“ஸ்ரீயை இன்னும் காணலை. எப்பவும் இந்நேரத்துக்கு வந்துருவா. அவ போனும் ஸ்விட்ச் ஆப்ன்னு வருது. எனக்கு பயமா இருக்குங்க”

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. வந்துருவா. போன்ல சார்ஜ் இல்லாம இருக்கும்”

“அவ எப்பவும் இப்படி பொறுப்பு இல்லாம இருக்க மாட்டா. லேட் ஆனா கூட சொல்லிருவா. எனக்கு பயமா இருக்கு. எல்லாம் உங்களால தான்”

“நான் என்ன டி செஞ்சேன்?”

“தப்பு பண்ணுறது பிள்ளைங்க இயல்பு தான். நாமளும் அந்த வயசை கடந்து தானே வந்துருக்கோம்? அவ என்ன பண்ணிட்டான்னு அவ கிட்ட பேசாம முகத்தை தூக்கி வச்சிக்கிட்டு இருந்தீங்க? அதுல இருந்தே பிள்ளை ஒழுங்கா இல்லை. எதையோ பறி கொடுத்தவ மாதிரி தான் இருந்தா. இப்ப எதுவும் தப்பான முடிவு எடுத்துட்டாளோன்னு பயமா இருக்கு”

“எனக்கு அதை சத்யா பண்ணினா பெருசா தெரிஞ்சிருக்காது பாமா. ஆனா ஸ்ரீ பண்ணினது தான் என்னால தாங்க முடியலை. நான் என்ன அவ கிட்ட அப்பா மாதிரியா இருந்தேன்? ஒரு பிரண்ட் மாதிரி தானே அவ கிட்ட பழகினேன்?”

“சரி விடுங்க, நான் ஏதோ பயத்துல பேசிட்டேன். நீங்க ஏதாவது யோசிச்சு உடம்ப கெடுத்துக்காதீங்க. முதல்ல சத்யா கிட்ட சொல்றேன். அவன் நேரா ஒரு எட்டு பாத்துட்டு வரட்டும்”, என்று சொன்னவள் மகனுக்கு அழைத்தாள்.

“சொல்லு மா”

“பாப்பா இன்னும் வீட்டுக்கு வரலை சத்யா. எனக்கு பயமா இருக்கு. உனக்கு தெரியும் தானே? அவ இப்படி எல்லாம் வராம இருக்க மாட்டா. அவளும் கொஞ்ச நாளா நார்மலா இல்லை. ஏதாவது தப்பா..a”, என்றதும் அவனுக்கு திக்கென்று இருந்தது.

“அம்மா.. ஸ்ரீக்கு ஒண்ணும் ஆகாது மா. நான் பாத்துக்குறேன்”, என்று சொன்னவன் போனை வைத்து விட்டு ஸ்ரீயின் கல்லூரிக்கு தான் சென்றான். அங்கே மாணவர்கள் அனைவருமே சென்றிருக்க மீதி இருந்த பணியாளர்களிடம் விசாரித்தான். அவள் கல்லூரி முடிந்து சென்று விட்டதாக தகவல் வர அவனுக்கு வந்த சந்தேகம் மிதுன் தான்.

உடனே வண்டியை எடுத்துக் கொண்டு வீணா வீட்டுக்குச் சென்று விட்டான். அவனுக்கு மிதுன் அட்ரஸ் தெரியாது. வீணா வீட்டுக்கு சென்றதும் அவனை வரவேற்றது அம்சவேணி தான்.

“வாங்க”

“வீணா எங்க?”

“இதோ கூபிடுறேன்”, என்று சொல்லி விட்டு வீணா என்று அழைத்தாள். “இதோ வரேன் மா”, என்று அவள் பதில் சொன்னதும் “நீங்க உக்காருங்க தம்பி. நான் டீ எடுத்துட்டு வரேன்”, என்றாள்.

“அதெல்லாம் வேண்டாம். எனக்கு மிதுனை பாக்கணும். அவன் வீடு எங்க இருக்கு?”

“பின்னாடி வீடு தான். அவனை இங்க கூப்பிடவா?”, என்று கேட்க அதற்கு பதில் கூட சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டான்.

அம்சவேணி திகைத்து நிற்க “என்ன மா பேய் அறைஞ்ச மாதிரி நிக்குற? சரி எதுக்கு கூப்பிட்ட?”, என்று கேட்டாள் வீணா.

“இல்லை மாப்பிள்ளை வந்தார். உன்னைக் கேட்டார். அப்புறம் மிதுன் வீடு எங்க இருக்குன்னு கேட்டார். அப்புறம் நான் என்ன கேட்டாலும் பதில் சொல்லாம விருட்டுன்னு போய்ட்டார். இந்த பையனை என்னால புரிஞ்சிக்கவே முடியலை. கோபமா போன மாதிரி இருந்தது வீணா. ஏதாவது பிரச்சனையா? எனக்கு பயமா இருக்கு டி”

“ஐயோ மிதுனையா?”, என்று கேட்ட வீணா அவசரமாக வெளியே ஓட அம்சவேணிக்கு அப்போது தான் ஏதோ தவறாக பட்டது.

அம்மாவும் மகளும் ஒருவர் பின் ஒருவராக மிதுன் வீட்டுக்கு சென்ற போது அங்கே மிதுனின்  சட்டையை பற்றிக் கொண்டு “ஸ்ரீ எங்க?”, என்று கேட்டுக் கொண்டிருந்தான் சத்யா.

“தம்பி அவன் சட்டையை விடுங்க. என்ன பண்ணுறீங்க?”, என்று அவன் கையை விலக்கிக் கொண்டிருந்தாள் மிதுனின் அன்னை.

“சத்யா என்ன பண்ணுறீங்க? கையை எடுங்க”, என்றாள் வீணா.

“அதுக்கு முன்னாடி இவன் கிட்ட எல்லாரும் என் தங்கச்சி எங்கன்னு கேட்டுச் சொல்லுங்க. சொல்லு டா. என் தங்கச்சி எங்க?”

“எனக்கு தெரியாது”, என்று மிதுன் சொல்ல “தம்பி அவனுக்கு உண்மையிலே யாரையும் தெரியாது. அவனே இன்னைக்கு காலைல இருந்து காச்சல்ல படுத்து கிடக்கான். அவன் மேல இருந்து கையை எடுங்க”, என்று சொல்லி விலக்கி விட்டாள் அவன் அன்னை.

சத்யாவும் கையை எடுத்துக் கொண்டாலும் “உனக்கு ஸ்ரீ இருக்குற இடம் தெரியும் தானே? ஒழுங்கா சொல்லு டா. நீ தான அவளை எதுவோ மிரட்டி வச்சிருக்க?”, என்று கேட்டான்.

அப்போது வீணாவின் தந்தையும் மிதுனின் தந்தையும் அங்கு வர நிலைமை வேறு மாதிரி தீவிரம் அடைந்தது.

“இவன் என் தங்கச்சியை மிரட்டி வச்சிருந்தான். நானே ரெண்டு நேரம் நீ அவளை மிரட்டுறதை பாத்துருக்கேன். நீ தான் அவளை எதுவோ மிரட்டி வச்சிருக்க.  அவளை என்ன பண்ணனு சொல்லு”, என்று கேட்டான் சத்யா.

“நாம கொஞ்சம் தனியா பேசலாமா?”, என்று கேட்டான் மிதுன். இதற்கு மேல் ஸ்ரீ பத்தி சொல்லாமல் இருப்பது ஆபத்து என்பதால் அவளைப் பற்றிச் சொல்ல முடிவு எடுத்தான். அதே நேரம் அத்தனை பேர் முன்னிலையில் அவளை விட்டுக் கொடுக்கவும் மனதில்லை. அதனால் தான்  சத்யாவை தனியே அழைத்தான்.

“என்ன டா பம்முற? இத்தனை பேர் முன்னாடி சொன்னா உன் பேர் வீணா போயிரும்னு பயப்படுறியா? இவங்க முன்னாடியே சொல்லு. உன்னைப் பத்தி எல்லாரும் தெரிஞ்சிக்கட்டும்”, என்று கேட்ட சத்யாவின் குரலில அப்படி ஒரு ஆவேசம்.

“என்ன டா மிதுன் இதெல்லாம்?”, என்று கேட்டார் அவனின் தந்தை.

“எனக்கு ஒண்ணும் தெரியாது பா. சரி நான் எல்லாம் சொல்றேன். நான் ஸ்ரீயை மிரட்டினது உண்மை தான்”, என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தார்கள்.

“என்ன மித்து சொல்ற?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள் வீணா.

“ஆமா வீணா, ஆனா எதுக்கு தெரியுமா? அவ ஒரு பெரிய சிக்கல்ல மாட்டிக்கிட்டு இருக்கா”

“அந்த சிக்கல் நீ தானே? நீ தான் அவளை டார்ச்சல் பண்ணுற?”

மாம்ஸ் என்று சொல்ல வந்தவன் அதை நிறுத்தி “சார் உங்களுக்கு என்ன பிரச்சனை? அன்னைல இருந்து என் மேல எறிஞ்சு எறிஞ்சு விழுறீங்க? உண்மைலே உங்க தங்கச்சி பெரிய பிரச்சனைல இருக்கா.அதுல இருந்து அவளை வெளிய வரச் சொன்னேன். வரலைனா அவளைப் பத்தி உங்க வீட்ல சொல்லிருவேன்னு தான் அப்படிச் சொன்னேன்”

“அப்படி என்ன என் தங்கச்சி பண்ணிட்டா”

“அவ ஒரு டிரக் அடிக்ட்”

“வாட்?”, என்று அதிர்வாக கேட்க அதைக் கேட்ட அனைவருக்கும் குழப்பமாக தான் இருந்தது.

தொடரும்…