சிவமும் சாந்தியும் இல்லாத அந்த வீடு, முன்பிருந்த உயிரோட்டத்தை இழந்திருந்தது. ராம் முன்னின்று இருவரின் இறுதிச் சடங்குகளையும் முறையாக செய்து முடித்திருந்தான்.
ஆனால் அந்த இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தது தீபிகாதான்.
ஒரே நேரத்தில் தாத்தாவையும் பாட்டியையும் இழந்திருந்தாள். எத்தனை பேர் அவளைச் சுற்றி இருந்தாலும், அந்த வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை.
அவள் அதிக நேரமும் அமைதியாகவே இருந்தாள்.
அவளை ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தது கார்த்திகாதான்.
“இங்கேயே இருந்தா இன்னும் அவங்களோட நினைவுக்குள்ளேயே சுருண்டு போயிடுவா,” என்று மலர் கார்த்திகாவிடம் மெதுவாகச் சொன்னாள்.
கார்த்திகாவுக்கும் அது புரிந்தது.
ஒருநாள் தீபிகாவிடம் நீண்ட நேரம் பேசி, அவளை சமாதானப்படுத்தி பெசன்ட் நகர் பங்களாவுக்கு அழைத்துச் செல்ல முயன்றார்.
ஆனால் தீபிகா ஒரே வார்த்தையில் மறுத்துவிட்டாள்.
“நான் அம்மா வாழ்ந்த கெஸ்ட் ஹவுஸ்லதான் இருப்பேன்.”
அந்த வார்த்தையில் இருந்த பிடிவாதத்தைப் பார்த்த கார்த்திகா அவளை மேலும் வற்புறுத்தவில்லை.
சிதம்பரம் இதை முன்பே எதிர்பார்த்திருந்தார் போல இருந்தது.
அவர் எதுவும் பேசவில்லை.
மற்றவர்களையும் பேசவிடவில்லை.
“அவளுக்கு கொஞ்சம் நேரம் கொடுங்க,” என்பதுபோல அவரது அமைதி இருந்தது.
கார்த்திகா, ஜாஸ்மின், மலர் என அனைவரும் அங்கேயே தங்க ஆரம்பித்தனர்.
கார்த்திகாவுக்குத்தான் ஒரே குழப்பம்.
இங்கேயும் இருக்க வேண்டும்… அங்கேயும் கவனிக்க வேண்டும்.
ஆனால் தீபிகாவை அந்த நிலையில் விட்டுவிட்டு செல்லவும் அவரால் முடியவில்லை.
—
ஒருநாள் சிதம்பரம் தனது மூத்த மகன் அருளுடன் தனியாகப் பேசினார்.
தீபிகாவின் நிறுவனம் டேவிட் மற்றும் கார்த்தி மூலமாக நிர்வகிக்கப்பட்டாலும், சிவம் ஏற்கனவே ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்லிவிட்டிருந்தார்.
தீபிகா இன்னும் பதினெட்டு வயது முடியவில்லை .
அவளது பாதுகாப்பும், படிப்பும் முதலில்.
நிர்வாகத்தை முழுமையாக அவளிடம் ஒப்படைக்க இன்னும் காலம் தேவை.
அதற்காகவே சிவமும் சிதம்பரமும் முன்பே ஒரு முடிவை எடுத்திருந்தனர்.
தீபிகா முழுமையாக நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் வரை, கார்த்திகாவும் அருளும் அவளது நிறுவனங்களின் நிர்வாகத்தை கவனிக்க வேண்டும்.
ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது.
அருள் வேல்ஸ் குழுமத்தின் முழு நிர்வாகப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டால், AR நிறுவனத்தையும் அதே நேரத்தில் கவனிப்பது சாத்தியமில்லை.
இந்த விஷயம் குடும்பத்தினர் அனைவரும் கூடிப் பேச வேண்டிய நிலைக்கு வந்தது.
சிதம்பரம் தலைமையில் உமா, கார்த்திகா, அருள் என அனைவரும் அமர்ந்திருந்தனர்.
தீபிகாவின் நிறுவனம் பற்றி கார்த்தியும் டேவிடும் ஏற்கனவே அறிந்து கொண்டிருந்த விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தபோது, அங்கே இருந்தவர்களுக்கே மெய்சிலிர்த்தது.
இந்தப் பெண் இன்னும் சில வருடங்களில் வேல்ஸ் குழுமத்தை விட பல படிகள் மேலே சென்று விடுவாள் என்பது தெளிவாகத் தெரிந்தது.
ஆனால் நிர்வாக விஷயங்களில் அவளை இன்னும் சில ஆண்டுகள் பக்குவப்படுத்த வேண்டியிருந்தது.
அதற்காகத்தான் அவளிடம் முடிவை வைக்க முடிவு செய்தனர்.
—
அனைவரும் எதிர்பார்த்தபடி தீபிகா எந்த தயக்கமும் இல்லாமல் தன் முடிவைச் சொன்னபோது, அதிர்ந்தது உமாதான்.
“பெரியப்பா முழுமையாக AR நிறுவனத்தின் தலைமை நிர்வாகப் பொறுப்பை ஏற்கணும்.”
அருள் அமைதியாக அவளைப் பார்த்தார்.
“வேல்ஸ் குழுமத்தில் எனக்கு மொத்தம் நாற்பது சதவீத பங்கு வேண்டும். ஏற்கனவே எனக்கு பதினைந்து சதவீதம் இருக்கு. மீதமுள்ள இருபத்தைந்து சதவீதம் வேண்டும்.”
சில நொடிகள் அமைதி நிலவியது.
“அதே மாதிரி AR நிறுவனத்தில் முப்பது சதவீதம் வேல்ஸ் குழுமத்துக்கு இருக்கணும். ஐந்து சதவீதம் கார்த்திகா பெரியம்மாவுக்கு. ஐந்து சதவீதம் பெரியப்பாவுக்கு. மீதமுள்ள 10 சதவீதம்பங்குகளில் பெரியப்பாவின் தம்பிகளுக்கும், ஜாஸ்மின், சுபா, அணு ஆகியோருக்கும் அவரவர் பங்குகள் இருக்கணும்.”
அருள் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
இவள் இத்தனை விஷயங்களையும் எப்படி இவ்வளவு தெளிவாக யோசித்திருக்கிறாள்?
உமா ஏதோ சொல்ல வாயைத் திறந்தார்.
அதற்குள் சிதம்பரம் கேட்டார்.
“இப்பவே வேல்ஸ்–AR இணைப்பு அவசியமா?”
தீபிகா தயக்கமின்றி தலையசைத்தாள்.
“ஆம்.”
அவள் குரலில் எந்த குழப்பமும் இல்லை.
“பெரியப்பா முழுமையான தலையீட்டோட நிர்வாகம் செய்யணும்னா, வேல்ஸ், AR இரண்டும் ஒரே குடையின் கீழ் வரணும்.”
சிதம்பரம் அமைதியாக அவளைப் பார்த்தார்.
“அதோட இன்னொரு நிறுவனத்தையும் வேல்ஸ்–AR இணைந்து கையகப்படுத்தணும்.”
அங்கே இருந்த அனைவரும் அவளை நோக்கினர்.
அந்த நிறுவனம் பல பன்னாட்டு நிறுவனங்களின் மிகப்பெரிய திட்டங்களை கையில் வைத்திருந்தது.
AR ஏற்கனவே அந்த நிறுவனத்துடன் பல திட்டங்களில் பணியாற்றியிருந்தது.
ஆனால் நிர்வாகக் குழப்பங்களால் அந்த நிறுவனம் தற்போது SEBI கண்காணிப்புக்குள் இருந்தது. AR நிறுவனத்திற்கும் அந்த நிறுவனத்திடமிருந்து கணிசமான தொகை வர வேண்டியிருந்தது.
அதிலும் முக்கியமான ஒன்று—
அவர்கள் தற்போது செய்து கொண்டிருக்கும் மிகப்பெரிய திட்டத்தை தீபிகாதான் நேரடியாக உருவாக்கிக் கொண்டிருந்தாள்.
“நான் தனியா அதை வாங்க முடியாது,” என்றாள் தீபிகா.
“வேற யாராவது வாங்கிட்டாங்கன்னா, நான் உருவாக்கிய திட்டங்களோட முழு மதிப்பு எனக்கு கிடைக்காது. பணம் கிடைக்கும். ஆனா நான் உருவாக்கியதை நம்ம கையில் வைத்திருக்க முடியாது.”
அவள் சற்று இடைவெளி விட்டாள்.
“வேல்ஸ் குழுமம் என்ற பெரிய பெயர் பின்னால இருந்தா, நம்மால் அதை பாதுகாப்பாக கையகப்படுத்த முடியும்.”
அந்த வார்த்தைகள் அங்கே இருந்தவர்களை அதிர வைத்தன.
—
அருள் கூட சில நொடிகள் பேசாமல் இருந்தார்.
நிர்வாகம் தெரியாது என்று நினைத்திருந்த பெண், இவ்வளவு பெரிய முடிவை அவர்களைவிட முன்பே யோசித்து வைத்திருந்தாள்.
வேல்ஸ் குடும்பத்தின் பங்குகளைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் தீபிகாவால் நேரடியாக வாங்க முடியாது.
ஆனால் அந்த அமைப்புக்குள்ளேயே இருந்து தன் நோக்கத்தை அடைய அவள் வழியை கண்டுபிடித்திருந்தாள்.
அருள் தன் மனைவியைப் பார்த்தார்.
கார்த்திகாவும் அமைதியாக இருந்தார்.
அவளுக்கு இது ஆச்சரியமில்லை.
தீபிகா எப்போதும் இப்படித்தான்.
மற்றவர்கள் பார்க்காத இடத்தில் அவள் ஏற்கனவே பல படிகள் முன்னால் இருப்பாள்.
சிதம்பரம் இறுதியில் சொன்னார்.
“இது என் மகன்களோட முடிவு. அவர்கள் பேசிக்கட்டும்.”
அருள் தனது தம்பிகளான செந்திலும் ராமும் பேசினார்.
செந்திலுக்கு கவலை இருந்தது.
நிர்வாகத்தில் அருளைப் போல முழுமையாக ஈடுபட முடியாது என்பதை அவனுக்குத் தெரியும்.
ராமுக்கும் அந்த அளவிலான நிர்வாக அனுபவம் இல்லை.
ஆனால் அண்ணன் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வதில் இருவருக்கும் தயக்கம் இல்லை.
“அண்ணன் என்ன முடிவு எடுத்தாலும் நாங்க சம்மதம்,” என்றான் செந்தில்.
ராமும் அதையே சொன்னான்.
இறுதியில் அருள் சம்மதித்தார்.
தனக்கான பங்கில் இருந்து இரு தம்பிகளுக்கும் தலா இரண்டரை சதவீதம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
வேல்ஸ் குழுமத்துக்கு முப்பது சதவீத பங்கு ஒதுக்கப்பட்டது.
அதை தனது மூன்று மகன்களுக்கும் சிதம்பரம் பிரித்துக் கொடுத்தார்.
ஆனால் ராமுக்குக் கிடைக்க வேண்டிய வேல்ஸ் குழுமப் பங்குகளை தீபிகாவுக்கு கொடுக்கக் கூடாது என்று சிதம்பரம் கூறினார்.
“அதற்குப் பதிலா ராமுக்கு கிடைக்கும் AR பங்குகள் கொடுக்கலாம்.”
அருளும் ராமும் அதை எதிர்த்தனர்.
ஆனால் தீபிகா உடனே சொன்னாள்.
“சரி.”
ராமின் முகத்தில் கவலை தெரிந்தது.
சிதம்பரம் அவனைப் பார்த்தார்.
“இது உனக்கு இப்ப புரியாது.”
பின்னர் தீபிகாவை நோக்கித் திரும்பினார்.
“வேல்ஸ் குழுமத்துல பெரிய அளவு பங்கு உனக்குத்தான் வரப்போகுது. இப்ப மொத்தம் 30 சதவீதம் வரை என் காலத்துக்குப் பிறகு, என் பேத்திக்கு இன்னும் பத்து சதவீதம் கிடைக்கும். சம்மதமா?”
தீபிகா ஏதோ சொல்ல வாயைத் திறந்தாள்.
அதற்குள் கார்த்திகா அவளது கையைப் பிடித்தார்.
தீபிகா அமைதியாகிவிட்டாள்.
—
### ஏழு ஆண்டுகள் கழித்து…
காலம் வேகமாக ஓடியது.
தீபிகா தனது மேல்படிப்பை முடித்திருந்தாள்.
இப்போது அவள் பெரியப்பா அருளுடன் இணைந்து நிர்வாகத்தை கவனித்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் ஒரு விஷயம் மட்டும் மாறவில்லை.
கார்த்திகா தன கணவருடன் இன்னும் அந்த கெஸ்ட் ஹவுஸில்தான் இருந்தார்.
அதற்குள் AR நிறுவனம் ரியல் எஸ்டேட், வாகன உற்பத்தி தொழிற்சாலை என பல துறைகளில் வளர்ந்திருந்தது.
அந்தப் பெரிய மென்பொருள் நிறுவனமும் ஐந்து வருடங்களுக்கு முன்பே வேல்ஸ்–AR கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது வெளியில் காட்டிக்கொள்ளவில்லை .
இப்போது அதை முழுமையாக தங்களுடன் இணைக்கும் அளவுக்கு வேல்ஸ் குழுமமும் AR நிறுவனமும் வலிமையான நிலையில் இருந்தன.
—
“என்னடி இது… இன்னும் கார்த்திகாவும் அருளும் கெஸ்ட் ஹவுஸ்லதானா இருக்காங்க?”
உமா தன் இரண்டாவது மருமகள் தமயந்தியிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.
மூத்த மருமகள் குடும்பத்தில் இல்லாமல் போன நிலையில், தமயந்திதான் வீட்டின் பல பொறுப்புகளை ஏற்றிருந்தார்.
அருளுக்கும் கார்த்திகாவுக்கும் பிறந்த இரட்டையர்கள் சரண், கரண் இருவரும் லண்டனில் மேல்படிப்பு முடித்து, நிறுவன நிர்வாகத்தை கற்றுக்கொண்டு திரும்பியிருந்தனர்.
இப்போது அவர்கள் தந்தைக்கு உதவியாக இருந்தனர்.
செந்திலின் மூத்த மகன் தீபக் தந்தையுடன் இணைந்து நிர்வாகத்தை கவனித்தான்.