நீ மட்டும் நிஜமாக 20

வள்ளியம்மைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பத்து நிமிடங்கள் கழிந்திருக்க, காலையில் காபிக்காக காத்திருந்த சக்தி, அதற்குமேல் முடியாமல் அன்னையைத் தேடிக் கொண்டு அறையை விட்டு  வெளியே வந்தான். கீழே பேச்சு சத்தம் கேட்கவும், புருவம் சுருக்கியவனாக அவன் கீழே இறங்கி வர, முத்தையன் சொக்கநாதரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“வாங்க மாமா” என்று அழைத்தவன், அவரின் முகத்தைப் பார்த்து, “என்ன மாமா… என்ன விஷயம்” என,

“ஒன்னுமில்ல சக்தி. உங்க கல்யாண விஷயம் தான் பேசிட்டு இருக்கோம்” என்றார் முத்தையன்.

“அத்தை என்ன சொல்றாங்க”

“அவ என்ன சொல்றது. அவகிட்ட கேட்டது, அவ இதுவரைக்கும் சொன்னது எல்லாம் போதும். நான் என் பொண்ணை கூட்டிட்டு வந்துட்டேன். இனி இந்த வீட்டு மருமகளா தான் அவ வெளியே வரணும்” என்று முடித்தார் முத்தையன்.

“என்ன மாமா பேச்சு இது. அவங்க சொல்லாம வேற யார் சொல்ல முடியும்? பெத்தவங்க அவங்க. அவங்களுக்கு இல்லாத அக்கறை யாருக்கும் இருக்க முடியாது. மீனு எங்கே? ஏன் இப்போ அவளை கூட்டிட்டு வந்திங்க? நீங்க இங்கே வந்தது அத்தைக்கு தெரியுமா?” என்று அத்தனை நேரம் அனைவரும் கேட்க தயங்கிய ஒவ்வொரு கேள்வியையும் சக்தி வரிசையாக கேட்டு வைக்க,

“அவ பெத்தவன்னா அப்போ நான் யாரு சக்தி. என் பிள்ளை காய்ச்சல் வந்து படுத்து கிடக்கா. என்னன்னு கூட பார்க்கல அவ. அவளை நம்பி என் மகளை விட சொல்றியா?” என்று முத்தையன் கேட்க,

“அத்தை அப்படி எல்லாம் பண்ற ஆள் இல்ல மாமா. இவளுக்கு காய்ச்சல் வந்ததுக்கு அவங்க என்ன செய்வாங்க? மீனு எங்க? என்ன நடக்குது இங்கே?” என்றவன், “மீனு” என்று அதட்டலாக அழைக்க, வேல்விழியின் கையைப் பிடித்தபடி வெளியே வந்தாள் மீனாட்சி.

“என்ன… என்னாச்சு உனக்கு. எதுக்கு இங்கே வந்த?” என்று அவளையும் சக்தி அதட்ட, ‘எதுக்கு வந்த’ என்ற கேள்வியில் கண்ணீர் வந்துவிட்டது மீனுவுக்கு.

கண்களை சிமிட்டாமல் நொடி நேரம் அவனை வெறித்தவள், “கிளம்புங்க அப்பா. நம்ம வீட்டுக்கு போவோம்” என்று முத்தையனை அழைக்க,

“அப்படியே வச்சேன்ன்னா பாரு” என்று கையை ஓங்கிவிட்டான் சக்தி.

“சக்தி” “சக்தி” “சக்தி” என்று ஒரே நொடியில் பல குரல்கள் சக்தியை ஏலமிட, எதற்கும் அசையவில்லை மீனாட்சி.

சக்தியின் ஓங்கிய கை அவள் கன்னத்தில் இறங்கி இருந்தால், அடித்த காய்ச்சலுக்கு மீண்டும் ஒருமுறை மருத்துவமனைக்கு சென்றிருப்பாள். ஆனால், அதை குறித்து கிஞ்சித்தும் கவலை இல்லாமல் நின்றிருந்தாள் அவள்.

அவள் அழுத்தத்தில் இன்னும் ஆத்திரம் கூடியவனாக, அங்கிருந்த அத்தனைப் பேரையும் முறைத்து வைத்தான் சக்தி.

“சக்தி கொஞ்சம் பொறுமையா இருய்யா” என்று சொக்கநாதர் அவனை நிதானப்படுத்த,

“அதை உங்க செல்லப் பேத்தி கிட்ட சொல்லுங்க. இப்போ என்ன நடந்ததுன்னு, இங்கே வந்து நிற்கிறா இவ. பொறுமையா இருன்னு சொல்லி அனுப்பி முழுசா ரெண்டு நாள் முடியல. அதுக்குள்ள வம்பு வாங்கிட்டு இங்கே வந்து நிற்கிறா.” என்று சக்தி பேசிவிட,

“அப்பா வாங்க” என்று அவனை தாண்டிக் கொண்டு நடக்கவே ஆரம்பித்துவிட்டாள் மீனாட்சி.

சக்தி அவள் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தி, “கன்னம் பழுத்திடும் மீனு. ஒழுங்கா தூர போய் நில்லு” என்றான் அதட்டலாக.

அதில் அவளுக்கும் கோபம் வந்துவிட, “என்ன மிரட்டிட்டே இருக்கீங்க? அடிங்க… கன்னம் பழுக்குமா… இந்த பக்கமா அடிங்க. ஏன்னா, இந்த பக்கம் ஏற்கனவே உங்க அத்தை அடிச்சுட்டாங்க” என்று தனது இடது கன்னத்தை காட்டினாள் மீனு.

சக்திக்கும் இது அதிர்ச்சி தான். வள்ளியம்மை தன் மகளை அடிப்பாரா?

அங்கிருந்த அனைவருக்குமே இது அதிர்ச்சியாக இருக்க, “கண்ணு… அம்மா உன்னை அடிச்சாளா” என்றார் மனோன்மணி.

“ஆமா பாட்டி. நேத்திக்கு முதல் நாள் நான் ஹாஸ்பிடலுக்கு போனப்போ, இவரைப் பார்க்க கடைக்கு போயிருந்தேன். அப்போ அந்த ஸ்வேதா அங்கே இருக்கா. அவ எனக்கு அட்வைஸ் பண்றா. நான் சின்ன பிள்ளையாம்… நீங்க எல்லாம் தெரியாம எனக்கு இவரோட நிச்சயம் பண்ணிட்டீங்களாம். அவ இவரைத்தான் கட்டிக்க போறாளாம். என்கிட்டே சொல்றா” என்றாள் கண்ணீருடன்.

வடிவு நெஞ்சில் கையை வைத்துவிட, “அப்பவும் இவர் பேச்சை கேட்டு அமைதியா தான் இருந்தேன் நான். அங்கே இருந்து வீட்டுக்கு போனா, உங்க பொண்ணு ஏன் கடைக்கு போனன்னு கேட்டு அடிச்சுட்டாங்க. அப்பவும் அமைதியா தான் இருந்தேன்.”

“நேத்து முழுக்க என்கிட்டே ஒருவார்த்தை கூட பேசல பாட்டி. என் மொபைலையும் பிடுங்கிட்டாங்க. நான் என்ன திருட்டுத்தனமா பண்றேன். நான் யாருக்கு பயப்படணும். நீங்க எல்லாம் சேர்ந்து தானே, இவரை எனக்கு நிச்சயம் பண்ணீங்க. அப்போ நான் இவரைப் பார்க்க போனா, என்ன தப்பு. அதுக்காக நான் சாப்பிட்டேனான்னு கூட பார்க்க மாட்டாங்களா”

“இப்பவும் இவர் நினைக்கிற மாதிரி அப்பாவை நான் இங்கே கூட்டிட்டு வரல. அவர் தான் என்னை கூட்டிட்டு வந்தாரு. எனக்கு இங்கே தான் வர்றோம்னு கூட தெரியாது. அப்படியே நான் இங்கே வந்தாலும், என்ன தப்பு. ஏன் வந்தன்னு கேட்கறீங்க? என் பாட்டி வீடு இது… உங்களுக்கு நிச்சயம் பண்ணி இருந்தா, நான் இங்கே வரக்கூடாதா?” என்று கண்ணீரை துடைத்தபடியே கேள்வி கேட்டாள் மீனாட்சி.

அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்கும் நேரம் தான் வள்ளியம்மையும் உள்ளே வந்தார். மகளின் கண்ணீரைக் கண்டு பதறினாலும், வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் தள்ளித்தான் நின்றார்.

“வாங்க அத்தை” என்று வேல்விழி அழைக்க, அண்ணன்மகளைப் பார்த்து சிரித்தபடி வந்து நின்றார்.

“பிள்ளையை அடிச்சியா” என்று மனோன்மணி கேட்க,

“என் பிள்ளை தானே அவ” என்றார் அப்போதும்.

“உனக்கு கிறுக்கு ஏதும் பிடிச்சிருச்சா வள்ளி” என்று மனோன்மணி அதட்ட, பதில் ஏதும் கூறவில்லை வள்ளியம்மை.

“என்ன முடிவு பண்ணி இருக்க வள்ளியம்மை?” என்று சொக்கநாதர் கேட்க,

“எதைப் பத்தி பேசறீங்கப்பா” என்றார்.

“உன் மக கல்யாண விஷயமா என்ன முடிவு எடுத்திருக்க?” என்று கண்டிப்புடன் அவர் கேட்க,

“என் முடிவை இங்கே யாரும் மதிக்கப் போறது இல்லையே. பிறகு என்னை கேட்டு என்ன பிரயோஜனம்? நீங்க நினைக்கிறதை செய்ங்க” என்று விட்டேத்தியாக கூறியவர், “நான் கிளம்பட்டுமா” என்றுவிட,

“என்ன பேசற வள்ளியம்மை நீ. பெத்தவ மாதிரியா பேசற?” என்று மனோன்மணி மீண்டும் பேச,

“பெத்தவளா யோசிச்சு தான் என் பிள்ளைக்கு நல்லது நினைச்சேன். இது எதுவுமே வேண்டாம்னு சொல்லிப் பார்த்தேன். அவ கேட்கிறதா இல்லையே?”

“அப்படி என்னடி உனக்கு நாங்க குறைஞ்சு போய்ட்டோம்” என்று மனோன்மணி கோபம் கொள்ள,

“என் பயம் உனக்கு புரியாதும்மா. நீ ரெண்டு பேரை பெத்து வளர்த்து ஆளாக்கி, பேரன், பேத்தி கல்யாணம் வரைக்கும் பார்த்துட்ட. எனக்கு அப்படி இல்ல. எங்களுக்கு இருக்கிறது இவ ஒருத்தி தான். அவளை வாழ வச்சு பார்க்கணும்னு தான் நான் ஆசைப்படறேன். அன்னைக்கு அவ வெட்டுப்பட்டு ஆஸ்பத்திரில கிடக்குறதை பார்த்தப்போ, என் நெஞ்சே நின்னு போச்சு.”

“அந்த நிமிஷம் எல்லாத்தையும் விட என் மகள் தான் எனக்கு உசத்தியா தெரிஞ்சா. அவளை காப்பாத்தறது தான் எனக்கு முக்கியமா பட்டுச்சு. அதனால தான் உன் பேரன் கிட்ட பேசினேன். அவனும் நான் சொன்னதுக்கு தலையாட்டிட்டு போயிட்டான்.”

“இங்கே என் மகளை கட்டிக் கொடுத்துட்டு நாளும் பொழுதும் எப்போ என்ன ஆகுமோன்னு நான் பயந்துட்டே இருக்க முடியுமா? என்னால அதெல்லாம் பார்க்க முடியாதும்மா.” என்று கூறும்போதே அவர் குரல் உடைய, முத்தையனுக்கும் கண்கள் கலங்கித்தான் இருந்தது.

வள்ளியம்மை தன்னையே தேற்றிக் கொண்டவராக, “ஆனா, நாம நினைக்கிறதெல்லாம் நடக்குதா என்ன? நான் பெத்தவளே என் பேச்சை கேட்கலையே. பிறகு, யாரை சொல்லி என்னை செய்ய முடியும்? நீங்க எல்லாருமா என்ன முடிவெடுக்கிறீங்களோ அதை நடத்துங்க. என்கிட்டே எதுவும் கேட்கவேண்டாம்” என்றுவிட்டார் அவர்.

“வள்ளியம்மை” என்ற சொக்கநாதரை ஒரு பார்வை பார்த்தவர், “எதுவும் பேச வேண்டாம்ப்பா” என்றார் தளர்வாக.

“மீனுவுக்கு எதுவும் தப்பா நடக்காதுடி. சக்தி அவ கூடவே இருந்து அவளைப் பார்த்துப்பான். அதுவும் நாங்க எல்லாரும் அவளோட தானே இருக்கோம் வள்ளி” என்று மனோன்மணி மகளிடம் பேச,

“எனக்கு எல்லாமே புரியுதும்மா. ஆனா, ஏத்துக்க முடியல. என்மேல நம்பிக்கை இல்லாம மகளை இங்கே கூட்டிட்டு வந்து நிற்கிறார் உன் மருமகன். ஒரு வார்த்தை எனக்கு சொல்லணும்னு இவருக்கு தோணவே இல்ல. இவளும் வந்து இத்தனை நேரமாச்சு. ஒரு போன் போடல எனக்கு.” என்று தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தவர், “உன் மருமகன் சொன்னதுபோல, அவ இங்கேயே இருக்கட்டும். இனி இவ என் வீட்டுக்கு வரக்கூடாது.” என்றுவிட்டார் முடிவாக.

‘இதற்குத்தான் சொன்னேன்’ என்பதுபோல் சக்தி மீனாட்சியைப் பார்க்க, அவளும் அன்னையின் பேச்சில் கண்ணீர் வடித்தபடி தான் நின்றிருந்தாள்.

“அத்தை” என்று சக்தி முன்னே வர,

“உன்னையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். மன்னிச்சுக்க சக்தி” என்றார் அவனிடமும்.

“ஏன் அத்தை இப்படி எல்லாம் பேசறீங்க?” என்றவன் அவர் கையைப் பிடித்துக்கொள்ள,

“போடா” என்று கையை விலக்கிக் கொண்டார். சக்தி அவரை மெல்ல அணைத்துக்கொள்ள, அவன் தோளில் சாய்ந்தவர் சத்தமில்லாமல் அழுது கொண்டிருக்க, முத்தையன் அப்போது தான் நெருங்கினார் மனைவியை.

“வள்ளி” என்று மனைவியின் தோளில் அவர் கையை வைக்க, “எதுவும் பேசிடாதீங்க” என்று முடித்துவிட்டார் வள்ளியம்மை.

சக்தி அவரை அழைத்துச் சென்று சோஃபாவில் அமர்த்த, மீனாட்சி இருந்த இடத்தை விட்டு இன்னமும் அசையவில்லை.

“இங்கே வா” என்று சக்தி அவளை அழைக்க, அவன் அருகில் சென்று நின்றாள்.

சக்தி தன் அத்தையின் கையைப்பிடித்து, “உங்கப்பொண்ணு அத்தை இவ. உங்களைப் போலவே இந்த குடும்பத்து மேல அவளுக்கும் பாசம் அதிகமா இருக்கு. அதனாலதான் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கா. அவ கல்யாணம் நிச்சயம் உங்க விருப்பம் போல தான் நடக்கும். நீங்க கண்டதை யோசிச்சு கவலைப்படாதீங்க.”

“என்னால ஒரே ஒரு உறுதி மட்டும் கொடுக்க முடியும். அவளுக்கு எந்த ஆபத்தும் வராம என்னால பார்த்துக்க முடியும். அவளுக்கு வர்ற நல்லது, கெட்டது எதுவா இருந்தாலும், என்னைத் தாண்டி தான் அவளை நெருங்க முடியும். அவ உயிருக்கு ஆபத்துன்னா, அவளுக்கு முன்ன என் உயிர் போயிருக்கும்” என்றான்.

வள்ளியம்மை அவன் பேச்சுக்கு தலையை அசைக்க, “ம்மா” என்று அன்னையின் முன்னே மண்டியிட்டாள் மீனாட்சி.

“இவளை என்கிட்டே பேச வேண்டாம்னு சொல்லு சக்தி” என்று வள்ளியம்மை முகம் திருப்ப,

“பேசாத போ” என்று விளையாட்டாக சக்தி கூற, “ம்மா” என்று உதட்டை பிதுக்கியபடி அன்னையை அணைத்துக் கொண்டாள் மீனாட்சி.

வள்ளியம்மை கண்ணீருடன் தன் மகளை அணைத்துக்கொள்ள, அங்கிருந்த அத்தனைப் பேரின் முகத்திலும் அப்போது தான் நிம்மதி தெரிந்தது.