அத்தியாயம்-22

இடுப்பில் கை வைத்தபடி அவளைப் பார்த்தான் குருசேத்ரன்.

செம்பருத்தி எதுவும் பேசாமல் உடை மாற்றச் சென்றாள். அவனால் உள்ளமும் சோர்வு, உடல் அதற்கும் மேல் சோர்வு. தன்னை கொஞ்சிக் கொண்டாடித் தீர்த்தால் ஓடிச் சென்று ஒட்டிக்கொள்வேன் என்று நினைத்தானா? அது மட்டும் செம்பருத்தியிடம் நடக்காது. போர்க்களத்தில் பூக்களுக்கு என்ன வேலை என்பதைப் போலத்தான் அவளின் வாழ்க்கை.

உடையை மாற்றியவன் நீர் சொட்டச் சொட்ட அமர்ந்திருந்தான். செம்பருத்தி உடையை மாற்றிக்கொண்டு நேராகக் கீழே சென்றாள்.

அவளின் புதிய உடையைப் பார்த்ததுமே சங்கதி தெரிந்திருக்க, எதுவும் பேசாமல் நமட்டுச் சிரிப்புடன் சாப்பிடுவதைத் தொடர்ந்தார்.

“செம்பா, தம்பி வரலையா?”

“வருவார், அக்கா! எனக்குப் பசிக்குது, கொடுங்க,” என்று உணவை அரக்கப் பறக்க உள்ளே தள்ளினாள்.

“இன்னும் வரலையே?” என மணியம்மை படிக்கட்டையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“வருவார்,” எனக் கையை கழுவிக்கொண்டு அருகில் வந்து அமர்ந்தாள் செம்பருத்தி.

“சரி, நீ இரு. நான் என் பையனைப் போய்ப் பார்த்திட்டு வரேன். அவன் பசி தாங்க மாட்டான்,” என்று படிக்கட்டில் ஏறினார் மணியம்மை.

“ஐயோ, இருங்க! நான் போய்ப் பார்த்திட்டு வரேன்,” என வேகமாக மேலே சென்றவள், “மலைக்குரங்கு,” எனச் சொல்லிக்கொண்டே அவனைப் பார்த்தாள்.

அப்படியே அமர்ந்திருந்தான். அருகில் சென்றவள், “சாப்பிட வாங்க. உங்க அம்மா கூப்பிடுறாங்க,” என்றாள்.

பதில் இல்லை.

“வரலையா? சரி, நான் போறேன்,” என நகர்ந்தவள் ஒரு பெருமூச்சுடன், “சாப்பிட வாங்க. உங்களைத்தான் கூப்பிட வந்தேன்.”

அவனது முகமே சங்கதியைப் புரிய வைக்க, “யார் கோபிக்கணும்னு விவஸ்தையே இல்லை. பார்க்கப்போனால் நான் தான் உங்ககிட்ட கோபமா இருக்கணும். நீங்க எதுக்கு இப்படி இருக்கீங்க!”

“செம்பருத்தி!” என மணியம்மை அழைக்க,

“இதோ அஞ்சு நிமிடத்தில் வரேன் அத்தை!” என்றுவிட்டு எதிரில் இருப்பவனைப் பார்த்தாள். ஒரு நொடி சிரிப்பு வந்துவிட, அருகில் நெருங்கினாள்.

தட்டிவிட்டான்.

“போயிடுவேன். போகவா?” என்றவள் இரண்டு எட்டுகள் வைக்க…

குருசேத்ரன் முகம் இன்னும் கோரமாக இருந்தது. அருகில் வந்தவள் அவனது தலையைச் சேலையின் முந்தியில் துடைத்துக்கொண்டே, “அழகா இருக்கீங்க! இன்னைக்கு,” என்றாள்.

“பொய் சொல்லாத!”

“பார்ரா! நிஜமா சொல்றேன். இன்னைக்கு அழகா இருக்கீங்க.”

“கல்யாணம் பண்ணும்போது என்னோட அழகு உனக்குத் தெரியலையா?”

“அப்போ இருந்த குருசேத்ரன் வேற. இப்போ இருக்கிற குருசேத்ரன் வேற.”

“என்ன வேற?” என்று இடையில் முத்தம் பதித்தான்.

“போதும், வந்து சொல்றேன். அத்தை வெயிட்டிங். வாங்க, வந்து சாப்பிடுங்க,” எனக் கையுடன் அழைத்துச் சென்றாள்.

மணியம்மை நிமிர்ந்து பார்க்க, இருவரும் இறங்கி வந்தார்கள்.

அவளே அனைத்தையும் பரிமாறினாள். உணவைப் பொறுமையுடன் சாப்பிட்டவன், “சாந்தாவிடம் செம்பருத்திக்கு மட்டும் கருவாடு செஞ்சு கொடுத்திடுங்க! அம்மாவுக்கு வேணாம். அவங்க சாப்பிடக் கூடாது,” என்றுவிட்டு மேலே சென்றான் குரு.

இந்த நொடி செம்பருத்தி அவன் அடிமையாகிவிட்டாள். போகும் அவனையே பார்த்தாள்.

“என்னாச்சு?” என மணியம்மை கேட்க,

“ஒண்ணுமில்லை,” எனச் சிரித்தாள் தனக்குத் தானே.

“இங்கே வந்ததிலிருந்து இன்னைக்குத்தான் நீ சிரிச்சிருக்க! உன்னோட சிரிப்பு அழகா இருக்கு,” என்றார் மணியம்மை.

செம்பருத்தி வெட்கத்துடன் மேலே சென்றாள். “இன்னைக்கு ஒர்க் இல்லையா?” எனக் கேட்டுக்கொண்டே வந்தாள்.

“உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.”

“என்ன?”

“ரிசப்ஷன் வேலையை ஸ்டார்ட் பண்ணலாம்னு நினைக்கிறேன்,” என்றான்.

“ம்ம் ஓகே, பண்ணலாமே!” எனச் செம்பருத்தி கூற…

லேப்டாப்பை எடுத்து வைத்தவன், ‘மேனேஜ்மென்ட் ஈவன்ட்’டில் பேசினான். அவன் பேசும் தோரணையை இமை வெட்டாமல் பார்த்தாள் செம்பருத்தி.

‘இத்தனை அழகாக இருக்கிறானா?’ என்பது அவளுக்கே ஆச்சரியம்தான். மோவாயில் அழகான வெட்டுக் குழி, அடர்த்தியான கேசம், கிளீன் சேவ் முகம், படிக்கட்டுத் தேகம் கட்டுமஸ்தான உடல்வாகு! கண்கள் மட்டும்… கண்கள் மட்டும்…

“என்னாச்சு? எதுக்கு என்னை அப்படிப் பார்க்கிற?”

“உங்களோட கண்ணுக்கு என்னாச்சு?” எனச் செம்பருத்தி கேட்க,

“எனக்கு என்ன? நான் நல்லா இருக்கேன்,” என குருசேத்ரன் சொல்ல,

“இல்லை, உங்களோட கண்ணு சிவந்திருக்கு. நீங்க குடிப்பீங்களா?” எனக் கேட்டாள்.

குருசேத்ரன் அவளை முறைத்துப் பார்க்க, “ஐயோ, சாரி! தெரியாமல் சொல்லிட்டேன். கருவாட்டுக்கே என்னை கருவாடு பண்ணிட்டீங்க! கண்டிப்பா நீங்க குடிக்க மாட்டீங்க,” என்றாள் செம்பருத்தி.

“நான் டிடோட்டலர் டி! என்னைப் போய்,” என்று நிறுத்திவிட்டு நகர்ந்தான்.

“அச்சோ, சாரி! ப்ளீஸ்! ப்ளீஸ் பா!”

“ஹே, ‘அப்பா’ சொல்லாத! என்னைப் பார்த்தால் உனக்கு அப்பா போல தெரியுதா?”

“அப்போ வேற என்ன சொல்ல?”

“கால் மி குரு.”

“ஓகே, குரு!” என்றாள் சட்டென.

அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவன் லேப்டாப் பக்கம் செல்ல…

“எப்போ பாரு லேப்டாப் தானா?”

“பண்ணலாமா?” என கேட்டானே பார்க்கலாம்.

“ஹாங்,” என அவள் விழிக்க…

“ப்ச், பண்ணலாமா?”

“ம்ம், அது!”

அவளைத் தூக்கிக்கொண்டு படுக்கைக்குச் சென்றான். அவ்வளவுதான் மொத்தமாக அவளை மென்று தின்று முழுங்க நினைத்தான். என்ன தோன்றியதோ அத்தனையும் செய்து அவளைத் திகட்டத் திகட்ட தீரா காதல் போர் செய்தான். ‘சொல்லாதே, காட்டு’ என்பது போல அவளைக் காட்டிச் செய்தான்.

அடுத்த நாள் அனைத்தும் தலைகீழாக மாறியிருந்தது. அவனுடன் எழுந்தாள்; அவனுக்குப் பார்த்துப் பார்த்து அனைத்தையும் செய்தாள். இதோ, மதிய உணவு ஆபீஸுக்கு எடுத்து வரவா எனக் கேட்டாள்; கொண்டு வந்தாள்; ஊட்டிவிட்டாள். குருசேத்ரனிடம் மொத்தமாகச் சரணடைந்தாள்.

இதோ, அந்த வாரத்திலேயே பிரம்மாண்டமாக வரவேற்பு நடந்தது. செம்பருத்தியின் மொத்தக் குடும்பமும் உற்சாகத்தில் இருந்தது. அதே போல மணியம்மையும் தான்.

மணியம்மையின் தோழிகள் சிவகாமி, கண்ணகி, சரஸ்வதி என்று மூவரும் வந்திருந்தார்கள்.

“ஜோடிப் பொருத்தம் அருமையா இருக்கு,” என கண்ணகி கூற,

“அன்னைக்கே இவங்க கணவன் மனைவி அப்டின்னு நான் நினைச்சேன்,” என்றார் சிவகாமி.

“நன்றி சிவகாமி. நீ சொன்னதுக்குப் பிறகுதான் என் மனசுல இருந்த ஆசையை என் பையன்கிட்ட சொன்னேன். எப்பவும் முரண்டு பிடிப்பவன் கல்யாண விஷயத்தில் உடனே ஒத்துக்கிட்டான்,” என்றார் மணியம்மை உற்சாகமாக.

“அப்படியா? அப்போ ட்ரீட் வைக்கிற!” என சரஸ்வதி கேட்க,

“கண்டிப்பா! என்னோட வாழ்க்கையில் மிகப்பெரிய சந்தோஷம் எங்க வீடு தேடி வந்திருக்கு. இனி என்ன வேணும் எனக்கு? அப்படியே பறக்கணும் போல இருக்கு,” என்றார் மணியம்மை.

“அப்போ பறந்துட்டாப் போச்சு,” என இருவரும் சிரித்துக்கொண்டே ‘ஆல் இந்தியா டூர்’ பற்றி கூறினார்கள்.

“கண்டிப்பா என் பையன் ஒத்துக்க மாட்டான்,” என மணியம்மையின் முகம் சின்னதாகிப் போய்விட,

“உன் மருமகள்கிட்ட சொல்லி சம்மதம் வாங்கு. ஜாலியா போயிட்டு வரலாம்,” என கண்ணகி கூற, ஸ்ரீராம் அவ்விடத்துக்கு வந்து, “மேடம், பெரியவர் வந்திருக்கார்,” என அழைத்தான்.

சட்டெனக் கண்கள் பனிக்க, அவ்விடத்தை விட்டு நேராக அழைக்கச் சென்றார் மணியம்மை.

குருசேத்ரனின் பெரியப்பா வரதராஜன் மற்றும் அவரது மகன் தீட்சண்யன், மகள் கீர்த்தனா என மூவரும் வந்திருந்தார்கள்.

அவர்களைப் பார்த்ததும் குருசேத்ரன் முகம் இன்னும் இறுகிப்போனது. ஆனால் வரதராஜன் எப்பொழுதும்போலப் பார்த்தார்.

“வாங்க மாமா! கண்ணு, வாடா தீட்சண்யா. கீர்த்தனா? எல்லாரும் சவுக்கியமா? அக்கா வரலைங்களா?”

“ஆத்தாவுக்கு உடம்பு முடியலைங்க சித்தி, அதான் அம்மா வரலைங்க. வீட்டுக்கு வரேன்னு சொன்னாங்க,” என்றாள் கீர்த்தனா.

வரதராஜன் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தார்.

“என்னாச்சுங்க மாமா?”

“அப்படியே தியாகராஜனைப் பார்க்கிற போல தோணுது,” என்றார்.

மணியம்மை தன் மகனைப் பார்த்து நீர் கோர்க்க நின்றார்.

வரதராஜன் சிரித்துக்கொண்டே, “என் தம்பி பண்ண நினைச்சத இவன் பண்ணிட்டான். என்னை தள்ளிட்டு முன்னாடி வந்துட்டான். எப்படி இருந்தாலும் என் குடும்ப ரத்தம் தானே?” என்றுவிட்டு மேடை ஏறினார்.

குருசேத்ரன் பார்வை தீட்சண்யன் மீது ஏளனமாகப் படிந்தது.

மணியம்மை அறிமுகம் செய்து வைத்தார்.

“சரி குரு, நான் போயிட்டு வரேன்,” என வரதராஜன் கூற,

“வீட்டுக்கு வாங்கன்னு சொல்லுடா! உன்னோட பெரியப்பாடா!” என மணியம்மை கூற,

செம்பருத்தி அவர்களைப் புன்னகையுடன் பார்த்து, “வீட்டுக்கு வாங்க,” என்று கூறினாள்.

வரதராஜன் புன்னகையுடன், “மணியா, அவங்களோட அப்பா இருக்கற வீட்டுக்கு வந்துட்டுப் போ,” எனச் சொல்லிப் புறப்பட்டார்.

சுப்ரியா வந்து வாழ்த்துக்களைக் கூறினாள்.

செம்பருத்தி அவனுக்கு அருகில் ஜாடிக்கு ஏற்ற மூடி போல இருந்தாள்.

கர்ணன், துளசி, தாமரை, ரோஜா, சம்பூர்ணம், தர்மன், பாரி, செல்வி என அனைவரும் மணமக்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்கள்.

இனிதாக முடிந்தது வரவேற்பு.

மணியம்மை செம்பருத்தியின் முன் பாவமாக நின்றிருந்தார்.

“என்ன இது?”

“ஹே, லக்கி கேர்ள்! சுவீட்டி, இது ஒண்ணை மட்டும் அத்தைக்குச் செய் டி!”

“என்ன விஷயம்? சொன்னா தானே தெரியும்?”

“எனக்கு ஆல் இந்தியா டூர் போகணும். உன் புருஷன்கிட்ட பர்மிஷன் வாங்கி கொடு, ப்ளீஸ் டி!” என்றார் மணியம்மை.

“அவர்கிட்ட என்னால திட்டு வாங்க முடியாதுப்பா! பிள்ளையைப் பெக்கச் சொன்னா நெருப்புக் குழம்பைப் பெத்து வெச்சிருக்கீங்க,” என செம்பருத்தி முன்னால் செல்ல…

இதோ இருவரின் முன் ஆளுமையாக அமர்ந்திருந்தான் குரு.

“என்ன விஷயம்?” என இருவரையும் துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தான்.

“அது வந்து அத்தை…”

குரு தன் அம்மாவைப் பார்க்க…

“என்னங்க, ப்ளீஸ். அத்தை வந்து ஆல் இந்தியா டூர் போக ஆசைப்படுறாங்க. அனுப்பி வைப்பீங்களா? கண்ணகி ஆண்ட்டி, சிவகாமி ஆண்ட்டி, சரஸ்வதி ஆண்ட்டி மூணு பேரும் போறாங்களாம்,” என்றாள் செம்பருத்தி.

மணியம்மை பதட்டத்துடன், “இல்லை குரு, நான் வேணாம்னு தான் சொன்னேன். ஆனால் செம்பருத்திதான் போயிட்டு வாங்க அப்டின்னு சொன்னா! நான் என்ன பண்ணட்டும்?” என கேட்டார்.

“அத்தை, என்னை கோத்துவிட்டுட்டீங்க?” என அவள் விதிர்த்துப் பார்க்க,

குருசேத்ரன்…?

தொடரும்…