மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று நடந்த பூசல்களுக்குப் பின், ஒரு வழியாக சக்தி-மீனாட்சியின் திருமண வேலைகள் வேகமெடுக்கத் தொடங்கியிருந்தது. அழைப்புகளை சொக்கநாதரும், மனோன்மணியும் கவனித்துக் கொள்ள, முத்தையனும், தங்க வேலுவும் திருமண ஏற்பாடுகளை கவனிக்க தொடங்கியிருந்தனர்.
‘ஆடம்பரமாக எதுவும் செய்ய வேண்டாம்’ என்று சக்தி கூறியது எதுவும் மூத்த தலைமுறையின் காதுகளில் ஏறவில்லை. முத்தையன் தனது ஒரே மகளின் திருமணம் என்றுவிட, தங்கவேல் வெற்றியின் செய்கையால், தாங்கள் இழந்திருந்த மரியாதையை இதன் மூலம் சரிசெய்து கொள்ள விரும்பினார்.
“பாருடா என் பிள்ளை வாழ்வை” என்று அத்தனைப் பேருக்கும் காட்டிவிடும் துடிப்பு அதிகமாக இருந்தது அவரிடம்.
வெற்றியின் காதல் திருமணத்தை விட, சக்திக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணம் நின்று போனதில் தான் மனிதர் அதிகமாக தளர்ந்து விட்டிருந்தார்.
இன்று அதற்கெல்லாம் பதில் சொல்வது போல், இத்தனை தடைகளைத் தாண்டி மகனின் திருமணம் இன்னும் இரண்டே நாட்களில் என்று வந்து நிற்க, தங்கவேலுவை கையில் பிடிக்க முடியவில்லை.
வடிவு மகனின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிய வேண்டும் என்று தினம் ஒரு கோவிலாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தார். நடந்த செயல்கள் அவரை பெரிதும் அச்சப்படுத்தி இருக்க, முழு மனதோடு கடவுளை சரணடைந்து விட்டார் அவர்.
அவருடன் இப்போது வள்ளியம்மையும் சேர்ந்து கொள்ள, தினமும் காலையில் அருகில் இருக்கும் ஏதோ ஒரு கோவிலில் தங்களால் இயன்ற அளவுக்கு அன்னதானம் அளித்துக் கொண்டிருந்தனர் இருவரும். திருமண வேலைகளுக்கு இடையிலும் இவர்கள் இதை நிறுத்தாமல் நடத்தி வர, அவ்வபோது மனோன்மணி, வேல்விழி என்று யாரவது இவர்களுடன் கலந்து கொள்வது உண்டு.
மீனாட்சிக்கு நலங்கு வைக்க தொடங்கி விட்டதால் அவளை வீட்டை விட்டு வெளியே அழைத்து வருவதில்லை. இத்தனை நிகழ்ச்சிகளுக்கும் இதுவரை வள்ளியம்மை தன் கணவரிடம் இயல்பாக பேசியிருக்கவில்லை. மகளின் திருமணத்தை முன்னிட்டு அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொள்கிறார் தான்.
ஆனால், அதைத் தாண்டி எதையும் கணவரிடம் பேச மறுக்கிறார். முத்தையனுக்கும் இது புரிகிறது தான். ஆனால், அதற்காக என்ன செய்வது என்று புரியாமல் தான் தலையைப் பிய்த்துக் கொள்கிறார் மனிதர்.
அவரும் எதையாவது சாக்கிட்டுக் கொண்டு ஓரிரு வார்த்தைகளை போட்டுப் பார்க்கிறார் தான். ஆனால், வள்ளியம்மை காது கேளாதவர் போல் கடந்து விடுகிறாரே.
ஒருகட்டத்தில், மகளின் திருமணம் முடியட்டும் என்று திருமண வேலைகளில் மூழ்கிப் போனார் மனிதர்.
இப்படியாக, வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வேலையில் தங்களை இணைத்துக்கொள்ள, ‘இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை’ என்று நின்றவன் சக்திவேல் தான்.
சொன்னதுபோலவே, எந்த வேலையிலும் தலையிடவில்லை அவன். மீனாட்சி வீட்டில் பரிபூரண ஓய்வில் இருக்க, இவன் வேலை, வேலை என்று முழுநேரமும் சர்க்கரை ஆலை, பைக் ஷோரூம் என்று சுற்றிக் கொண்டிருந்தான்.
இதோ, நாளை மறுதினம் திருமணம் என்று வந்து நிற்க, இன்றும் ஒரு அவசர வேலையாக வெளியில் தான் கிளம்பிக் கொண்டிருந்தான். அந்த நேரம் அவன் அறையின் வாசலில் வேல்விழி வந்து நிற்க, “என்னடா” என்றான் அன்பாக.
தங்கை தயக்கத்துடன் அண்ணணின் அறைக்குள் நுழைந்தாள். சக்தி அவள் முகம் பார்த்து நிற்க, அவனை நிமிர்ந்து பார்க்கவே தயங்கியவள் போல் சில நொடிகள் நின்றிருந்தாள் தங்கை.
“என்னம்மா” என்று சக்தி அவள் நெருங்க, “அண்ணா” என்றது பெண்.
சக்தி தலையசைக்க, “வெற்றி வேண்டாமா?” என்றாள் மொட்டையாக. இதற்குள் கண்களில் கண்ணீரும் சேர்ந்து கொண்டது.
அவளும் தான் என்ன செய்வாள். பெரியவன் தந்தை என்றால், சிறியவன் அவளது முழுநேர விளையாட்டுத் தோழன் மற்றும் வழிகாட்டி. இத்தனை நாட்களாக யாராவது வாய் திறக்கமாட்டார்களா என்று காத்திருந்து ஏமாந்து போனவள், இன்று தானே அண்ணனைத் தேடி வந்துவிட்டாள்.
ஆனால், வெற்றியைப் பற்றி பேசிவிட்டதால் சக்தி கோபம் கொள்வானோ என்று அந்த தவிப்பு வேறு. ஆனால், வெற்றி உடன் இல்லாமல் சக்தியின் திருமணம் நடப்பதையும் மனம் ஏற்க மறுத்தது.
துணிந்து முடிவெடுத்து சக்தியின் முன்னே வந்து நின்றுவிட்டவளுக்கு இப்போது கைகால்கள் எல்லாம் நடுக்கமெடுக்க, அவள் தலையில் தட்டிய சக்தி, “எதுக்கு இப்போ கண்ல தண்ணி வைக்கிற?” என்றான்.
மூத்தவன், “வேண்டாமா” என்று அவளிடம் விளையாடி நிற்க, “அண்ணா” என்று சிணுங்கினாள் தங்கை.
“உனக்கு அவனை பார்க்கணுமா?” என்றதும் தலை வேகமாக ஆடியது.
“வா” என்று ஒரு வார்த்தையில் சக்தி அவள் கைப்பிடித்து கிளப்ப, “டிரஸ் மாத்திட்டு வரேன்” என்றாள் தங்கை.
“இது போதும் வா. நம்ம தோட்டத்துக்கு தானே” என்றவன் தங்கையை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
இருவரும் அவனது ராயல் என்பீல்ட் வண்டியில் கிளம்பியிருக்க, வீட்டில் அனைவரும் ஏதோ ஒரு வேலையாக இருந்ததில் இவர்களை கவனிக்கவில்லை.
சக்தி தோட்டத்து வீட்டின் வாயிலில் வண்டியை நிறுத்திவிட்டு, “உள்ளே இருப்பான் பாரு” என்று தலையசைக்க,
“நீ வரலையா அண்ணா” என்றாள் வேல்விழி.
“அப்புறம் வரேண்டா. நீங்க பேசிட்டு இருங்க” என்றவன் நகர்ந்துவிட, வேல்விழி தயங்கியபடியே தங்களது தோட்டத்து வீட்டை நோக்கி நடந்தாள்.
வீட்டை நெருங்கியவள், “வெற்றி” என்று அழைத்தபடியே, படிகளில் கால் வைக்க, “யாரு… பின்னாடி வாங்க” என்றது ஒரு பெண்குரல்.
“இவங்கதானோ” என்று யோசனையுடனே வேல்விழி வீட்டிற்குள் நுழைந்து பின்பக்கம் வர, அங்கே இருந்த திண்ணையில் அமர்ந்திருந்தாள் தேனருவி.
வேல்விழியைப் பார்க்கவும், பதறியவளாக அவள் எழுந்து நிற்க, வேல்விழி அப்போதுதான் அவளது காயம்பட்டிருந்த கால்களை பார்த்தாள்.
“ஐயோ… உட்காருங்க” என்று அவள் பதற,
“இல்லல்ல… இப்போ வலியில்ல. வாங்க… உட்காருங்க” என்று பதட்டத்துடன் வரவேற்றாள் தேனருவி.
வேல்விழி தலையசைத்து அந்த திண்ணையில் அவள் எழுந்து நின்றிருந்த இடத்திற்கு அருகில் வந்து அமர்ந்துகொண்டு, “நீங்களும் உட்காருங்க” என்றாள் தேனருவியிடம்.
மீண்டும் அவளே, “வெற்றி எங்கே?” என,
“அங்கே… குளத்துல” என்று தேனருவி கையை காண்பிக்க, அந்த திசையைப் பார்த்தாள் அவள்.
குளத்தில் சேறு நன்றாக குழம்பியிருக்க, அதற்கான ஆட்கள் துணையுடன், மீன்களை தரம் பிரித்து மாற்றிவிடும் வேலையில் ஈடுபட்டிருந்தான் வெற்றி.
“நான் பார்த்துட்டு வரேன்” என்றவள் தேனருவியின் பதிலை எதிர்பார்க்காமல், வேகமாக எழுந்து நடக்க, தேனருவி சிரித்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள்.
அவள் சமையலறையின் திண்டில் சாய்ந்தபடியே, தேநீர் தயாரிக்க, இங்கே வேல்விழி வெற்றியை நெருங்கி இருந்தாள்.
கை, கால்களில் அப்பியிருந்த சேற்றை குளத்து நீரில் கழுவிக்கொண்டு வெற்றி மேலேற, அங்கே நின்ற தங்கையை கண்டு ஒருநொடி அப்படியே நின்றுவிட்டான் அவன்.
கண்கள் கூட கலங்கிவிடும் போல இருந்தது.
“வெற்றி” என்று வேல்விழி அவனை நெருங்கி அவனது வலது கையை கட்டிக்கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
அவள் ஆனந்தத்தில் கண்ணீர் வடிக்க ஆரம்பித்துவிட, வெற்றியும் கிட்டத்தட்ட அதே நிலையில் இருந்தாலும், வெளியில் காண்பித்துக் கொள்ளாமல் கண்களைத் துடைத்துக் கொண்டான்.
அந்த நொடியில் அவனது குறும்புத்தனம் தலைத்தூக்க, “எதுக்குடி வந்த” என்று தங்கையின் பிடியை உதறிவிட்டு அவன் முயல, அவனது தோளிலேயே பட்டென ஒரு அடி வைத்தாள் வேலு.
“கொழுப்புடா உனக்கு. சொல்லாம கொள்ளாம ஊரைவிட்டு ஓடிட்டு ஏன் வந்தேன்னு கேட்கிற?” என்றவள் மீண்டும் ஒரு அடி வைக்க,
“வேலும்மா” என்று தங்கையின் கைகளை பிடித்துக் கொண்டான் வெற்றி.
“போடா” என்று அவள் முகத்தை திருப்ப,
“வாடி” என்று அவள் எதிர்பாராத நேரத்தில் அவளை தூக்கிக்கொண்டவன், “வெற்றி வெற்றி” என்று கத்தியதை கண்டு கொள்ளாமல் தன் வீட்டிற்கு தூக்கிவந்தான்.
தேனருவி இவர்களைப் பார்த்து சிரித்தபடி நிற்க, வேல்விழிக்கு அவளிடம் என்ன பேசுவது என்றுகூட புரியாத நிலை.
“இருங்க… டீ எடுத்து வரேன்” என்று அவள் உள்ளே செல்ல,
“அண்ணி அழகா இருக்குடா. எனக்கு என்ன பேசறது தெரியல. என்கூட பேச வையேன்.” என்று வேல்விழி அண்ணனின் காதை கடிக்க, சிரித்தபடியே அவளை இழுத்துக்கொண்டு சமையல் அறைக்குள் நுழைந்தான் வெற்றி.
“ஐயோ” என்று தேனருவி பதறிக் கொண்டு நிமிர, “அய்யய்யோ… அப்படி எல்லாம் இல்ல அண்ணி. இவன் பொய் சொல்றான்.” என்று படபடத்தாள் வேல்விழி.
தேனருவி சற்றே நிம்மதியாக, “அவ்ளோதான்… பேசியாச்சு” என்று வெற்றி இலகுவாக கண்ணடிக்க, அவனை கொன்றுவிடும் நோக்கில் முறைக்க ஆரம்பித்தாள் வேல்விழி.
தேனருவி இவர்களின் பேச்சு புரியாமல் விழிக்க, “உங்ககூட பிரெண்ட் ஆகலாம்னு இவனை கூப்பிட்டா, என்னை கோர்த்து விடுறான் அண்ணி” என்று வேல்விழி புகார் படிக்க,
“அச்ச்சோ… உனக்கு என்மேல கோபம் எல்லாம் இல்லல்ல.” என்று நிம்மதியாக வேல்விழியின் கையைப் பிடித்துக் கொண்டாள் தேனருவி.
“கொஞ்சம் கோபம் இருந்தது. இவனை எங்க வீட்ல இருந்து கூட்டிட்டு வந்ததுக்காக. ஆனா, இப்போ எதுவும் இல்ல. உங்க சூழ்நிலை என்னனு மீனு சொல்லித்தான் தெரியும் எனக்கு. அப்போ உங்க இடத்துல இருந்து பார்த்தா, இவன் செஞ்சது தப்பில்ல இல்லையா. அதனால கோபம் போய்டுச்சு அண்ணி” என்றாள் வேலு.
தேனருவியின் கண்கள் கலங்க, “அச்சோ ஏன் அழறீங்க?” என்று வேல்விழி அவளை நெருங்க,
“தேங்க்ஸ்” என்று அவளை கட்டிக் கொண்டாள் தேனருவி.
வேல்விழி அவளை திட்டி இருந்தால் கூட, ஏதோ ஒருவகையில் ஏற்றுக் கொண்டிருப்பாள் போல. அவளின் இந்த புரிதல் தேனருவியை இன்னமும் உணர்ச்சிவசப்படுத்தியது.
அதன்பின்னான, நேரம் மொத்தமும் பெண்கள் சலசலவென்று வாய் வலிக்க பேசிக் கொண்டிருக்க, வேல்விழியின் காலை உணவும் அங்கேயே முடிந்திருந்தது.
“நீ எப்படி வந்த?” என்று பேச்சின் நடுவே வெற்றி கேட்டு வைக்க,
“அண்ணா தான் கூட்டிட்டு வந்தாங்க வெற்றி. என்னை வாசல்ல வந்து விட்டுட்டு போனாங்க.” என,
“அண்ணா ஏன் உள்ளே வரல.” என்று சட்டென கேட்டுவிட்ட தேனருவி, “வரமாட்டாங்களோ” என்று வெற்றியைப் பார்த்தாள்.
“அன்னைக்கு அவன்தான் உன்னை ஹாஸ்பிடல்ல சேர்த்தது.” என்று வெற்றி நினைவூட்ட, அமைதியாகிவிட்டாள் அவள்.
காலை எட்டுமணி அளவில் வீட்டிலிருந்து கிளம்பியவள் வேல்விழி. இப்போது மணி பன்னிரெண்டை நெருங்க, அவள் யோசனையுடன் அவ்வபோது வாசலை பார்த்திருக்க, சற்று நேரத்திற்கெல்லாம் சக்தி வந்துவிட்டான்.