நீ மட்டும் நிஜமாக 19

அன்று காலையிலேயே சக்தியைப் பார்க்க V2 வந்திருந்தான் வெற்றி. கடையின் மேலாளர் அவனைக் கவனித்து வாசலுக்கு வர, அவரிடம் நலம் விசாரித்து முடித்தவன், “உங்க ஓனர் இருக்காரா?” என்றான்.

“சக்தி சார் உள்ளே தான் இருக்கார் சார். இன்னைக்கு என்னனு தெரியல, காலையில சீக்கிரமே வந்துட்டார்”

“அது தெரிஞ்சு தான் நானும் வந்திருக்கேன்” என்று அவரை குழப்பியவன், “உங்க ஓனரை பார்த்திட்டு வரேன்” என்று உள்ளே நுழைந்தான்.

சக்தி தலையில் ஒரு கையை வைத்தபடியே கணினியின் திரையைப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் கவனம் அதில் இல்லை என்பது ஒரு நொடியில் புரிந்துவிட்டது வெற்றிக்கு.

அவனிடம் அனுமதி எதுவும் கேட்காமல், அவனுக்கு எதிர் இருக்கையில் அவன் அமர, அப்போதுதான் அவனைக் கவனித்தான் சக்தி.

“நீ எதுக்காக வந்த?” என்று சட்டென அவன் கேட்டுவிட,

“இந்த கம்பெனில முதலாளி வேலைக்கு ஆள் எடுக்கிறதா சொன்னாங்க. அதுதான் இண்டெர்வியூ அட்டென்ட் பண்ணி பாக்கலாம்னு வந்தேன்.”

“அடி வாங்கி சாகாத வெற்றி. ஒழுங்கா ஓடிடு” என்று சக்தி அதட்ட,

“மீனாட்சிக்கு என்ன முடிவு. அதை சொல்லு”

“என்னடா அவ முடிவு? என்ன சொல்லணும் உன்கிட்ட? நாயே… உன்னாலதான் எல்லா ஏழரையும்” என்று சக்தி இருக்கையில் இருந்து எழுந்துகொள்ள,

“என்னாலதான் சுவேதாகிட்ட இருந்து தப்பிச்சு இருக்க. நியாயமா நீ எனக்கு நன்றி சொல்லணும்”

“என்னை கொலைகாரனா ஆக்காத வெற்றி”

“என்னை கொன்னுட்டு உன் தங்கச்சிக்கு என்ன பதில் சொல்வ?”

“என்னதான்டா வேணும் உனக்கு”

“மீனுவை ஏன் வேண்டாம்னு சொல்ற”

“நான் எங்கடா அப்படி சொன்னேன்? உன் அத்தை அவங்க பொண்ணை எனக்கு கட்டி கொடுக்காதாம். ஏன்னா, நான் கொலைகாரன் இல்ல, அந்தம்மா பொண்ணை சாக விட்டுடுவேனாம். போதுமா… உனக்கு வேண்டியதை சொல்லிட்டேனா… கிளம்பு” என்றான் ஆத்திரத்துடன்.

“இப்படி சொல்லிட்டா… எல்லாம் முடிஞ்சிடுச்சா. ஊரைக் கூட்டி சொக்கநாதர் நிச்சயம் பண்ண கல்யாணம். ஹாஸ்பிடல்ல வச்சு நீங்க ரெண்டு பேர் பேசிக்கிட்டா எல்லாம் முடிஞ்சு போச்சா. என்ன நினைச்சுட்டு இருக்கிங்க? மீனுவை பத்தி யோசிக்கவே இல்லையாடா நீங்க?”

“ஏன்டா எல்லாரும் சேர்ந்து என்னைய சாகடிக்கிறீங்க? இதே அவ வேற ஒருத்தன் பொண்ணுன்னா, தூக்கிட்டு வந்து தாலி கட்டி இருப்பேன். எவன் வந்தாலும், எதிர்த்து நிற்க தைரியம் இருக்கு. ஆனா, என் விஷயத்துல எதிர்ல நிற்கிறதும் என்னோட உறவு. வேண்டாம்னு சொல்லவே முடியாத உறவு. என்ன செய்ய சொல்ற என்னை?” என்று தாங்க முடியாத ஆத்திரத்தில் சக்தி வெடிக்க,

“நீ தூக்க வேண்டாம். நான் தூக்கிட்டு வரேன். நீ தாலியை மட்டும் கட்டு”

“செருப்பு பிஞ்சிடும் வெற்றி. எழுந்து போயிடு. ஏற்கனவே நீ பார்த்து வச்ச வேலையால தான் இவ்ளோ கலவரமும். இன்னும் நீ என்னையும் அதையே செய்ய சொல்லுவியா?”

“அப்போ கடைசி வரைக்கும் உன் அத்தைக்காக கல்யாணம் பண்ணாம, சாமியாரா போகப் போறியா?”

“நான் போனாலும், நீங்க எல்லாம் சேர்ந்து என் தலையில கட்ட பார்க்கிறீங்களே ஒரு இம்சை. அது என்னை போக விடாது. கொஞ்ச நாள் ஆறப் போடுவோம். தானா சரியாகும்.” என்றவனை, ‘இது வேலையாகாது’ என்பதுபோல் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான் வெற்றி.

கடையை விட்டு வெளியே வந்தவன் மீனுவை அழைக்க, “சொல்லு வெற்றி” என்றாள் மீனு.

“ஏண்டி எரும. இத்தனை நாள் ஏன் போனை எடுக்கல”

“உன் அத்தை போனை பிடுங்கி வச்சுட்டாங்க. நேத்துதான் அப்பா வாங்கி கொடுத்தார்”

“ஓஹ்… என்னவாம் உங்க அம்மாக்கு. என்ன சொல்றாங்க?”

“ஊருக்கே தெரியுது. உனக்கு தெரியாதா?”

“உனக்கு சிரிப்பா இருக்கா?”

“என் பொழப்பு சிரிப்பா சிரிக்குது வெற்றி.” என்றவள் பேசும்போதே குரல் உடைந்துவிட்டது.

“மீனும்மா” என்று வெற்றி அழைக்க,

“ம்ம்ம். இருக்கேன்.” என்றாள் மூக்கை உறிஞ்சியபடி.

“என்ன பண்ணலாம்னு இருக்க? நீ எடுக்கப் போறது தான் முடிவு. கல்யாணத்துக்கு எண்ணி இன்னும் பத்து நாள் தான் இருக்கு. இன்னும் பத்திரிக்கை கூட அடிக்கல. இப்படியே போனா, எதுவும் நடக்காது மீனு”

“என்னை என்ன செய்ய சொல்ற வெற்றி. நான் சக்தி மாமாவை தவிர, யாரையும் கல்யாணம் பண்ணமாட்டேன்னு தெளிவா சொல்லிட்டேன். மாமாகிட்ட கூட பேசிப் பார்த்துட்டேன். அவரும் நீ பொறுமையா இருன்னு தான் சொல்றாரு. என்னால இவங்களை மீறி என்ன செய்ய முடியும்?”

“அவன் கல்யாணத்தை அவன் விருப்பத்துக்கு இழுக்க நினைக்கிறான் மீனு. அவனை நம்பினா, குறிச்ச தேதியில் கல்யாணம் நடக்க எல்லாம் வாய்ப்பில்லை.”

“ஓஹ்”

“உன் அம்மாவும் பிடிச்ச பிடியில நிற்கிற ஆளுதான். இந்த விஷயத்துல அடுத்து என்னன்னு நீதான் முடிவு பண்ணனும்” என்று தெளிவாக வெற்றி பேச, மீனாட்சி முழுதாக குழம்பி நின்றாள்.

“நிஜமா எனக்கு ஒன்னும் புரியல வெற்றி”

“பொறுமையா யோசி மீனு. இந்த கல்யாணம் நடந்தே ஆகணும். எந்த காரணத்தை கொண்டும், நிற்கவோ, தள்ளிப் போகவோ கூடாது. ஏற்கனவே என்னால ஒருமுறை அவன் அசிங்கப்பட்டுட்டான். இப்போ மறுமுறையும் அதே நடந்தா, அவன் நிச்சயமா தாங்க மாட்டான். நான் உன்கிட்ட இப்போ பேசறது முழுக்க முழுக்க சுயநலம் தான். என் அண்ணன் வாழ்க்கையை யோசிச்சு தான் பேசறேன். அவனை விட்டுடாத ப்ளீஸ்”

“ஹேய்… நீ என்ன லூசாடா. நான் எப்போ மாமாவை வேண்டாம்னு சொன்னேன்.” என்று மீனு வெற்றியைத் திட்ட,

“அப்போ உன் கல்யாணத்துக்கு என்ன வழி. அதை யோசி. இந்த கல்யாணம் நடக்குறதும், நடக்காம போகிறதும் உன் கையில தான் இருக்கு” என்று மொத்தமாக அவளை ஆட்டத்திற்குள் இழுத்துவிட்டான் வெற்றி.

அவன் அலைபேசியைத் துண்டித்தது கூட உணராமல், அலைபேசியை காதில் வைத்தபடியே அமர்ந்திருந்தாள் மீனு.

வெகுநேரம் கழித்து இயல்புக்கு திரும்பியவளுக்கு, வெற்றி பேசியதெல்லாம் பாடமாக ஓடிக் கொண்டிருந்தது. அவள் மனது தன் திருமணத்திற்கான வழிகளை ஒவ்வொன்றாக யோசிக்க தொடங்கியது.

அன்று நாள் முழுவதும் இதே யோசனையில் இருந்தவள், அறையை விட்டு வெளியே வரவில்லை. மதியமும், மாலையும், இரவும் என்று நேரம் தவறாமல், உணவு, திண்பண்டங்கள் என்று அத்தனையும் அறைக்கு வந்திருக்க, ஒன்றைக்கூட தொடாமல் அமர்ந்திருந்தாள்.

இரவு உணவு முடித்து மகளைக் காண அறைக்கு வந்த முத்தையன், மகள் உண்ணாமல் வைத்திருந்ததை பார்த்து அதிர்ந்து நின்றுவிட்டார்.

“மீனு என்னடா. ஏன் சாப்பிடல?” என்று அவர் பதற,

“ப்பா…” என்று கண்ணீருடன் தந்தையைக் கட்டிக் கொண்டாள் மகள்.

“என்னம்மா…”

“என்னம்மா… என்ன பண்ணுதுடா. உடம்பு எதுவும் முடியலையா?” என்று அவர் பதற, கீழே சமையல் அறையில் நின்றிருந்த வள்ளியம்மைக்கு இது எதுவுமே தெரியவில்லை.

வேலையாட்கள் மூலம் உணவைக் கொடுத்துவிட்டவர் மகள் சாப்பிட்டாளா, இல்லையா? என்பதை கவனிக்கத் தவறி இருந்தார். இப்போதும் சமையல் அறையை ஒதுங்க வைத்துவிட்டு, பின்புறம் மாடுகளை ஒரு பார்வைப் பார்த்து உள்ளே வந்தவர் சோபாவில் அமர்ந்துவிட, கணவன் மகள் அறைக்கு சென்றிருப்பதைக் கூட அவர் கவனிக்கவில்லை.

அவர் மொத்தமாக தனது கவலையிலேயே உழன்று கொண்டிருந்தார். மீனுவை எப்படி தனது வழிக்கு கொண்டு வருவது என்று சிந்தித்துக் கொண்டிருக்க, மகள் அவளுக்கான பாதையை அமைக்க தொடங்கி இருந்தாள்.

“என்னடா… என்னடா…” என்று பலமுறை முத்தையன் தவித்தும், மீனு தேம்பிக் கொண்டே இருந்தாளே தவிர, வாயைத் திறந்து ஒருவார்த்தை பேசவில்லை.

கடைசியில் மகளை தன்னிடம் இருந்து விலக்கியவர், “என்னன்னு வாயைத் திறந்து பேசு மீனு. இப்படி அழுதுட்டே இருந்தா, நான் என்ன யோசிக்க? உடம்பு எதுவும் முடியலையா?” என்று அதட்ட, மறுப்பாக தலையசைத்தாள்.

“வேற என்ன?”

“பயமா இருக்குப்பா”

“என்னடா… என்ன பயம் உனக்கு. அப்பா இருக்கேன்ல” என,

“என்னால சக்தி மாமாவை விட முடியாது. என்னால முடியாதுப்பா” என்று அவள் இன்னுமின்னும் அழ,

“மீனு…” என்று சிரித்தபடி அவள் கண்ணீரை துடைத்துவிட்டவர், “உன்னை உன் சக்திகிட்ட சேர்க்க வேண்டியது இந்த அப்பன் பொறுப்பு. இதுக்காகவா சாப்பிடாம இருக்க? என் பிள்ளை ரெண்டு நேரம் சாப்பிடாம இருந்திருக்கே.” என்று புலம்பியபடியே உணவைக் கையில் எடுத்தவர் மகளுக்கு ஊட்டிவிட தொடங்கினார்.

அவள் உண்டு முடிக்கவும், “நீ நிம்மதியா படு. விடியுற பொழுது உனக்கு நல்ல சேதி சொல்லும். படுத்து உறங்கு” என்று தனது அறைக்குச் சென்றவர், ஒரு தலையணையும், போர்வையும் எடுத்து வந்து மகளின் அறையிலேயே தரையில் விரித்து படுத்துக்கொண்டார்.

வள்ளியம்மை கணவரின் செயலை கவனித்து மகளின் அறையை எட்டிப் பார்த்த நேரம், மகள், கணவர் இருவரும் கண்மூடி இருக்க, இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்ட தங்கள் அறைக்கு வந்துவிட்டார் அவர்.

அன்றைய இரவின் வேதனைகள் இன்னும் முடியவில்லை என்பதுபோல், நள்ளிரவே காய்ச்சல் தொடங்கிவிட்டது மீனுவுக்கு.

காய்ச்சல் நெருப்பாக கொதிக்க, மூன்று மணிக்கெல்லாம் தன்னை மீறி அனத்த தொடங்கிவிட்டாள் அவள். “ம்ம்ம்.. ம்ம்ம்…” என்று அவளது புலம்பல் வேகம் தாங்காமல் முத்தையன் கண்விழித்து விட, மகளின் வேதனையைக் கண்டு துடித்தவராக, மகளை கையில் தூக்கிக்கொண்டு, கீழே இறங்கினார் அவர்.

தானே காரை எடுத்து வாசலில் நிறுத்தி, மகளை மீண்டும் சோபாவில் இருந்து தூக்கி காரில் போட்டுக்கொண்டு அடித்துப் பிடித்து மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருந்தார்.

இரத்த அழுத்தத்திற்காக இரவில் மாத்திரை எடுத்துக்கொண்டு தன்னை மீறி உறங்கிக் கொண்டிருந்த வள்ளியம்மைக்கு இது எதுவுமே தெரியாமல் இருக்க, அது பெரிய தவறாகிப் போனது.

மகள் இந்த நிலையில் இருப்பதைக் கூட மனைவி கவனிக்கவில்லையே என்று மொத்தமாக வெறுத்துப் போனார் முத்தையன்.

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில், அடுத்த இரண்டு மணி நேரத்திற்கெல்லாம் மீனுவுக்கு காய்ச்சல் குறைய, வீட்டிற்கே கூட அழைத்துச் செல்லலாம் என்றுவிட்டனர்.

முத்தையன், மகளின் அருகில் அமர்ந்தபடி சில நிமிடங்கள் எதையெதையோ யோசித்துக் கொண்டிருந்தவர், இறுதியாக முடிவெடுத்த நிமிடம் மகள் உறக்கம் துறந்து கண் திறந்தாள்.

“அப்பா” என்று சோர்வுடன் மகள் சிரிக்க,

“அப்பா சொல்றத கேட்பியா கண்ணம்மா” என்றார் முத்தையன்.

“என்னப்பா” என்று மகள் கேட்க, மறுப்பாக தலையசைத்து, “கிளம்புவோம்டா” என்றவர், அரைமணி நேரத்தில் மருந்துகளை வாங்கிக் கொண்டு மகளை அழைத்துக்கொண்டு கிளம்பினார்.

வேகமாக கிளம்பியவர் வந்து நின்ற இடம் மாமியார் வீடு. அதாவது சொக்கநாதரின் வீடு.

சுந்தரவடிவு வாசல் தெளித்துக் கொண்டிருந்தவர், முத்தையனின் காரைக் காணவும், “வாங்கண்ணே” என்று வாளியை கீழே வைத்துவிட்டு அவரை நெருங்க, காரில் மீனு அமர்ந்திருப்பதை அப்போதுதான் கவனித்தவர், “மீனு” என்று மருமகளை நெருங்கினார்.

அவளின் சோர்ந்த தோற்றத்தில், “என்னண்ணே… பிள்ளைக்கு என்ன” என்று அவர் பதற,

“உள்ளே அழைச்சுட்டு போம்மா” என்றார் முத்தையன்.

“என்னண்ணே… வாங்க முதல்ல. உள்ளே வாங்க” என்றவர் மறக்காமல் மருமகளின் கையைப் பிடித்து அழைத்து வந்து சோபாவில் அமர்த்தினார்.

முத்தையனை விசாரிப்பதை தள்ளி வைத்து, வேகமாக சமையல் அறைக்குள் நுழைந்தவர், கொதித்துக் கொண்டிருந்த பாலில், சிறிது ஹார்லிக்ஸ் கலந்து, ஆறவைத்து கொண்டுவந்து மருமகளிடம் கொடுத்தார்.

“குடிடா மொத” என்றவர், அதன்பிறகே முத்தையனுக்கு காபி வைத்துக் கொடுத்தார்.

அவர்கள் இருவரும் கையிலிருந்த பானத்தை அருந்துவதற்குள், சொக்கநாதர் தனது காலைநேர நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு வந்துவிட்டார்.

அவர் உள்ளே நுழைவதற்கும், தங்கவேல் படிகளில் இறங்குவதற்கும் சரியாக இருந்தது.

காலையில் பேத்தியைப் பார்த்தது ஆனந்தமாய் இருந்தாலும், அவள் முகத்தில் இருந்த சோர்வு சொக்கநாதரை கலவரம் கொள்ளச் செய்ய, முத்தையனை கேள்வியாகப் பார்த்தபடி வந்து அமர்ந்தார் அவர்.

“வாங்க மச்சான்” என்று அழைத்தபடியே வந்த தங்கவேல், “எப்படிடா இருக்க” என்று மருமகளின் அருகே அமர்ந்துகொண்டார்.

“நல்லா இருக்கேன் மாமா” என்று மீனு அவர் தோளில் சாய்ந்துகொள்ள,

“நீ கொஞ்ச நேரம் உன் பாட்டி கூட படுத்து தூங்கு மீனு.” என்றவர், “கூட்டிப் போம்மா” என்றார் சுந்தரவடிவிடம்.

வடிவு யோசனையுடன் மீனுவை அழைத்து வந்து தன் மாமியாரின் அறையில் படுக்க வைக்க, “தூக்கம் வரல அத்தை” என்றாள் மருமகள்.

மனோன்மணி குளியல் அறையில் இருந்து வெளியே வந்தவர், “மீனுக்குட்டி… என்னடி காலையிலேயே பாட்டியைப் பார்க்க வந்திருக்க” என்று பேத்தியை நெருங்க,

“நீ என்னை பார்க்கக்கூட வரல கிழவி” என்று நினைவூட்டினாள் பேத்தி.

மனோன்மணி மகளை நினைத்து கசப்புடன் சிரித்துக்கொள்ள, “வெளியே அண்ணன் வந்திருக்காங்க அத்தை. எங்களை உள்ளே போக சொல்லிட்டாங்க” என்றார் வடிவு.

“இருங்க வரேன்.” என்ற மனோன்மணி வெளியே வந்த நேரம், “உங்க வீட்டு மருமகளை உங்ககிட்ட கொடுத்துட்டேன் மாமா. நீங்க பார்த்து என்ன செய்யணுமோ செய்ங்க. அப்பனா என் மக கல்யாணத்துக்கு நான் அத்தனையும் செய்ய தயாரா இருக்கேன். ஆனா, கல்யாணம் நடக்கிற வரைக்கும் அவ இந்த வீட்ல இருக்கட்டும்” என்று சொக்கநாதரிடம் சொல்லிக்கொண்டு இருந்தார் முத்தையன்.

“என்ன நடந்துச்சு முத்தையா. முதல்ல அதை சொல்லு. இப்படி முறையில்லாம என் வீட்டு பொண்ணை ஏன் கூட்டிட்டு வந்த?” என்று கண்டிப்புடன் அவர் கேட்க,

“நான் அதையெல்லாம் நினைக்கிற நிலைமைல இல்ல மாமா.” என்று கலங்கினார் முத்தையன்.

“என்னதான்ய்யா நடந்தது? வள்ளியம்மை எங்கே?” என்று தங்கவேல் கேட்க,

“என் பிள்ளை நேத்து முழுக்க சாப்பிடல மாமா. என்னன்னு ஒரு வார்த்தை கேட்க என் வீட்ல நாதி இல்ல. ராத்திரி நெருப்பா காய்ச்சல் கொதிக்குது. பெத்தவ என்னன்னு கூட எட்டிப் பார்க்கல. என்னை என்ன செய்ய சொல்றிங்க” என்று கண்ணீருடன் முத்தையன் கொதிக்க, அத்தனைப்பேரின் கோபமும் வள்ளியம்மை மேல் திரும்பியது.

என்ன பேசுவது என்று புரியாமல் சொக்கநாதர் வாய்மூடி இருக்க, “என் பிள்ளை இங்கேயே இருக்கட்டும் மாமா. உங்க பேத்தியை நீங்க பார்த்துக்கோங்க. எனக்கு வேற வழியில்லை” என்றவர் எழுந்துகொள்ள,

“உட்காருய்யா” என்று அவர் கையைப் பிடித்து அமர்த்தினார் சொக்கநாதர்.

மனைவியைப் பார்த்து, “உன் பொண்ணுக்கு போனை போட்டு வரச் சொல்லு” என, மனோன்மணி அமைதியாக தனது அறைக்குள் நுழைந்து கொண்டார்.

கணவர் சொன்னதுபோலவே மகளுக்கு அழைத்து அவர் விவரம் கூற, இதற்குள் வள்ளியமைக்கும் வேலையாட்கள் வழியாக ஓரளவு விஷயம் தெரிந்திருந்தது. அவரும் விடாமல் கணவருக்கு தான் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார்.

கணவர் அழைப்புகளை ஏற்காமல் தவிர்க்க, அன்னையின் அழைப்பு வரவும், என்னவென்று கேட்டவரிடம், கிளம்பி வருமாறு கூறி அழைப்பைத் துண்டித்து இருந்தார் மனோன்மணி.

என்னவோ, தனது இத்தனை ஆண்டு திருமண வாழ்க்கையில் ஒரே நாளில் தோற்றுப் போனவராக உணரத் தொடங்கி இருந்தார் வள்ளியம்மை.

பெற்றவர்களின் வீடு தான் என்றாலும், அந்நியமாகவே நினைக்கக் தோன்றியது அப்போது.