அத்தியாயம் – 03

திருமணம் முடிஞ்சதும் ருத்ராவும் சாணக்கியனும்  விஸ்வநாதன், வேதவள்ளியின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, அவர்களை முழு மனதுடன் ஆசீர்வதித்தனர் அவன் பெற்றோர். அவள் தான் அவர்களின் மருமகள் எனும்போது, அவள் மீதும் அவளது குடும்பத்தினர் மீதும்  அதிருப்தியைப் பிடித்துத் தொங்கி என்ன பயன் என எண்ணிய விஸ்வநாதனும் வேதவள்ளியும் அவளை மருமகளாக ஏற்றுக்கொள்ள, அவளைத் தன் மனைவியாக ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தது என்னமோ சாணக்கியன்தான்!

அடுத்து அவர்கள் பார்த்திபன், துளசி கால்களில் விழ, அவளைக் கண்ணீருடன் அணைத்துக்கொண்டார் துளசி. அவரைப் பொறுத்தவரை என்றுமே ருத்ரா அவர் மகள்தான்! அதிலும் இன்று சண்முகத்தை விட்டுவிட்டுப் பார்த்திபனைத் தந்தை ஸ்தானத்தில் நிற்க வைத்ததில் அவர் மனம் நிறைந்துபோக, அவளை ஆராத்தழுவி நெற்றியில் முத்தமிட்டவர், “நீ எப்பவுமே என் பொண்ணுதான்!” என அவள் கன்னம் கிள்ள இவர்களைப் புன்முறுவலுடன் பார்த்திருந்தார் பார்த்திபன்.

இவை அனைத்தையும் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த சண்முகத்திற்கோ, தான் மட்டும் ஒதுக்கப்பட்ட உணர்வு. இதே உணர்வைத் தானே அவளும் தன் வீட்டில் இருந்தபோது அனுபவித்திருந்திருப்பாள்? என எண்ணும்போதே அவர் மனம் கனக்க, அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் இருக்கப் பெரும்பாடு பட்டார்.

இளமையில் தான் செய்யும் தவறுகளும், அதனால் தான் இழந்த உறவுகளையும் முதுமையில் நினைக்கும்போதுதான், தாம் இழைத்த தவறுகளும் தான் இழந்த சொந்தங்களின் மதிப்பும் உண்மையாகப் புரியும்! அதிலும் தான் பெற்ற மகளின் ஒதுக்கம் அவரை மனதளவில் மிகவும் பாதிக்க, காலம் கடந்து தன் தவறுகளை உணர்ந்தார் சண்முகம். ‘கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?’ என எண்ணியவர் முயன்று தன்னை இயல்பாகக் காட்டிக்கொள்ள, அவரைப் பார்த்த கௌரிக்குத்தான் மனம் பிசைந்தது.

பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிய பின் மணமகள் காரில் ஏறிப் புறப்பட, இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தான் சாணக்கியன்.

சர்வ வசதிகளுடன் கூடிய நவீன படுக்கையறையின் கட்டிலில் மயக்க நிலையில் கிடந்தாள் மதிவதனி.

“இவ என்னடா இன்னும் மயக்கத்திலேயே இருக்கா? மூஞ்சில அப்படி என்னதான் வச்சு அழுத்தின?” என அனன்யா கேட்க,

“குளோரோஃபார்ம் தான்டி. சரி அதான் கல்யாணம் முடிஞ்சிருச்சுல்ல… தண்ணி தெளிச்சு எழுப்பு!” என்றான் அவன் நண்பன் விக்ரம்.

அவர்கள் இருவரையும் வாயில் ஈ போவது கூடத் தெரியாமல் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான் கிஷோர். அவன் மோன நிலையைக் கலைக்கும் வண்ணம் விக்ரம் அவன் முன் சொடுக்கிட, சட்டென்று சுயநிலை அடைந்தவன்,

“டேய் என்னடா இது?” என மதிவதனியைக் காட்டிக் கேட்க,

“பின்ன ருத்ரா என்ன ஷாஜகான் விஜயா? காதலிச்ச பொண்ணு சந்தோஷமா இருந்தா போதும்னு சாட்சிக் கையெழுத்துப் போடுறதுக்கு? அதான் ஃபர்ஸ்ட் மேரேஜ் பண்ணிட்டு அப்புறம் லவ் பண்ணலாம்னு இவளைத் தூக்கிட்டா!” என்று விக்ரம் அசால்ட்டாகச் சொல்ல,

“அப்புறம் ஏன்டா காலையில அவ்வளவு சீன் போட்டா? ஏதோ பிடிக்காத கல்யாணம் மாதிரி…” என கிஷோர் சந்தேகமாகக் கேட்க,

“பின்ன என்ன பண்ணச் சொல்ற? உடனே ஒத்துக்கிட்டா சந்தேகம் வராது!”

“அடப்பாவி!” என வாயில் கை வைத்து கிஷோர், “சரி, இந்தப் பொண்ணை இப்போ என்ன பண்றது?” எனப் புரியாமல் கேட்க,

“ஐ திங்க், இந்தப் பொண்ணுக்குக் கல்யாணத்துல இன்ட்ரஸ்ட் இல்லைன்னு நினைக்கிறேன். இவளே நேத்து ஓடிப் போகத்தான் பார்த்தா!” என்றவன் எண்ணம் நேற்றைய நாளை நோக்கிச் சென்றது.

நள்ளிரவு 1:30 மணி. இருள் தன் ஆதிக்கத்தைக் காட்டி உலகை ஆட்சி செய்து கொண்டிருக்க, அதற்கு சம்பந்தமில்லாமல் மின்விளக்குகளின் ஒளியால் ஜொலித்துக் கொண்டிருந்தது அந்த மண்டபம்.

அதிக கூட்டமும் இன்றி, வேலையாட்களும் சில உறவினர்களும் மட்டும் அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்க, அவர்கள் கண்ணில் படாமல் ஒளிந்து ஒளிந்து மண்டபத்தின் பின்வாசல் வரை வந்துவிட்டாள் மதிவதனி.

அந்நேரம், மதிவதனியைக் கடத்த கருப்பு நிற பேண்ட், ஊடி அணிந்து மண்டபத்தின் பின்வாசல் வழியே உள்ளே நுழையப் போன விக்ரமின் கண்களில் அவள் பட்டுவிட, மெதுவாகத் தன் அருகில் வந்த அனன்யாவின் கையைச் சுரண்டினான் விக்ரம்.

அவளோ உச்சக்கட்ட பயத்தில், “ஐயோ, நான் இங்கே யாரையும் கடத்த வரல… இந்த கருப்பு கலர் டிரஸ் போட்டவன் யாருன்னே எனக்குத் தெரியாது!” எனக் கண்களை மூடிக்கொண்டு கத்த, அவள் வாயில் கை வைத்து அவளைக் கத்த விடாமல் தடுத்தான் விக்ரம்.

“அடியே, நா தான்… நீயே மாட்டிவிட்டுருவ போல! உனக்கு உன் அண்ணே கிஷோரே பரவாயில்லை, அரைவேக்காடு! அங்க, பாரு… அந்தப் பொண்ண தானே நம்ம தூக்கணும்?” எனப் பதுங்கிப் பதுங்கிச் சென்ற மதிவதனையைக் காட்டி கேட்க,

“ஆமா, ஆனா அந்தப் பொண்ணு ஏன் இந்த நேரத்துல இங்க இருக்கு? ஒருவேளை இவ கல்யாணம் பிடிக்காம ஓடிப் போகப் போறாளோ?” எனச் சந்தேகமாகக் கேட்டாள் அனன்யா.

“எனக்கு என்ன தெரியும்? சரி, வா அவளைத் தூக்கலாம்!” என விக்ரம் அனன்யாவைப் பிடித்து இழுக்க,

“மச்சான், அதான் அவளே ஓடிப் போகப் போறாளே, அப்புறம் நாம என்ன இழவுக்கு  அவளை கடத்தனும்  என அனன்யா கடுப்பாகக் கேட்க, அவளை முறைத்தவன்

“இப்ப மட்டும் இந்த பொண்ணு இல்லாம போனா, ருத்ரா நம்மள அக்கு அக்கா  பிச்சிக் காக்காவுக்குப் போட்டுருவா! மூடிட்டு வாடி!” என அவளை இழுத்துக்கொண்டு சென்றான்.

மதிவதனி மெதுவாக மண்டபத்தைத் தாண்டி வெளியே செல்லப் போக, பின்னால் இருந்து அவள் முகத்தில் கர்ச்சீப்பை வைத்து விக்ரம் அழுத்த, தன் கையிலிருந்த கோணிப்பையை அவள் மீது போட்டாள் அனன்யா.

“டேய், இதெல்லாம் வெளியே தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியுமா?” என கிஷோர் அதிர, அதில் தன்நிலை மீண்டவன், “அதெல்லாம் ருத்ரா பாத்துப்பா ஃபிரெண்டுக்காக ரெண்டு நாள் ஜெயில்ல இருக்க மாட்டியா?” என விக்ரம் கேட்க, அவனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்து வைத்தான் கிஷோர்.

சாணக்கியனும் ருத்ராவும் பயணித்த கார் அரண்மனை போன்ற வீட்டின் முன் வந்து நிற்க, அந்த வீட்டை ஆராய்ச்சியாகப் பார்த்தாள் ருத்ரா. அவளும் பணத்தில் சளைத்தவள் இல்லையே, அதனாலேயே இந்த வீட்டின் பிரமாண்டம் அவளுக்குப்  பிரமிப்பைத் தரவில்லை. மணமக்கள் இருவரையும் சக்திவேலின் மனைவி சைந்தவி ஆரத்தி எடுத்து வரவேற்க, வலது கால் வைத்து அந்த வீட்டிற்குள் நுழைந்தாள் ருத்ரா.

அவர்கள் உள்ளே வந்ததும் வேதவள்ளி ருத்ராவை அழைத்துச் சென்று விளக்கேற்றச் சொல்ல, அவளும் சென்று அங்கிருந்த குத்துவிளக்கை ஏற்றி வைத்தார். இதை உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த சாணக்கியன், தன் ஸ்டிக்கை ஊன்றியபடி மாடியேறித் தன் அறைக்குள் சென்று அடைந்துகொண்டான். அவன் மனநிலையை அறிந்த குடும்பத்தினரும் அவனைத் தடுக்கவில்லை.

தன் அறையில் கட்டிலில் சாய்ந்து கண்மூடியிருந்த சாணக்கியனின் கண்முன், “உனக்குக் கல்யாணம்னு ஒன்னு நடந்தா, அது என் கூடத்தான் இந்த ஜென்மத்துல நான்தான் உன் பொண்டாட்டி!” என ருத்ரா ஆங்காரமாகக் கத்தியது நினைவில் வந்து போனது.

அவனால் நடந்த நிகழ்வுகளை எதேச்சியாக நடந்தவை என்று ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை; அவளது குணம் அறியாதவன் அல்லவே அவன்!

அத்தியாயம் – 04

சாணக்கியன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருக்க, அந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் ருத்ரா. அவள் வந்த அரவத்தில் கண்களைத் திறந்தவன், “உனக்குக் கொஞ்சமாவது மேனர்ஸ் இருக்கா? இப்படித்தான் அடுத்தவங்க ரூமுக்குப் பெர்மிஷன் கேட்காம வருவியா?” என எரிச்சலாகக் கேட்க,

அவளை மேலிருந்து கீழொரு பார்வை பார்த்தவள், கழுத்திலிருந்த தாலியை நீட்டியபடி, “இனி இது உங்க ரூம் இல்ல பாஸ், நம்ம ரூம்!” என்று கூறி அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

அவளிடமிருந்து விலகி அமர்ந்தவன், “அந்தப் பொண்ணை என்ன பண்ண?” என நேரடியாகக் கேட்டுவிட, “என்ன பொண்ணு?” எனப் பதிலுக்குக் கேட்டாள் அவள்.

“இங்க பாரு ருத்ரா, உன்னைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும்! இந்தத் கல்யாணம் நின்னது, நம்ம கல்யாணம் நடந்தது எல்லாம் உன் பிளான்னு புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்ல!” என அவன் பற்களைக் கடித்துக்கொண்டு சொல்ல,

அவள் கன்னங்களைச் செல்லமாக கிள்ளியவள், “சாணக்கியன் எவ்வளவு ஸ்மார்ட்னு எனக்குத் தெரியாதா?” என்று சொல்ல அவளது கைகளைப் பிடித்து மறுபக்கம் திருப்பி முறுக்கினான்

அவன் செய்கையில் அவளுக்குக் கை வலி எடுக்க, இதழ்களைக் கடித்துப் பொறுத்துக்கொண்டவள் வலியில் கண்களை இறுக்கமாக மூடிக்கொள்ள, அவள் கைகளை விடுவித்தவன், “இங்க பாரு ருத்ரா, ஒழுங்கா அந்தப் பொண்ணை என்ன பண்ணேன்னு சொல்லு, இல்ல நடக்குறதே வேற!” என அவளை மிரட்ட, அதற்குச் சற்றும் அசராமல், “ஏன் சார், உங்க எக்ஸ்- பியான்ஷேவை ஏதாவது பண்ணிருவேன்னு பயமா?” என நக்கலாகக் கேட்டாள்.

அவளைக் கூர்மையாகப் பார்த்தவன், “அப்போ அவளை நீதான் கடத்தின?” என கேட்க, “ஆமா!” என அசால்ட்டாகத் தோள்களை உலுக்கிச் சொன்னவளைப் பார்த்து அவனுக்குத்தான் எரிச்சலாக இருந்தது.

“நீ எல்லாம் ஒரு பொண்ணாடி,  கூடப் பிறந்த தங்கச்சியே கல்யாணத்தன்னைக்குக் கடத்தி, அவ கல்யாணம் பண்ணிக்கப் போறவனை  கல்யாணம் பண்ணியிருக்க! கொஞ்சமாவது உன் தங்கச்சி பத்தியோ இல்ல உன் குடும்பம் பத்தியோ யோசிச்சியா? உன்னால இன்னைக்கு எத்தனை பேருக்கு அவமானம்?” என அவன் கோபமாக கேட்க

“இதுல என்ன பாஸ் இருக்கு? பொண்ணு ஓடிட்டா, அந்தப் பையன் அவங்க அக்காவையோ தங்கச்சியையோ கல்யாணம் பண்ணிக்கிறது கேஷுவல் தானே? அப்புறம்… என் தங்கச்சி பத்தி நீங்க ஃபீல் பண்ணாதீங்க, அவளுக்கு எது கரெக்ட்னு எனக்குத் தெரியும்! பை த வே, எனக்கு இதுல எந்தக் கில்ட்டும் இல்ல. ஒழுங்கா நான் சொன்னப்பவே கல்யாணத்தை நிறுத்தி நீங்க என்னை கல்யாணம் பண்ணிருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா?” எனக் கேட்டவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் சாணக்கியன்!

அவன் அறைந்த வேகத்தில் அவள் தலை சுற்ற, கட்டில் கம்பைப் பற்றியே தன்னைச் சமன் செய்துகொண்டவள், மாறி அவன் கன்னத்தில் அறைந்திருந்தாள்!

அனன்யா மதிவதனியின் முகத்தில் தண்ணீர் தெளிக்க, லேசாகக் கண்களை விழித்தவள் தன் மருண்ட விழிகளால் அங்கிருந்தவர்களைப் பயத்துடன் பார்க்க, “ஏய் ரிலாக்ஸ், பயப்படாத… நாங்க ருத்ராவோட ஃபிரெண்ட்ஸ்தான்! என்ன, ஞாபகம் இல்லையா? நான்தான் அனன்யா!” என அனன்யா அவளின் பயத்தைப் போக்கச் சொல்ல,

“வாண்டடா போய் அப்துல் ஆகுது பாரு ஆர்வக்கோளாறு!” எனப் பொறிந்து கொண்டிருந்தான் கிஷோர்.

அவர்களைப் பயம்கலந்து பார்த்தவள், “நீங்கள் வந்து என்னைைக் கூட்டிட்டுப் போவீங்கன்னுதானே அக்கா சொன்னா? நீங்கள் ஏன் என்னைைக் கடத்திட்டு வந்தீங்க?” எனப் பாவையவள் பாவமாகக் கேட்க, விக்ரமும் அனன்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“ஏம்மா, அப்ப நீயும் உன் அக்காவும் கூடக் கூட்டா?” என அவளிடம் கேட்ட கிஷோர், “டேய், அந்தப் பொண்ணு நம்ம கூட வர ரெடியா இருந்திருக்கா இல்ல? அதுக்கப்புறம் ஏன்டா என்னமோ பெரிய கடத்தல் பண்ற மாதிரி ரேஞ்சுக்குப் பிளான் பண்ணிப் பிளாஷ்பேக் ஓட்டுன? இதுல பிளாக் கலர் ஊடி வேற ஏன் நீ பிளாக் கலர் ஊடி போடாம யாரையும் கடத்த மாட்டியா?” என விக்ரமிடம் எகிற,

அவன்  எங்கே இவன் கத்துவதைக் கவனித்தவள், நேற்றைய நாள் தன் தோழியுடன் தொலைபேசியில் பேசியதைப் பற்றித் தானே யோசித்துக் கொண்டிருந்தான்.

அவன் யோசனையான முகத்தைக் கண்டவன், “ஆனா, ஊனான்னு பிளாஷ் பேக் போறாங்கடா!” எனப் புலம்பியவாறே அவன் பார்த்த திசையை நோக்கிப் பார்த்தான்.

விக்ரம் சோஃபாவில் விட்டத்தைப் பார்த்தவாறு மல்லாந்து படுத்திருக்க, அடுத்த சோஃபாவில் தலையில் கை வைத்தவாறு அமர்ந்திருந்தாள் அனன்யா.

“என்னடி, நம்ம என்ன பண்ணாலும் சொதப்புது? போற போக்குப் பார்த்தா ருத்ரா கடைசி வரைக்கும் சிங்கிள்தானோ? அவ சிங்கிளா இருந்தா கூட பரவாயில்லை, அவளுக்கு  கல்யாணம் ஆகுற வரைக்கும் எங்களை சைட்டுக் கூட அடிக்க விடமாட்டாளே! பேசாம காசிக்குப் போயிடலாமா?” என விக்ரம் கேட்க,

“நான் போன வாரமே காசிக்குப் காவி டிரஸ் வாங்கிட்டேன்!” எனப் பதிலுக்குச் சொன்னாள் அனன்யா.

அந்நேரம் விக்ரமின் போன் அலற, அதில் ருத்ராவின் பெயரைக் கண்டவன், “ஏதாவது பிளான் சிக்கிருச்சோ?” என எண்ணியவாறு போனை ஆன் செய்து காதில் வைக்க, மறுமுனையில் இருந்த ருத்ரா, “டேய், மதி மண்டபத்துலதான் இருக்கா, நீ என்ன பண்ற…” என அவள் ஏதோ சொல்ல வர,

அவளைத் தடுத்தவன், “செம ஐடியா! பொண்ணைத் தூக்குறோம், அதான? இதான் நான் முன்னாடியே சொன்னேன், நீதான் கேவலமா திட்டின! சரி, பொண்ணோட வாரேன்!” என்றவன் அவள் பேச விடாமல் போனை அணைத்துவிட்டான்.

திரும்பத் திரும்ப அழைத்து ஓய்ந்தவள், “என்னமோ பண்ணித் தொலையட்டும்!” என்று விட்டுவிட, அவனும் மதிவதனியைக் கடத்தியிருந்தான்.

இதை எல்லாம் கேட்டு விக்ரமை முறைத்த கிஷோர், மதிவதனையைப் பார்த்து, “நீ என்னம்மா, கல்யாணத்தை நிறுத்தணும்னு நினைச்ச?” எனக் கேட்க  அவள் மேலே பார்க்க, “நீயும் பிளாஷ் பேக் போனா நான் கொலைகாரனா மாறிடுவேன், நார்மலா சொல்லுமா என அவளை மிரட்டினான்.

அவனைப் பாவமாகப் பார்த்தவள், “நான் ரீசண்ட்டா தான் ஸ்கூல் முடிச்சேன். எனக்கு டாக்டர் ஆகணும்னு ஆசை, நீட் எக்ஸாமும் எழுதினேன். நல்ல மார்க் தான் வந்திச்சு, காலேஜ்லயும் ரீசண்டாதான் சேர்ந்தேன். அப்போதான் இந்த அலையன்ஸ் வந்துச்சு.

அக்காக்குதான் இந்த அலையன்ஸ் வந்துச்சு, ஆனா அக்கா போட்டோ கூடப் பார்க்காம பிடிக்கலைன்னு சொல்லிட்டா. உங்களுக்குத்தான் தெரியுமே அக்காவை  ஃபோர்ஸ் பண்ண முடியாதுன்னு; ஆனா அப்பாவுக்கு இந்த அலையன்ஸ் ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. அதனால எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு டிசைட் பண்ணிட்டாரு.

எனக்கு அதுல சுத்தமா விருப்பம் இல்லை; ஆனா, அம்மாவும் அப்பாவும் ஃபோர்ஸ் பண்ணாங்க. எனக்கும் அவங்களை எதிர்த்துப் பேசப் பழக்கமும் இல்லை. கல்யாணம் பிக்ஸ் ஆனதுல இருந்து என்னை காலேஜ் கூட அனுப்பல, ஒரேடியா படிப்பை நிறுத்துவாங்கன்னு பயமா இருந்துச்சு. அதான் நேத்து அக்காவுக்கு கால் பண்ணி ஹெல்ப் கேட்டேன்.

அவங்க தான் சொன்னாங்க, ‘மண்டபத்தின் பின்வாசல் வழியா வா, என் ஃப்ரெண்ட்ஸ வரச் சொல்றேன், அவங்க உன்னைப் பத்திரமா கூட்டிட்டுப் போவாங்க’ன்னு சொன்னாள்!” என்றாள் மதிவதனி.

“அய்யோ பெருமாளே, இப்படிட்டுக் குட்டி குட்டி கதையாச் சொல்லிச் சாவடிக்கிறாங்களே! இவ என்னன்னா சாணக்கியனும் ருத்ராவுக்கும் தான் முதல்ல பேசுனாங்கன்னு சொல்றா… இதைப் பத்தி அவகிட்ட கேட்டா, அவ வேற இதுக்கு ஒரு கதை சொல்லுவா! சரி, இப்போ என்ன பண்றதாப் பிளான்? இந்தப் பொண்ணை இப்போ என்ன பண்றது?” எனக் கேட்க அவனை கண்டு  இதழ்களைப் பிதுக்கினர் நண்பர்கள் இருவரும்