அத்தியாயம் 22

ஊரைத் தாண்டும் போது வண்டி நிற்க, உள்ளே ஏறி வந்த சிவாவைப் பார்த்தவர்களுக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது.

“வாங்க மாப்பிள்ளை” என்ற சாந்திக்கு அப்படி ஒரு சந்தோசம்.

“சாரி கபிலன், கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என்றான் சிவா.

“அங்க பாருங்க” என்று கபிலன் ஜாடை காட்ட, அபியோ கடுகடுவென்று அமர்ந்திருந்தாள்.

அவள் நகர்ந்து அமர்ந்தால் தான் சிவா உட்கார முடியும். அவளோ நகர்வேனா என்று இருந்தவள் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.

“அபர்ணா மாப்பிள்ளை நிக்கிறார் பாரு” என்று சாந்தி சொல்ல,

“நான் பார்த்துக்கிறேன் அத்தை” என்றான் சிவா.

“மேடம் இப்போ நகருவிங்களா மாட்டிங்களா?” என்றான் சிவா.

“எதுக்கு சிவாண்ணா கெஞ்சிட்டு இருக்கீங்க. இங்க வந்து உட்காருங்க” என்றான் கிஷோர்.

“நான் என் பொண்டாட்டி கூடத்தான் உட்காருவேன் கிஷோர்” என்றான் சிரிக்காமல்.

“சரித்தான்..! அப்போ நின்னுட்டே வாங்க” என்றான். மாதவனோ பார்த்தும் பார்க்காதவன் போல் இவர்களைத் தான் பார்த்திருந்தான்.

அனைவரையும் மேம்போக்காய் ஒரு பார்வை பார்த்தவன், அபர்ணா எதிர்பார்க்காத நேரம் அவள் கையைப் பிடித்து சட்டென்று இழுத்து எழுப்பியவன், அதே வேகத்தில் தான் சீட்டில் அமர்ந்து அவளைத் தன் மடியில் இருத்திக் கொண்டான்.

பெரியவர்கள் கண்டும் காணாமல் இருக்க, கிஷோரோ வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன சக்தி பண்றிங்க? தள்ளி உட்காருங்க. நான் அப்படியே சீட்ல உட்கார்ந்துக்கிறேன்” என்றாள் நெளிந்தபடி.

“நானும் அதைத் தான சொன்னேன். நீ இடம் விட்டியா? அதான் இப்படி” என்றான் சிவா.

அவன் கைகளோ அவள் இடுப்பை அழுந்தப் பற்றியிருக்க,

“பிளீஸ் சக்தி! எல்லாரும் பார்க்குறாங்க. ஒரு மாதிரி இருக்கு” என்றாள் முனுமுனுப்புடன்.

“உனக்கு சீட்ல இடம் வேணும்னா இப்போ நான் பண்ண மாதிரி வேணும்னா நீயும் பண்ணிக்கோ” என்றான் சிவா நமட்டுச் சிரிப்புடன்.

“நாம கோவிலுக்கு போயிட்டு இருக்கோம். இடுப்புல இருந்து கையை எடுங்க” என்றாள்.

“ஏன் கோவிலுக்கு போகும் போது இடுப்புல கை வைக்கக் கூடாதுன்னு இருக்கா என்ன?” என்றான் சிவா.

“மானம் போகுது..! நீங்க என்னடான்னா சாவகசமா மடியில வச்சிருக்கிங்க என்னை.. பிளீஸ்” என்று அவள் கெஞ்சவும் பாவம் பார்த்து நகர்ந்தவன், அவளை அப்படியே ஜன்னலை ஒட்டி அமர வைத்தான். ஆனாலும் கையை எடுக்கவில்லை.

“அப்படியே இந்த கையையும் எடுக்கலாம்” என்றாள்.

“எடுக்க முடியாது” என்றான் சட்டமாய். அவன் கையை எடுக்காவிட்டாலும் யாருக்கும் தெரியாது என்பதால் மேற்கொண்டு அவள் எதுவும் சொல்லவில்லை. ஆனால் சட்டென்று இப்படி செய்வான் என்று எதிர்பார்க்காதவளுக்கு அங்கிருந்தவர்களைப் பார்க்கவே சங்கோஜமாய் இருந்தது. இருந்தாலும் அவன் வந்ததில் அப்படி ஒரு நிம்மதி அவளுக்கு. வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தவளின்  கரங்களை தனக்குள் அடக்கிக் கொண்டவன்,

“நான் வர மாட்டேன்னு நினைச்சியா அபி?” என்றான் மெதுவான குரலில்.

“ஆமா” என்று தலையை ஆட்டியவளின் கண்கள் கலங்கியிருந்தது.

“நான் வரணும்னு எதிர்பார்த்தியா அபி?” என்றான் மீண்டும்.

“ரொம்ப” என்று சொல்லும் போதே கண்ணீர் வந்திருந்தது அவளுக்கு.

தன் கை வளைவில் அவளை நெஞ்சோடு சாய்த்துக் கொண்டவன்,

“என்ன வேலை இருந்தாலும் நீங்க வந்து தான் ஆகணும்னு என் கூட சண்டை போடுவன்னு நினைச்சேன். ஆனா நீ அப்படி எதுவுமே பண்ணலையே. என் பொண்டாட்டி என்னை உரிமையா கூப்பிடனும்னு நினைச்சேன். ஆனா நீ கூப்பிடலை. இருந்தாலும் என்னைத் தேடுவாளேன்னு மனசுக் கேட்காமத் தான் வந்தேன்” என்றான்.

அவனை முறைத்தவள்,”பாவமே ரொம்ப வேலை வேலைன்னு அலையறாரே, நாமளும் நம்ம பங்குக்கு படுத்தக் கூடாதுன்னு நினைச்சேன் பார்த்திங்களா? அதுக்கு நீங்க இதுவும்  பேசுவிங்க? இன்னமும் பேசுவிங்க” என்று அவனை இரண்டு மொத்து மொத்தினாள்.

“என்ன சிவாண்ணா உங்களை அடிக்கவெல்லாம் செய்யறா?” என்றான் கிஷோர்.

“நீ எதுக்குடா அங்க பார்க்குற?” என்றான் கபிலன்.

“இதென்ன பிரம்மாதம் கிஷோர். கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கே என்னை உதைச்சவ தான் இவ” என்றான் சிவா.

“அதையென்ன ஆஸ்கார் வாங்குன ரேஞ்சுக்கு சொல்றிங்க?” என்றான் கிஷோர்.

“ம்ம்..!! கல்யாணம் பண்ணிப் பாரு தெரியும்” என்றான் சிவா.

“ஏன்? நான் நல்லா இருக்குறது உங்களுக்குப் பிடிக்கலையா? ஏற்கனவே மாதவன் மாட்டிகிட்டான். இதுல நானுமா?” என்று கிஷோர் போகிற போக்கில் சொல்லி வைக்க, சிவாவும் மாதவனும் ஒருவரை ஒருவர் நேர் பார்வையாய் பார்த்துக் கொண்டனர்.

“வேலையை அப்படியே விட்டுட்டு வந்திங்களா?” என்ற அபியின் குரலில் திரும்பியவன்,

“ஒரு நாள் தானே பார்த்துக்கலாம் அபி” என்றவன்,

“இன்னும் ஒரு வாரம் தான் அபி. நம்ம கடை ரெடி ஆகிடும்” என்றவனின் குரல் உணர்வுக் குவியலாய் இருந்தது.

“எல்லாம் நல்லபடியா நடக்கும் சக்தி” என்றவளின் வார்த்தைகள் தான் அப்போதைக்கு அவனுக்கு யானை பலம். கோவில் சென்று சிறப்பான முறையில் தரிசனத்தையும் முடித்து வீடு வந்து சேரும் வரை இருவருக்குள்ளும் அப்படி ஒரு நிறைவு.

ஆனால் இவர்களை இப்படி பார்த்திருந்த மாதவனுக்கு ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், எதையோ இழந்த உணர்வு அவனுக்குள் எழுவதை அவனால் உணர முடிந்தது.

அன்று ஒரு நாள் கிடைத்த நிறைவே அடுத்த ஒரு வாரத்திற்கு அவன் ஓடுவதற்கு உந்து சக்தியாய் இருந்தது. கடை வேலை ஒரு வாரம் என்று பத்து நாட்களுக்கு மேல் இழுத்திருந்தது. ஒரு வழியாக அனைத்தையும் முடித்துவிட்டான் சிவா. அதுவே அவனுக்கு பெரிய சாதனை தான். எந்த பதட்டமும் இல்லாமல் கடையைத் திறக்க வேண்டும் என்று நினைத்தான். கடைசி நிமிடத்தில் எதையும் அவசர அவசரமாக செய்யக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தான். இரண்டு நாட்கள் சேர்த்து ஆனாலும் பரவாயில்லை என்று நினைத்தவன் அனைத்தையும் கச்சிதமாக முடித்தான்.

அன்று மதியமே வீட்டிற்கு வந்திருந்தான். வந்து ஆசுவாசமாய் அமர்ந்தவனின் மனம் ஏனோ அபியின் அருகாமைக்கு ஏங்கியது. வேலைகளை சரியாக முடித்த நிறைவை அவளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு. அபர்ணாவோ பள்ளிக்கு சென்றிருந்தாள்.

நன்றாக தூங்கி எழுந்தவன் நேரத்தைப் பார்க்க அது மூன்றைக்  காட்டியது. வானம் வேறு இருட்டுக் கட்டிக் கொண்டு வர, எப்போது வேண்டுமானாலும் மழை வரும் என்பதைப் போல் இருந்தது காலநிலை.

“மழை வரும் போல இருக்கே” என்று நினைத்தவன், வீட்டில் இருந்த ஒன்றிரண்டு வேலைகளையும் முடித்து, அவளுக்குப் பிடித்த பன்னீர் பட்டர் மசாலாவையும் சப்பாத்தியையும் செய்து முடித்திருந்தான். அவன் சமைத்துக் கொண்டிருக்கும் போதே தூறல் போட ஆரம்பித்திருந்த மழை இப்போது வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது.

“நனைஞ்சுட்டே வருவாளோ?” என்று எண்ணியவன் வீட்டிற்குள் நடை பயின்று கொண்டிருக்க, நேரம் கடந்தும் அவள் வரவில்லை.

‘நேரா போய் பார்த்துட்டு வருவோம்’ என்று எண்ணியவன் வெளியே வர, மழையோ கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது.

வேகமாய் அலைபேசியை எடுத்து அவளுக்கு அழைப்பு விடுக்க, அதுவோ லைன் கிடைக்கவில்லை.

குடையுடன் வெளியே வந்து வண்டியை எடுக்க முற்பட, தொப்பலாக நனைந்து போய் வந்தாள் அபி. ஸ்கூட்டியை தட்டுத் தடுமாறி நிறுத்தியவளை வேகமாய் குடைக்குள் இழுத்துக் கொண்டான் சிவா.

“கொஞ்ச நேரம் நின்னு வந்திருக்கலாம்ல அபி” என்றான்.

“பக்கத்துல வந்துட்டேன் சக்தி. மழை திடீர்ன்னு பெருசா வர ஆரம்பிச்சிடுச்சு” என்றாள்.

“சேரலைன்னா என்ன பண்றது?” என்று கடிந்து கொண்டான்.

“நீங்க என்ன இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்டிங்க?” என்றவளைப் பார்த்தவன்,

“நீ முதல்ல போய் ட்ரசை மாத்திட்டு வா அபி” என்றவனின் குரல் வேறுபாட்டை உணர்ந்தவள் அப்போது தான் தன்னை கவனித்தாள். புடவையோ என்னைப் பார் என் அழகைப் பார் என்று இருக்க, தலையில் அடித்துக் கொண்டவள்,

‘மழை மானத்தை வாங்கிடுச்சு அபி’ என்று புலம்பிய படி திரும்ப, சட்டென்று அவளை பின்னிருந்து அணைத்தவனோ “என்கிட்ட தான மானத்தை வாங்குச்சு, அதனால தப்பில்லை” என்றான் காதோரத்தில். குப்பென்று முகம் சிவந்தவளைப் பார்த்து சிரித்தவன்,

“இந்தா டவல்..!” என்று கையில் கொடுத்துவிட்டு விலக,

‘இவங்க இன்னைக்கு ஆளே சரியில்லையே?’ என்று எண்ணியவள் அப்படியே நிற்க,

“நான் வேணும்னா உனக்கு ஹெல்ப் பண்ணவா அபி?” என்றான் சுவற்றில் சாய்ந்து நின்றபடி.

“என்ன ஹெல்ப்?”

“ட்ரஸ் மாத்தாம இப்படி யோசிச்சுட்டு இருக்கியே? நான் வேணும்னா மாத்துறதுக்கு ஹெல்ப் பண்ணவான்னு கேட்டேன்” என்றான் சிரிக்காமல்.

ஒரு முறைப்புடன் அவனைக் கடந்து சென்றவள் திரும்பி “மாட்டேன்னு சொல்லுவேன்னு நினைச்சிங்களா?” என்றாள் வேண்டுமென்றே.

“இந்தா வந்துட்டேன்” என்றவன் வேண்டுமென்றே அவள் பின்னால் வர,

“ஆத்தி” என்று வேகமாய் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள். அவள் சென்ற வேகத்தைப் பார்த்தவனுக்கோ இதழ்கள் புன்னகையில் விரிந்திருந்தது. அறைக்குள் இருந்த அபர்ணாவும் சிரித்துக் கொண்டாள்.

குளித்து முடித்து வந்தவள் அப்போது தான் வீட்டை கவனித்தாள். காலையில் அவள் விட்டுச் சென்ற வேலைகள் அனைத்தையும் முடித்து வைத்திருந்தான்.

“வீட்டுக்கு எப்போ வந்திங்க சக்தி? இதெல்லாம் நான் வந்து பண்ணியிருந்திருப்பேன். நீங்க ரெஸ்ட் எடுத்திருக்க வேண்டியது தான?” என்றாள் அக்கறையுடன்.

“மதியமே வந்துட்டேன் அபி” என்றபடி பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்துவிட்டு  திரும்பியவனின் பார்வை அவளை எக்குத் தப்பாக பார்த்து வைத்தது. அதை உணராதவளோ,

“குளிருது சக்தி” என்று கையைக் கட்டிபடிய படி வந்தவள்,

“நான் காபி போடுறேன், நீங்க போங்க” என்றாள்.

அவளைத் தனக்கருகில் இழுத்து அணைத்தபடி நிறுத்திக் கொண்டவன்,

“குளிருதுன்னா கையைக் கட்டிக்கக் கூடாது. இப்படி புருஷனைக் கட்டிக்கணும். ஒரு ரொமாண்டிக் பீலே இல்லை அபி உனக்கு” என்றான் சிவா.

“சாருக்கு மட்டும் அங்க நிரம்பி வழியுதாக்கும்? எப்போ பார்த்தாலும் கடையைப் பார்த்தேன் கணக்குப் பார்த்தேன்னு இருக்க வேண்டியது” என்று முனுமுனுத்தாள்.

“மானத்தை வாங்காதடி “ என்றவன் அவள் தலையில் முட்ட,

“என்கிட்ட தான போகுது தப்பில்லை” என்றாள் அவனை மாதிரியே.

“சோ எதுவும் தப்பில்லை, அப்படித்தான?” என்றவனின் குரல் மாற்றத்தில் அவனின் நெஞ்சிற்குள்ளேயே தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

“என்னாச்சு?” என்றாள் வெளிவராத குரலில்.

“என்ன என்னாச்சு?”

“இன்னைக்கு சீக்கிரமே வந்துட்டிங்க, ஆளும் சரியில்லை பேச்சும் சரியில்லை” என்றாள்.

“வெளிய சோன்னு மழை பெய்யுது” என்றான் சிவா சிரிப்பை அடக்கியபடி.

“அதுக்கு?”

“அதுக்கு ஒண்ணுமில்லை. ஆனா எனக்குத் தான் மதியத்துல இருந்து மந்திரிச்சு விட்ட மாதிரி இருக்கு. திடீர்ன்னு பொண்டாட்டியை பார்த்தே ஆகணும்னு தோணுச்சு. இதோ இப்போ இருக்குற மாதிரி அவளை இப்படி எனக்குள்ளேயே வச்சுக்கணும் தோணுச்சு. இப்போ வருவா அப்போ வருவான்னு நானும் காத்திருந்தா..இப்போ தான் தான் வந்தா. வந்தவ சும்மா வந்தாளா மழையில நனைஞ்சு சும்மா கும்முன்னு முன்னாடி வந்து நின்னா, நான் எப்படி நல்லவனாவே இருக்குறது?” என்றவனின் விரல்கள் அவள் முகத்தில் கோலமிட,

“சக்தி” என்றவளுக்கு இதயம் வேகமாய் அடித்துக் கொண்டது.

“சொல்லு அபி”

“பால் பொங்குது” என்றவுடன் ஞாபகம் வந்தவனாய் அடுப்பை நிறுத்தியவன் அவளை இழுத்துக் கொண்டு செல்ல,

“ஏன் அடுப்பை ஆப் பண்ணிங்க? காபி போடணும்” என்றாள் வேகமாய்.

“எனக்கு காபி எல்லாம் வேண்டாம், நீ தான் வேணும்” என்றான் அவளை இறுக அணைத்துக் கொண்டவன் மேற்கொண்டு அவளைப் பேச விடவே இல்லை.

“மணி ஆறுதான் ஆகுது. விளக்கு போடுற டைம் சக்தி” என்றாள் திமிறியவளாய்.

“இன்னைக்கு இது விளக்கை அணைக்கிற டைம்” என்றவனின் பேச்சில் தலையில் அடித்துக் கொண்டவளுக்கு வெட்கம் வந்து தொலைத்தது. அவனோ அவள் வெட்கங்களுக்கு முத்தங்களால் வர்ணம் பூசிக் கொண்டிருந்தான்.

வெளியே மழையோ மண்ணை முத்தமிட்டு கரைத்துக் கொண்டிருக்க, சிவாவோ தன்னவளை முத்தமிட்டு கரைத்துக் கொண்டிருந்தான்.

பயங்கள் உடைந்து பாரங்கள் கரையும் நொடியில் மூச்சுக் காற்று மட்டுமே அவர்களின் பாலமாகிப் போனது.

அவன் ஸ்பரிசமும் வேட்கையும், இடைவிடாது ஒலித்துக் கொண்டிருந்த அவனின் அபி மந்திரமும் அவளை வேறு உலகிற்கு அழைத்து சென்றிருந்தது. அவனோ அவளுள் தொலைந்திருந்தான். பிடிக்கப்பட்ட கரங்களும், பிணையப்பட்ட விரல்களும் நழுவாது என்ற நம்பிக்கையுடன் இணைந்திருந்தது. அவர்களை இழந்து அவர்களின் அன்பை வலிமையாக்கிக் கொண்டனர். உடைந்து போயிருந்தவளின் மனமோ அவனின் உறவால் உணர்வுடன் உயிரூட்டப்பட்டுக் கொண்டிருந்தது.

அவனுக்காக அவள் இருக்கிறாள், அவளுக்காக அவன் இருக்கிறான் என்ற உணர்வில், நான் முழுவதும் உனக்கானவன், நீ முழுவதும் எனக்கானவள் என்ற வாழ்வின் தாத்பரியத்தை இருவரும் முழுமையாக உணர்ந்திருந்தனர். இறுக்கமான சூழ்நிலைகளைக் கடந்து இரண்டு நெஞ்சங்களும் ஒரே உணர்வில் அமைதியாய் இணைந்திருந்தது.காலம் உறைய, காற்றும் கரைய அவர்களின் மௌனங்களுக்கு இதயத் துடிப்பே மொழியாகிப் போயிருந்தது.வெளியே வான மழை.. இவர்களுக்குள்ளோ காதல் மழை.

“தேங்க்ஸ் அபி” என்று அவளை முத்தமிட்டு விலகிய போது தான் அவளின் கண்ணீரை உணர்ந்தான்.

“அபி” என்றவனின் குரலில் இருந்த பதட்டத்தை உணர்ந்தவள், முகத்தை அவனுக்குள்ளேயே மறைத்துக் கொண்டாள்.

“என்னாச்சு அபி?”

“தெரியலை சக்தி..! அழணும்னு தோணுது” என்றாள்.

அவனோ அவளின் முகத்தி நிமிர்த்தி தவிப்புடன் பார்க்க, அவனின் தவிப்பை உணர்ந்தவளோ,

“சந்தோஷத்துல தான்” என்று சொல்லவும் தான் அவன் நிம்மதி மூச்சே விட்டான்.

“கொஞ்ச நேரத்துல என்னை படுத்திட்ட அபி” என்றான் ஆசுவாசத்துடன்.

“சாரி சக்தி” என்றவளுக்குள் அப்படி ஒரு நிறைவு.

“ஒரு கணக்கு டீச்சரை கணக்கு பண்றது எவ்வளவு கஷ்ட்டம்?” என்றான் சிரிப்பை அடக்கி.

“அதான் கணக்கு பண்ற வேலையை கரெக்ட்டா முடிச்சுட்டிங்கல்ல. இதுல அலுப்பு வேற உங்களுக்கு?” என்று அவனை மொத்தினாள்.

“ஹேய் அப்பறம் அலுப்பா இருக்காதா அபி. எவ்வளவு கஷ்ட்டப்பட்டு வேலை பார்த்திருக்கேன்” என்றவனின் வாயை மூடியவள்,

“வரவர நீங்க பேசுறதை காது குடுத்து கேட்க முடியலை சக்தி” என்றாள் கண்களால் மிரட்டியபடி.

“காது குடுத்து கேட்க முடியலைன்னா வாயைக் குடுத்து கேளு அபி” என்றவன் இப்போது நன்றாக சிரித்து வைத்தான். அவளுக்கோ வெட்கம் வந்து தொலைத்தது.

“நீ வெட்கப் படுறதை பார்க்கும் போது ஆசை இன்னும் கூடுது அபி” என்றவனின் பார்வை மாற,

“கூடும் கூடும்..! பிச்சுடுவேன் உங்களை” என்று விலகப் போனவளை இழுத்துக் கொண்டவன்,

“பிளீஸ் அபி! கொஞ்ச நேரம் இப்படியே இரேன்” என்றவனைப் பார்த்தவள்,

“என்னாச்சு சக்தி உங்களுக்கு? இன்னைக்கு எல்லாமே வித்தியாசமா இருக்கே?” என்றாள்.

“எல்லா வொர்க்கும் கம்ப்ளீட் ஆகிடுச்சு அபி. இனி கடையை திறக்குற வேலை மட்டும் தான்” என்றவனின் முகத்தில் தான் எத்தனை ஒரு நிறைவும் நம்பிக்கையும்.

“நிஜமாவா சக்தி. காலையில கிளம்பிப் போகும் போது கூட நீங்க ஒன்னும் சொல்லவே இல்லை. நான் இன்னும் ரெண்டு மூணு நாள் ஆகும்னு நினைச்சேன்” என்றாள்.

“காலையில சொல்லியிருந்தா இதெல்லாம் மிஸ் பண்ணியிருப்பேனே?” என்றான் நமட்டுச் சிரிப்புடன்.

அவனை முறைத்தவள் “உங்களை இப்படி பார்க்கவே சந்தோஷமா இருக்கு சக்தி” என்றாள்.

“காரணம் நீதான அபி” என்றான்.

“நானா?”

“ஆமா, விலாசம் மாறி வந்தாலும் கடவுள் எனக்கே எனக்குன்னு அனுப்பி வச்ச ஒரு பொக்கிஷம் அபி நீ” என்றவனை கலங்கிய கண்களுடன் பார்த்தவள்,

“இல்ல சக்தி..! மாறி எல்லாம் வரலை. விலாசம் மாறி போக இருந்த என்னை கடவுள் தான் சரியான விலாசத்துக்கு அனுப்பி வச்சிருக்கார்” என்றவளை அணைத்துக் கொண்டவனின் அணைப்பில் தான் அத்தனை மென்மை.