வீடு வரும் வரை எதுவும் பேசாமல் அமைதியாக வந்த அபர்ணாவை யோசனையுடன் பார்த்த படியே வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தான் சிவா. அவள் அந்த உலகத்திலேயே இல்லை என்று அவளின் வெறித்த பார்வையிலேயே தெரிந்து போனது அவனுக்கு.
வீட்டிற்கு வந்த பிறகும் கூட எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தவளைக் கண்டு யோசனையுற்றவன்,
“இப்போ என்னாச்சுன்னு இப்படி இருக்க அபி?” என்றான் பொறுமையிழந்து.
அவளோ எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க,
“என்னாச்சுன்னு கேட்டேன் அபி?” என்றான் மீண்டும் அழுத்தத்துடன்.
“அங்க இருந்து கேட்டாவெல்லாம் சொல்ல முடியாது” என்றாள் பட்டென்று.
“நீ நார்மலா இருந்தாத்தான் நான் பக்கத்துல வருவேன்” என்றான்.
“நீங்க பக்கத்துல வந்தா தான் நான் நார்மல் ஆவேன்” என்றாள் பட்டென்று. சட்டென்று அவனுக்கு சிரிப்பு வந்திருந்தது.
அவளின் அருகில் அமர்ந்து அவளைத் தன் கைவளைவில் அணைத்துக் கொண்டவன்,
“இப்போ ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க அபி. அதான் அங்கயே நல்லா பேசி விட்டுட்டுத் தான வந்த? அந்த அதிரடி அபி இங்க வந்து என்னடான்னா சோக கீதம் வாசிச்சுட்டு இருக்கா?” என்றான் சிவா.
“நான் என்ன தப்புப் பண்ணேன் சக்தி. இது இப்படித்தான் கடைசி வரைக்கும் கூட வருமா?” என்றாள்.
“இதுல உன் தப்பு எதுவுமே இல்லை அபி. இது முழுக்க முழுக்க அந்த பொண்ணோட தப்பும் மாதவனோட தப்பும் தான்” என்ற சிவாவை புரியாமல் பார்த்தாள் அபர்ணா.
“அந்த பொண்ணுக்கு மாதவன் மேல நம்பிக்கை இல்லை. மாதவன் தன் மேல நம்பிக்கை வர்ற மாதிரி நடந்துக்கலை. ரெண்டு பேருக்கும் இடையில பரஸ்பர புரிதல் இல்லை. இது உண்மையாவும் இருக்கலாம். இல்லைன்னா அந்த பொண்ணோட குணமே அப்படியாவும் இருக்கலாம்” என்றவன், அவளையே பார்க்க,
“என்னாச்சு சக்தி?” என்றாள்.
“நான் ஒன்னு சொல்லவா அபி நீ எதுவும் நினைச்சுக்க மாட்டியே?” என்றான்.
“ம்ம்” என்றாள் புரியாமல்.
“மாதவனுக்கு உன் மேல இஷ்ட்டம் இருந்திருக்கு அபி. யார் மறுத்தாலும் அது தான் உண்மை. சித்தப்பா பேச்சைக் கேட்டுட்டு முடிவெடுத்திருப்பான்னு நினைக்கிறேன். முடிவு எடுக்க தடுமாறலாம். ஆனா அவன் எடுத்த பிறகு தடுமாறுறான்” என்றவன்,
“மாதவனோட மேரேஜ் விஷயம் தெரிஞ்சப்போ நீ என்ன பண்ண?” என்றான் அவள் விரல்களை வருடிக் கொண்டு.
“வாழ்த்து சொல்லிட்டு வந்தேன் சக்தி” என்றாள்.
அவளை வியப்புடன் பார்த்தவன்,
“நிஜமாவா?” என்றான்.
“ம்ம்!! வேற என்ன செய்ய சொல்றிங்க? வாழ்க்கை குடுங்கன்னு கெஞ்சியிருக்கனுமா?” என்றாள் கிண்டலுடன்.
“நான் அப்படி நினைக்கலை. நீ பிடிவாதமா பேசியிருந்தா அவன் ஓகே சொல்லியிருக்க கூட வாய்ப்பிருக்கு. நீ இப்படி சட்டுன்னு மூவ் ஆன் ஆனதை அவனால ஏத்துக்க முடியாம இருக்கலாம்” என்றான் சிவா.
“அதுக்கு நான் என்ன பண்றது சக்தி? இந்த பேச்சு இப்போ தேவையா? யார் என்ன நினைச்சா என்ன? நான் யாரையும் நினைக்கலை. எனக்கு அது தேவையில்லாததும் கூட. இதுக்குத்தான் இன்னைக்கு நான் வர மாட்டேன்னு சொன்னேன். நீங்க தான் வம்பா கூட்டிட்டு போனிங்க. இதெல்லாம் தேவையா நமக்கு?” என்றாள் படபடப்புடன்.
“ஹேய் அபி..ரிலாக்ஸ்! இப்போ ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற?” என்றான் சிவா.
“டென்ஷன் இல்லை சக்தி. இது என்னோட ஆதங்கம். அவளுக்கு எவ்வளவு இருந்தா அப்படி பேசியிருப்பா. கொஞ்சம் கூட வாய் கூசவே இல்லையா? அவ புருஷனை பேசுறதுக்கு அவளுக்கு ரைட்ஸ் இருக்கு. ஆனா என்னைப் பேசுறதுக்கு அவளுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு?” என்று அவள் கோபமாய் பேசிக் கொண்டிருக்க, அவனோ ஆசையாய் பார்த்திருந்தான் அவளை.
“இப்போ நீங்க ஏன் இப்படி பார்க்குறிங்க?” என்றாள் தடுமாற்றத்துடன்.
“என் கண்ணுக்கும் என் பொண்டாட்டி மட்டும் தான் பேரழகியா தெரியறா?” என்றவனை முறைத்தவள்,
“தெரிவா தெரிவா?” என்றவளுக்கும் இதழ்கள் புன்னகையில் விரிந்திருந்தது.
“உனக்கும் வளையல் போடணும்னு ஆசைப்பட்ட தானே அபி” என்றவனை ஓரக்கண்ணால் பார்த்தவள்,
“இப்போ அந்த ஆசையெல்லாம் இல்லை சக்தி” என்றாள் சிரிப்பை அடக்கியபடி.
“அடிப்பாவி!!” என்றவன்,
“ஆனா எனக்கு என் பொண்டாட்டிக்கு கைநிறைய வளைகாப்பு வளையல் போட்டு பார்க்கனும்னு ஆசையா இருக்கே, என்ன பண்ணலாம்?” என்றவன் அவளை தன் அணைப்பில் இறுக்கிக் கொள்ள,
“ஆசை இருக்கு தான் சக்தி. ஆனா உங்களுக்குத் தான கஷ்ட்டம். இப்பவே உங்களுக்கு நேரமில்லை. அடுத்து உடனே குழந்தைன்னு வந்தா ரொம்ப கஷ்ட்டம் சக்தி. நீங்க ஒரு ஆள் என்னென்ன பார்ப்பிங்க?” என்றவளின் அக்கறையில் கனிந்தது அவன் முகம்.
“அதனாலென்ன அபி? நம்மளோட சேர்ந்தே நம்ம குழந்தையும் வளர்ந்துட்டு போகுது. குழந்தையை நாம கமிட்மென்ட் லிஸ்ட்ல சேர்க்க வேண்டாம்மா. நான் இருக்கேன்ல,பார்த்துக்கலாம் அபி” என்றவனின் வார்த்தைகளில் கரைந்து தான் போனாள் அபர்ணா.
“கஷ்ட்டமெல்லாம் இல்லை இஷ்ட்டம் தான்” என்றவளை அதற்குமேல் பேசவிடவில்லை அவன். பேச்சு வார்த்தைகளுக்கு இடமின்றி போனது.
மாதவனின் வீட்டில் மாதவனையும் முத்து மாணிக்கத்தையும் வாங்கு வாங்கென்று வாங்கிக் கொண்டிருந்தார் அன்னம்.
“நீங்க பார்த்து கொண்டு வந்த மருமக தானே? வசதியான வீட்டு மருமக வேற. எல்லாம் சரித்தான். வீட்ல நம்மளை மதிக்கிறது இல்லை சரி. ஆனா அங்க வச்சு அபர்ணாவை பேச அவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும். இதெல்லாம் யார் குடுத்த தைரியம்?” என்றார் அன்னம் கோபமாக.
ஏற்கனவே எரிச்சலில் இருந்த மாதவன்,
“நான் என்னமோ அவளை பேசச் சொல்லி சொல்லிக்குடுத்த மாதிரி பேசுறிங்கம்மா. ஏற்கனவே அவ டார்ச்சர். இப்போ நீங்களும் பேச ஆரம்பிச்சுட்டிங்களா?” என்றான் கடுப்புடன்.
“அன்னம்” என்றார் முத்து மாணிக்கம்.
“நீங்க பேசாதிங்க? உங்களுக்கு என் அண்ணனை ஆகாது. அவர் பெத்த பெண்ணை ஆகாது. ஆனா அவர் செய்யற சீர் மட்டும் வேணும். இன்னைக்கு அபர்ணாவை கட்டிட்டு வந்திருந்தா நமக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா? எல்லாம் பணத் திமிர்ல ஆடுனிங்க இப்போ அனுபவிங்க. ஆனா அபர்ணா குணத்துக்கு அவ இன்னும் நல்லாத்தான் இருப்பா” என்று புலம்பியவர் எழுந்து செல்ல, மாதவனுக்கு தலையை பிய்த்துக் கொள்ளும் நிலைமை.
“குழந்தை பிறந்தா சரியாகிடும் மாதவா” என்ற முத்து மாணிக்கத்திற்கும் மேற்கொண்டு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அன்னம் சொன்னதை அவர் முன்னமே உணர்ந்துவிட்டார். தானாய் வரும் போது தெரியாத அருமை, தனக்கு இல்லையென்று ஆன பிறகு தான் தெரிந்ததோ என்னவோ?
“ஆபரணத்துக்குத் தான் நல்லதுன்னு சொல்ல வந்தேன். ஏன்னா அபர்ணாவுக்கு சிவாண்ணா தான் பெஸ்ட். அவருக்கு ஆபரணம் தான் பெஸ்ட். அவங்க ரெண்டு தான் மேட் பார் ஈச் அதர். நம்ம வீட்டுக்கு வந்திருந்தா கூட ஆபரணம் இவ்வளவு சந்தோஷமா இருந்திருப்பாளான்னு சொல்ல முடியாது. எனக்கு இப்போ தான் சந்தோஷமா இருக்கு. அதே மாதிரி உங்க வாழ்க்கையையும் சரி பண்ணிக்க பாருங்கண்ணா” என்றான் கிஷோர்.
நாட்கள் நகரத் தொடங்கியிருந்தது. சிவாவிற்கோ நாட்கள் ஓடிக் கொண்டிருந்தது. அதன் பின்னால் அவனும் ஓடிக் கொண்டிருந்தான். அபர்ணா சற்றும் சளைக்காமல் அவனின் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்துக் கொண்டிருந்தாள்.
ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரம் போதவில்லை என்பதைப் போல் இருந்தது சிவாவிற்கு. அவளுக்கான நேரத்தை அவன் கொடுக்காமல் இருந்தது இல்லை. அவன் கொடுக்க முடியாத சூழ்நிலையில் அவனிடத்தில் அவளுக்கான நேரத்தை அவள் எடுக்காமல் இருந்ததில்லை.
சில சமயங்களில் அவனிடம் அவள் கேட்டதுண்டு.
“எதுக்கு சக்தி இப்படி ஓடனும்?” என்று.
“விழுந்த இடத்துல இருந்து எழுந்திரிக்கிறது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் யார் முன்னாடி விழுந்தோமோ அவங்க முன்னாடி எழுந்து நிக்கிறது தான் அபி” என்பான்.
அங்கே பிரபாகரனோ செல்வியை தினமும் பேக்கரிக்கு அழைத்து செல்ல, அவளோ விழி பிதுங்கி நின்றாள்.
“அதான் வேலைக்கு ஆள் வச்சுட்டோமே?” என்றவளை,
“அவன் வேலையை விட்டு போயிட்டா என்ன பண்றது? நீயும் வந்து இருந்து எல்லாத்தையும் பார்த்து தெரிஞ்சுக்கோ” என்று முடித்துவிட்டான். அவளால் மறுத்துப் பேச வழியே இல்லாமல் போனது.
ஆனால் செல்வியின் குணம் மாறுமா என்றால் மாறவே மாறாது. அவளின் குணத்தை மாற்ற எண்ணினால் அவர்கள் தான் சுவற்றில் முட்டிக் கொள்ள வேண்டும் என்ற கதை தான்.
மாதவனுக்கும் சுஜிதாவிற்கும் பெண் குழந்தை பிறந்திருந்தது. சிவா மட்டும் கபிலனுடன் சென்று பார்த்து விட்டு வந்தான். எவ்வளவு சொல்லியும் அபர்ணா வர மறுத்துவிட்டாள்.
அபர்ணாவும் இப்போது கர்ப்பமாக இருக்கிறாள். சிவாவோ அவளை முன்னை விட கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்கிறான்.
“குழந்தை பிறக்குற வரைக்கும் ஸ்கூல் போக வேண்டாம் அபி” என்று சிவா சொல்ல, முதலில் யோசித்தவள் பிறகு சரியென்று விட்டாள்.
ஆனால் தினமும் அவளை கபேவிற்கு அழைத்துச் சென்று விடுவான். அவனின் கண்பார்வையில் தான் அவள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு. அபர்ணாஸ் கபேவின் கேஷியர் சீட் இப்போது அபர்ணாவின் சீட்டாக மாறியிருந்தது. கணக்கு டீச்சர் இப்போது கணக்காளராய் மாறியிருந்தாள்.
பகல் முழுதும் அவனைப் பார்த்துக் கொண்டே அவனுக்கு அருகில் இருப்பதில் அலாதி இன்பம் அவளுக்கு. அவனுக்கும் அவள் அருகிலேயே இருப்பதால் டென்ஷன் இன்றி வேலையில் கவனம் செலுத்த முடிந்தது. கடையும், குழந்தையும், அவர்களுக்கு இடையில் இருந்த அன்பும் சேர்ந்தே வளர்ந்து கொண்டிருந்தது.
“உன்னைத் தூக்கி இடுப்புல மட்டும் தான் அபூ வச்சுக்கலை” என்று கபிலன் கூட அவ்வப்போது கிண்டல் செய்வான். வித்யா பிரசவத்திற்காக பிறந்த வீடு சென்றிருக்கிறாள்.
“நீ மட்டும் என்னண்ணா? உன் அன்பு டார்ச்சர் தாங்காமத்தான் அண்ணி பிரசவத்தை சாக்கா வச்சு அவங்க வீட்டுக்கு ஓடிட்டாங்க” என்றாள் அபர்ணா.
“மேடமும் நம்ம வீட்டுக்குத் தான் வந்தாகணும்” என்றான் கபிலன்.
“அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை கபிலன்” என்ற சிவாவை முறைத்தான் கபிலன்.
“கொஞ்ச நாளைக்கு காயு. அப்பறம் வந்திடுவேன்” என்றாள் அபர்ணா.
“ம்ம்! நீ வரும் போது என்னை கல்யாணம் பண்ணி பேக் பண்ணிடுவாங்க. ஆல்ரெடி பிராசஸ்ல இருக்கு” என்றாள் காயத்ரி.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே காயத்ரிக்கு காபியும் அபர்ணாவிற்கு ஜூசும் வர,
“இருந்தாலும் சிவாண்ணா சிவாண்ணா தான். மிஸ்டர் பெர்பெக்ட்” என்றாள் காயத்ரி.
அபர்ணாவின் முகம் சிரிப்பில் மலர,
“எப்படி இருக்க அபி?” என்றாள் காயத்ரி.
“எனக்கென்ன காயு. ஜம்முன்னு இருக்கேன். இதோ இவங்க என்னை ஒரு வேலை செய்ய விடுறது இல்லை. உள்ள இருக்க குழந்தையும் ஓவர் சமத்து. என்னை ரொம்பப் படுத்துறதே இல்லை. எப்படி சொல்றதுன்னு தெரியலை காயு. ஆனா நான் நிறைவா பீல் பண்றேன். எனக்கு இதுவே போதும். வாழ்க்கையில அப்பப்போ சின்ன சின்ன கஷ்ட்டங்கள், டென்ஷன்,மன சங்கடங்கள் வருது தான். ஆனா அதையெல்லாம் அவங்க ஈசியா ஹேண்டில் பண்ணிக்கிறாங்க காயு. சில சமயம் நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன். சோ லைப் பேலன்ஸ்டா போகுது” என்றவளின் முகத்தில் இருந்த நிம்மதியே சொன்னது அவளின் மனதை.
“உன்னை இப்படி பார்க்கவே சந்தோஷமா இருக்கு அபூ” என்ற காயத்ரிக்கு பழைய அபர்ணா தான் ஞாபகத்திற்கு வந்து சென்றாள்.
அழுது வீங்கி வாழ்க்கையே தொலைந்ததைப் போல் இருந்த அபர்ணாவா இவள் என்று யோசிக்கும் அளவிற்கு இருந்தது அவளின் மாற்றம். அனைத்திற்கும் சிவா தான் காரணம் என்று அவளுக்குத் தெரியும்.
‘”காரண காரியம் இல்லாம நம்ம வாழ்க்கையில எதுவுமே நடக்குறது இல்லைங்கிறது எவ்வளவு நிதர்சனமான உண்மை அபூ. அதுக்கு உன் வாழ்க்கை தான் உதாரணம்” என்றாள் காயத்ரி.
“நிஜம் தான் காயு” என்றவளின் பார்வை என்னவோ சிவா மீது தான். மனைவியின் பார்வையை உணர்ந்தவன் திரும்பி அவளைப் பார்த்து ‘என்ன?’ என்று கண்களால் கேட்க, ‘ஒண்ணுமில்லை’ என்பதைப் போல் தலையை ஆட்டியிருந்தாள் அபர்ணா.