ஐந்து வருடங்களுக்குப் பிறகு..

‘அபர்ணாஸ் கபே !’ மூன்று கிளைகளுடன் வளர்ந்திருந்தது.  சிவசக்தி இப்போது தேனியில் பேர் சொல்லும் நபர்களுள் ஒருவன். மூன்று கிளைகளும் சொந்த இடத்தில் தான் இருந்தது.

அவனின் வளர்ச்சி மற்றவர்கள் எதிர்பாராத வளர்ச்சி. அபர்ணா தன்னவனிடத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி.

அவர்களுக்கு இரண்டாவதும் பையன் தான்  பிறந்திருந்தான்.

இன்று சிவா -அபர்ணா அவர்களின் புது வீட்டின் கிரகப் பிரவேசம் முடிந்திருந்தது.

இதோ இரண்டு மகன்களும் இருபுறமும் வர, அவர்களைப் பிடித்துக் கொண்டே நடமாடிக் கொண்டிருந்தவள், வந்தவர்களை கவனித்துக் கொண்டிருந்தாள்.

அவளின் சேலையைப் பிடித்துக் கொண்டே சுற்றிக் கொண்டிருந்த மகன்களைப் பார்க்கும் போது சிவாவிற்கு சிரிப்பு வந்திருந்தது. அதிலும் சின்ன  வாண்டு ஒரு நிமிடம் கூட அவளைப் பிரிவதில்லை. மூத்த பையன் வசீகரனுக்கு ஐந்து வயது. சின்ன வாண்டு சரண் முகிலனுக்கு இரண்டு வயது.

சிவா சொன்னதைப் போல் அவர்களுடன் சேர்ந்து பிள்ளைகளும் வளர்ந்து கொண்டிருந்தார்கள்.

நடராஜன்- கலையரசிக்கு பெருமை பிடிபடவில்லை. நடராஜன் ஆள் மிகவும் தளர்ந்திருந்தார்.

சாந்தி வழக்கம் போல் சிறுபிள்ளை போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். மூர்த்திக்கு இப்போதெல்லாம் மருமகன் பெருமை பாடவே நேரம் சரியாக இருந்தது. அதிலும் முத்து மாணிக்கத்தின் முன் பேசுவதில் அவருக்கு அலாதிப் பிரியம்.

விழுந்த இடத்தில், விழுந்த போது சுற்றி இருந்தவர்களின் முன்னிலையில் வளர்ந்திருந்தனர் சிவாவும் அபியும்.

“உங்க தம்பியைப் பார்த்து கத்துக்கோங்க. நமக்கு பின்னாடி கடை ஆரம்பிச்சாங்க. ஒரு கடை மூணு கடை ஆச்சு. இப்போ சொந்த வீடு வேற. நீங்க இன்னும் அதே பழைய பேக்கரி தான். பழைய வீடு தான்” என்றாள் செல்வி.

“நான் இல்லைன்னு சொல்லலையே? என்ன பண்றது? என் தம்பிக்கு அமைஞ்ச மாதிரி பொறுப்பான புத்தி இருக்குற மனைவி எனக்கு அமையலையே? அவளுக்கு அப்பன் வீட்டை பெருமை பேசத்தான் நேரமிருந்தது. இப்போ அவரும் இல்லை. இனி யாரைப் பேசுவ?” என்றான் பிரபா.

செல்வியின் அப்பா ஒரு வருடத்திற்கு முன்பு தான் ஒரு விபத்தில் தவறியிருந்தார். நேரடியாகவும், மறைமுகமாவும் சப்போர்ட்டாக இருந்த தந்தையின் மறைவு அவளுக்கு பேரிடி தான்.

அப்போதிருந்து புகுந்த வீட்டில் கொஞ்சம் அடக்கி வாசித்தாலும், அவ்வப்போது இப்படி துடுக்குத் தனமாகத் தான் பேசி வைப்பாள்.

“இதெல்லாம் தேவையாக்கா உங்களுக்கு? உங்ககிட்டையும் எல்லாம் இருக்கு தான? அப்பறம் என்ன?” என்றாள் சரிதா.

“என்ன இருந்து என்ன பிரயோஜனம்? எதுவோ இல்லாத மாதிரியே தோணுது சரிதா. அந்த அபர்ணாவைப் பாரு, நானும் அவ கட்டிட்டு வந்த அன்னைக்கு இருந்து பார்க்குறேன், அதே கெத்தோட தான் இருக்குறா. ஒன்னும் இல்லாதப்பவும் அப்படித்தான் இருந்தா. இப்போ எல்லாம் இருக்குறப்பவும் அப்படித்தான் இருக்குறா” என்று பொருமித் தள்ளினாள்.

“அவ எப்பவும் ஒரே மாதிரி இருக்காக்கா. இதை அப்படித்தான் சொல்லணும். நீங்க தான் வேற மாதிரி சொல்றிங்க?” என்ற சரிதா சிரித்து வைத்தாள்.

“இப்ப நீங்கல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு. நான் பேசுனா அப்படித்தான் இருக்கும்” என்றாள் செல்வி இடக்காக.

“இதென்ன வம்பா இருக்கு. இப்பவும் நாம தான் ஒரே வீட்ல இருக்கோம். நான் உங்க கூடவே தான் இருக்கேன். நீங்க இப்படி சொல்றிங்க?” என்றாள் சரிதா.

“இந்த சிவா மட்டும் அன்னைக்கே என் தங்கச்சியை கட்டியிருந்தா இன்னைக்கு எல்லாம் நல்லா இருந்திருக்கும். வேணும்னு தான் கட்ட மாட்டேன்னு சொல்லிட்டான்” என்று செல்வி முனுமுனுத்தாள்.

“எனக்கென்னமோ, உங்களைப் பார்த்து உங்க குணத்தை தெரிஞ்சுகிட்ட பிறகு தான் சிவா அப்படி சொல்லியிருப்பாருன்னு தோணுது” என்றாள் சரிதா சிரிக்காமல்.

“என்ன சரிதா கிண்டலா?” என்றாள் செல்வி கோபமாய்.

“அக்கா நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்க்கா” என்ற சரிதாவைப் பார்த்து சத்யா சிரித்துக் கொண்டான். அவர்கள் பேசியதை அவனும் கேட்டுக் கொண்டு தானே இருந்தான்.

ஒருவழியாக அனைத்தையும் முடித்து ஓய்ந்து அமர்ந்த அபர்ணாவிற்கு  உடலெல்லாம் வலி பின்னி எடுத்தது.

கண்கள் சிவாவைத் தேட, அவன் இன்னமும் ஏதோ செய்து கொண்டிருந்தான். காலையில் இருந்து அவனை சரியாகப் பார்க்க கூட நேரமில்லை அவளுக்கு. அவனும் அப்படித்தான் இருந்தான். காலையில் பட்டு வேட்டி சட்டையில் இருந்தவன் எப்போது பேண்ட் ஷேர்ட்டிற்கு மாறினான் என்று கூட அவள் பார்த்திருக்கவில்லை.

“நான் பசங்களை குளிக்க வச்சு கூட்டிட்டு வர்றேன் அபர்ணா” என்று சாந்தி அவர்களை அழைத்துக் கொண்டு செல்ல,

“எங்க அபி உன் பார்டிகார்ட்ஸ் யாரையும் காணோம்?” என்றபடி வந்த சிவாவை முறைத்தவள்,

“பசங்க உங்களுக்கு பாடிகார்ட்ஸா?” என்றாள்.

“இல்லையா பின்னே? எப்பப் பாரு உன் சேலையைப் பிடிச்சுட்டே சுத்துறானுங்க. எனக்கு இடமே விடமாட்டேங்குறானுங்கடி” என்றான் சலிப்புடன்.

“உங்களுக்குப் பொறாமை?” என்றாள் சிரிப்புடன்.

“நிஜமாவே பொறாமையா இருக்கு அபி. நான் என் பொண்டாட்டியை ரொம்ப மிஸ் பண்றேன்” என்றான் சிவா. அவன் சொல்வது உண்மைத் தான் என்று அபிக்கும் தெரியும்.

“சும்மா உருட்டாதிங்க. காலையில இருந்து என்னைக் கண்டுக்கவே இல்லை. இப்ப நான் ஏதாவது சொல்லுவேன்னு தான இப்படி பேசிட்டு இருக்கீங்க?” என்றவளை முறைத்தவன்,

“அப்போ நீ நம்பலை?” என்றான்.

“ஆமா, நம்பலை” என்று சொல்லி முடிக்கும் முன் அவள் இதழ்களை சிறை செய்திருந்தான். அவனின் அந்த முத்தத்தில் அவளுக்குத் தான் மூச்சு வாங்கியது.

“அபூ” என்று கேட்ட கபிலனின் குரலில் தான் அவளை விட்டிருந்தான்.

“உங்கண்ணன் ஒரு சரியான கரடி அபி” என்றான் மெதுவாக.

“எனக்கு காது நல்லா கேட்கும் சிவா” என்ற நக்கலுடன் வந்த கபிலன்,

“பசங்க ரெண்டு பேரையும் இன்னைக்கு நான் கூட்டிட்டு போறேன். நீங்க டயர்டா இருப்பிங்க. ரெஸ்ட் எடுங்கன்னு சொல்ல வந்தேன். நான் தான் கரடி ஆச்சே. எதுக்கு அதை சொல்லிட்டு” என்றான் கபிலன் சிரிக்காமல்.

“நீங்க தெய்வம் மச்சான். ஆனா இங்கயே இருங்க கபிலன். நாளைக்குப் போகலாமே” என்றான் சிவா.

“இங்க இன்னும் நீங்க பாதி செட் பண்ணவே இல்லையே சிவா. இன்னொரு நாள் கண்டிப்பா தங்குறோம்” என்றான் கபிலன்.

“டாடி மம்மியைப் பார்த்துக்கோங்க. மாம் நீங்க ரெஸ்ட் எடுங்க. யு லுக் சோ டயர்ட்” என்றான் வசீகரன்.

“ஓகே கண்ணா” என்றவன் இரு மகன்களையும் இரண்டு பக்கமும் தூக்கிக் கொண்டான். அவன் அப்படி தூக்கிக் கொள்வதில் மகன்களுக்கு அலாதிப் பிரியம்.

தந்தைக்கு ஆளுக்கொரு முத்தத்தை வைத்துவிட்டு இறங்கியவர்கள், “பாய் மம்மி, பாய் டாடி” என்றபடி கபிலனுடன் சென்று விட்டனர்.

குளித்து முடித்து ஆசுவாசமாய் வந்தவளின் முன் சூடான காபியை நீட்டியிருந்தான் சிவா.

“தேங்க்ஸ் சக்தி. நிஜமாவே அப்படி ஒரு தலைவலி. உடம்பெல்லாம் அடிச்சு போட்ட மாதிரி இருக்கு” என்றாள்.

“என் பொண்டாட்டியை பார்த்துக்க சொல்லி எனக்கே ஆர்டர் போட்டுட்டு போறானுங்க அபி” என்றவன்,

“இன்னைக்கும் மழை வந்தா நல்லா இருக்கும்” என்றான் காபியை குடித்தபடியே.

“எதுக்கு?” என்றாள்.

“உனக்கு பார்டிகார்ட்ஸ் இருக்க மாதிரி எனக்கு பொண்ணு வேண்டாமா?” என்றான் அவளை பின்னின்று அணைத்தபடி.

“மறுபடியும் முதல்ல இருந்தா சக்தி” என்றாள்.

“கமலஹாசன் அபிராமி அபிராமின்னு சுத்திட்டு இருந்தார். நான் அபர்ணா அபர்ணான்னு சுத்திட்டு இருக்கேன்டி” என்றான் சிரிப்புடன்.

“சக்தி”

“என்னால நம்பவே முடியலை அபி. எல்லாமே கனவு மாதிரி இருக்கு. ஆனா கனவு இல்லை நிஜம் தான்னு புத்திக்கு தெரியுது. சரியானவங்க நம்ம வாழ்க்கையில வந்தா எல்லாமே கூடி வரும்னு இதைத் தான் சொன்னாங்களோ?” என்றான் சிவா.

“இதுக்கு பின்னாடி முழுக்க முழுக்க உங்களோட உழைப்பு மட்டும் தான் இருக்கு சக்தி. நான் என்ன பெருசா பண்ணிட்டேன். சொல்லப் போனா என்னையும் சேர்த்து அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு வந்திருக்கிங்க. நிஜமாவே நீங்க மிஸ்டர் பெர்பெக்ட் தான் சக்தி” என்றாள்.

“இப்பல்லாம் என்னை மயக்குற ஒரே போதை நீதான் அபி” என்றவனின் நெருக்கமும் மூச்சுக் காற்றும் அவளின் ஒவ்வொரு அணுவிலும் காதலை நிரப்பிக் கொண்டிருந்தது. அவளுக்கும் அவன் தோள்களை விட்டு விலக மனமில்லை. அவனிடத்திலேயே அடிமையாகிப் போனாள் அபி.

அன்பிற்குள் மட்டுமே  அன்பினால் மட்டுமே இருவரும் ஒருவருக்கு ஒருவர் அடிமையாகியிருந்தனர்.

காதலையும் காமத்தையும் தாண்டி, அன்பும் புரிதலும் மட்டுமே அவர்கள் வாழ்க்கையை ஆட்சி செய்து கொண்டிருந்தது.

நம் சொந்தம் கூடுமோ?