இட்லி தோசை வைத்தால்தானே அடிக்கடி வீட்டில் மாவு அரைக்க வேண்டியிருக்கிறது என சிற்றுண்டியை மாற்றிவிட்டாள் நன்மதி. வாரயிறுதியில் கிரைண்டர் போட்டு மாவு ஆட்டி வைப்பவள் வாரத்தின் முதல் பாதிக்கு அதை பயன்படுத்திவிட்டு மீதி நாட்களில் காலைக்கும் மதியத்திற்கு சேர்த்து சாதம், குழம்பு வைக்க ஆரம்பித்துவிட்டாள்.
“இதென்ன மதியத்துக்கு சமைச்சதே இப்போவும் இருக்கு?” என கந்தவேல் பார்க்க,
“வேணும்னா கொஞ்சமா மிக்சில போட்டு அரைச்சு வைக்குறேன், மாமாவுக்கு மட்டும் ரெண்டு வேலை டிபன் கொடுத்துட்டு நாம ஒரு வேலை டிபன் சாப்பிட்டுக்கலாம்.” என்று நன்மதி யோசனை சொல்ல, வேறு வழியின்றி உணவு முறைகள் மாறியது. உணவின் பக்குவத்திலும் வித்தியாசங்கள் வெளிப்பட, ஒன்றும் சொல்ல முடியாமல் விழுங்க ஆரம்பித்தனர். சொன்னாலும் எதுவும் மாறப்போவதில்லை. கிடைப்பது கூட கிடைக்காமல் போய்விடும் என்ற ஐயத்தில் பத்மாவின் அங்கலாய்ப்புகள் கூட முணுமுணுப்பாக மாறிவிட்டது.
நாளுக்கு நாள் சோர்வை உணர, மனைவியின் வருகையை எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டான் மகிழ்நன்.
“எப்போ வர நீ?” கேட்டுவிடத் துடித்த நாவை இம்முறை அடக்கவில்லை.
“பாப்பாவை பாக்கனும் போல இருக்கு.” என்றான் காணொளியில்.
முன்பென்றால் உருகி இருப்பாள். இப்போது நிதானித்தாள், ஆனால் ஆழ்மனதில் கணவன் கேட்டவுடன் அவனிடம் செல்ல கால்கள் பரபரத்தன. அம்மாவை நினைவுக்கு கொண்டுவந்து அடக்கினாள். அவர் பிடி அழுத்தமாக இருப்பதால்தான் இவள் கணவன் புறம் இறுக ஆரம்பித்தாள். என்னவோ மீறிக்கொண்டு செல்லவோ பேசவோ வருவதில்லை. சிறுவயதிலிருந்தே அப்படியே பழகிவிட்டதால்தான் புகுந்த வீட்டிலும் அடங்கிவிட்டாள். அதுவும் இதுபோன்று அம்மா வீட்டிற்கு வரும் சமயம் இதே ஊரில் திருமணம் முடித்து இருக்கும் தோழிகள் சிலர் பகிர்ந்து கொள்ளும் அனுபவங்கள் மகிழ்நனை கோபுரத்தில் உக்கார வைத்தது. அதனை கொண்டே அவன் பரிவாய் இருப்பதே போதும் என்ற எண்ணம். இப்பொழுதுதான் அந்த எண்ணத்தை விட்டு வெளிவர நேரம் வந்திருக்கிறது.
“என்ன யோசனை சமு? எப்போ வர?” என்ற அவன் பேச்சில் மீண்டாள்.
“ஹான்?”
“என்ன ஹான்? இங்க இருந்தா டக்கு டக்குனு பதில் வரும். ஷார்ப்பா இருப்ப, இப்போ என்னன்னா மந்தமா இருக்கீங்களே மேடம்.” கேலியோ, அவன் முகத்தில் பெரிதான மாற்றமில்லை. இயல்பாய் இருந்தது. மகளை தேடுகிறேன் என்ற போதுகூட தவிப்பு தெரியவில்லை.
“இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போக சொல்லி அம்மா சொன்னாங்க.” என்றவள் குரலில் இருந்த வேறுபாட்டை அவன் கண்டுகொள்ளவில்லை.
“ஓ?!” ஏமாற்றமா இயல்பா இனம் காண முடியா ஒரு பாவனை.
சமுத்திரா அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருக்க, தலையை ஒருவாராய் உருட்டியவன் அழைப்பை துண்டித்தான். மேலும் இரண்டு நாள் சென்றிருக்க, உறங்க முடியாமல் புரண்டு கொண்டிருந்தவன் வறண்ட தொண்டையை நனைக்க தண்ணீர் தேடினான். எப்பொழுதும் அறையில் ஒரு பாட்டிலில் தண்ணீர் இருக்கும். அவசரத்திற்கு தேவையென சமுத்திரா வைத்திருப்பாள். அவள் சென்ற பின்பாக இவனே எடுத்து வர வேண்டிய சூழல். இன்று சலிப்பாக இருக்க, அலுப்புடன் எழுந்து சென்றான். தண்ணீர் பிடித்து குடித்துவிட்டு அறைக்குள் நுழையும் நேரம் சமுத்திராவின் பெயர் அடிபட, அப்படியே நின்றுவிட்டான்.
“அண்ணன் தம்பி ரெண்டு பேரும் என்னதான் மழுப்புனாலும் சமுத்திராவுக்கு இந்த நகை விஷயத்துல உடன்பாடில்லை அதுதான் உண்மை.”
“பேசுனதையே பேசாத மதி. நீ நச்சரிக்கவும் நான் நேரா மகிழ்கிட்ட பேசிட்டேன், ஒண்ணுமில்லைனு சொல்லிட்டான் அவனும்.”
“முகத்துக்கு நேரா எங்களுக்குள்ள சண்டைனு உங்ககிட்ட ஒத்துப்பாங்களாக்கும்? பதினஞ்சு நாள் தாண்டியும் சமு இன்னும் வீட்டுக்கு வரல, இதைவிட வேற என்ன காரணம் இருக்க முடியும்?”
“ப்ச்… இப்போ என்ன பண்ணனும் உனக்கு?”
“எப்.டி போட்டிருக்க பணத்தை எடுங்க, என் நகை கொஞ்சத்தை அடகு வச்சி பணத்தை திருப்பி கொடுத்துடலாம்.”
“லூசு மாதிரி பேசாத. எப்.டி போட்டு ரெண்டு மாசம்தான் ஆகுது. அதோட இதுக்கெல்லாம் நகையை அடகு வைக்க வேண்டிய அவசியமில்லை. உன் திருப்திக்கு வேணும்னா மாசாமாசம் ஒரு குறிப்பிட்ட தொகையை மகிழுக்கு கொடுத்துடலாம்.” என்று செழியன் சமாதானம் பேச, அதற்கு நன்மதி எதுவோ பேச, நாகரிகம் கருதி அறைக்குள் சென்றுவிட்டான் மகிழ்நன்.
யோசனையில் நெற்றிப்பொட்டு துடித்தது. சமுத்திரா வீட்டில் இல்லாதது எத்தனை அசவுகரியங்களையும் யூகங்களையும் கொடுக்கிறது. அவளின்றி வீடு இயங்குவதில் ஏகப்பட்ட குளறுபடி. இப்போது அண்ணன் அண்ணிக்குள் இதை முன்னிட்டு வாக்குவாதம். இன்னும் மகளுக்கு வைத்திருந்ததை எடுத்து முறை செய்ய கொடுத்துவிட்டது தெரிந்தால் பிரச்சனை வெடிக்குமோ என்ற ஐயம் எழ, எப்படி சரி செய்வது என்று யோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்தவனாய் அந்தவார விடுமுறையில் மாமியார் வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.
வீட்டிலிருந்து கிளம்பும் போதே மனைவி மகளை அழைத்து வந்துவிடுவேன் என்று சொல்லிச் செல்ல, அனைவருக்கும் பெருத்த ஆசுவாசம். வெளிப்படையாக மகிழ்ச்சியை பிரதிபலித்தனர்.
“வீட்டுக்குள்ளேயே சுத்தி சுத்தி வருவா சின்னவ, இத்தனை நாள் இல்லாம வீடே வீடா இல்லை. இப்போவாச்சும் கூட்டிட்டு வரேன்னு கிளம்புனானே.” அத்தனை நாள் எதையும் வெளிக்காட்டாத கந்தவேல் கூட பேத்தியின் நினைவில் முகம் மலர்ந்தார்.
“இந்நேரம் வீட்டை சுத்தி பத்து தடவை என்னை ஓட விட்டிருப்பா.” ஒத்திசைப்பாய் பத்மாவும்.
“புள்ளைங்க இருந்தாதான் கலகலன்னு இருக்கு வீடு.”
“ம்ம்… நாம குடுத்து வச்சது அவ்வளவுதான். பொண்ணு வயித்து பேரப்புள்ளைங்க ஸ்கூலே கதின்னு கிடக்குங்க. மூத்தவனுக்கு கல்யாணம் பண்ணி வருஷம் அஞ்சு ஆச்சு இன்னும் ஒன்னுத்துக்கும் வழியில்லாம இருக்கு. இந்த சின்னவன் தான் வயித்துல பால வார்த்த மாதிரி கல்யாணம் ஆன மறுமாசமே நல்ல செய்தி சொல்லி வம்சத்தை தழைக்க வச்சான். இதோ இப்போ ஒரு பதினஞ்சி நாள் இல்லை, வீடே ‘ஓ’ன்னு இருக்கு.” சலிப்பும் பெருமையும் கலந்து வந்தது பத்மாவின் வார்த்தைகள்.
“நேரம் கிடைக்குறப்போ எல்லாம் அஞ்சு வருஷம் ஆச்சுன்னு சொல்லிடணும்ல உங்க அம்மாவுக்கு.” நன்மதி கணவனிடம் முகம் தூக்க,
“அவங்க ஆதங்கத்துல பேசுறாங்க, கண்டுக்காத விடு.”
“கண்டுக்கக்கூடாதுன்னு தான் நினைக்குறேன் ஆனா இங்க குத்துதே.” நன்மதியின் விரல் தன் நெஞ்சத்தை சுட்டிக்காண்பிக்க, பெற்றவர்கள் அறியாமல் மனைவியின் கையை ஆறுதலாக பிடித்து அழுத்தினான் செழியன்.
முகம் கசங்க கணவனைப் பார்த்த நன்மதி, “ஒருவிதத்துல உமையாள் வரப்போறது நிம்மதியா இருக்கு. அவளை பாக்குறதிலேயே இங்க எல்லாருக்கும் பொழுது ஓடிடும், என்னை ரொம்ப கண்டுக்க மாட்டாங்க.” என்ற நன்மதிக்கு வேறு மாதிரியான நிம்மதி.
“அம்மா அதிகம் பேசிட்டாங்களா?” செழியனும் வருத்தத்துடன் கேட்டான்.
நன்மதி சொல்வது போல் உமையாள் இருந்தால் அவளை பார்ப்பதிலேயே அனைவருக்கும் பொழுது கழிந்துவிடும் இவர்களின் குழந்தையின்மை எல்லாம் பின்னுக்கு சென்றுவிடும். அவள் இல்லாத இந்த நாட்களில் நன்மதியின் தலை அதிகம் உருண்டது. வீட்டு வேலையாகட்டும், வெளி வேலையாகட்டும் அனைத்திலும் ஒரு முணுமுணுப்பு. இவர்கள் கண்டுகொள்ளாதது போல் இருந்தாலும் குழந்தை பற்றிய பேச்சுக்கள் கவனம் பெற்றது. முடிந்த அளவுக்கு இவனும் தோள் கொடுத்தான். இருந்தாலும்…
பேருந்தில் செல்லலாம் என்று முடிவெடுத்து வீட்டிலிருந்து கிளம்பியவன் பின் என்ன நினைத்தானோ வண்டியிலேயே மாமனார் வீடு வரை சென்றுவிட்டான்.
எப்பொழுதாவது அங்கு செல்லும் அவனுக்கு மாப்பிள்ளை என்று ராச உபச்சாரம் கிடைக்கும். அந்த பகுமானத்தோடு வண்டியிலிருந்து இறங்கியவன் மகளை அழைத்துக்கொண்டே உள்ளே செல்ல, வெளிவந்தது என்னவோ கலைவாணி.
மாமியாரைப் பார்த்ததும் இவன் இன்முகமாக விசாரிக்க, எதிர்வினை இவன் எதிர்பார்த்தபடி இல்லை. என்னவோ முகம் கொடுக்காமல் வேண்டாவெறுப்பாக கலைவாணி நடந்து கொள்வது போல் தோன்றியது மகிழ்நனுக்கு.
அவனை அமரச்சொல்லி குடிக்க தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தவர் பெயருக்கு அவனை விசாரித்தார். வித்தியாசமாய் பட்டாலும் விழிகள் மனைவி மகளைத் தேடியது. கண்டுகொண்ட கலைவாணி அழுத்தமாக நின்றார்.
“பாப்பாவும் சமுவும் இல்லையா அத்தை?” அவராக சொல்வது போல் தெரியவில்லை என்கவும் இவனே கேட்டுவிட்டான்.
“வயலுக்கு போயிருக்காங்க மாப்பிள்ளை. என்ன திடீர்னு இந்த பக்கம்?”
“ரெண்டு பேரையும் கூட்டிட்டு போகலாம்னு வந்தேன்.”
கலைவாணியின் முகம் தெளிந்து இறுகியது.
“சந்தோஷம் மாப்பிள்ளை ஆனா இப்போதைக்கு அனுப்புறதா இல்லை.” வீட்டில் யாருமில்லை என்பதால் நினைத்ததை நினைத்தது போல் மேற்பூச்சின்றி பேசினார் கலைவாணி.
மகிழ்நனுக்கு புரியவில்லை. என்னவாம்? எதற்கு இப்போது இந்த இறுக்கம்? நெற்றி சுருக்கினான்.
“நகைச்சீட்டு ஒன்னு அடுத்த மாசம் முடியப்போகுது, பாப்பாக்கு ஏதோ வாங்கணும்னு சமுத்திரா ஆசைப்படுறா. வாங்கிக்கொடுத்து அனுப்பிவிடுறேன். அவ ஒன்னை ஆசைப்பட்டு அதை செய்யாம இருக்க முடியுமா சொல்லுங்க. என்ன இருந்தாலும் எங்க பொண்ணு எங்களுக்கு முக்கியம்ல, அவளுக்கு அப்புறம்தான் எல்லாம்.” நைச்சியமாக அவர் பேச, சுருக்கென்றது மகிழ்நனுக்கு. அவர் எதார்த்தமாக பேசவில்லை என்பது அவரின் உடல்மொழியிலேயே தெரிய, பட்டென்று எழுந்துவிட்டான்.
“என்ன மாப்பிள்ளை?” ஒன்றும் அறியாதது போல் கலைவாணி பார்க்க, அவன் கைமுஷ்டிகள் இறுகியது.
“நானே போய் பாத்துக்குறேன்.”
“காபி குடிச்சிட்டு போலாம் மாப்பிள்ளை.”
“வேணாம்.” அவர் முகம் பார்க்காமல் கிளம்பிவிட்டவனுக்கு மனைவியின் செயலில் அதிருப்தி.
காரணமின்றி திடுமென நகை வாங்க வேண்டும் என்ற பேச்சு மாமியார் வாயிலிருந்து எப்படி வருமாம்? சமுத்திரா எதுவோ சொல்லியிருக்க வேண்டும். அதுவும் ஒருமாதம் கழித்து நகை வாங்கி வீட்டிற்கு அனுப்புகிறாராம். அப்படியென்ன தேவையிருக்கிறது? தேவையிருந்தாலும் அவனால் முடியாதா? மனைவி மகளுக்கு வேண்டியவற்றை செய்ய முடியாதளவுக்கா இருக்கிறான்? நினைக்க நினைக்க சினம் ஏறியது.
சமுத்திரா வீட்டினருக்கு சொந்தமாக இருக்கும் வயல் பரப்புக்கு சென்றவன் வண்டியை ஸ்டான்ட் போட்டு நிறுத்த, தூரத்திலிருந்தே இவனை பார்த்துவிட்ட உமையாள் குதூகலமாய் சத்தம் எழுப்பினாள். இறுக்கம் தளர்ந்து முறுவலுடன் சத்தம் வந்த திசை நோக்கி கவனத்தை விரட்ட, இவனை நோக்கி ஓடிவர முயன்றாள் உமையாள். வரப்பில் விடாமல் சமுத்திரா அவளை பிடித்துக்கொள்ள,
“இரு வரேன்.” குரல் கொடுத்துக்கொண்டே மகளை நெருங்க வேக எட்டுக்கள் வைத்தான் மகிழ்நன்.
கிட்டத்தட்ட தங்களை நோக்கி ஓடிவருபவனை ஆச்சர்யமாக பார்த்தாள் சமுத்திரா. அவன் மீதிருந்த வருத்தம் பின்சென்று மனதிற்குள் மென்சாரல். உமையாள் பிறந்த சமயம் இவள் இங்கு தங்கியிருத்த பொழுது அவன் வந்தது. அதன்பின் இன்றுதான் வருகிறான். இவனைப் பார்த்துவிட்ட அய்யாவுவும் ஓடிவந்தார்.
“வாங்க மாப்பிள்ளை. வெயில்ல ஏன் அலையுறீங்க. சொல்லியிருந்தா நாங்களே வீட்டுக்கு வந்திருப்போம்.” மருமகனை அங்கு எதிர்பார்க்காதவர் மகிழ்வுடன் வரவேற்றார். பதிலுக்கு தலையசைத்தான்.
உமையாள் அப்பாவிடம் தாவ, தூக்கிக்கொண்டவன் மருந்துக்கும் மனைவி புறம் திரும்பவில்லை.
“என்ன சமு பாத்துட்டு நிக்குற. மாப்பிள்ளையை கூட்டிட்டு வீட்டுக்கு கிளம்பு. நான் பின்னாடியே வரேன்.” என மகளை உசுப்ப, சமுத்திரா கணவனைப் பார்த்தாள். மகளிடம் என்னவோ பேச்சு கொடுத்தபடி அவளை கொஞ்சி முத்தம் வைத்துக்கொண்டிருந்தான். பதிலுக்கு மகளும் பாசத்தை வாரி வழங்கினாள். சில நொடிகள் அந்த தருணத்தை ஆசையாக பார்த்தவள் கணவனை நெருங்கி,
“வீட்டுக்கு போலாம்ங்க.” என்க, விருட்டென சாலை நோக்கி நடந்தான் மகிழ்நன்.
சமுத்திரா புரியாமல் விழித்தவள் அவன் வேகத்திற்கு ஓட்டமும் நடையுமாய் பின்தொடர்ந்தாள்.