அறைக்கு வந்தவள் பதட்டத்துடன் தண்ணீர் குடித்தாள். “ஒருவேளை தெரிஞ்சிருக்குமா? அவனைத்தான் நானு ‘மலைக்குரங்கு’ அப்டின்னு சொன்னத கண்டுபிடிச்சிடுவானா?” என யோசித்தாள். “இல்ல இல்ல, இருக்காது. அய்யோ, அப்படி இருந்தால் என்ன பண்றது? ஹான், இனி அவன் இருக்கும் திசை பக்கமே நம்ம போகக்கூடாது. இது ஒண்ணுதான் வழி,” என்று நினைத்தவள் போய் படுக்கையில் விழுந்தாள்.
“மா!” என மெல்லிய குரலில் அழைத்தான் குரு.
“என்னடா தங்கம்? நீ இன்னும் தூங்கலயா?” என்று மணியம்மா கேட்க, எழுந்து அவரின் அருகில் வந்தவன், “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், என்னோட தேவதைக்கு…” என்று நெற்றியில் முத்தமிட்டவன், “உள்ளே வா, ஸ்ரீராம்,” என்றான்.
“ஹேப்பி பர்த்டே மேடம்,” என ஸ்ரீராம் சொல்ல, குரு அவனை முறைத்து பார்த்தான்.
“ச.. சாரி பாஸ்,” என ஸ்ரீராம் வேகமாக வெளியேறிவிட்டான்.
“என்னடா தங்கம்? இத்தனை கோபம்? அவன் எனக்குதானே விஷ் பண்ணான், அதுக்கு கோபமா?” என மணியம்மை கேட்க, “நீங்க என்னோட அம்மா! என்கிட்ட மட்டும் தான் விஷ் வாங்கணும். நான் வாழ்த்துச் சொல்லி அஞ்சு நிமிஷம் கூட ஆகல! அதெப்படி இவன் வந்து சொல்லுவான்? ராஸ்கல்,” என குரு கோபம் கொண்டான்.
“இவனை என்னைக்கும் திருத்த முடியாது,” என மணியம்மை நினைத்துக்கொண்டார்.
“ம்ம், கேக் கட் பண்ணுங்க!!”
“ஆமா, கட் பண்ணா மட்டும் சாப்பிட விடுவியா என்ன?” என்று சலித்துக்கொண்டார் மணியம்மை.
“என்னடா சொல்ற? என் செல்லம், தங்கம்,” என்று புகழாரம் சூட்டினார்.
“ஆமா, இது வந்து சுகர்-ஃபிரீல பண்ணது. எவ்வளவு வேணாலும் சாப்பிடுங்க. பட், இப்பவே எல்லாத்தையும் சாப்பிடாதீங்க. கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடுங்க,” என்று புன்னகையுடன் கூறினான்.
“அப்படியா?” என கூறியவர்… “அப்போ உடனே நீ செம்…” என சொல்ல வந்தவர் தயங்கினார்.
“என்னாச்சு?”
“அதுதான் நான் சாப்பிட ஓகே சொல்லிட்டேனே! இப்போ என்ன பிரச்சனை?” என்று குரு கேட்க, “அது… அது வந்து…”
“ப்ச், அதென்ன ‘வந்து, போய்’? சீக்கிரம்!!”
“டேய், நான் உன் அம்மாதாண்டி!”
“அம்மாவா இருக்கப் போய் தான் பொறுமையா பேசிட்டு இருக்கேன். சொல்லுங்க, சீக்கிரம்.”
குரு அமைதியாக இருக்க, “கண்டிப்பா வேணாம்னுதான் சொல்லப் போறான். இப்பவே அந்த ஸ்ரீராம அந்தத் திட்டு திட்டினான். இப்போ என்ன பண்ணப் போறானோ?” என நினைத்தவர், “சரி, இவன் ஒத்துக்க மாட்டான்,” என அவர் பேச வர, “கூப்பிடுங்க,” என்றான் குரு.
“என்ன? என் காதுகளில் என்ன விழுந்தது? இந்த உலகத்தில் தான் நான் இருக்கிறேனா? இத குரு தான் சொல்றானா?” என்னும் தொனியில் மணியம்மை பார்த்துக் கொண்டிருக்க, “நேரமாகுது.”
“நான் என்ன பண்ணணும்? நீ போய் கூட்டிட்டு வாடா! நான் தான் இப்போ பர்த்டே கேர்ள்.”
“ஆமா, இப்பதான் பொறந்திருக்கீங்க,” என்றவன் வெளியே சென்றான்.
மணியம்மை கொஞ்சம் கிரீம் எடுத்து நக்கி பார்த்தார். “அய்யோ, இனிப்பு! அப்பப்பா! என்னமா கரையுது!!” என அவர் இன்னும் கொஞ்சம் கீழிருந்து எடுத்து நக்கினார்.
கதவு தட்டப்பட்டது.
“போச்சு, வந்துட்டான் பூச்சாண்டி!!” என சிணுங்கினாள்.
இந்த முறை வேகமாக தட்டப்பட்டது.
“அவனேதான்! அவனேதான்! வந்துட்டானே, வந்துட்டானே!” என நினைத்தவள், “சமாளி செம்பருத்தி, உன்னால முடியும். முடியலண்ணா, காலில் விழுந்திடு! அவன் கிட்ட மனுஷன் பேசவே முடியாது,” என நினைத்தவள் திடப்படுத்தி கொண்டு திறந்தாள்.
“இப்போவே நீ வர!!”
“எதுக்கு?”
“வா! உனக்கு இருக்கு,” என்றான் குரு அவள் முன்னால் ஓரடி எடுத்து வைத்தபடி.
“பிளீஸ், தெரியாம சொல்லிட்டேன். கெஞ்சிக் கெஞ்சிக் கேட்கிறேன். கனவுல மலைக்குரங்கு கிட்ட மாட்டின போல வந்திடுச்சு, அதான் அப்படி சொன்னேன்,” என அழும் நிலைக்கு சென்று விட்டிருந்தாள் செம்பருத்தி.
குருசேத்ரன் உதடுகள் கஷ்டப்பட்டுச் சிரிப்பை அடக்கி இருக்க, “நீ அப்புறம் உன் மலைக்குரங்கு கூட டூயட் பாடிக்கோ. இப்போ வா,” என்றான்.
“எதுக்கு?” என அவள் பாவமாக கேட்க, “ப்ச், வரியா! இல்ல?” என கை சட்டையை மடக்கிவிட்டான்.
“இல்ல, வர்றேன்,” என அவன் பின்னால் சென்றாள்.
“செம்பருத்தி,” என புன்னகையுடன் நின்றார் மணியம்மை. கேக்கையும் அவரையும் மாறி மாறிப் பார்த்தவளுக்கு இப்போது தான் புரிந்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
“கிரீம் எடுத்து சாப்பிட்டிருக்கீங்க!” என குரு கூற, “இல்லையே டா!” என்றார் மணியம்மை.
அவன் உறுத்து பார்க்க, “அது கைல ஒட்டிடுச்சு, அதான்,” என்றார்.
“ம்ம், கட் பண்ணுங்க,” என குரு சொல்ல, “ஹேப்பி பர்த்டே மேடம்,” என கையைத் தட்டினாள் செம்பருத்தி.
“தேங்க்ஸ் டா மா!” என கேக் வெட்டினார் மணியம்மை.
“சார், கை தட்டுங்களேன்,” என செம்பருத்தி கூற, ஒரு முறைப்பை பதிலாகக் கொடுத்தான். “போடா மடகாஸ்கர் மலைக்குரங்கு,” என சொல்லிக் கொண்டவள் உற்சாகமாகக் கைதட்டி கொண்டாடினாள். முதல் பீசை தனது மகனுக்கு ஊட்டச் சென்றார் மணி.
“போதும் மா,” என கொஞ்சமாக வாயில் போட்டுக்கொண்டவன், பாதியை தன் அன்னைக்கு ஊட்டிவிட்டான்.
“சார், ரெண்டு பேரும் என்னை பாருங்க,” என செம்பருத்தி போட்டோ எடுத்தாள்.
“சார், கொஞ்சம் சிரிங்களேன்.”
“முடியாது.”
“அட்லீஸ்ட், சீஸ் சொல்லுங்க,” என செம்பருத்தி கூற, முறைத்துவிட்டு நகர்ந்தான் குரு. அடுத்து செம்பருத்தி ஊட்டினாள். “போனை கொடு,” எனப் பிடுங்கி கிளிக் செய்தான். அனைத்தையும் மெயில் மூலமாக அவனது மெயிலுக்கு அனுப்பிக்கொண்டான்.
“பர்த்டே ஃபங்ஷன் முடிஞ்சது. நர்ஸ் கிளம்பலாம்,” என குருசேத்ரன் கூற, “ஓகே சார்! மேடம், தூங்குங்க,” என்று விட்டு அவள் அறைக்கு சென்றுவிட்டாள்.
“மா, முக்கால் மணி நேரம் முழிச்சிருந்திருக்கீங்க. இதுக்கு நீங்க காலையில் ஏழு மணிக்கு எழுந்தால் போதும். பை மா, குட் நைட்,” என அவன் நகர, “குரு, நில்லு.”
“என்ன மா?”
“இங்கே பக்கத்தில் வா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும், முக்கியமா…”
“சொல்லுங்க!!” என அருகில் சென்று அமர்ந்தான்.
“அம்மாவுக்கு ஒரு ஆசை இருக்கு. அதை ஃபுல்ஃபில் பண்ணுவியா?” என மணியம்மை தனது மகனின் முகத்தைப் பார்த்தார்.
“டேய்,” என கோபமாகப் பார்த்தவர், “எனக்கு பேரக்குழந்தைகள் வேணும். உன்னோட குழந்தைகள் கூட நேரம் செலவிடணும். நீ கல்யாணம் பண்ணிக்கணும். அதைத்தான் அப்படி சொன்னேன். இன்னைக்கு நான் எது கேட்டாலும் நீ செய்யணும்.”
“அதான் அன்னிக்கே ஓகே சொல்லிட்டேனே!” என்றான் குரு.
“நான் சொல்ற பொண்ணை தான் நீ கட்டிக்கணும்,” என மணியம்மை அவன் முகத்தைப் பார்த்தார்.
“சுப்ரியா என்னோட பிரெண்ட், அவளைப் போய் கட்டிக்க சொல்லாதீங்க. அது ஒரு சைக்கோ,” என்றான் குருசேத்ரன்.
“இல்ல, சுப்ரியா இல்ல. நான் இன்னும் மூணு மாசம் கழிச்சு சொல்றேன்,” என்றார் மணியம்மை.
“ஓகே,” என்று விட்டுச் சென்றான்.
அடுத்தநாள் நேரமே எழுந்து கிச்சனில் இருந்தார் மணியம்மை.
“மேடம், நீங்க எதுக்கு சமைக்கிறீங்க?” என சாந்தா பின்னால் சுத்த, “இன்னைக்கு என்னோட பிறந்தநாள். அதனால் என் பையனுக்காக நான் தான் சமைப்பேன், மூணு வேளையும்,” என்றார் மணியம்மை. பம்பரம் போல சுழன்று செய்தார்.
“நான் உள்ளே வரும்போது தான் தம்பி வெளியில் போச்சு. யாருக்காக சமைக்கிறீங்க மேடம்?” என சாந்தா கேட்க, “நீ சாப்பிடு. செம்பருத்தி இருக்கா, அவள் சாப்பிட்டும்,” என அனைத்தையும் எடுத்து வைத்தார்.
குரு பிரகாஷ் அதிகாலை ஆறு மணிக்கே புறப்பட்டிருந்தான். முக்கியமான ப்ராஜெக்ட்டுக்காக சைட் விசிட் சென்றிருந்தான்.
செம்பருத்தி உற்சாகத்துடன் இருந்தாள், இன்று மணியம்மையின் பிறந்தநாள் அதனால் இந்த உற்சாகம்.
மதிய உணவும் அதே போல மணியம்மை செய்து கேரியரில் அடுக்கினார்.
“மணியம்மை சமையல் புலியாக மாறிய தருணம்,” என செம்பருத்தி கிண்டல் செய்ய, “செம்பா, வா வா!” என அழைத்தார் மணி.
“வந்து டேஸ்ட் பாரு. இதை ‘எம்.ஜி. கன்ஸ்ட்ரக்சன்’னில் கொண்டுபோய் குருசேத்ரனுக்கு கொடுத்திட்டு வந்திடு,” என்றார்.
“என்ன? நானா?”
“ம்ம், நீதான். ஏன், போக மாட்டியா?”
“அது இல்ல மேடம். நான் எப்படி?” என செம்பருத்தி தயங்கினாள்.
“ஸ்ரீராம் அவன் கூட இருப்பான். இல்லைன்னா நான் அவனை வரச் சொல்வேன். கண்டிப்பா நான் அவனை கூப்பிட்டா எல்லாத்தையும் சொல்லிடுவான், அதாவது நான் சர்ப்ரைஸா சமைச்சது. குருவுக்குப் பிடிச்ச எல்லாத்தையுமே செஞ்சிருக்கேன்,” என்றார் மணியம்மை. அவரது கண்களில் தன் மகன் மேல் இருக்கும் பாசம் தெரிந்தது.
“சரிங்க மேடம்,” என்று பெருமூச்சுடன் செம்பருத்தி புறப்பட்டாள்.
மணியம்மை டிபன் கேரியரை எடுத்துக்கொண்டு வெளியே வர, அங்கே திங்க் நின்றிருந்தான்.
செம்பருத்தியைப் பார்த்ததும் தொத்துக்கால் போட்டுக்கொண்டு அருகில் வர, “அடி வாங்குவடா, தள்ளி நில்லு! பாப்பாவ பயமுறுத்துறியா? வெளுத்து போடுவன் ராஸ்கல்,” என மணியம்மைத் திட்ட, “வாவ், பவ்,” என்று செல்லம் கொஞ்சி குறைத்தது திங்க்.
செம்பருத்தி பயத்துடன் அவரின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு வெளியே வந்தாள்.
கார் தயாராக இருந்தது. “பத்திரமா போயிட்டு எல்லாத்தையும் குடுத்துட்டு வந்துரு,” என மணியம்மை அனுப்பி வைக்க, “சரிங்க மேடம்,” எனப் புறப்பட்டாள் எம்.ஜி. கன்ஸ்ட்ரக்சனை நோக்கி.
மிகப்பெரிய டவர்ஷிப்பில் எட்டாவது மாடியில் தான் அவனது ஆபிஸ். “யாரைப் பார்க்க வந்திருக்கீங்க?” என்று லாபியிலிருந்து வரவேற்புப் பெண் கேட்க, “எட்டாவது மாடிக்கு போகணும், எம்.ஜி. கன்ஸ்ட்ரக்சன்,” என்றாள் செம்பருத்தி.
“சொன்ன வேலையை முடிச்சியா?” என்று ஸ்ரீராமின் முன் வந்தான் குருசேத்ரன்.
“பாஸ், ஓரளவு ஆல்ரெடி எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டேன். இன்னும் ஃபைனல் டச் இருக்கு,” என்று ஸ்ரீராம் பதில் கொடுக்க, “அப்போ ஃபைனல் டச் குடுத்துட்டு, அதுக்கப்புறம் நீ லன்ச் டச் பண்ணு,” என்று விட்டு உள்ளே சென்றான் குருசேத்ரன்.
இங்கே வரவேற்பில்…
“அப்பாயின்ட்மென்ட் இருக்கா?” எனக் கேட்க, “வீட்ல இருந்து வந்திருக்காங்கன்னு சொல்லுங்க,” என்று கூறினாள் செம்பருத்தி.
வரவேற்பு பெண் அவளை மேலிருந்து கீழாகப் பார்த்துவிட்டு உடனே போன் செய்தாள் ஸ்ரீராமுக்கு.
“மேல வரச் சொல்லுங்க,” என்று விட்டு அவன் விவரத்தை குருசேத்திரனிடம் கூறினான்.
“ஸ்டாஃப்ஸ் எல்லாரையும் லஞ்ச் பிரேக் போகச் சொல்லு, அண்ட் நீயும் போ,” என்று விட்டு உடையைச் சரி செய்தான் குருசேத்ரன்.