சிருவேன். ஆனா நாள் ஆகும். உனக்கு ஒரே ஒரு ஆப்சன் வேணும்னா தரேன். அவ உயிரோட வேணும்னா….”
“ஏய்”
“என்ன மிரட்டுற? உன் கிட்ட இருந்து என்ன வேணும்னு அடுத்த ஃபோன்ல சொல்றேன். போலீஸ் கிட்ட மட்டும் போன? உன் தங்கச்சி நிலைமையை யாரும் வாயால கூட சொல்ல முடியாத படி ஆகிரும்”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டான்.
என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டை நோக்கி கிளம்பினான் சத்யா. பெற்றவர்களிடம் என்ன சொல்லி சமாளிக்க போகிறோம் என்று அவனுக்கு தெரியவே இல்லை.
அவன் கார் சென்று நின்ற போது குல்கர்னியும் மிதுனும் சரியாக அதே நேரம் வண்டியில் வந்து இறங்கினார்கள்.
“ஏதாவது தகவல் வந்துச்சா தம்பி?”, என்று கேட்டார் குல்கர்னி.
“அன்னைக்கு மிரட்டினவன் தான் ஸ்ரீயை கடத்தி வச்சிருக்கான். போலீஸ் கிட்ட போக கூடாதுன்னு சொல்லிட்டான். இன்னும் கொஞ்ச நேரத்துல அவனுக்கு என்ன வேணும்னு கால் பண்ணுவானாம். வாங்க உள்ள போகலாம். அப்பா கிட்ட சொல்லி தான் ஆகணும். பக்குவமா சொல்லணும். உடம்பு சரி இல்லாத மனுஷர்”, என்ற சத்யா அவர்களை உள்ளே அழைத்துச் சென்றான்.
ஆனால் அவர்கள் உள்ளே போன போது அங்கே இருந்தது பாமா மட்டும் தான். “சத்யா ஸ்ரீ பத்தி தகவல் வந்துச்சா?”, என்று கண்ணீருடன் கேட்டாள் பாமா.
“அவளுக்கு ஒண்ணும் ஆகாது மா. கண்டு பிடிச்சிறலாம். அப்பா எங்க?”
“நீ கிளம்பினதும் வெளிய போய்ட்டு வரேனு சொல்லிட்டு போனார். இன்னும் வரலை”, என்று சொன்னதும் இன்னும் திக்கென்று இருந்தது அனைவருக்கும்.
“தெரியலை டா. பிள்ளையை வேற காணும். நீங்க எங்க போறீங்கன்னு கேட்டேன். பொண்ணு இன்னும் வீட்டுக்கு வரலை. அவளை தேடப் போகாம என்னை வீட்ல இருக்க சொல்றியா? என் பிள்ளைகளுக்கு ஒண்ணுனா அந்த எமனையே நான் எதித்து நிப்பேன்னு சொல்லிட்டு போய்ட்டார் டா”, என்று பாமா சொல்ல யாருக்கு என்ன பேச என்று தெரிய வில்லை.
அப்போது சத்யா போன் அடிக்க கடத்தல் காரனோ என்ற சந்தேகத்தில் போனைப் பார்த்தான். ‘அப்பா’ என்று திரையில் மின்ன அவசரமாக எடுத்தவன் “அப்பா எங்க இருக்கீங்க?”, என்று கேட்டான்.
“அம்மா கிட்ட எதுவும் சொல்லாத. அவசரமா நம்ம குடவுன்க்கு வா”, என்ற தீனா அவன் பதில் கேள்வி கேட்பதற்குள் போனை அணைத்து விட்டார்.
“அப்பா நம்ம ஆபீஸ்ல தான் மா இருக்காங்க. நீங்க பயப்படாதீங்க. ஸ்ரீயை கூட்டிட்டு தான் வருவோம்”, என்று அன்னையிடம் சொல்லி விட்டு இரண்டு எடுத்து வைத்தவன் பின் நின்று குல்கர்னி மற்றும் மிதுனைப் பார்த்தான்.
அவர்களும் குழப்பமாக அவனைப் பார்க்க “நீங்களும் என் கூட வாங்க. வண்டி இங்கயே இருக்கட்டும்”, என்றான். அவர்களும் அவன் பின்னே சென்றார்கள்.
அதே நேரத்தில் தன்னுடைய அறையில் பயங்கர குழப்பத்தில் இருந்தாள் வீணா. அவளுக்கு அடுத்து என்ன செய்ய ஏது செய்ய என்று எதுவுமே தெரிய வில்லை. சத்யா அவளுக்கு புரியாத புதிராக தான் இருந்தான்.
அதையும் விட ஸ்ரீ அவளை அதிகம் பாதித்தாள். அவளை எண்ணி அவ்வளவு கஷ்டமாக இருந்தது. ஒரு நாள் பார்த்தது தான். ஆனால் அந்த நாளிலே இருவருக்குள்ளும் ஒரு தோழமை வந்திருந்தது. அதற்கு பின் அவளிடம் வீணா பேச வில்லை.
ஆனால் அடிக்கடி போன் செய்து பேசி இருக்க வேண்டுமோ என்று இப்போது தோன்றியது.
கொலை மிரட்டல், கடத்தல், போதைப் பொருள் என அனைத்தும் சினிமாவில் வருவது போலவே இருந்தது. அவள் ஒரு சாதாரண பெண். அன்னை தந்தை பார்க்கும் ஆணை திருமணம் செய்து நல்ல முறையில் வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே அவளுக்கு இருந்தது. ஆனால் இப்போது பார்த்தால் அவள் வாழ்வில் பல திருப்பு முனைகள்.
இவ்வளவு குழப்பத்திலும் சத்யா மீது கோபம் இருக்கிறதே தவிர வெறுப்பு இல்லை என்றும் அவள் மனது உணர்ந்தே இருந்தது. இப்போது அவன் நிலையில் இருந்து யோசிக்கும் போது அவனது கோபம் கூட சரி தானோ என்றும் தோன்றியது. அப்படி எண்ணினாலும் மிதுனை எப்படி அப்படி நினைக்கலாம் என்ற கடுப்பும் இருந்தது.
“ஓம் நமசிவாயா, ஆதியும் அந்தமும் தெரிந்தவன் நீ மட்டுமே? எனக்கு ஏது சரி என்று இருப்பதை நிறைவேத்து”, என்றவள் அவள் வாழ்வில் முடிவு எடுக்கும் பொறுப்பை அந்த ஈசனின் பொறுப்பில் விட்டுவிட்டாள்.
சத்யா, குல்கர்னி மற்றும் மிதுன் மூவரும் இப்போது தீனா முன்னே நின்றார்கள்.
“அப்பா நீங்க ஓகே தானே?”, என்று கேட்டான் சத்யா.
“எனக்கு ஒண்ணும் இல்லை டா. வாங்க சம்பந்தி, வா பா மிதுன்”, என்று அவர்களை வரவேற்று விட்டு மகனிடம் “ஸ்ரீ பத்தி தகவல் வந்துச்சா?”, என்று கேட்டார்.
அவளுடைய போதை பழக்கம் பற்றிச் சொல்லாமல் “என் கல்யாணத்தை நிறுத்துனான்ல? அவன் தான் பா ஸ்ரீயை கடத்தி வச்சிருக்கான். இப்ப கொஞ்ச நேரத்துல கால் பண்ணுவானாம். போலீஸ் கிட்ட போக கூடாதுன்னு சொல்லிருக்கான்”, என்றான்.