தேன் சாரல் நீ 23

   ஜெய்யை வேலைக்கு போக சொல்லி கீதா சொல்ல, ஜெய்யோ தன் மனைவி முகம் பார்த்தான். அவளோ “இவள் யார் ஜெய் வேலைக்கு போக அனுமதி வழங்க” என நினைத்தபடி எல்லோருடைய முகங்களையும் அவர்களை உணர்வுகளை கணித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பணியில் மீண்டும் சேர, இன்னும் இரு நாட்கள் இருந்தன.

   அவள் அதை எல்லோரிடமும் சொல்லுவாள் என எதிர்பார்த்தான் ஜெய். அவளோ ஏதும் அறியாதவள் போல அமைதியாய் நின்றாள். சுசிலாவோ, “விஜி எங்கப்பமுட்டு விருந்துக்கு போகாம இவ வேலைக்கு போறேங்கிறா? இவனும் லீவு வேணாமுன்னு சொல்லிட்டு வேலைக்கு போறேங்கிறான். நீயும் ஒன்னும் சொல்ல மாட்டேங்கிற. என்னடா நடக்குது?”

    “அவ பொறந்த வூட்டுக்கு போகும் முன்னாடி கீதா அப்பமுட்டுக்கு போயிருக்கனுமில்ல? அங்க போகாம இவளூட்டுக்கு போயி ஏழு நாளு கொஞ்சிக்கிட்டு வந்திருக்கான். இது சரியா?” என்க

    விஜயனோ, “ கீதா அப்பமுட்டுக்கு நான்தான்மா போகனும். அவன் அவனோட மாமனாரூட்டுக்கு போனா உங்களுக்கென்ன வலிக்குது? மறுவீட்டுக்கு மாமனாரூட்டுக்கு போகாம   தாத்தமுட்டுக்கு, அதான் உங்க அப்பமுட்டுக்கா போவான்? விட்டா  நாள் முழுக்க உங்களுக்கே பண்டிதம் பாக்க சொல்லுவீங்க போல….”

    “இப்போ சொல்றேன் கேட்டுக்குங்க…  கீதா அப்பமுட்டுக்கு எந்தம்பி போக மாட்டான். அப்படியும் போகனுமுன்னா அங்க எழவு விழனும். யார போடட்டும் எம்மாமனாரையா? இல்ல மாமியாகாரியையா? சொல்லுங்க சீக்கிரம்.” என்றவன் பார்வையில்

    “ யேன் மாமியாகாரியையும், யேம் பொண்டாட்டியோட மாமியாகாரியையும் ஒன்னா போட்டுத் தள்ளிட்டா எங்குடும்பம் விளங்கிடும். இந்த ரெண்டு ஏழரையும் எங்கள வாழவிடாம பண்ணுதுங்க,..” என்ற செய்தி இருந்தது.

    “ஜெய்யும், சுஜாவும் அங்க வரமாட்டாங்க. ஒரு வாரமா விருந்த பத்தி பேசறிங்களே, வாங்க போலாம். நானே இன்னும் மறுவீட்டு விருந்த யேன் மாமனாரூட்டுல திங்கல. எனக்கு யேன் மாமனாரு விருந்தே வைக்கல. இதுல யேன் தம்பி மேல புதுசா என்ன பாசம் பொங்கி வழியுது? எங்கியோ இடிக்குதே?” என்றவன்,

     “புதுசா கல்யாணம் ஆனவங்க மாமனார் வீட்டுக்கு மறுவீடு போய் தங்கிட்டு வர்றது முறை. அங்க போகாம கீதா அப்பமுட்டுக்கு போக சொல்லறது முறையா? பெரிய மனுசி உங்களுக்கு தெரியாதா? சாரிம்மா நீங்க இப்ப பெரிய மனுசி இல்ல. சில்லறைங்க கூட சேர்ந்து சீப்பா மாறிட்டிங்கன்னு மறந்துட்டேன்.” என்றவன்

   “ எம்மா சுசிலா! தப்பான தாளத்துக்கு ஆடிக்கிட்டிருக்க புரிஞ்சிக்கோ. உந்தம்பி பெத்த பூதம், அதான் யேன் பொண்டாட்டி என்கிட்ட இருந்து பைசா கிடைக்காதுன்னா என்னையே உசுரோட விட்டு வைக்க மாட்டா. இதுல நீ கூட்டுவேற! பாத்து பகுமானமா இருந்துக்க. போற போக்குல உன் கதைய முடிச்சிடுவா இவ” என கீதாவை கைகாட்டி சொல்லிவிட்டு,

    “ஜெய் நாளைக்கு காலையில நீங்க ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு கிளம்பி போங்க. கல்யாணம் முடிஞ்சி மொத மொதலா போறதால ரெண்டு இடத்துக்கும் ஒன்னா போறது போல பாத்துக்குங்க, சரியா?”

     “ஸ்வீட் வாங்கிட்டு போய் எல்லோருக்கும் குடுங்க. விலைய பாக்காம நல்லதா வாங்கிக்கிட்டு போங்க” என முடிவாக சொல்ல,

     “இவ எதுக்கு ஜெய் கூட அவன் ஸ்கூலுக்கு  போகனும்? நாமதான கூட போகனும். நாமதான அவன் குடும்பம்? ஏன்டா ரெண்டு நாள்கூட இவ இங்க இல்ல, அதுக்குள்ள உன்னையும் கைக்குள்ள போட்டுக்கிட்டாளா?” என சுசிலா கத்தினார்.

    “போன வாரம் வரைக்கும்தான் நாம ஜெய் குடும்பம். எப்போ சுஜா கழுத்துல ஜெய் தாலி கட்டினானோ அப்பவே சுஜாவும், ஜெய்யும்தான் ஒரு குடும்பம். நீயும், நானும் வேறதான். இததானே முப்பது வருசத்துக்கு முன்னாடி நீங்க உங்க மாமனாருக்கிட்ட சொன்னிங்க. உங்களுக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயமா?” என சுசிலாவுக்கு பதிலளித்துவிட்டு, “ஜெய் நீங்க போங்க. போயி ரெஸ்ட் எடுங்க. நாளைக்கு முதல் நாள். சோ நேரமா கிளம்பி போங்க.” என சொல்லி தன் அம்மாவையும், மனைவியையும் கையோடு கூட்டிச் சென்றான்.

    “என்னங்க மாமா நீங்களே உங்க தம்பிய தள்ளி வச்சா நல்லாருக்குமா?” என பசப்பிய கீதா, விஜயன் எதுவும் பேசாமல் இருக்கக்கண்டு

    “நாம எல்லாரும் இல்லாம அவன் வானத்துல இருந்தா குதிச்சி வந்தான்? நீங்களே நமக்குள்ள பள்ளம் பறிக்கிறிங்க. இது சரியில்ல.” என எகிறினாள். பின் அவளே விஜயனின் அருகில் அமர்ந்து,

   “அத்தைக்கு தெரியாததா உங்களுக்கு தெரிய போகுது? அவ எங்களை எல்லாம் மதிக்கவே மாட்டேங்கிறா. படிச்ச திமிரு, சம்பளம் வாங்குற தெனாவட்டுல சுத்தறவ கால இப்பவே ஒடிச்சி நமக்கு கீழ வைக்கல, நாளபின்ன யாரையும் மதிக்கமாட்டா. பின்னாடி ஜெய்தான் கஷ்டப்படனும் பாத்துக்குங்க.” என பொரும

    “முதல்ல உன் வாய தைச்சாலே எங்கூட்டு பிரச்சனை பாதி குறையும். நீ, உங்கத்தை எல்லாரும் எங்க குடும்பத்துக்கு வந்த சாபம்” என நினைத்தவன், கீதாவிடம்,

    “கீதா சுஜாவோட அத்தை மகன் போலீஸ் கமிஷனராம். நீ ஏதாவது சொல்லி, அந்த பொண்ணு தப்பா புரிஞ்சிக்கிட்டு கேஸுகீஸு குடுத்தா நாம கோர்ட் கேஸ்ன்னு சாவற வரைக்கும் அலைஞ்சிக்கிட்டே இருக்கனும். எங்கம்மா சீக்கிரம் போயி சேர்ந்திடும். நீதான் காலத்துக்கும் கஷ்டப்படனும். கொஞ்சம் வார்த்தையை அளந்து பேசு.” என சொல்லி திரும்பி படுத்து தூங்க ஆரம்பித்தான்.

   எழுந்து வெளியே வந்தவள், தன் மாமியாரை பார்த்து, “அத்தை அவ மாமன் மவன் பெரிய போலீஸ் ஆபீசராம். அவ கேஸு குடுத்துடுவாளோன்னு உங்க பெரிய மவன் பயப்படறார். அதனால நாம அவருக்கு தெரியாம அவள கவனிச்சிக்கலாம். நீங்க காலையில நேரமா எழுந்து வராதிங்க. அவ எப்படி ஸ்கூல் போறான்னு பாக்கலாம். இப்போ நாம போயி தூங்கலாம்.” என திரும்பி வர தூங்குவது போல நடித்துக் கொண்டிருந்த விஜயன் கீதா சொன்னதை கேட்டு யோசிக்கலானான்.

    அடுத்த நாள் காலை மெதுவாக ஏழு மணிவரை தூங்கிய கீதா, எழுந்து அருகிலிருந்த விஜயனிடம்,

   “என்னைய எழுப்பி விட்டிருக்கலாமில்ல மாமா? உங்க தம்பிக்கு  மதியத்துக்கு சாப்பாடு செஞ்சி குடுத்திருப்பேன். இப்போ கல்யாணம் ஆன அடுத்த வாரமே சாப்பிடாமயே பசியோட பள்ளிக்கூடம் போவானா?”

    “நான் சொன்ன பொண்ண கட்டியிருந்தா காலையில காபியோட வந்து உங்க தம்பிய எழுப்புவா. எல்லாம் விதி. இன்னைக்கு மொத நாளே இப்படி சாப்பிடாம லேட்டா போனா நல்லாவா இருக்கும்?” என பதட்டமாக இருப்பதுபோல நடிக்க,

   “ நீயி செஞ்சி குடுத்துட்டாலும்…” மனதினுள் பொங்கினாலும் மௌனமாக வேடிக்கை பார்த்தான் விஜயன்.

    “ஐய்யோ நேரமானதால எனக்கு ஒரு வேலையும் புரிய மாட்டேங்குதே! நான் இப்போ என்ன செய்வேன்? இவரு வேற மண்ணுமாதிரி உட்கார்ந்து இருக்காரே” என சத்தமாக புலம்பியபடி தனது சின்ன மகன் பவனை தேடினாள்.

    “ மாமா பவன் அத்தைக்கிட்ட இருக்கானா? தூக்கத்துல பசிக்குதுன்னு அழுதிருப்பானே? அந்த சத்தத்துலகூட நான் முழிக்காம இருந்திருக்கேனே?”

    “இருங்க உங்களுக்கு காபித்தண்ணியாவது போட்டு எடுத்துட்டு வரேன்” என எழ

  “நீ வைக்கிற காபியே கழனித்தண்ணி போலதான் இருக்கும். இப்போ நீயே காபித்தண்ணீன்னு சொல்ற! அது எப்படி இருக்குமோ?” என எண்ணியபடி விஜயன்

    “வேணாம் கீதா. நான் பொங்கல், வடை சாம்பார்ல சாப்பிட்டுட்டு காபியும் குடிச்சிட்டு வந்துதான் உன்னைய எழுப்பினேன். நீங்கதான் நேத்தே ஒன்பது மணி வரை தூங்கினாதான் அலுப்பு குறையும்ன்னு பேசிக்கிட்டு இருந்திங்களா, ஸோ நான் சாப்பிட்டுட்டேன்.” என கூலாக விஜயன் சொல்ல வெலவெலத்து போனாள் கீதா.

   கூனிகள் இருவரும் இன்று சுஜாவை பட்டினி போட நேற்றே முடிவு செய்திருந்தனர். அதன்படி ஏழுமணி வரை தூங்கினர். சுஜா எழுந்து சமைத்து குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோருக்கும் பரிமாறியவள் தானும் சாப்பிட்டு விட்டு பாத்திரங்களை கழுவி வைத்துக் கொண்டிருக்க, கீதா பூனை நடை நடந்து ஜெய் அறைக்குள் நுழைந்தாள்.

    அங்கே பெட்டிகள், பீரோ என எல்லாம் பூட்டியிருக்க, நொந்தபடி திரும்பிய கீதாவின் கண்களில் பட்டது அந்த கவர். மெத்தையின் மேலே  இருந்த அந்த துணிக்கடை கவரில் ஒரு புது புடவை, அதற்கு மேட்ச்சிங் ப்ளவ்ஸ் மற்றும் உள்ளாடைகள் வைக்கப்பட்டிருக்க , அதில் இருந்த புடவையை மட்டும் எடுத்துக்கொண்டு வந்து சுசிலாவிடம்,

   “ அத்தை இந்த புடவை அழகா இருக்கு. நான் எடுத்துக்கவா?” என கேட்டாள்.

   “உனக்கில்லாததா….? எடுத்துக்கோ கீதா. ஆமாம் இது எங்கிருந்தது?” என சுசிலா கேட்டுக் கொண்டிருக்கும்போதே ஜெய்யும், விஜயனும் அங்கு வந்தனர். கீதா கையில் இருக்கும் புடவையை பார்த்தவுடன் விஜயன் ஜெய்யை முறைத்தான்.

     “அது ஜெய் மாமா ரும்ல  எடுத்து வச்சிருந்தார். அங்க எனக்கு இல்லாம வேற யாருக்கு மாமா எடுத்து வைத்திருக்க போறார்? எப்பவும் இப்படி சஸ்பென்ஸா தான் குடுப்பாரு? ஆனா இப்போ என்கிட்ட குடுக்காம அங்கேயே வச்சிட்டு வந்துட்டாரு. அதான் எப்பவும் போல போய் நானே எடுத்துட்டு வந்துட்டேன்.” என நாணி கோணியபடி சொல்ல,

   பட்டென முன்னாடி வந்த விஜயன், “ இதுவரை ஜெய் உனக்கு எத்தனை புடவை எடுத்து குடுத்தான் கீதா? புடவையோட ப்ளவுஸ், பாவாடை என ஒரு செட்டு செட்டா  வச்சி பெட்டியில அடுக்கி வச்சதா நீலாவும், தேனும் இவங்க கிளம்பும்போதே சொல்லி அனுப்பினாங்க. அப்ப இதுக்கூட இருந்த மத்த துணிமணிகள் எங்கே?” என கேக்க, சுசிலா கீதாவை பார்த்தபடி

    “புள்ளத்தாச்சி பொண்ணு ஆசைபடறா. ஒரு புடவை தானே? விடுங்கடா. ஏம்மா… சின்ன மருமவளே இந்த புடவைய எங்க கீதாகண்ணு கட்டிட்டு தரும் நீ அப்புறம் இதை கட்டிக்கோ. இப்போ போயி வேற புடவை இருந்தா கட்டிட்டு கிளம்பு.” என்றவர் சுஜா ஏதும் பேசாமல் ஜெய், விஜயனை திரும்பி பார்க்க,

    “இரு இரு….போயிடாத. மத்த புடவையை எல்லாம் கீதாக்கிட்ட காட்டு. அவ புடிச்சத கட்டிட்டு குடுத்ததுக்கு அப்புறம் நீ பள்ளிக்கூடம் கட்டிட்டு போனா போதும்.” என்க

      “எங்க பெரியம்மா ரொம்ப ராசியானவங்க. அவங்க கைபட்டது எப்போதும் எனக்கு லக்கியஸ்ட்.  நான் புது புடவை எடுத்ததும் அவங்ககிட்ட கொடுத்து கட்டச்சொல்லி வாங்கி வச்சிருக்கேன். அதனால அதை நான் கட்டுறதுக்கு முன்னாடி உங்க மருமகளுக்கு தர முடியாது. நான் கட்டிட்டு வாஷ் பண்ணி குடுக்கிறேன். அவங்கள அப்புறமா கட்டி பாக்க சொல்லுங்க.” என்றவள் கீதா கையில் இருந்த புடவையை வாங்க கை நீட்ட விஜயன் வெடுக்கென பிடுங்கி கொடுத்தான்.

    ஜெய் சுஜாவுக்கு சீக்ரெட்டா புடவை எடுத்தது, காயுவிடம் கொடுத்து சுஜா தைக்கும் தையல்காரரிடமே கொடுத்து அவளுக்கு தெரியாமல் தைத்து வாங்கியது, அதை முதன் முதலாக தன்னுடைய பள்ளிக்கு, தன்னுடன் வரும்போது உடுத்தி வர ரெடி செய்தது, அவளுக்கு சஸ்பென்ஸ் கொடுக்க பார்வையில் படும்படி வைத்து விட்டு ஆவலுடன் அவள் உணர்வுகளை பார்க்க காத்திருந்தது என எல்லா விசயமும் விஜயனுக்கு தெரிந்திருந்தது.

   கீதா நடுவில் புகுந்து விளையாட்டு காட்ட விஜயன் திட்ட ஆரம்பிக்கும் முன் சுஜாவே தன்னுடைய புது புடவைகளை கொடுக்க முடியாது என கூறிவிட்டாள்.

   உடனே சுசிலா பதறியபடி “ ஏய் வந்தவுடனே என்ன பேசற?கீதாதான் எங்க வீட்டுக்கு அதிஷ்டலட்சுமி. இங்க அவதான் ராசியானவ. அவள ஏதாவது சொன்ன நான் பாத்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன். உன்ன கழுத்தப்புடிச்சி வெளிய தள்ளிடுவேன் பாத்துக்க” என்க

    “சுஜாவ சீண்டினா நீங்க களி திங்கனும் தெரிஞ்சிக்குங்க. கமிஷனர் ஒரு போன் போட்டா உங்க தலைவிதியே மாறிடும். அதனால உங்க அதிர்ஷ்டலட்சுமிய கையையும், வாயையும் கட்டி சுருட்டி வைக்க சொல்லுங்க.”

     “அடுத்தவங்க ரூம்ல நமக்கு என்ன வேலைன்னு நல்ல குடும்பத்துல பொறந்திருந்தா யோசிக்க தெரியும். இங்க பணம் வந்தா யாரோடவும், என்ன வேணுமுன்னாலும் பேசலாமுன்னு நினைக்கிறவங்க எப்படி இருப்பாங்க…?” என விஜயன் சொல்ல சுசிலா பேசாமடந்தை ஆனார்.

    “சுஜா ரூமை இனிமே பூட்டியே வைங்க. வெளிய வரும்போது மட்டுமில்ல நீங்க ரெண்டு பேரும் உள்ள போனதும் பூட்டிக்குங்க. இங்க திருட்டு பூனைகள்,” என சத்தமாக சொன்னவன்  “ம்ம்ம்ம் பூனைகளா இல்லயில்ல பன்னிங்க நிறைய இருக்குங்க. எங்க தாய் வழி சொந்தங்கள் எல்லாமே இப்படிதான்” என மனதினுள் சொல்லியபடி இடைவெளிவிட்டு

   “நிறைய இருக்குதுங்க. இதுங்க பால், தயிர் தவிர துணிமணி, நகைகள் என எடுத்துட்டு போயிடுங்க. ஜாக்கிரதையா இருங்க. அடுத்தவங்க சொத்துக்கு ஆளா பறக்குமுங்க இந்த பூனைங்க.” என சொல்ல கீதாவும், சுசிலாவும் வாயடைத்து நின்றனர்.