“எல்லாரும் சாப்பிட்டாச்சா” என்று அவள் கேட்டு வைக்க,

“எல்லாரும் சாப்பிட்டாங்கடா. உன் வீட்டுக்காரன் தான் சாப்பிடணும்.”

“நீங்க”

“அவனுக்கு வச்சுட்டு சாப்பிடறேன் மீனு” என,

“அட… முதல்ல நீங்க சாப்பிடுங்க. மாமா தூங்கி எழுந்தா சாப்பிட போறாங்க. நீங்க சாப்பிட்டு போய் தூங்குங்க அத்தை” என்றவள் அவர் மறுப்பை கவனத்தில் கொள்ளாமல் அவருக்கு தட்டு வைத்து பரிமாறிவிட்டாள்.

“இல்லம்மா. அவன் வரட்டுமே” என்று வாடி தயங்கியபோதும்,

“உங்க பையனுக்கு நானே எடுத்து வைக்கிறேன். போதுமா. சாப்பிடுங்க” என்று மருமகள் செல்லமாக மிரட்ட, சாப்பிட தொடங்கினார் வடிவு.

வேல்விழி இதற்குள் அவள் அறைக்குச் சென்றிருக்க, “நீ ஏன் மீனு வெற்றியை கல்யாணத்துக்கு கூப்பிட்ட? உன் அம்மா கோபம் தெரிஞ்சும் நீ இப்படி செய்யலாமா?” என்று வடிவு ஆதங்கம் தாங்காமல் கேட்டுவிட,

“என்ன த்தை ரிசப்ஷன் நின்னுப் போனது வருத்தமா இருக்கா?” என்றாள் மருமகள்.

“இருக்காதா? என் மகன் கல்யாணத்துக்கு எத்தனை இடைஞ்சல். அத்தனையும் மீறி இன்னைக்கு கல்யாணம் நடந்தும் முழுசா சந்தோஷப்பட முடியாம போச்சே” என்று அவர் வருத்தப்பட,

“வெற்றி இல்லாம இது நடந்து இருந்தா, எனக்கும் அப்படித்தான் இருந்து இருக்கும் அத்தை. உங்க மகனுக்கும் அப்படித்தான். நம்ம வீட்ல எந்த விசேஷம் ஒருத்தரை விட்டு ஒருத்தர் பண்ணி இருக்கோம். அம்மாவுக்கு இப்போ வேணா கோபம் இருக்கலாம். ஆனா, நான் செய்தது தப்புன்னு அவங்களால சொல்ல முடியாது.”

“அதோட, வெற்றியை யோசிச்சு பாருங்க. அவன் நம்மைவிட்டு இதுவரைக்கும் முழுசா ஒரு நாலு நாள் பிரிஞ்சு இருப்பானா? அப்படிப்பட்டவன், இப்படி ஒரு காரியத்தை பண்ணி இருக்கன்னு சொன்னா, அவனுக்கும் நிச்சயமா ஏதோ ஒரு காரணம் இருந்திருக்கணும் இல்ல. நாம, அவனையும் முழுசா குறை சொல்ல முடியாது அத்தை.”

“நீங்க இதை எல்லாம் யோசிச்சு கவலைப்பட்டு உடம்பை கெடுத்துக்காதீங்க. அதுதான் உங்க மகன் சொன்னாரு இல்ல. சீக்கிரமே விருந்து வைப்பாரு. அப்போ என்ஜாய் பண்ணிக்கலாம்.” என்று அவரை சமாதானம் செய்தாள் மருமகள்.

அவள் பேச்சில் அப்போதைக்கு தெளிந்தாலும், வடிவுக்கு லேசான வருத்தம் இருக்கத்தான் செய்தது. அதுவும் வள்ளியம்மை கோபட்டதோடு சென்றவர் மீனுவுக்கு தேவையான அத்தனைப் பொருட்களையும், ஆட்கள் வைத்து அனுப்பியிருக்க, அதையெல்லாம் பார்க்க பார்க்க இன்னுமே வருத்தம் தான்.

அவரும் ஒரு பெண்ணை பெற்றவர் தானே. அவரால் வள்ளியம்மை முழுதாக தவறு சொல்ல முடியவில்லை.

அதே சமயம், வெற்றியை நினைத்து கவலை இல்லாமலும் இல்லை. இருந்தாலும், என் மகன் தானே என்று ஒரு ஆசுவாசம் கொள்ள முடிந்தது அவனிடம் மட்டும்தான்.

திட்டினாலும், அடித்தாலும் வந்து நின்றுவிடுவான் என்பது வடிவுக்கு தெரியும். அவனால் அவர்களை விட முடியாது.

அது கொடுத்த தைரியத்தில் தான், சக்தியின் திருமண வேலைகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டது. திருமணம் முடியவும் பேசிக் கொள்ளலாம் என்று அவர்கள் முடிவெடுத்திருக்க, சிறியவர்கள் இடையில் இழுத்து வைத்த சிக்கல் இப்போது தலைவலியாக மாறிப் போயிருந்தது.

இதையெல்லாம் அசைபோட்டபடி அவர் உண்டு முடிக்க, மீனு அதுவரையும் அவர் அருகில் தான் இருந்தாள்.

சமையல் அறையில் இருந்த ஹாட் பேக்கில் சக்திக்கான உணவை எடுத்து வைத்தவர், பிளாஸ்க்கில் பாலும் காய்ச்சி கொடுக்க, அதை கையில் வாங்கி கொண்டு சக்தியின் அறைக்குச் சென்றாள் மீனாட்சி.

செல்லும் அவளை புன்னகையுடன் பார்த்திருந்த வடிவு, “என் பிள்ளைகளை நல்லபடியா வாழ வைப்பா. முருகா” என்று மனதோடு பிரார்த்தனை செய்து கொண்டு தங்கள் அறைக்குச் சென்றார்.

சக்தி இரவு பதினோரு மணி வரையும் தன் தூக்கத்தை தொடர, மீனு அதுவரை அவளது அலைபேசியைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

‘அவன் எழுவதாக இல்லை’ எனவும், அதற்குமேல் பொறுமையில்லாமல் அவளே சக்தியை எழுப்பிவிட, சாவகாசமாக எழுந்து அமர்ந்தான் அவன்.

“என்னடா” என்று வேறு கேட்டு வைக்க,

“இன்னைக்கு பர்ஸ்ட் நைட் மாமா” என்றாள் மீனு.

அவள் பேச்சில் சக்திதான் வெட்கப்பட்டுப் போனான். “என்னடி வேணும் உனக்கு?” என்று சிறு புன்னகையுடன் அவன் கேட்டு வைக்க,

“எழுந்து சாப்பிடுங்க. டைம் என்னாச்சு. இன்னும் தூங்கிட்டு இருக்கீங்க” என்றவள் அவனை கட்டிலில் இருந்து எழுப்பி குளிக்க அனுப்பிவிட்டு அவனுக்கான உணவை எடுத்து வைக்க,

“நீ சாப்பிட்டாயா” என்றான் உணவில் கையை வைக்கும் முன்.

“சாப்பிட்டேன் மாமா” என்றவள் அவனுக்கு தண்ணீர் எடுத்து வைக்க,

“பர்ஸ்ட் நைட்ல என்கூட சேர்ந்து தானே சாப்பிடணும்” என்று சக்தி ஒன்றும் தெரியாதவன் போல் கேட்டு வைக்க,

“உங்களை யார் தூங்க சொன்னது” என்றவளுக்கு அவனது பேச்சு புரியவில்லை.

“இப்போ எழுப்பின இல்ல” என்று மீண்டும் சக்தி கேட்க,

“அப்போ ரொம்ப பாவமா தூங்கிட்டு இருந்தீங்க மாமா. எனக்கு வேற ரொம்ப பசிச்சது. அதுதான் நான் சாப்பிட்டேன். எனக்கும் பசிக்கும்ல” என்றாள் சிறுபிள்ளைபோல்.

‘சக்தி கஷ்டம்டா’ என்று மனதுக்குள் புலம்பியவன், அவளோடு பேசிக்கொண்டே உணவை முடிக்க, வடிவு கொடுத்துவிட்டிருந்த பாலை டம்ளரில் ஊற்றிக் கொடுத்தாள் மீனு.

அவன் குடித்து முடிக்கவும், மீதமிருந்த பாலை தானும் ஊற்றிக் குடித்தவள் பால் டம்ளரை அலசி வைத்துவிட்டு, படுக்கைக்கு வர, ‘அவள் ஏதாவது பேசுவாளா’ என்றுதான் பார்த்திருந்தான் சக்தி.

கட்டிலின் மறுபக்கம் வந்து அமர்ந்தவள் அலைபேசியை மீண்டும் கையில் எடுத்துக்கொள்ள, சக்தி அவளை முறைத்தவன் சட்டென அவள் மடியில் தலை வைத்து படுத்துவிட, அப்போதுதான் அச்சம் எட்டிப்பார்த்தது அவளுக்கு.

உள்ளுக்குள் எதுவோ படபடக்க, கைகால்களில் லேசாக நடுக்கமும் கூட தொற்றிக்கொண்டது.

சக்தி அதோடு நிற்காமல், அவள் கையில் இருந்த அலைபேசியை பிடுங்கி, “அப்படி என்ன தான் பார்க்கிற” என்று அதை அவன் பார்க்க தொடங்கிவிட, அதுவரை பேசிய பேச்சுக்கள் மொத்தமும் காணாமல் போக, வாயை இறுக்கமாக மூடிக் கொண்டாள் பெண்.

சக்தி, அவள் கையைப் பிடித்து தன் தலையில் வைக்க, அப்போதுதான் அவன் கண்களை சந்தித்தாள் மீனு.

அவன் “ம்ம்” என்று கண்ணை அசைக்க, மீனுவிடம் அசைவே இல்லை.

“தூங்கும்போது தான் தலையை கோதி விடுவியா” என்று சக்தி கேட்டுவிட, “அச்சோ” என்று சத்தமே வராமல் வாயைக் குவித்துவிட்டாள் மீனு.

“தூங்கவே இல்லையா” என்று மாட்டிக் கொண்டவளாக அவள் கேட்க,

“தூக்கம்தான். ஆனா, என்னை டச் பண்றது தெரியாதா என்ன?” என்று மீண்டும் அவளுக்கு அதிர்ச்சி கொடுத்தான் சக்தி.

“இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்? என்கிட்டே யாருமே சொல்லலையே” என்று அவள் புலம்ப, சிரித்தவன்,

“அப்போ சரியா தெரியல. இப்போ பண்ணு” என்று தன் கன்னத்தையும் காட்ட,

“ஹாங்… போங்க மாமா” என்று அவனை தள்ளிவிட பார்த்தாள் மீனு.

“எங்கே போக. அதுதான் பிடிச்சு கட்டி வச்சுட்டாங்களே”

“ரொம்ப வருத்தம் போல”

“கொஞ்சம் நிம்மதி தான். சேர வேண்டிய இடத்துல சேர்ந்தது போல நிம்மதியா இருக்கேன்”

“நல்ல இடம் தான்” என்று அவள் தன் மடியைக் காண்பிக்க,

“ஆமா, எனக்கான இடம்.” என்றவன் சட்டென அவள் உடைக்குள் இருந்த மஞ்சள் கயிற்றை கையைவிட்டு வெளியே எடுத்துவிட, விக்கித்துப் போனாள் மீனு.

அவள் அதிர்ச்சியைக் கண்டு சிரித்தவன், “இன்னைக்கு பர்ஸ்ட் நைட் தானே” என,

“ஐயோ… தெரியாம சொல்லிட்டேன்” என்றவள் கையை வைத்து கண்களை மூடிக்கொள்ள, சத்தமாக சிரித்தான் சக்தி.

அவனது சிரிப்பு சத்தத்தில் கண்களைத் திறந்தவள் கண்டது கண்களில் கண்ணீர் வரும் அளவுக்கு சிரித்துக் கொண்டிருந்த சக்தியைத் தான்.

அவன் சிரிப்பில் அவளுக்கும் கண்கள் கலங்கிவிட, அவள் கண்ணீரில் “என்னடா” என்று எழுந்துவிட்டான் சக்தி.

“இப்படியே சிரிச்சிட்டே இருங்க மாமா” என்று அவன் கன்னம் பிடித்து கொஞ்சியவள் அவன் பார்வையில் வெட்கம் கொண்டு அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.