அத்தியாயம் – 1

“இத்துடன் இந்த வார அரசியல் மேடை நிகழ்ச்சி நிறைவுக்கு வருகிறது. சூடு பிடித்து வரும் அரசியல் களத்தில் மீண்டும் மக்கள் கேட்க விரும்பும் கேள்வியுடன், அதற்குத் தக்க அரசியல் பிரமுகர்களுடன் உங்களை அடுத்த வாரம் சந்திக்கிறேன். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது குமுதினி நந்தகுமார். நன்றி வணக்கம்”,

சரளமாக அவளது வழக்கமான சிக்னேசருடன் அந்த கார சார விவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தாள் குமுதினி. எல்லா தொலைக்காட்சி சேனல்களும் அரசியல் விவாத மேடை நிகழ்ச்சி நடத்தினாலும், இவர்களது நிகழ்ச்சிக்கு டி.ஆர்.பி எகிறும். அதற்கு முக்கிய காரணம் குமுதினி நிகழ்ச்சியையும், அதில் பங்கேற்பவர்களையும் கையாளும் விதம்.

அந்தப் பொண்ணா? ஒரு பொய் சொல்லிட முடியாதுப்பா. எல்லா டேட்டாவும் கைமேல வெச்சிருக்கும். பழைய கதையை கரெக்ட்டா சொல்லி பாயிண்ட்டை புடிக்கும் என்பதில் ஆரம்பித்து, டாபிக் விட்டு பேசினா மைக்கை ஆஃப் பண்ணிடும் என்பது வரை பங்கேற்பாளர்கள் அலறுவார்கள், ஆனாலும் அவள் விவாத மேடையில் பங்கேற்பதே பெருமை என்பதால் அதற்கும் போட்டி உண்டு. மக்கள் மத்தியிலோ, “மீன் மார்க்கெட் மாதிரி கத்த மாட்டாங்க. குமுதினி பாயின்ட்டா பேசுவாங்க, கேள்வியெல்லாம் சும்மா நச்சுன்னு நாக்க புடுங்கற மாதிரி இருக்கும்”, ஊர் பேர் தெரியாத ஆள் எல்லாம் கூப்பிடாமல் முக்கிய நபர்கள் வருவார்கள் என்பதால் வரவேற்பு. அவளது ஆளுமைக்கும், வருபவர்களை பேச வைப்பதில் இருக்கும் திறமைக்கும், பல கட்சி பிரமுகர்களை கையாளும் லாவகத்திற்கும் தனி விசிறிக் கூட்டமே உண்டு.

மைக்கை கழட்டியவள் இன்முகமாகவே வந்திருந்த பிரமுகர்களிடம் நன்றி சொல்லி, தன் தனியறைக்கு புறப்பட்டாள். அதுவரையில் மானிட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நிகழ்ச்சியின் ப்ரோட்யூசர் அவினாஷ், எழுந்து வந்தான்.

மீடியா உலகில் இளம் வயதிலேயே தன் பெயரை பதித்துக்கொண்டிருக்கும் பிசினஸ்மேன்,  ஆஷ் மீடியாஸ் கம்பனியின் ஓனர் மற்றும் சி.ஈ.ஓ அவினாஷ் நெடுமாறன். இந்த நிகழ்ச்சியை மட்டுமல்லாது இன்னும் பல முன்னணி டாக் ஷோஸ், ரியாலிடி ஷோஸ் ஆஷ் மீடியாஸ் பல மொழிகளில் தயாரித்து பல சேனல்களுக்கு விற்கிறார்கள். அது மட்டுமில்லாது விளம்பரத் துறையிலும் தென்னிந்தியாவின் முதன்மை மீடியா கம்பனிகளுள் இவர்களும் ஒருவர்.

அவினாஷ் ஷாம்பூ மாடலுக்கான முடியும், க்ளீன் ஷேவ் முகமும் ஜிம் பாடியுமாக பார்ப்பவர்களை வசீகரிக்கும்  அழகுடன் இருந்தான். வீட்டில் பார்த்து வைத்த பிரபலமான பணக்கார வாரிசை கல்யாணம் செய்து ஒரு வருடத்திலேயே விவாகரத்தில் வந்து நின்றது. அதோடு இல்வாழ்க்கை அத்தியாயத்தை முடித்து வைத்தவன், பல பேர் பல வகையில் தூண்டிலிட்டாலும் அசறாமல் பிசினஸ் ஒன்றுதான் என் இலக்கு என்று இருந்தான்.

குமுதினியோடு இந்த ஷோவிற்காக ஏற்பட்ட பழக்கம் நல்ல நட்பாகவும் மாறியது. குமுதினியின் திறமையும், எல்லோரையும் தள்ளி வைத்தாலும், இன்முகமாகவே பழகும் அழகும் பார்த்து வியந்தவன் அவளின் அலட்டலில்லாத பாங்கில்  நட்புக்கரம்  நீட்டினான்.

செல்வந்தர் வீட்டுப் பிள்ளை என்றாலும் கடின உழைப்பாளி, அமெரிக்க மானேஜ்மென்ட் டிகிரி இருந்தாலும், நிகழ்ச்சிக்கான விவரங்கள், விமர்சனங்கள் எல்லாவற்றையும் உள்வாங்கி, குறை நிறைகளை உடனுக்குடன் கவனிப்பதில், குமுதினியின் கவனம் பெற்றவன், எதிர்பார்ப்பில்லாத அவன் நட்பிற்கு தன்னையும் மீறித்தான் சம்மதித்தாள். சம்மதிக்க வைத்தான் அவினாஷ்.

ஒரு வருடத்திற்கும் மேலாக நெருங்கிய நட்பு இப்போது திருமணம் செய்வோமா என்ற நிலையை எட்டியிருக்கிறது. முப்பதுகளை கடந்த இருவரும் காதல் வசனம் பேசிக்கொள்ளவில்லை. இருவரிடமும் இருக்கும் புரிதல், நட்பு, நேசம்  வாழ்க்கையை இனியும் தனியாகக் கடக்க வேண்டுமா என்ற கேள்வியும் சேர, அவினாஷ் திருமணத்திற்கு கேட்கவும் யோசித்து சம்மதம் கூறினாள் குமுதினி.

 இருவரும் காதலிக்கிறார்கள், திருமண அறிவிப்பு சீக்கிரத்தில் வரும் என்பது பத்திரிக்கை கிசுகிசுவாக இருந்தது.

“அனதர் எக்ஸ்சலண்ட் எபி குமுதினி”, என்று தோளணைக்க, “ஹேய் …அவினாஷ்! எப்ப வந்த?”, என்று முகமலர்ந்தாள்.

“அரை மணி நேரமாச்சு. டின்னர் போலாமா?”

“ம்ம்… சரி போலாம். இரு கொஞ்சம் இந்த மேக்கப் எடுத்துட்டு, ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்”, அவள் செல்லவும், மீண்டும் ஷோ டைரக்டர், எடிட்டரிடம் வந்தான். பேச வேண்டிய விஷயங்கள் முடியவும்,

“எப்ப சர் கல்யாண தேதி சொல்வீங்க?” , என்று புன்னகையுடன் கேட்டார் ஐம்பதுகளிலிருந்த எடிட்டர் லியோ. வெளியில்தான் இது கிசுகிசு. இங்கிருப்பவர்களுக்கு இவர்கள் எண்ணம் தெரியும்.

“சீக்கிரமே சொல்லணும் லியோ சர். குமுதினிகிட்ட பேசிட்டு இன்ஸ்டால போட வேண்டியதுதான்”, என்று சிரித்தான்.

“ப்ரஸ் மீட் எதுவும் வைக்கலையா சர்?”, டைரக்டர் இராம்.

“அது எதுக்கு இராம்? ஜஸ்ட் எங்க இரண்டு பேர் இன்ஸ்டால போட்டா போதாதா?”

“இன்ஸ்டால என்ன போடணும் அவினாஷ்?”, என்று கேட்டுக்கொண்டே வந்தாள்  குமுதினி.

“சொல்றேன் வா.”, என்றதோடு அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டார்கள்.

உயர்தர உணவகத்தில் அமர்ந்திருந்தார்கள் குமுதினியும் அவினாஷும். இனிமையான இசை காதை கிழிக்காது மென்மையாக ஒலித்துக்கொண்டிருந்தது. ஷோவிற்கான உடையிலிருந்து மாறி ஒரு வெளிர் மஞ்சள் நிற சில்க் சல்வாரில் அம்சமாக இருந்தாள் குமுதினி. இன்னதுதான் அழகு என்று தனியாக சொல்லமுடியாது. வயது முப்பது கடந்திருந்தாலும், மீடியாவில் இருப்பதில் ஒல்லியான தேகம், தோள் வரையிலான அடர்த்தியான கூந்தல், திருத்தமான முகம் எட்டி நிறுத்தும் பார்வை, சற்றே மா நிறம் என்று எல்லாம் சேர்ந்து அவளை அழகியாகத்தான் காட்டியது.

“என்ன அவினாஷ் திடீர் விசிட்? எல்லாம் ஓகேதான?”

“ம்ம்.. நாளைக்கு நைட் பெங்களூர் போறேன். ஒரு வாரமாகும் வர.”, எனவும் பேச்சு அவன் தொழில் புறம் திரும்பியது.

“அம்மா எப்படி இருக்காங்க?”, என்று கேட்க ஒரு குறு நகை எட்டிப்பார்த்தது.

“கொஞ்சம் கோவமா இருக்காங்க”, என்றான் அவினாஷ்.

“என்ன செஞ்ச?”, புன்னகையோடு ஒரு ஸ்பூன் சூப்பை அருந்தினாள்.

“நான் மட்டுமில்லை நீயும்தான். இரண்டு பேரும் ஜெய்கிஷன் பர்த்டே பார்ட்டிக்கு போனோம்”, என்றான். ஜெய்கிஷன் சின்னத்திரையிலிருந்து இப்போது வெள்ளித்திரையில் கால் ஊன்றிவரும் வளரும் கலைஞன். அவினாஷின் ரியாலிட்டி ஷோ மூலமாக பிரபலமடைந்தவன்.

“உன்னாலதான் நான் வந்தேன். அதுக்கு என்ன கோவமாம் ஆன்ட்டிக்கு?”

“நாம போனது போட்டோவோட காசிப் வந்திருக்கு. எதுக்கு வதந்தி வர அளவுக்கு விடறீங்க? கல்யாணம் பண்ணிக்கறதுன்னு முடிவாகிடுச்சே அனௌன்ஸ் பண்ணிடலாமேன்னு கேட்கறாங்க.”

“ஓ வந்திருக்கா? நான் பார்க்கலை. எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லை அவினாஷ். எப்படி சொல்லலாம்? பி.ஆர் டீம் விட்டு ஒரு சின்ன அறிக்கை மாதிரி குடுத்துடலாமா?”

“ச்சே… போரிங். இரண்டு பேருமா இன்ஸ்டால ஒரே நேரத்துல போடுவோம்.”, என்றான் அவினாஷ்.

“ஹே… நீ பிஸ்னஸ்மேன். உன் இன்ஸ்டால நீ எதுவும் பர்சனல் ஷேர் பண்ண மாட்டியே?”

தோளை குலுக்கினான். “இது முதலா இருக்கட்டுமே. மீடியால இருக்க பொண்ணை கல்யாணம் செய்யப்போறேன். இது கூட செய்யாட்டா எப்படி?”

“என்ன மெசேஜ்? எப்போ போடலாம்?”, போனை கையில் எடுத்தாள்.

“சர்ப்ரைஸ் மீ. இன்னிக்கு நைட் பன்னெண்டு மணிக்கு அனவுன்ஸ் பண்ணலாம்.”, அவினாஷ் சொல்லவும்,

“உன் அளவுக்கெல்லாம் எனக்கு திறமையில்லை அவினாஷ், ரொம்ப எதிர்பார்க்காதே ப்ளீஸ்.”, வாய்தா வாங்கினாள்.

“ம்ம்…சன்னியாசினி மோட்லர்ந்து வெளிய வந்து என்ன செஞ்சாலும் எனக்கு சர்ப்ரைஸ்தான். சோ ரொம்ப யோசிக்காம மனசுக்கு தோண்றதை போடு.”

இரவு பன்னிரெண்டு மணியை நெருங்க, தான் எடிட் செய்து வைத்திருந்த போட்டோ, அதற்கான பின்னணி இசை என்று எல்லாவற்றையும் ஒரு முறை பார்த்தாள்.

மீடியாவில் வெளிவராத அவர்கள் இருவரின் புகைப்படம் ஒன்று. அவினாஷ் வீட்டில் அவன் கசின் எடுத்தது. தோட்டத்தில் இருந்த ஒரு மரத்தில் சாய்ந்து  நின்றிருந்தாள். அவினாஷ் சொன்ன எதற்கோ இவள் சிரித்துக்கொண்டிருந்தாள்.அவனின் அக்கறையான புன்முறுவலில் தெரிந்தது அவன் நேசம்.

“என்னை எப்போதும் மகழ்வோடு வைத்திருப்பவனோடு என் வாழ்க்கை பயணத்தை தொடர முடிவெடுத்திருக்கிறேன். உங்கள் அனைவரின் ஆசிகளுடன்…”, என்ற செய்தியை தாங்கி இருந்தது. பின்னணி இசை ரஹ்மானின் மூங்கில் தோட்டம், மூலிகை வாசம் என்று ஆரம்பித்து வேறென்ன வேணும் நீ போதுமே என்று பாடியது.

“கொஞ்சம் ஓவரோ?”, என்று எண்ணம் எழுந்தது. “ம்ப்ச்… தேங்கி இருக்கப்போறதில்லைன்னு முடிவெடுத்து ஓகே சொன்னப்பறம் என்ன?”, என்று சொல்லிக்கொண்டவள், “அவினாஷ் டிசர்வ்ஸ் திஸ்”, என்று சொல்லி ஒரு புன்னகையோடே இன்ஸ்டாவில் வெளியிட்டாள்.

அதே நேரம் அவினாஷ் இன்ஸ்டாவில் ஸ்டோரி வந்த நோடிஃபிகேஷன் வரவும், ஆர்வமாக சென்று பார்த்தாள்.