இரவு பிரித்து வைத்திருந்த காய்கறிகளை அலசி எடுத்து மதியத்திற்காக மளமளவென நறுக்க ஆரம்பித்தாள் சமுத்திரா.
வாசல் தெளித்து வந்த பத்மா, “நைட்டே சொல்ல மறந்துட்டேன். புலியை கொஞ்சம் கூட ஊற போடு. வத்த குழம்பும் வடை பாயசமும் சேர்த்து செஞ்சிடலாம்.”
“யாரும் வராங்களா அத்தை?” விஷேஷ நாட்களில், கல்யாணி வரும் சமயங்களில் மட்டுமே இதுபோன்று உணவுப் பட்டியல் நீளும். நாத்தனார் வருகிறாரோ என்று பார்க்க,
“செழியனுக்கு இன்னைக்கு பொறந்தநாளு. ஸ்வீட் செய்யாம எப்படி. வத்த குழம்புனா அவனுக்கு உசுரு.” என்று சிறிய வெங்காயத்தையும் பூண்டையும் எடுத்துக்கொண்டு அமர்ந்தார்.
நின்ற இடத்திலிருந்தே பெருமூச்சுடன் கடிகாரத்தைப் பார்த்தாள். எப்பொழுதும் எழும் நேரம்தான் எனினும் அது அளவாக சமைக்க போதுமான நேரம், இதுபோன்று இன்னுமிரண்டு பலகாரம் செய்ய சற்று முன்னரே எழும்பியிருக்க வேண்டும்.
“லேட் ஆகிடும் அத்தை. ஈவினிங் அவங்க வர நேரம் செஞ்சிக்கலாம். வடைக்கும் பருப்பு ஊறப்போடல.”
“எழுந்ததுமே உளுந்து வடைக்கு ஊறப்போட்டு பிரிட்ஜ்ல எடுத்து வச்சிட்டேன். சமையல் முடிச்சிட்டு கடைசியா அரைச்சி போட்டா சூடாவும் இருக்கும்.” என்று அவர் போக்கில் வேலை செய்ய, கடுப்பாக வந்தது சமுத்திராவுக்கு.
வேலைக்கு அஞ்சுபவள் இல்லைதான் எனினும் தினம் கடைபிடிக்கும் வழமை கொஞ்சம் மாறினால் எரிச்சல் வந்துவிடுகிறது. இனி அரக்க பரக்க செய்தால்தான் இத்தனையும் செய்து முடிக்க முடியும் என்ற யோசனையோடே கைகளின் வேகத்தை அதிகப்படுத்தினாள்.
இரண்டு அடுப்பிலும் தேவையானதை ஏற்றிவிட்டு பாயாசத்திற்கு முந்திரியும் ஏலக்காயும் தட்ட, என்றுமில்லாத திருநாளாய் நேரமே எழுந்து வந்தாள் நன்மதி. சமுத்திரா ஆச்சர்யமாய் பார்க்க,
“அதெல்லாம் வேண்டாம் சமு. நீ எப்போதும் செய்யுறதை முடிச்சிட்டு சொல்லு. அவங்களுக்குதான் புலாவ் செய்யலாம்னு வந்தேன். அதுவே போதும்.”
“பொறந்தநாள் அதுவுமா ஸ்வீட் செய்ய வேணாங்குற. நியாயமா நீதான் செய்யணும், அதைவிட்டுட்டு செய்யுற அவளையும் தடுக்குற?” மல்லுக்கு வந்த பத்மாவை அனாசியமாக கையாண்டாள் நன்மதி.
“அவங்கதான் புலாவ் கேட்டாங்க. நான் செய்யப்போறேன். இடையில் எதுக்கு தேவையில்லாம இவ்ளோ செஞ்சிகிட்டு? புடிச்சதை செஞ்சிக் கொடுத்தா போதாதா அத்தை?”
“அவனுக்கு வத்தக்குழம்பு புடிக்கும்னு நான் சமுவை செய்ய சொல்லியிருக்கேன். அதை சாப்பிட்டுப்பான்.” என் மகனுக்கு பிடித்த உணவை நீ மாற்றச் சொல்வாயா என்ற போட்டியில் பத்மா வாதாடினார்.
“எல்லாத்தையும் இழுத்துவிட்டுக்க வேண்டாம்னு சொன்னேன். அப்புறம் உங்க இஷ்டம்.” என்ற நன்மதி சமுத்திராவை ஒரு பார்வைக்கு பார்த்துவிட்டு நகர்ந்தாள். அதற்கான அர்த்தம் அப்போது விளங்கவில்லை. கலைவாணி வைத்து வாங்கிய போதுதான் விளங்கியது.
“அவங்க மூத்த புள்ளைக்கு பொறந்தநாளுனா அவங்க விருந்து செய்யட்டும் இல்லையா அவன் பொண்டாட்டி செய்யட்டும். நீ ஏன் செய்யணும்? அதுதான் செய்யுறேன்னு அவளே வந்து நின்னான்னு சொல்றியே, அவளை விட்டுட்டு நீ நகர வேண்டியதுதானே.” எப்போதும் அழைக்கும் நேரத்திற்கு அழைத்து பேச்சு கொடுத்து விஷயத்தை கறந்துவிட்ட கலைவாணி ஆதங்கப்பட்டார்.
அம்மாவிடம் இங்கு நடப்பதை சொல்லக்கூடாது என்று முடிவெடுத்தாலும் அவளையும் அறியாமல் பழக்க தோஷத்தில் அனைத்தையும் சொல்லிவிடுகிறாள்.
“இவ்ளோ எல்லாம் வேண்டாம், புலாவ் பண்றேன் அதுவே போதும்னு அக்கா சொன்னாங்க. அத்தைதான் வத்தக்குழம்பும் பாயசமும் வச்சே ஆகணும்னு புடிவாதமா நின்னுட்டாங்க.”
“இது நல்லாயிருக்கே கதை. அவங்க பசங்களுக்கு பொறந்தநாள்னா அவங்கதான் கொண்டாடணும். எல்லாத்தையும் உன் தலையில கட்டுவாங்களா? உன் கொழுந்தன், நாத்தின்னு எல்லாருக்கும் செய்யுறது மட்டுமில்லாம உன் பொறந்தாநாளுக்கும் நீயே செஞ்சிக்கணும்.” அலுத்துக்கொண்டது போல் அழுத்தமாக சொன்ன கலைவாணியிடம்,
“அப்போ அண்ணியை நீ எதுவும் சொல்லவே மாட்ட இல்லைம்மா?” என்று சமுத்திரா நக்கலாக பேசினாள்.
“நான் சொன்னாலும் அப்படியே அவ கேட்டு கிழிச்சிடுறா. எல்லாம் உன்னை மாதிரி வாய் பேசாத அப்புராணியா இருப்பாங்களா? ஏதோ நான் இப்படி இருக்குறவாசிதான் உன் அண்ணிக்காரி அடங்கி இருக்கா. இல்லைனா அவளை கையில புடிக்க முடியுமா. நீ அதை விடு, இனிமே ஏதாவது அதிகம் செய்ய சொன்னா முடியாதுனு சொல்லு. அப்படி செய்யணும்னு என்ன தலையெழுத்து உனக்கு? உன் புருஷனுக்கு, புள்ளைக்கு, நாளும் கிழமை வருதா செய், போதும். உன் மூத்த கொழுந்தன் பொறந்தநாளு கல்யாண நாளுக்கு எல்லாம் நீ கிச்சன்ல கிடந்து அழணும்னு இல்லை. நீ வாயை தொறந்து பேசு, தலையை வெட்டியா போடப்போறாங்க…”
பெருமூச்சுடன் சரியென்ற சமுத்திரா அவர் சொன்னதை அசைபோட்டபடி நாளைக் கடத்தினாள். மற்றவர் பிறந்தநாளுக்கு இவள் செய்வது போல் இவள் நாளுக்கு யார் என்ன செய்கிறார்கள்? அட இவளே தான் செய்துகொள்ள வேண்டும்.
மாலை சிணுங்கிக்கொண்டே இருந்தாள் உமையாள். பத்மாவும் இவளும் மாற்றி மாற்றி தூக்கி வைத்து சமாதானப்படுத்திப் பார்த்துவிட்டனர். எதற்கு அழுகை என்றே புரியாத நிலை.
செல்லம் கொஞ்சி பிடிவாதத்தில் அழுவாள் ஒழிய இதுபோன்று எதற்கென்றே தெரியாத வண்ணம் தொண்டை வலிக்க கத்தமாட்டாள் உமையாள். உடல் உபாதை வந்தால்கூட மருந்து கொடுத்தால் சமாதானம் ஆகிவிடுவாள். இன்று என்னவோ என்று கலங்க சிறிது நேரத்தில் உடல் சூடு அதிகரித்தது. ஜுரத்திற்கான மருந்து கொடுத்துப் பார்ப்போம் என்று இவள் முடிவெடுக்க, வீடு வந்துவிட்ட மகிழ்நன் மருத்துவமனை செல்லலாம் என்றான்.
“சாதாரண ஜுரம் மாதிரிதான் தெரியுது. மருந்து கொடுத்துப் பாக்கலாம்.” என்று சமுத்திரா சொல்ல,
“மணி ஆறு ஆகிடுச்சு. இப்போ ஜுரம் குறைஞ்சி மிட்நைட்ல திரும்ப வந்தா என்ன பண்றது. அதோட பாப்பாக்கு டாக்டரை பாத்தும் மூணு மாசம் இருக்கும். நீ அவளோட பைல் எடுத்துட்டு கிளம்பு, செக் பண்ணிடலாம்.” என்று மனைவி மகளை அழைத்துக்கொண்டு முதலில் அவர்கள் ஊரில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றான். அங்கு மருத்துவர் இல்லை என்கவும் கும்பகோணத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு வண்டியை செலுத்தினான் மகிழ்நன்.
மகளை தன் மேல் சாய்த்தபடி இருவருக்கும் இடையில் அமர வைத்திருந்த சமுத்திரா உமையாள் உறங்கவும் தலையை இடமும் வலமுமாய் திருப்பி சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்த்தபடி வர, கடைத்தெருவில் இருக்கும் ஒரு பேக்கிரியிலிருந்து சிரித்து பேசிய வண்ணம் வெளிவந்தனர் செழியனும் நன்மதியும்.
‘ஸ்பெஷல் க்ளாஸ் இருக்கு, மீட்டிங் இருக்குனு சொல்லிதான் தினம் லேட்டா வராங்க. இன்னைக்கு என்ன இங்க நிக்குறாங்க?’ என கேள்வி கேட்டு, ‘இன்னைக்கு பொறந்தநாளுன்னு சீக்கிரம் கிளம்பி இருப்பாங்க.’ அவளே பதில் சொல்லிக்கொண்டாள்.
ஜுரத்திற்கு ஊசி போட்டு உமையாளை மருத்துவரிடம் ஆலோசித்துவிட்டு வீடு வந்தபின்னும் அவர்கள் இருவரும் வரவில்லை. எப்போதும் வரும் நேரத்தை விட சிறிது நேரம் சென்றே வீடு திரும்ப,
“இன்னைக்காச்சும் சீக்கிரம் வரலாம்ல. எல்லாரும் சேர்ந்து கோவிலுக்கு போகலாம்னு நினைச்சிருந்தேன்.” சலித்துக்கொண்டே பத்மா பெரிய மகனை பிடித்து வைத்திருந்தார்.
“அதுக்காக நீ போகாம இருப்பியா.” அதிருப்தியாக செழியன் கேட்க, எல்லாருக்கும் நேரம் கிடைக்கும் போது வெளியே செல்லலாம் என்றுவிட்டான் மகிழ்நன்.
மனைவியிடமும், “செழியனுக்கு கல்யாணம் ஆனப்புறம் வர்ற பங்ஷன் எல்லாத்துக்குமே ஏன் அண்ணி பொறந்தநாளுக்கு கூட சேர்ந்துதான் வெளில போவோம். இப்போ நாம மட்டும் தனியா போனா நல்லா இருக்காது. பிரிச்சிட்ட மாதிரி ஆகும்.” என சமாதானம் கூறியவன் மாலை குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுவிட்டு வந்தனர். வெளியே உண்ணலாம் என்றால் சமுத்திராவுக்கு ஒத்துக்கொள்ளாது என வீட்டிலேயே தயாரானது. கூட்டுக்குடும்பத்தில் இதுபோன்ற சிறு சிறு விட்டுக்கொடுத்தலும் புரிந்துணர்வுகளும் இயல்புதானே என அப்போது அதனை கடந்து விட்டிருந்தாள் சமுத்திரா.
உமையாள் பிறந்தபின் வந்த பிறந்தநாளிலும் அதேதான். அதன்பின்னும் எல்லாம் ஒன்றுதான். தனித்த நேரம் என்று பெரிதாக இல்லை. ஆனால் சமீபமாக செழியனும் நன்மதியும் வேலையை காரணம் காட்டி எதிலும் கலந்துகொள்வதில்லை என்பதே இப்போதுதான் விளங்கியது.
‘முட்டாளே… சேர்ந்து போக பிடிக்கவில்லை என்று வேலையை காரணம் காட்டி அவர்கள் வெளியே தனியாக கொண்டாடுகிறார்கள். நீயும் உன் கணவனும்தான் குடும்பம் குடும்பம் என்று பார்த்து நிற்கிறீர்கள்.’ நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் நிதர்சனம் விளங்கியது.
இந்த உண்மையை சொன்னால் கணவன் கேட்டுக்கொள்ள மாட்டானே! மனம் சோர்ந்துவிட, கொஞ்சம் கோபம் கூட. நாங்கள் வாழவே இல்லையோ என்ற எண்ணமும். நாளுக்கு நாள் இந்த எண்ணங்கள் வளர்ந்துகொண்டே சென்றது.