உறுதியோடு டைரியை மூடியவள், அதனை எடுத்த இடத்தில் பத்திரமாக வைத்துவிட்டு வீட்டின் மற்ற வேலைகளை கவனிக்கச் சென்றாள்.
எல்லா வேலையும் முடித்தவள், சற்று தளர்வாகத் திண்ணையில் அமர்ந்தாள்.
அப்பொழுது தவழ்ந்து தவழ்ந்து படியேறி வந்த குட்டியைப் பார்த்தவள் பூரித்தாள்.
அவளுக்கு மிகவும் நெருக்கமான குட்டி என்றால் அவன் தான். ஒன்றரை வயது ஆகியும் இன்னும் சரியாக நடக்கத் தெரியாமல் தவழ்ந்து படிகளில் ஏறுபவன். அவன் பெயர் ஹரி. அவளது அத்தானின் மகன்.
அவனிடம், “நீ தனியா வாடா வந்த?” என்று கேட்டதற்கு, வாசலுக்கு வெளியே தன் பிஞ்சுக் கைகளை நீட்டினான். அங்கு நின்றிருந்தார் அவளது அத்தை.
அவனை வாரி எடுத்து அணைத்து முத்தமிட்டாள். இதுவரை தன் மனதில் இருந்த சோகங்கள் மறைந்து போக, புது தெம்பு கிடைத்தது போல் உணர்ந்தாள்.
அருகில் இருக்கும் முருகன் அண்ணாவின் கடைக்குச் சென்றாள். சிறிய அளவிலான பத்துக்குப் பத்து அறையில், அத்தியாவசியமான பொருட்களும் திண்பண்டங்களும் கண்ணாடிக் குடுவைகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்றைத் திறந்து பால்கோவாவை எடுத்துவிட்டு மூடினாள். அதற்குரிய காசை அந்த அண்ணாவிடம் கொடுத்துவிட்டு, திரும்பி அவனுடன் நடக்க ஆரம்பித்தாள்.
அவளது கைகளில் இருந்து பால்கோவாவைப் பிடுங்கியவன், சிரித்துக்கொண்டு உண்ண ஆரம்பித்தான்.
அவனுடன் இருக்கும் பொழுதுகளில்தான் அவளது கவலைகள் மறந்து இன்பமாக இருப்பாள். அவன் வாழ்க்கையின் கசப்புகளை மறக்க அவளுக்கு இருந்த ஒரே வலி நிவாரணம் ஹரி தான். அதனாலேயே அவன் மீது அளவுக்கடந்த பாசத்தைக் கொட்டி வைத்திருந்தாள். அவளது மனம் அவனைத் தன் மகனாகவே பாவித்தது.
சிறிது நேரம் அவனுடன் சிறுபிள்ளை போல் விளையாடியவள், அவளது அத்தையிடம் கொடுத்துவிட்டு படுக்கச் சென்றாள்.
தன் படுக்கையில் பலவித யோசனைகளுடன் தூங்கிப் போனாள்.
இரவு மணி ஒன்றைக் கடக்க, அவளுக்கு அருகில் திடீரென்று தோன்றிய உருவம், “ருத்ரா… ருத்ரா…” என்றது.
அந்தச் சத்தம் காதில் விழ, கண்விழித்தவளுக்கு முன்னால் நின்றிருந்தான் அவளது அண்ணன் அருண்.
“நீ எப்படிண்ணா இங்க வர? அந்தக் காட்டுக்குள்ள என்னதான் நடக்குது? நீ ஏன் இப்படி ராத்திரி வந்துட்டு அப்புறம் காணாம போயிடுற?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை அடுக்கினாள்.
இதுதான் இந்த ஒரு மாத காலமாக தினமும் நடந்து கொண்டு வருகிறது. தினமும் இரவில் வரும் அருண், “உனக்காக காட்டில் காத்திருக்கிறேன்” என்று கூறிவிட்டு மாயமாவது வழக்கமாக இருந்தது.
இதன் பின்னால் இருக்கும் மர்மத்திற்கு விடை தெரியாமல் குழம்பித் தவித்தவளுக்கு, அதன் பிறகு தூக்கம் வரவில்லை.
நீண்ட நேரம் விழித்திருந்தவள், சரியாகக் கோழி கூவும் ஐந்து மணி அளவில் உறங்கினாள்.
நன்றாகத் தூங்கி எழுந்தவள், தன் செல்பேசியில் நேரத்தைப் பார்த்தாள். ஒன்பது என்று காட்டியது.
“ச்ச… இவ்வளவு நேரம் தூங்கிட்டேனா?” என்று சிறிது சத்தமாகத் தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள்.
போர்த்தியிருந்த போர்வையை எழுந்து மடித்து வைத்துவிட்டு, அவள் அறையில் இருந்த கோல்கேட்டையும் பிரஷ்ஷையும் எடுத்துக்கொண்டு வெளியில் சென்றவள், அவசரமாகப் பல் தேய்த்துவிட்டு குளிக்கச் சென்றாள்.
எப்பொழுதும் இல்லாமல் இன்று சுறுசுறுப்புடன் இருக்கும் தன் மகளை வித்தியாசமாகப் பார்த்தார் கோகிலா.
குளியலறைக்குள் போன வேகத்தில் வெளியே வந்தவள், கயிற்றுக் கொடியில் தொங்கிக்கொண்டிருந்த தாவணியில் ஒன்றை உடலைச் சுற்றிக் கட்டிக்கொண்டாள். தலையைப் பின்னி, சிறிதாகப் பொட்டு ஒன்றைக் கண்ணாடியைப் பார்த்து வைத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டாள்.
அவசரமாக அவள் வீட்டை விட்டு புறப்படுவதைப் பார்த்த கோகிலா, “எங்கடி சொல்லாம கொள்ளாம போற?” என்றார்.
“காட்டுக்குள்ள போறேன் மா” என்று எந்தவிதத் தடுமாற்றமும் இல்லாமல் பதில் கூறினாள்.
அவளது பதிலில் நிலைகுலைந்தார் கோகிலா.
“என்னடி சொல்ற நீ… அந்தக் காட்டுக்குள்ள போய் யாரும் இதுவரை திரும்பி வந்தது இல்லை. ஏற்கனவே…” என்று கண்ணீரோடு ஏதோ சொல்ல ஆரம்பித்தவர், அதனை இடையிலேயே நிறுத்தினார்.
“ஏற்கனவே என் ஒரு புள்ளை என்ன ஆனானுனு தெரியலை. இதுதான சொல்ல வர்ற. நா அண்ணனை கண்டுபிடிச்சுக் கூட்டிட்டு வரேன் மா” என்று ஆவேசத்துடன் கூறினாள்.
அதனைக் கேட்ட கோகிலாவிற்குத்தான் திகைப்பாக இருந்தது. அருண் காட்டிற்குள் போய்த் தொலைந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு மயங்கிய ருத்ராவிற்கு நடந்தவை அனைத்தும் மறந்துவிட்டதாலேயே இப்படி நடந்துகொள்கிறாள் என்று இன்றுவரை நினைத்திருந்தார் கோகிலா.
இவ்வளவு தெளிவாகப் பேசும் தன் பெண் நன்றாக இருக்கிறாள் என்று சந்தோஷப்படவா? இல்லை, இப்பொழுது தன் அண்ணனைத் தேடிக் காட்டிற்குப் போகிறேன் என்று நிற்பவளை நினைத்து அழுவதா? என்று குழம்பியபடி நின்றிருந்தார்.
அவரின் குழப்பத்தை உணர்ந்த ருத்ரா, “நா தனியா ஒண்ணும் போகலை மா. என் கூட வெளி ஊர்ல இருந்து வந்திருக்கிற பசங்க நாலு பேர் வராங்க. அது மட்டும் இல்லாம, நாங்க பகல்லதான மா போகப் போறோம். நீ எதை நினைச்சும் கவலைப்படாத மா. நா அண்ணனோட வரேன்” என்று கூறிவிட்டு, கோகிலாவின் பதிலை எதிர்பாராமல் அங்கிருந்து விறுவிறுவென்று கிளம்பிச் சென்றாள்.
போகும் ருத்ராவைப் பார்த்த கோகிலாவின் கண்களில் இருந்து நீர் சொட்ட ஆரம்பித்தது. இதேபோல்தான் சொல்லச் சொல்லக் கேட்காமல் தன் மகன் சென்று காணாமல் போனது நினைவு வந்தது.
யார் என்று முன்னப்பின்ன தெரியாத நபர்களுடன் வேறு காட்டிற்குள் செல்வதாகச் சொல்லிவிட்டுப் போகும் தன் மகளைத் தடுப்பதற்கு வழியின்றித் தவித்தார்.
ஒன்றை தன் மகள் முடிவெடுத்துவிட்டாள். யார் என்ன சொன்னாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டாள் என்பது அவருக்குத் தெரிந்திருந்ததால், போகிறவளைத் தடுக்க கோகிலா முற்படவில்லை.
முருகன் அண்ணாவின் கடைக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தவளின் அருகில் வந்து நின்றது டொயோட்டா கார்.
அதில் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த பரமேஸ்வரன், “ஏறிக்கோங்க” என்றான்.
காரின் கதவுக்கு அருகில் வந்த ருத்ரா, எப்படி திறப்பது என்று தெரியாமல் விழித்தாள். அதனைக் கவனித்த ரோஸினி கதவைத் திறக்க, உள்ளுக்குள் ஏறிக்கொண்டாள்.
கார் சாலையின் வலது புறம் காடுகள் இருக்கும் திசையை நோக்கிச் சென்றது.
ஒரு பகுதிக்கு மேல் காரில் செல்ல முடியாமல், காரை ஒதுக்குப்புறமாக விட்டுவிட்டு நடக்க ஆரம்பித்தனர்.
இதுவரை பளிச்சென்று கண்களைக் கூசச் செய்த சூரிய ஒளி மறைந்து போக, அடர்ந்த காடு இருட்டாகக் காட்சியளிக்க ஆரம்பித்தது.
திடீரென்று ஏற்பட்ட இந்த மாற்றத்தில் சற்று பயத்துடனே ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
காட்டிற்குள் செல்லும் இவர்கள் உயிர் பிழைப்பார்களா? அங்கு ஒளிந்திருக்கும் ரகசியம்தான் என்ன? ருத்ரா அவளின் அண்ணன் அருணைக் கண்டுபிடிப்பாளா?