“அவருக்கு ஏதோ கோபம் போல டா. என் கிட்டயும் சரியா பேசலை. சரியாகிருவார். அங்க என்ன தான் நடந்துச்சு மித்து?”
நடந்ததை சுருக்கமாக அவளிடம் சொன்னவன் “அவர் சரியா பேசாதப்பவே அவங்க வீட்டுக்கு சொல்லாம போய்ட்டேன்னு ஏதோ கோபத்துல இருக்கார்ன்னு நினைச்சேன் வீணா. ஆனா அதுக்கப்புறம் அந்த ஆட்டோகாரன் கிட்ட விட்டுக் கொடுத்ததை தான் தாங்க முடியலை”, என்றான்.
அனைத்தையும் கேட்டவளுக்கு சத்யாவுக்கு மிதுன் மேல் எதற்கு இவ்வளவு கோபம் என்ற கேள்வி வந்தாலும் “கடைசியா என்ன ஆச்சு மித்து? எதுக்குன்னு அவர் கிட்ட நீ கேக்கலையா?”, என்று கேட்டாள்.
“எதுக்கு அப்படி பண்ணினார்ன்னு தெரியலை? எனக்கு சப்போர்ட் பண்ணுவார்ன்னு பாத்தேன் வீணா. நான் சரியான ரூட்ல தான் வீணா போனேன். அவன் தான் ராங்க் ரூட்ல வந்தான். ஆனா அந்த ஆட்டோ காரனுக்கு சப்போர்ட் பண்ணி பேசிட்டார். அவன் ஐயாயிரம் கரந்துட்டான். எனக்கே தெரியாம அவரை நான் அவரை எதுவும் கஷ்ட படுத்திட்டேனான்னு தெரியலை. நீ கொஞ்சம் கேட்டுச் சொல்லேன்”
“நீ சரியா தானே போன?”
“ஆமா வீணா? என் மேல எந்த தப்பும் இல்லை”
“சரி டா, நீ பாரு. நான் அப்புறம் கூப்பிடுறேன்”
“அவருக்கு ஏதாவது என் மேல கோபம் இருந்தாலும் சொல்ல சொல்லு வீணா. உனக்காக கண்டிப்பா நான் சாரி கேக்குறேன்”, என்று சொன்னதும் அவளுக்கு நெகிழ்ந்து போனது. கூட பிறந்தவர்களே எதிரிகளாக இருக்கும் இந்த காலத்தில் மிதுனின் அன்பு அவளுக்கு பெரியதல்லவா?
“சரி டா விடு, இதை பெருசா எடுத்துக்காத. அவரா உன் கிட்ட பேசுவார்”
“சரி நீ சண்டை எல்லாம் போடாத சரியா?”
“என்னை பத்தி உனக்கு தெரியாதா?”
“நீ பொறுமையா தான் இருப்ப தெரியும்? இருந்தாலும் பாத்துக்கோ சரியா?”
“சரி டா பெரிய மனுஷா. நல்லா தூங்கு”, என்று சொல்லி போனை வைத்தவளுக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தது.
ஆரம்பத்தில் இருந்தே இந்த திருமணத்தில் எதுவோ சரியில்லை என்று இப்போது தோன்ற ஆரம்பித்தது.
மிதுன் மேல் தவறு இல்லை என்றாலும் அது சத்யா பார்வையில் தவறாக பட்டாலும் மற்றவர்கள் முன்னால் அவனை விட்டுக் கொடுத்ததை அவளால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை.
ஒரு நாளில் முடியும் உறவு அல்லவே. திருமணத்திற்கு பிறகு இருவரும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டால் அந்த உறவு உயிர் இல்லாமல் போய் விடும் அல்லவா? சத்யாவை பிடிக்கும் தான். அதற்காக அவளது உறவுகளை விட்டுக் கொடுக்க அவளால் முடியாதே.
போனை எடுத்தவள் அவனுக்கு அழைக்க தான் எண்ணினாள். ஆனால் அவளது தன்மானம் அதற்கு இடம் கொடுக்க வில்லை. அதனால் வாய்ஸ் மெசேஜ் போட ஆரம்பித்தாள்.
“உங்க பொன்னான நேரத்தை வீணடிக்கிறதுக்காக என்னை மன்னிச்சிருங்க. ஆனா நான் என் மனசுல இருக்குறதையும் சொல்லணும்ல?”
“உங்க மனசுல என்ன இருக்குன்னு முதல்லயும் சரி இப்பவும் சரி என்னால புரிஞ்சிக்கவே முடியலை. முதல்ல என்னைப் பிடிக்கவே இல்லைன்னு சொன்னீங்க? அப்புறம் என்னை உங்க கூட வீட்டை விட்டே வரச் சொன்னீங்க? அன்னைக்கு மிதுன் கிட்ட நல்லா பேசுனீங்க? இன்னைக்கு இப்படி பண்ணிருக்கீங்க? உண்மையிலே அவன் தப்பு பண்ணியிருந்தான்னா அவனே உண்மையே ஒத்துக்குவான், இல்லைன்னு ஆர்கியுமெண்ட் பண்ண மாட்டான். கூட பிறக்கலைனாலும் அவன் தான் எனக்கு தம்பி. அது நாங்க சாகுற வரைக்கும் மாறப் போறது இல்லை. என் பிள்ளைகளுக்கு தாய் மாமாவும் அவன் தான். அவனை ஒதுக்கிட்டு எனக்கு ஒரு வாழ்க்கைனா அதை என்னால கற்பனை கூட பண்ண முடியலை, அப்புறம் இந்த விஷயத்தை அவன் என் கிட்ட சொல்லலை. நீங்களா தான் உளறுனீங்க. போட்டுக் கொடுக்குற புத்தி எங்க குடும்பத்துக்கே கிடையாது? அவனோட அக்காவா இருக்குறது எனக்கு பெருமை தான். ஆனா உங்களுக்கு அவமானமா இருந்தா கண்டிப்பா இந்த கல்யாணம் வேண்டாம். எனக்கு என்னமோ வேண்டாம்ன்னு முடிவு பண்ணுறது சரியா இருக்கும்னு தோணுது. கல்யாண பேச்சு வார்த்தை ஆரம்பிச்சதுல இருந்து ஏதோ ஒரு தடங்கல் வந்துட்டே இருக்கு. அது அப்படியே போகட்டும். நீங்களும் ஏதோ குழப்பத்துல இருக்கீங்க? முதல்ல என்னை பிடிக்கலைன்னு சொன்னீங்க? அப்பறம் உங்க கூடவே வரச் சொன்னீங்க. இப்ப என் தம்பியால என்னை வேண்டாம்னு சொல்றீங்க?”
“உங்களை எந்த விஷயத்துல நம்புறதுன்னு கூட எனக்கு இப்ப தெரியலை. ஒரு பொண்ணு புருஷன் கிட்ட என்ன வேணாலும் எதிர்பாக்கலாம். ஆனா நான் எதிர்பாக்குறது எந்த பிரச்சனை வந்தாலும் சேர்ந்து போராடனும். பாதில விட்டுட்டு போகக் கூடாது. அதுவே உங்க கிட்ட கேள்வி குறி தான். முதல்ல உங்களுக்கு இருக்குற பிரச்சனையை சரி பண்ணுங்க. உங்க பிரச்சனையை சரி பண்ணினதுக்கு அப்புறமும் நீங்க என் குடும்பத்தையோ என் தம்பியையோ ஏதாவது சொன்னா நீங்க எனக்கு என்னைக்கும் வேண்டாம். இனி நான் கால் ஏதும் பண்ண மாட்டேன். நீங்களும் எனக்கு பண்ண வேண்டாம். அப்படி தனமானத்தை விட்டுட்டு உங்க கிட்ட பேசணும்னு எனக்கு ஒண்ணும் இல்லை. இனி எது பேசுறதா இருந்தாலும் கல்யாணம் வேண்டாம்னு சொல்றதா இருந்தாலும் பெரியவங்க மூலமா பேசிக்கட்டும்”, என்று பேசி அனுப்பி வைத்தாள்.
அதைக் கேட்டவனுக்கு இன்னும் மனதுக்கு பாரமாக இருந்தது போல இருந்தது. தான் செய்வது சரியா தவறா என்று அவ்வளவு குழம்பித் தவித்தான்.
தன்னை மிரட்டுபவனைக் கண்டு பிடிப்பதா இல்லை ஸ்ரீயின் பிரச்சனையை சரி பண்ணுவதா என்றும் குழப்பம்? அதுவும் ஸ்ரீ என்ன நடந்தது அவளுக்கு என்ன பிரச்சனை என்று சொல்லவே மறுக்கும் போது எப்படி கண்டு பிடிக்க என்று அவனுக்கு தெரிய வில்லை,.
சற்று நேரத்திற்கு முன்பு மிதுனை அழைத்து இரண்டு தட்டு தட்டி விசாரிக்கலாம் என்று கூட எண்ணிப் பார்த்தான். ஆனால் அவன் அப்படிச் செய்தால் நிச்சயம் தீனா சும்மா இருக்க மாட்டார். அதுவும் வீணா அவனை மன்னிக்கவே மாட்டாள். இப்போதைய அவளின் திருமணம் வேண்டாம் என்ற பேச்சு வேறு கஷ்டமாக இருந்தது. மொத்தத்தில் அவ்வளவு குழப்பத்தில் இருந்தான் சத்யா.
அடுத்த நாள் மாலை கல்லூரி முடிந்து ஸ்ரீ வீட்டுக்கு வரும் நேரத்தை விட ஒரு மணி நேரம் கடந்தும் அவள் இன்னும் வீட்டுக்கு வர வில்லை. பாமா தான் பதட்டத்தில் இருந்தார். அப்போது அங்கே வந்த தீனா “என்ன ஆச்சு பாமா?”, என்று கேட்டார்.