பரமேஷின் கோபத்தைப் பார்த்தவள் சிறிது அமைதி அடைந்து, பின் சிவலிங்கம் இருந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் முகில்.
சரியாகப் பாலம் போல் இருந்த அந்த அமைப்பில் ஓர் அடி எடுத்து வைத்தவளுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது. அவள் காலை எடுத்து வைத்தவுடன் சதுரமான அந்தக் கல் விலகிக்கொள்ள, கீழே விழப் பார்த்தவளைச் சரியான நேரத்தில் பின்னால் இழுத்துக் காப்பாற்றினாள் ருத்ரா.
குழியாக இருந்த அந்த இடத்தை அப்போதுதான் பார்த்தாள் முகில். பெரிய பள்ளம் நீண்டு கொண்டு போயிற்று. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இருட்டாகவே இருந்தது. அதில் விழுந்தால் எலும்புகூட தேறாது என்று புரிந்துகொண்டவள், முகம் வியர்த்து, மரண பயத்தில் நெஞ்சில் கை வைத்தபடி நின்றுகொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் அந்தக் கற்கள் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பின.
அனைவரின் முகத்திலும் பயம் பரவத் தொடங்கியது. அதேசமயம் பல கேள்விகளும் உதிக்க ஆரம்பித்தன.
பொதுவாக ஒரு இடத்தில் இப்படி ஆபத்து இருக்கிறது என்றால் ஏதாவது புதையல் இருக்க வேண்டும். ஆனால் அப்படி ஒன்றும் இருப்பது போல் தெரியவில்லை. அங்கே இருந்தது ஒரு சிவலிங்கம் மட்டுமே. அதுவுமில்லாமல், அந்தக் காலத்திலேயே இப்படி அறிவியல் நுட்பத்துடன் இந்த அமைப்பை உருவாக்கியிருக்கிறார்களே என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.
ருத்ராவிற்குள்ளும் பல கேள்விகள் எழுந்தன. இதைக் கடந்து எப்படி செல்வது என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
அனைவரையும் பார்த்த பரமேஷ், “கண்டிப்பா இதைக் கடந்து போக ஏதாவது ஒரு வழி இருக்கு. உங்க கண்ணுக்கு ஏதாவது வித்தியாசமா படுதானு தேடுங்க” என்றான்.
அவன் சொல்வது சரியென்று பட, ஒவ்வொரு பக்கமும் சென்று அனைவரும் ஏதாவது கிடைக்குமா என்று தேட ஆரம்பித்தனர்.
பரமேஷும் நிறைய படங்களில் பார்த்ததைப் போல அம்பு பாயும் அமைப்பு எதுவும் இருக்கிறதா, வேறு ஏதாவது ஆபத்துகள் இருக்கின்றனவா என்று சோதித்து பார்த்தான். அங்கிருந்த ஒரு கல்லை எடுத்து அந்தப் பாலத்தின் மீது எறிந்தான்.
பாலத்தின் மீது பட்ட கல் எதுவும் ஆகாமல், அவன் தூக்கிப் போட்ட இடத்திலேயே கிடந்தது.
மனிதர்களின் எடையைக் கணக்கில் கொண்டு, அந்தக் காலத்திலேயே அறிவியல் நுட்பத்துடன் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டான்.
எங்குத் தேடியும் எதுவும் கிடைக்காத விரக்தியில் அனைவரும் சோர்ந்து ஒரு இடத்தில் அமர்ந்தனர்.
அதே சமயம், இங்கு வந்ததில் இருந்தே ஒன்றைக் கவனித்துக் கொண்டிருந்தாள் ருத்ரா.
முதலில் பார்க்கும்போது வெள்ளை நிறமாக இருந்த சிவலிங்கம், நடுவில் சிவப்பாகக் காட்சியளித்தது. அது ஏதோ நமது கண்களுக்கு அப்படித் தெரிகிறது என்று நினைத்து விட்டுவிட்டாள். ஆனால் இப்போது பார்த்தபோது, அந்த சிவலிங்கம் பச்சை நிறமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.
அதனை ஆச்சரியத்துடன் பார்த்தவள், “யாராவது சிவலிங்கத்தைப் பார்த்தீங்களா? முதல்ல வெள்ளையா இருந்தது. நடுவுல சிவப்பா மாறுச்சு. இப்போ பச்சை நிறமா இருக்கு” என்று ருத்ரா கூறினாள்.
அவள் கூறியதும் மற்றவர்கள் சிவலிங்கத்தைப் பார்த்தனர். அவள் சொன்னது போலவே அது பச்சை நிறத்தில் காட்சியளித்துக் கொண்டிருந்தது.
அதனை ஆச்சரியமாகப் பார்த்த அஜித், பரமேஷ், ருத்ரா, ரோஸினி ஆகிய நால்வரும் பக்தியுடன் சிவபெருமானை வணங்கினர்.
முகில் மட்டும், “அது அந்தக் கல்லின் அமைப்பு. மற்றபடி அதுல அதிசயிக்க எதுவும் இல்லை” என்று கைகளைக் கட்டியபடி கூறினாள்.
‘இவளிடம் வழக்காடுவதற்கு இப்போது நேரமில்லை’ என்று நினைத்த பரமேஷ், சுற்றுமுற்றும் எதையோ தேடினான்.
அவன் தேடியது கிடைத்த மகிழ்ச்சியில் அதன் அருகில் சென்றான்.
அது பல நுணுக்கமான வேலைப்பாடுகள் அடங்கியிருந்த அந்த நடனச் சிற்பத்தின் ஓரத்தில், தூண் போன்ற அமைப்பாக இரு பக்கங்களிலும் இடம் பெற்றிருந்தது. அதன் நடுவில் இருந்த இடைவெளியில் தன் கைகளை விட்டு, அந்தத் தூணைத் திருகினான்.
அந்தச் சிறிய தூணைச் சுற்றச் சுற்ற, கல்லின் அமைப்பு மாறத் தொடங்கியது. சிறிது நேரத்தில், ஒற்றையடி பாதையாகச் செல்வதற்கு ஏற்ற வகையில் அந்த அமைப்பு மாறியது.
அதனைப் பார்த்த மற்றவர்கள், எப்படியோ வழி கிடைத்ததே என்று பெருமூச்சு விட்டனர்.
ருத்ரா அந்தக் கல்லை உன்னிப்பாகக் கவனித்தாள். சிவலிங்கத்தைப் போலவே அந்தக் கற்சிற்பமும் பச்சை நிறத்தில் தோற்றமளித்துக் கொண்டிருந்தது. அதைக் கவனித்துத்தான் பரமேஷ் இதைக் கண்டுபிடித்திருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டாள்.
“சரி, அந்த வழி திரும்ப மாறுறதுக்குள்ள அந்தப் பக்கம் போயிடலாம். வாங்க!” என்று பரமேஷ் அழைக்க, இதுவரை சோர்ந்து அமர்ந்திருந்த அனைவரும் எழுந்தனர்.
இதுவரை முன்னால் நடந்து கொண்டிருந்த முகில், நடந்த சம்பவத்தால் பயந்து பின்வாங்கி, முன்னால் ருத்ரா செல்ல வழிவிட்டாள்.
ருத்ரா முன்னால் செல்ல, வரிசையாக ஒருவர் பின் ஒருவராக அந்தப் பாதையைக் கடக்க ஆரம்பித்தனர். கடைசியாக பரமேஷும் ஒருவழியாக அந்தப் பாலத்தைக் கடந்தான்.
தாங்கள் வந்த பாதையை மீண்டும் ஒருமுறை பயத்துடன் பார்த்தனர்.
இதுவரை இருந்த அமைப்பு மாறி, மீண்டும் பழைய நிலைக்கு வந்திருந்தது. அனைவரின் முகத்திலும் சிறிது நிம்மதி தெரிந்தாலும், இதற்குப் பிறகு எப்படி வெளியே செல்வது என்ற குழப்பம் ஏற்பட்டது.
அவர்கள் நின்றிருந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் அமைந்திருந்தது. சுற்றிலும் கருங்கல் சுவர்கள் மட்டுமே கண்ணுக்குத் தட்டுப்பட்டன.
சுற்றுமுற்றும் ஏதாவது வழி இருக்கிறதா என்று ருத்ராவும் பரமேஷும் தேட ஆரம்பித்தனர்.
அப்போது ருத்ராவின் கண்களில் சிக்கியது, அந்தக் குகையின் மேற்பரப்பிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த ஒரு சங்கிலி.
அந்தக் காலத்தில் இந்தச் சங்கிலியை வைத்து என்ன செய்திருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டே முன்னே சென்று பார்த்தவளுக்கு அதிர்ச்சியும் வியப்பும் ஒருசேர ஏற்பட்டது.
காரணம், அது சாதாரண சங்கிலி அல்ல. முழுக்க முழுக்க கருங்கற்களால் செதுக்கப்பட்ட சங்கிலி.
இவ்வளவு நேர்த்தியாகவும் நுட்பமாகவும் அந்தக் காலத்திலேயே இதைச் செதுக்கிய மக்களை நினைத்து ஆச்சரியமடைந்தாள்.
அவள் அதை பார்த்துக் கொண்டிருக்கும்போதே, எதிர்திசையில் இருந்து வந்த காற்று ருத்ராவின் மேனியில் பட, அவள் மேனி முழுவதும் சிலிர்த்தது.
இந்தக் குகைக்குள் எங்கிருந்து காற்று வருகிறது என்று யோசித்துக் கொண்டிருந்தவள், அப்போதுதான் தனக்கு முன்பாக இருந்த சங்கிலியைக் கவனித்தாள்.
அது ஆடிக் கொண்டிருந்தது.
‘கருங்கல் காற்றிற்கு அசையுமா?’ என்ற எண்ணம் பளிச்சிடவே, உடனே அந்தச் சங்கிலியைப் பிடித்து இழுத்தாள்.
என்னவொரு ஆச்சரியம்! அது அவள் இழுப்பிற்கு வந்தது. அதனை இழுக்க இழுக்க, சிவலிங்கம் நகரத் தொடங்கியது.
திடீரென்று நகர்ந்த சிவலிங்கத்தைப் பார்த்து அனைவரும் ஆச்சரியமாக நின்றனர். பரமேஷ் மட்டும் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க எண்ணிச் சுற்றிப் பார்த்தான்.
ருத்ரா சங்கிலியை இழுத்துக் கொண்டிருந்தாள்.
“ருத்ரா, அதை அப்படியே விட்ராம இரு” என்று கூறிக்கொண்டே அவள் அருகில் வந்தவன், அவளுடன் சேர்ந்து சங்கிலியை இழுக்க ஆரம்பித்தான்.
சிறிது நேரத்தில் சிவலிங்கம் முழுவதுமாக நகர்ந்தது. அதன் பின்னால் இருந்த இடம் இருட்டாகக் காட்சியளித்தது.
தன் அலைபேசியை எடுத்து அஜித் டார்ச் லைட்டை அடித்து உள்ளே பார்த்தான். யாரும் எதிர்பார்க்காத விதமாக, அங்கே படிக்கட்டுகள் காட்சியளித்தன.
“டேய்! இங்க ஏதோ வழி இருக்கு… அதோட படிக்கட்டும் இருக்கு!” என்று பரமேஷுக்குக் கேட்கும் வகையில் கத்தினான் அஜித்.
உடனே இருவரும் சங்கிலியை விட்டுவிட்டு அந்தச் சிவலிங்கத்திற்கு அருகில் வந்தனர்.
“சரி, இப்போ உள்ள போகலாமா? வேண்டாமா?” என்று யோசனையுடன் கேட்டாள் ரோஸினி.
“நமக்கு வேற வழி இல்லை. இங்கேயே இருந்தா இந்தக் குகைக்குள்ளேயே மாட்டிக்க வேண்டியதுதான். இந்த இடத்துக்குள்ள போறதுதான் நமக்கு இருக்கிற ஒரே வழி” என்று பரமேஷ் கூற, அனைவரும் தலையை ஆட்டினர்.
ஒன்றன் பின் ஒருவராக அந்தப் படிக்கட்டுகளில் இறங்க ஆரம்பித்தனர்.
கீழே தரை அமைப்பு வந்ததும், அவர்கள் பார்த்த அந்த உருவத்தைக் கண்டு அனைவரும் நடுங்க ஆரம்பித்தனர்.
இவர்களைத் துரத்திய அதே ஐந்து தலை கொண்ட வெள்ளை நாகம், முன்பைவிடத் தன் உருவத்தைச் சிறியதாக மாற்றிக்கொண்டு நின்றிருந்தது.
அனைவரும் பயத்தில் படிக்கட்டுகளில் ஓடப் பார்க்க, “நில்லுங்க” என்ற ஒரு குரல் கேட்க, அதனைத் திரும்பிப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் வாயைப் பிளந்தனர்.
இதுவரை ஐந்து தலை நாகமாக இருந்தது, இப்பொழுது மனித உருவத்திற்கு மாறியிருந்தது. அந்த உருவத்தைக் கண்டதும் ஓடிச்சென்ற ருத்ரா, “அண்ணா!” என்று கட்டியணைத்துக்கொண்டாள்.
நடப்பவை அனைத்தையும் நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தனர் மற்ற நால்வரும்.
“ருத்ரா, அது உன் அண்ணன் இல்லை. சொன்னா கேளு… அது ஒரு பாம்பு” என்று கூறிக்கொண்டு அவள் அருகில் வந்தான் பரமேஷ்.
இதுவரை அமைதியாக இருந்தவன், பரமேஷைக் கண்டதும் கண்கள் சிவக்க அவனை முறைத்தான் அருண்.
இதுவரை ருத்ராவை ஒன்றும் செய்யாத நாகத்தைப் பார்த்து பயம் நீங்கியிருக்க, அனைவரும் மெதுவாக முன்னே நடந்து வந்தனர்.
முகில், இது எல்லாம் கனவா? நினைவா? என்று வாயடைத்துப் பார்த்தாள். நாகங்கள் மனித உருவம் எடுப்பதையெல்லாம் படங்களில் மட்டுமே பார்த்தவள், இன்று நேரில் பார்த்ததும் என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றாள். இதெல்லாம் அறிவியலுக்கு அப்பாற்பட்டு இருப்பதால் மௌனம் காத்தாள்.
“நீங்க யாரு?” என்று சற்று தைரியமாகக் கேட்டாள் ரோஸினி.
அவளைத் தொடர்ந்து அஜித்தும், “நீங்க ஏன் எங்களைத் துரத்துனீங்க?” என்றான்.
அவர்களைப் பார்த்த அருண் பேச ஆரம்பித்தான்.
“நான் இந்த இடத்தோட காவலன். யார் இங்க வந்தாலும் அவங்களை பயமுறுத்தி திருப்பி அனுப்பிடுவேன். அதுதான் என்னோட பொறுப்பு. இந்த இடத்தோட ரகசியம் யாருக்குத் தெரியணும்னு விதி இருக்கோ, அவங்களால மட்டும்தான் இங்கே வர முடியும். அதனால் தான் உங்களைப் பயமுறுத்தினேன். ஆனா இனிமே இந்த இடத்தோட ரகசியத்தையும், அதை பாதுகாக்கிற பொறுப்பையும் நீங்களும் ஏத்துக்க வேண்டியிருக்கும்” என்றான்.
“இது ஒரு சாதாரண இடம் தானே… அதை பாதுகாக்க இத்தனை பேர் வேணுமா? அப்படி என்ன இங்க இருக்கு?” என்று அலுத்துக்கொண்டு கேட்டாள் ரோஸினி.
“அது எனக்கும் தெரியாது. இந்தக் கதவுக்குப் பின்னாடி என்ன ரகசியம் இருக்குனு நீங்கதான் கண்டுபிடிக்கணும். அதுதான் விதி” என்று சிறிது தூரம் தள்ளியிருந்த கதவைக் கைகாட்டிக் கூறினான்.
அந்தப் பெரிய கதவைக் கண்டதும் அனைவரின் கண்களிலும் ஆச்சரியம் தோன்றியது. அதன் அருகில் சென்றனர். மிகப்பெரிய கதவு ஒன்று இருக்க, அதன் இருபுறங்களிலும் இரண்டு நாகங்கள் படமெடுத்து நின்றிருந்தன.
அதற்கு அருகில் சென்ற அருண், கதவில் கை வைக்கவும், வட்ட வடிவில் இருந்த ஒரு அமைப்பு கதவின் நடுமத்தியில் தெரிந்தது. அதனைக் கண்ட அனைவரும், “இது என்ன?” என்று ஆச்சரியமாகக் கேட்டனர்.
“இதுதான் அந்தக் கதவைத் திறக்கிற சாவி. இப்போ அது ஐந்து பாகங்களா பிரிஞ்சிருக்கு. அதைத் தேடி எடுத்து முழுமையாக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது” என்றான் அருண்.
அஜித்தின் கண்களில் மின்னல் வெட்டியது. கண்டிப்பாகக் கதவின் பின்னால் இருக்கும் புதையலைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் முளைத்தது.
அதேசமயம், பரமேஷிற்கு இதில் ஏதோ விபரீதம் இருப்பது போல் தோன்றியது.
“இதை நாங்க செய்ய மாட்டோம். திரும்பி எங்க ஊருக்குப் போறோம்” என்று அழுத்தமாகப் பதில் வந்தது.
அதனைக் கேட்ட அருண், “இந்தக் கடமை முக்கியமா உன்னுடையது. உன் முன்ஜென்மத்துல நீ செய்த ஒரு செயலால ஏற்பட்டதைச் சரிசெய்ய வேண்டிய பொறுப்பும் உன்னுடையதுதான்” என்று பரமேஸ்வரனைப் பார்த்துக் கூறினான்.
‘முன்ஜென்மமா?’ என்று யோசிக்க ஆரம்பித்தான் பரமேஷ்.
அப்பொழுது அவன் கண்களில் பட்டது அந்தக் சிற்பம். இரு கழுகுகள் ஒன்றோடு ஒன்று கட்டிப்பிடித்து ஜீவசமாதி அடைந்திருந்ததை போல் உருவாக்கப்பட்டிருந்தது.
அதனைப் பார்க்கப் பார்க்க, ஏதோ சில நினைவுகள் அவன் கண்முன்னால் வந்து போக, குழம்பினான். அதன் அருகில் சென்று அந்தச் சமாதியைத் தொடும் அதேசமயம், வேறொரு கையும் அதனைத் தொட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தான்.
அந்தக் கைக்குச் சொந்தக்காரியை நிமிர்ந்து பார்த்தான். ருத்ரா நின்றுகொண்டிருந்தாள்.
ருத்ராவிற்கும் சில நினைவுகள் வந்து, என்னவென்று புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தாள்.
அருண் கூறுவது உண்மை என்று பரமேஷிற்குத் தோன்ற, தீவிர யோசனையில் ஆழ்ந்தான்.
அவனுக்கு அருகில் வந்த அஜித், “என்னடா ரொம்ப யோசிக்கிற? இந்தப் பொறுப்பு உன்னுடையதுனு அந்த நாகம் சொல்லுதே!” என்று கேட்க, இன்னும் குழம்பிப் போனான் பரமேஷ்.
“நாங்க இப்போ என்ன பண்ணணும்?” என்று விஷயத்திற்கு வந்தான் பரமேஷ்.
“நீங்க முதல்ல அந்தச் சாவி கெட்டவங்க கைக்கு போயிடாம பாதுகாக்கணும். அதுக்கு அந்த சாவியை நீங்க தான் தேடி கண்டுபிடிக்கனும் அதுதான் இப்போ உங்க முன்னாடி இருக்கிற முதல் பொறுப்பு” என்றான் அருண்.
“இந்தச் சாவி எங்க இருக்குனு தெரியாம நாங்க எப்படி போய் எடுக்கிறது?” என்று கேட்டாள் இதுவரை அமைதியாக இருந்த முகில்.
“நீங்க முதல்ல போக வேண்டிய இடம் ஜவ்வாது மலை. அங்கதான் முதல் சாவி இருக்கு. அதன் பிறகு நடக்க வேண்டியது தானாக நடக்கும்” என்று புதிர் போட்டுக் கூறினான் அருண்.
ஜவ்வாது மலை என்றதும் அனைவரது கண்களும் பீதியில் உறைந்தன. ஏற்கனவே அங்கிருக்கும் கிணற்றின் மர்மத்தையும், அங்கு உலாவும் துர்சக்திகளைப் பற்றியும் அதிகம் கேள்விப்பட்டிருந்ததால், ஒருவித அச்சம் அனைவரின் முகத்திலும் தெரிந்தது.
“அந்த பயங்கரமான இடத்துக்கு போகனுமா?” என்று கேட்டாள் ரோஸினி.
“என்னால எல்லாம் அங்க வரமுடியாது பா” என்றாள் முகில்.
ருத்ராவின் முகத்தில் மட்டும் புன்னகை மலர்ந்தது. இதுவரை பார்க்காத ஒரு இடத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணம் மட்டுமே தெரிந்தது.
முகிலின் வார்த்தைகளைக் கேட்ட ருத்ரா, “யாரோ கடவுள் இல்லை எல்லாம் அறிவியல் னு சொன்னாங்க… இப்ப என்னனா பேய் இருக்குது அங்க வரமாட்டேனு சொல்றாங்க” என்று இதுவரை முகில் கூறியதை மனதில் வைத்து நக்கலடித்தாள்.
“நா ஒண்ணும் பேய் இருக்குனு வரலைன்னு சொல்லலையே. மலை ஏறனும்… அவ்ளோ தூரம் டிராவல் பண்ணனும்… உடம்பு வேற சரியில்லை” என்று ஏதோதோ காரணங்களை சம்பந்தமில்லாமல் அடுக்கினாள் முகில்.
“நல்லா சமாளிக்கிறேங்க” என்று கூறிவிட்டு சிரித்த ருத்ராவின் பார்வையில் ஏளனம் மிகுந்திருந்தது.
அதனைக் கண்டு கோபமுற்ற முகில், “யார் வராங்களோ இல்லையோ நா உன் கூட வரேன் பரமேஷ்” என்று தன்னை தைரியசாலியாக காட்டிக் கொண்டாள்.
இவர்களின் பேச்சில் இருந்த பயத்தை கவனித்த அருண், தன் கையில் மந்திரத்தால் வரவழைத்து ஐந்து கயிறுகளை எடுத்து நீட்டினான்.
மந்திரக்கயிறுகளை ஆச்சரியத்துடன் அனைவரும் வாங்கிக்கொண்டனர்.
“இந்தக் கயிறு உங்ககிட்ட இருக்கிற வரைக்கும் எந்தத் துர்சக்தியும் உங்களை நெருங்க முடியாது” என்று கூற, அனைவரின் முகத்திலும் இருந்த பயம் விலகி, தெளிவு பிறந்தது.
அனைவரும் ஒப்புக்கொள்ள, வந்த வழியே அவர்களை அழைத்துச் சென்ற அருண், மீண்டும் தன் நாக உருவத்தை ஏற்று, பாறைக்கு மேலே தன் வாலால் அனைவரையும் தூக்கிவிட்டான்.
இப்போதுதான் தப்பித்தோம் என்று அனைவரும் பெருமூச்சு விட்டனர்.
நிம்மதிப் பெருமூச்சு விடுபவர்களுக்குத் தெரியவில்லை, இது முடிவு அல்ல… ஆரம்பம் என்று. இதைவிடப் பெரிய ஆபத்துகள் வர இருப்பதை அறியாமல், சந்தோஷமாகக் காட்டில் இருந்து வெளியேற ஆரம்பித்தனர்.
ஓரமாக நிறுத்தியிருந்த தங்கள் காரை எடுத்துக்கொண்டு அனைவரும் அதில் ஏறினர். பரமேஷ் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்புவதை, மரங்களுக்கு இடையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தார் குதிரையில் இருந்த அந்த முதியவர்…