அத்தியாயம் 19

அன்று காலை வேக வேகமாய் கிளம்பிக் கொண்டிருந்தாள் அபர்ணா. எழுந்ததில் இருந்து முதல் நாள் இரவு சிவா சொன்ன வார்த்தைகளே அவள் மனதிற்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க, அவளால் எந்த வேலையையும் உடனே செய்ய முடியவில்லை. எப்போதும் கடகடவென்று செய்து முடிப்பவள், இன்று ஒவ்வொன்றையும் ஒரு தடுமாற்றத்துடன் செய்து கொண்டிருப்பதைப் பார்த்த சிவா அவளை யோசனையுடன் பார்த்திருந்தான்.

எப்போதும் நேர்த்தியுடன் புடவை கட்டியிருப்பவள் இன்று அதையும் ஏனோ தானோவென்று கட்டியிருக்க, குளித்து விட்டு தலையை துவட்டியபடி வந்தவன் அவளையும் அவளின் முரண்பாடுகளையும் பார்த்துக் கொண்டிருந்தான். அடுப்பில் இருந்த பாத்திரத்தை வெறும் கையால் தூக்கப் போனவளைப் பார்த்து அதிர்ந்தவன், சட்டென்று அவளை இழுத்திருந்தான்.

“என்னாச்சு அபி உனக்கு? ஏன் காலையிலையே இவ்வளவு நெர்வஸா இருக்க? பாத்திரம் சூடா இருக்கு. கையில துணி எதுவும் இல்லாம பிடிக்கப் போற?”என்றவனின் குரலில் மீண்டவள்,

“ஒண்ணுமில்லை சக்தி! ஏதோ யோசனை” என்றவள் மீண்டும் அடுப்பை நோக்கி போக,

“ஒரு நிமிஷம் உட்கார் அபி” என்று அவளை அமர வைத்தவன், அடுப்பை அணைத்திருந்தான்.

“சொல்லு அப்படி என்ன யோசனை?” என்றான்.

“ஒண்ணுமில்லை சக்தி! டைம் ஆச்சு கிளம்பனும்” என்றபடி அவள் எழப் போக,

“உன்னை உட்காருன்னு சொன்னேன் அபி” என்றான் குரலில் அழுத்தத்துடன்.

“சக்தி”

“இன்னும் டைம் இருக்கு. ஒரு அவசரமும் இல்லை. கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இரு அபி. நைட் நல்லாத்தானே இருந்த. இப்போ என்ன ஆச்சு?” என்றான் புரியாமல்.

“நீங்க ஏன் நைட் அப்படி சொன்னிங்க சக்தி?” என்றாள் கலங்கிய விழிகளுடன்.

“நான் என்ன சொன்னேன்?” என்றான் புரியாமல்.

“என்னை ஏன் அக்சப்ட் பண்ணிக்கிட்டிங்கன்னு கேட்டதுக்கு ஒரு பதில் சொன்னிங்களே அதைத் தான் சொல்றேன்” என்றாள்.

“ஏன்? அதுல என்ன பிரச்சனை? நான் உண்மையைத் தான சொன்னேன்” என்றான் புரியாமல்.

“அந்த உண்மையைத் தான் என்னால தாங்க முடியலை. எவ்வளவு முயற்சி பண்ணாலும் மனசு நீங்க சொன்ன வார்த்தைக்கே தான் வந்து நிற்குது. எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு சக்தி. இத்தனை அன்புக்கும் புரிதலுக்கும் ஏதோ எனக்கு தகுதியே இல்லாத மாதிரி பீல் பண்றேன். ஆனா நீங்க சொன்னதை நினைக்கும் போது சந்தோஷமாவும் பீல் பண்றேன். கத்தி அழனும் போலவும் இருக்கு. சந்தோஷமா சிரிக்கணும் போலவும் இருக்கு. இதையெல்லாம் தாண்டி இது நிலைக்குமான்னும் பயப்படுறேன்” என்றாள்.

“இந்த தேவையில்லாத பயம் உனக்கு ஏன் வந்துச்சுன்னு தெரிஞ்சுக்கலாமா அபி?” என்றான் சற்று இறுகிய குரலுடன்.

“தெரியலை” என்றாள்.

“அது சரி! எனக்குக் கூடத்தான் அதே மாதிரி தோணுது. உருப்படியா ஒரு வேலை கூட இல்லாம, இப்போ உன்னோட வாழ்க்கையையும் சேர்த்து கெடுத்த மாதிரி குற்ற உணர்ச்சியா இருக்கு. இப்போ நான் என்ன பண்றது? நானும் உன்னை மாதிரி பீல் பண்ணிட்டு உட்காரவா?” என்றான் அவள் கண் நோக்கி.

“அப்படியெல்லாம் இல்லை. என் வாழ்க்கையை நீங்க ஒன்னும் கெடுக்கலை. சொல்லப் போனா நான் நார்மல் ஆகுறதுக்கு நீங்க தான் முக்கிய காரணம்” என்றாள் சட்டென்று.

“அதே மாதிரி தான் எனக்கும். என்னோட அன்புக்கு நீ தகுதியானவளா? இல்லையான்னு  நீ சொல்லக் கூடாது. முதல்ல அன்புக்கும் தகுதிக்கும் என்ன சம்பந்தம்? உனக்குள்ள இருக்குற இந்த குற்ற உணர்ச்சி எல்லாம் தேவையில்லாத ஆணி தான். இந்த வலி,காயம்,ஏமாற்றமெல்லாம் எல்லார் வாழ்க்கையிலையும் இருக்குறது தான். அதையெல்லாம் தாண்டித் தான வரணும்?” என்றான் பொறுமையாய்.

“அதைப் பத்தியெல்லாம் நான் யோசிக்கலை சக்தி. ஆனா என்னவோ தெரியலை, எனக்கு எப்படி சொல்றதுன்னும் தெரியலை. நீங்க அப்படி சொன்னப்ப இருந்து அதோட கனத்தை என்னால தாங்க முடியலை. அது சந்தோஷத்துனால கூட இருக்கலாம்” என்றாள்.

அவளின் அருகில் கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்தவன்,”ம்ம் அப்பறம்?” என்றான் சிறு புன்னகையுடன்.

“நான் தான் சொல்றேன்ல, என்னோட பீலிங்ஸ எனக்கு கன்வே பண்ணத் தெரியலை சக்தி. இத்தனை நாள் குடுத்து தான் பழக்கப் பட்டிருக்கேன். இப்போ உங்ககிட்ட இருந்து திடீர்ன்னு கிடைக்கவும் இப்படி உளறிட்டு இருக்கேனோ என்னவோ?” என்றாள் உள்ளே போன குரலில்.

“என்ன கிடைச்சது என்கிட்ட இருந்து மேடம்க்கு?” என்றான்.

“ம்ம்..! இந்த அன்பு அக்கறை எல்லாம் தான்” என்றாள்.

“நீ இவ்வளவு பீல் பண்றதைப் பார்த்தா உனக்கு இதெல்லாம் வேண்டாம் போலயே” என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டு.

அவனை முறைத்தவள் “நான் சொன்னேனா எனக்கு வேண்டாம்னு” என்றாள்.

“அப்போ வேணுமா?” என்றவன்,

“எப்படி அன்பும் அக்கறையும்  மட்டும் வேணுமா? இல்லை அதைக் குடுக்குற நானும் வேணுமா?” என்றவனின் கேள்வியில் அவனைப் பார்க்க முடியாமல் எங்கெங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சொல்லு அபி! இப்பவே இதுக்கு முடிவு கட்டிடலாம்” என்றான் ஏகாந்த குரலில்.

“டைம் ஆச்சு சக்தி! கிளம்பனும்” என்று எழுந்து கொள்ள முற்பட்டவளைத் தடுத்தவன்,

“அதெல்லாம் நேரம் இருக்கு. நான் கேட்ட கேள்விக்கு பதில் வேணும்” என்றான்.

“எனக்கு என் புருஷன் தான் வேணும்” என்றாள் பட்டென்று.

சிவா அவளை முறைக்க,

“நான் டௌனா பீல் பண்ணா அவங்க தான் வேணும்னு தோணுது. நான் கவலையா இருந்தாலும் அவங்க தான் வேணும்னு தோணுது.சந்தோஷமா இருந்தாலும் அவங்க தான் வேணும்னு தோணுது.மொத்ததுல நான் அழுதாலும், ஆத்திரப்பட்டாலும், டார்ச்சர் பண்ணாலும் அவங்க தான் பக்கத்துல இருக்கணும்னு தோணுது. அதே சமயம் மனசு எப்படி சட்டுன்னு இப்படி மாறுச்சுன்னு யோசிச்சு தான் என்னை நானே குழப்பிக்கிறேன்” என்றாள் மனதை உடைத்து.

“ஏன் அபி நைட்டு அவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தோமே? அப்பல்லாம் இதை சொல்லனும்னு தோணாதா உனக்கு?” என்றான் கடுப்புடன்.

“ஏன் எதுக்கு?” என்றவள் கேட்டு முடிக்கும் முன் அவனின் இறுகிய அணைப்பில் இருந்தாள். அவள் முகம் முழுவதும் முத்த ஊர்வலம் நடத்தி முடித்தவன்,

“இதுக்குத்தான்” என்றான் சிரிப்புடன். அவளால் அவனை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை.

“இனி முத்தம் குடுக்கனும்னா நீதான் வேணும் எனக்கு” என்றான் நமட்டு சிரிப்புடன்.

அவனை முடிந்த வரை முறைத்தவள் “ஏன் வேற ஆளைக் கூட பாருங்களேன்” என்றாள்.

“எனக்கும் வேற ஆளெல்லாம் வேண்டாம். என் பொண்டாட்டி மட்டும் தான் வேணும்” என்றான் அவளைப் போலவே.

“பொண்டாட்டின்னு சொல்லாதிங்க சக்தி பிளீஸ்” என்றாள்.

“நீ வேற அப்படி சொன்னா ஒரு பீல் குடுக்குதுன்னு சொல்லிட்ட. அப்பறம் எப்படி அபி சொல்லாம இருப்பேன்” என்றவன் அவளை மீண்டும் அணைத்துக் கொண்டான்.

“இனி மேல் இப்படி தத்துப் பித்துன்னு உளராம, தேவையில்லாததைப் போட்டு மனசை குழப்பிக்காம எப்பவும் போல தெளிவான அபர்ணாவா இருக்கணும். இங்க யாருமே பெர்பெக்ட் கிடையாது. கீழே விழறது தப்பில்லை. விழுந்த இடத்துல அப்படியே இருக்குறது தான் தப்பு” என்றான்.

“வரவர நான் டீச்சரா இல்லை நீங்க டீச்சரான்னே தெரியலை சக்தி” என்றவளின் முகம் இப்போது இருந்த தெளிவில் பளிச்சென்றிருந்தது.

“சரி..! நீ கிளம்பு அபி. உன்னை ஸ்கூல்ல டிராப் பண்ணிட்டு, நான் பேக்கரி போறேன்” என்றவன் கிளம்பி அவளையும் அழைத்துக் கொண்டு கீழே வந்தான்.

“என்ன சரிதா? என்னைக்குமில்லாம இன்னைக்கு ரெண்டு பேர் முகமும் சந்தோஷமா இருக்கு?” என்றாள் செல்வி.

“தெரியலைக்கா! ஆசை அறுபது நாள் வரைக்கும் இருக்கனும்ல” என்றாள் சரிதா.

கிளம்பி கீழே வந்தவன் பைக்கை எடுக்கப் போக,

“ரோஷமா இருந்தா எல்லாத்துலையும் இருக்கணும் சரிதா. இந்த பைக் என் புருஷன் வாங்கினது” என்றாள் செல்வி வேண்டுமென்றே. செல்வியின் வார்த்தைகளில் இறுகிப் போனான் சிவா.

பைக்கில் இருந்து சாவியை எடுத்தவன் அப்படியே இறங்கிவிட்டான். அபர்ணா ஒரு வேதனையுடன் அவனைப் பார்த்திருக்க, கோபம் தலைக்கேறிய படி வேகமாய் வந்தவன் சாவியை வீட்டினுள் எறிந்தான். நடராஜன் என்னமோ ஏதோவென்று பதட்டத்துடன் வர,

“சாவியை ஒழுங்கா கையில குடுக்கணும் தெரியாதா சிவா?” என்றாள் செல்வி கோபமாய்.

“செல்வி இப்போ எதுக்கு கிளம்பி வெளிய போறவனை கோபப்படுத்திட்டு இருக்க? என்ன தாம்மா வேணும் உனக்கு?” என்றார் நடராஜன் கோபமாய்.

“இது என் புருஷன் வாங்குன பைக்கு தான மாமா. நாங்களே ஆகாதுன்னு ஆகிட்டோம். அப்போ எங்க வண்டியையும் தொடக் கூடாதுல்ல. அதைச் சொன்னா உங்க சின்னப் பையன் சாவியை விட்டு எறியறார்?” என்றாள் செல்வி.

நடராஜனோ அதிர்ந்து போய் நின்றிருக்க, தந்தையைக் குற்றம் சாட்டும் பார்வையில் பார்த்தான் சிவா.

செல்வியின் வார்த்தைகளில் சரிதாவே ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டாள். அவள் கணக்கு பார்ப்பாள் தான். ஆனால் செல்வி அளவிற்கு யோசித்ததில்லை.

“என்னக்கா இப்படி பண்ணிட்டிங்க? சிவா கடைக்குத் தான கிளம்பி வந்தார்? என்ன இருந்தாலும் நீங்க இப்படி சொல்லியிருக்கக் கூடாது” என்ற சரிதாவை முறைத்தாள் செல்வி.

கோபத்தை அடக்கும் வழி தெரியாமல் மாடிப் படியில் அப்படியே அமர்ந்துவிட்டான் சிவா. கைகளைக் கோர்த்து அதில் முகத்தைத் தாங்கியபடி தரையை வெறித்திருந்தான். அபியோ அவன் முகத்தைக் கண்டு ஒரு நிமிடம் கலங்கி நின்றவள், மேலே சென்று ஸ்கூட்டி சாவியை எடுத்து வந்தாள்.

“சக்தி ஸ்கூட்டியை எடுங்க, கிளம்பலாம்” என்றாள் சாவியை நீட்டியபடி.

“நீ வண்டியை எடு அபி” என்றான் உணர்வற்ற குரலில்.

“சக்தி”

“சொன்னதை செய் அபி” என்று அவன் மீண்டும் சொல்ல, அவளே வண்டியை எடுத்துக் கொண்டு வர, யாரையும் பார்க்காது அவள் பின்னால் ஏறிக் கொண்டான்.

“சக்தி நீங்க ஓட்டுங்க” என்றாள் தயக்கத்துடன்.

“ஏன் பொண்டாட்டி பின்னாடி புருஷன் உட்கார்ந்து போகக் கூடாதுன்னு சட்டம் இருக்கா என்ன? இப்போதைக்கு என்கிட்ட இருக்குறதோ, எனக்குன்னு இருக்குறதோ நீ மட்டும் தான் அபி,போகலாம்” என்றான். குரலில் இருந்த இறுக்கம் முகத்திலும் இருந்தது. கலங்கிய கண்ணீர் எதிர்காற்றின் உபயத்தால் பின்னோக்கி சென்றிருக்க, நல்ல வேளையாக அபி பார்க்கும் முன் தன்னை சீர்படுத்திக் கொண்டான்.

பேக்கரியின் முன்பு இறங்கிக் கொண்டவன்,

“ஈவ்னிங் ஸ்கூல் முடிஞ்சு வரும் போது பிக்கப் பண்ணிக்கோ அபி” என்றான்.

“ஸ்கூட்டி உங்க கிட்டயே இருக்கட்டும் சக்தி. உங்களுக்குத் தேவைப்படுமே” என்றாள்.

“இனி தேவைப்படாது அபி” என்றவன் உள்ளே சென்று விட்டான். சிவா அபியுடன் வந்து இறங்கியதை யோசனையுடன் பார்த்த பிரபாகரன், தம்பியின் முகத்தைக் கண்டு அதிர்ந்தான். அவன் கண்களோ கலங்கிச் சிவந்திருந்தது.

“என்ன சிவா? பைக்ல வராம அபர்ணா கூட வந்து இறங்குற?” என்றான் புரியாமல்.

“ஒண்ணுமில்லைண்ணா” என்றவனின் குரலில் எந்த ஒட்டுதலும் இல்லை. அன்று முழுவதும் சிவா அப்படித்தான் இருந்தான். அவன் சொன்னதைப் போல் ஸ்கூல் முடிந்து வரும் போது அபர்ணா அவனை பிக்கப் செய்து கொள்ள, அப்போதும் அதே அமைதி தான் அவனிடத்தில்.

இரவு சீக்கிரமே கிளம்பி வீட்டிற்கு வந்த பிரபா முதலில் கேட்டது இந்த கேள்வியைத் தான்.

“ஏன் சிவா பைக்ல வராம அபர்ணா கூட வந்தான்?” என்றான் வந்ததும் வராததுமாக.

“உன் பொண்டாட்டியை கேளுப்பா” என்றார் நடராஜன்.

“நான் தான் ரோஷம் இருந்தா என் புருஷன் வாங்குன பைக்கை எடுக்காதிங்கன்னு சொன்னேன்” என்றாள் செல்வி பட்டென்று.

ஆத்திரத்தில் அவளை அடிக்க கையோங்கியவன், பிள்ளைகள் இருக்கவும் கையை இறக்கிக் கொண்டான்.

“என்ன மனுஷிடி நீயெல்லாம்? உனக்கு முதல்ல ரோஷம் இருக்கா? இந்த அஞ்சு வருஷமும் அவன் சம்பாரிச்சு குடுத்ததைத் தான வாங்கி வச்சுகிட்ட. ரோஷம் இருந்தா எங்க அதைத் திருப்பிக் குடேன் பார்ப்போம்” என்றான் பிரபாகரன்.

“இங்க பாருங்க..! சும்மா என்ன அதையே சொல்லிட்டு இருக்கீங்க. அவர் ஒன்னும் சும்மா குடுக்கலை. நம்ம கடையில வேலை தான் பார்த்தார்” என்றாள் செல்வி.

“பேச்சை விடு பிரபா” என்ற நடராஜன்,

“இங்க பாருமா! சிவான்னால வண்டி வாங்க முடியாமல் இல்லை. நான்தான் எதுக்கு தேவையில்லாம வீட்டுல வண்டியா நிக்கணும். அதான் அண்ணன் வண்டி இருக்கேன்னு சொல்லி அவனை வண்டி கூட வாங்க விடலை. இந்த வீட்ல எல்லாப் பொருளும் எல்லாருக்கும் தான்னு தான் இத்தனை நாள் இருந்தோம். இன்னைக்குத் தான் புரிய வச்சிருக்கம்மா” என்றார் நடராஜன் கோபமாய்.

கீழே சத்தம் கேட்டாலும் சிவா வரவேயில்லை. அன்று மட்டுமல்ல, அதற்கடுத்து வந்த நாட்களும் அப்படியே தான் இருந்தான். யாரிடமும் பேசுவதில்லை. தனக்குள்ளேயே இறுகிப் போனான். அவனின் பேச்சு வார்த்தைகள் அபியிடம் மட்டும் தான். அது கூட அளவுடன் நின்று போனது. அவனின் இந்த அமைதியை அபியால் தான் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

பிரபாகரனும் தம்பியிடம் பேச முயற்சி செய்ய, பலன் என்னவோ பூஜ்யமாகத் தான் இருந்தது. ஆனால் சொன்னபடி பேக்கரிக்கு வருவதை நிறுத்தவில்லை அவன். அனைத்தையும் பிரபாகரனிடம் ஒப்படைத்து விட்டான். இடையிடையே ஆட்டோவில் எங்கோ சென்று வந்தான்.

“வண்டியை எடுத்துட்டு போ சிவா. எதுக்கு ஆட்டோல போயிட்டு வர்ற?” என்று பிரபாகரன் சொல்ல,

“பரவாயில்லண்ணா” என்பதோடு முடித்துக் கொண்டான்.

“டேய் அவ பேசுனதுக்கு நான் என்னடா பண்ணேன். நீ ஏன்டா யாரோ மாதிரி என்கிட்ட பேசுற. நடந்துக்கிறதும் அப்படித்தான் இருக்கு. எப்பவும் போல இருடா சிவா” என்று கூட சொல்லிப் பார்த்துவிட்டான் பிரபா.

“வாழ்க்கைன்னா என்னன்னு இப்போ தான் ண்ணா புரியுது. மனுஷங்களோட உண்மையான முகம் கஷ்ட்ட காலத்துல தான் தெரியும்னு சொல்லுவாங்க. என்ன? எனக்கு கொஞ்சம் லேட்டா தெரிஞ்சிருக்கு. எனக்கு யார் மேலயும் கோபமில்லை. என்னோட கோபமெல்லாம் என்மேல தான்” என்றவன் பேச்சை அதோடு முடித்துக் கொண்டான்.

மறுநாள் காலை பள்ளிக்கு கிளம்பாமல் இருந்தவளை யோசனையுடன் பார்த்த சிவா,

“கிளம்பலையா அபி. டைம் ஆகுது” என்றான்.

“இன்னைக்கு போகலை சக்தி, லீவ் போட்ருக்கேன்” என்றவளிடத்தில் வேகமாய் சென்றவன்,

“என்னாச்சு உடம்புக்கு எதுவும் முடியலையா?” என்றான்.

“இல்ல அதெல்லாம் ஒண்ணுமில்லை சக்தி” என்றாள் குரலில் சுரத்தையே இன்றி.

“உன் குரலே சரியில்லை அபி? என்னாச்சு?” என்றான் மீண்டும்.

அவனையே இமைக்காமல் பார்த்தவள்,”உங்களுக்குள்ள கோபம் வருத்தம் ஏதாவது இருந்தாலும் இப்படி பேசாம இருக்காதிங்க சக்தி. அது எனக்கு என்னவோ போல இருக்கு. ஏதோ வெறுமையா இருக்கு. தாங்கிக்கவே முடியலை. உங்களோட அமைதி என்னை ரொம்ப பாதிக்குது சக்தி” என்றாள் கலங்கிய குரலில்.

அவளை இழுத்து தன் அணைப்பில் நிறுத்திக் கொண்டவன் “ஹேய் லூசு! வருத்தம் கோபமெல்லாம் இருக்கு தான். ஆனா உன்மேல இல்லை. நீயா எதையாவது கற்பனை பண்ணிக்காத அபி. உன்கிட்ட கோவிச்சுட்டு நான் என்ன பண்றது? மனசுல வருத்தம் இருக்கு அபி. அடுத்து என்ன செய்யப் போறேன்ற திங்க்கிங் வேற. அதுல கொஞ்சம் அப்செட்டா இருந்துட்டேன்.சாரி அபி” என்றவன்,

“சோ என்னோட அமைதி மேடமை பாதிக்குது இல்லையா? அதுக்குத்தான் ஸ்கூல் போகலையா?” என்றான் சிறு சிரிப்புடன். அவனை முறைத்தவள்,

“அதெல்லாம் இல்லை. கொஞ்சம் வெளிய போகணும். நீங்களும் கடைக்கு போக வேண்டாம்” என்றாள்.

“இனி கடைக்குப் போகவே தேவையில்லையே. நேத்தே  இனி வர மாட்டேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்” என்றான்.

“அப்போ இன்னும் நல்லது” என்றவள் கிளம்பி அவனையும் அழைத்துக் கொண்டு செல்ல,

“ஸ்கூட்டியிலேயே வந்திருக்கலாமே? எதுக்கு ஆட்டோ?” என்றான் புரியாமல்.

“காரணமாத்தான் சக்தி” என்றவள் நேராக அவனை அழைத்து சென்றது பைக் ஷோரூமிற்குத் தான்.

“வண்டியெல்லாம் இப்போதைக்கு வேண்டாம் அபி. பணத்தை பிஸ்னஸ்ல மட்டும் தான் போடணும்னு இருக்கேன். இருக்குற ஸ்கூட்டியே போதும்” என்றான்.

“இனி தான் உங்களுக்கு வண்டியே தேவைப்படும் சக்தி. நான் ஏற்கனவே புக் பண்ணிட்டேன். இன்னைக்கு டெலிவரி எடுக்கத்தான் வந்திருக்கோம்” என்றவளை ஆராய்ச்சியுடன் பார்த்தவன்,

“பணம் ஏது அபி? ஏன் என்கிட்ட சொல்லலை?” என்றான்.

“நீங்க வேண்டாம்ன்னு தான் சொல்லுவிங்கன்னு எனக்குத் தெரியும். பணமும் நான் வேற யார்கிட்டயும் வாங்கலை. என்னோட சேவிங்க்ஸ் தான் சக்தி” என்றாள் தெளிவாய்.

“யாரோடதா இருந்தாலும் இப்போ ஏன் தேவையில்லாத செலவு அபி? வேணும்னா நானே வாங்கியிருப்பேனே?” என்றான்.

“ஏன் நான் வாங்கிக் குடுக்கக் கூடாதா? இல்ல அந்த உரிமை தான் எனக்கு இல்லையா?” என்றவளிடத்தில் மேற்கொண்டு அவன் பேசவில்லை. பேப்பர் வேலைகள் முடிந்தவுடன் அவர்கள் சாவியை கொடுக்க,

“நீயே வாங்கு அபி” என்றான். சாவியை வாங்கி சிவாவின் கையில் கொடுத்தவள்,

“இது நம்மளோடது சக்தி. யாரும் எந்த கேள்வியும் கேட்க முடியாது” என்றாள்.

அங்கிருந்து வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். வெள்ளிக் கிழமை என்பதால் கூட்டமாக இருந்தது. ஒரு வழியாக வண்டிக்கு பூஜையும் போட்டு விட்டு, தரிசனம் முடித்து அமர்ந்தவர்களின் மனதில் அப்படி ஒரு அமைதி. திரும்பி வரும் போதும் இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தைகள் இல்லை.