அவன் மனநிலை புரிந்ததோ என்னவோ? தன்னை சமாளித்துக் கொண்ட வீணா “உயிருக்கு பயந்து கல்யாணத்தை நிறுத்திட்டு அடுத்து என்ன பண்ண போறீங்க? என்னை வச்சு மிரட்டினான் சரி. நாளைக்கு நீங்க வேற பொண்ணை கல்யாணம் பண்ண வந்தாலும் உங்களை கொன்னுருவேன்னு சொல்ல தானே போறாங்க? வாழ்க்கை முழுக்க தனியா இருப்பீங்களா?”, என்று கேட்டாள்.
“இது சாதாரணமா கொலை மிரட்டலா என்னால நினைக்க முடியலை. அவன் கொன்னுருவேன்னு சொன்னது உன்னை வீணா. அதை எப்படி என்னால சும்மா விட முடியும்? நீ உங்க அப்பா அம்மாவுக்கு ஒரே பொண்ணுன்னு வரைக்கு தெரிஞ்சு வச்சிருக்கான்”
“என்ன?”
“ஆமா உன்னை நான் கல்யாணம் பண்ணலைனா நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருப்பியாம். இல்லைன்னா கஷ்டம். நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணி சந்தோஷமா இரு. நான் உனக்கு வேண்டாம்”, என்று சொன்னதும் அவனை முறைத்துப் பார்த்தாள். ஏனோ அவனுக்கு அந்த பார்வை கூட ஆறுதலைத் தான் தந்தது. உயிருக்கு ஆபத்து என்று சொல்லியும் அவனை விட்டு விலகிச் செல்லாமல் பயம் இல்லாமல் போராடுகிறாளே? இவளை விடவா அவனுக்கு சிறந்த துணை அமைந்து விடப் போகிறது?
“என்ன டி பார்வை இது? சொல்லு நீ என்ன நினைக்கிற?”
“நான் ஒண்ணும் உடனே நம்ம கல்யாணம் நடக்கணும்னு சொல்லலை. அது யாரு என்னன்னு கண்டு பிடிச்ச அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லலாமே? ஒரேடியா என்னை வேண்டாம்னு சொல்லுவீங்களா?”, என்று கேட்டதும் அவன் கண்கள் மின்னியது. மனதில் சாமரம் வீசியது போல ஒரு இதம் அவனுக்குள்.
“வீணா எல்லாமே கற்பனை கண்ணோட பாக்காத. எதார்த்ததுக்கு வா. அவனை எப்படி கண்டு பிடிக்கன்னு தெரியலை. எனக்கு இருக்குற ஒரே குளு மாலினி. ஆனா அவளையும் விசாரிச்சா அவளை கொன்னுருவேன்னு சொல்றான். அவ எனக்கு நல்ல பிரண்ட். அவ உயிரை காவு வாங்க சொல்லுறியா? எப்படியும் கண்டு பிடிப்பேன் தான். அதுக்கு பல வருஷம் கூட ஆகலாம். அது வரைக்கும் நீ காத்துருப்பியா என்ன? உங்க அப்பா வேற மாப்பிள்ளை பாத்ததும் அவனைக் கல்யாணம் செஞ்சிருவ. அது இயல்பு தான் மா”
“கண்டிப்பா ஒரு காலத்துல அப்பா சொல்ற பையனுக்கு கழுத்தை நீட்டணுன்னு இருந்தவ தான். ஆனா எப்ப நீங்க தான் மாப்பிள்ளைன்னு சொன்னாங்களோ அப்பவே உங்க முகம் எனக்குள்ள பதிஞ்சிருச்சு. இது காதலான்னு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா உங்க இடத்துல அப்பாவே கொண்டு வந்தாலும் என்னால வேற யாரையும் நிறுத்த முடியாது. உங்களுக்காக எத்தனை வருஷம் ஆனாலும் நான் காத்துட்டு இருப்பேன். எனக்கு நீங்க வேணும். சீக்கிரம் அது யார் என்னன்னு கண்டு பிடிங்க. இப்ப என்னை ஸ்கூல்ல விட்டுருங்க”, என்று சொன்னவள் எழுந்து கொண்டாள். அவள் பேச்சில் திகைத்து அமர்ந்திருந்தான். ஆணோ பெண்ணோ உனக்காக நான் இருக்கிறேன் என்று ஒருவர் சொல்லி கேட்பது எல்லாம் மிகப் பெரிய வரம் அல்லவா?
“என்ன பாக்குறீங்க? உங்களுக்கு தப்பிக்க ஒரு வாய்ப்பு கிடைச்சது நீங்க பயன்படுத்திக்கல. அன்னைக்கு வந்து நான் கூப்பிட்டா வர மாட்டியான்னு நீங்க தானே கேட்டு உசுப்பேத்துனீங்க? அப்ப நீங்க தான் எனக்கு வாழ்க்கை கொடுக்கணும். வாங்க போகலாம்”, என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளுக்கு அழைப்பு வந்தது.
போனை எடுத்துப் பார்த்தாள். அழைப்பில் அவள் தம்பி மிதுன் என்று வந்தது. அப்படியே அதே சீட்டில் அமர்ந்தவள் அழைப்பை எடுத்து “சொல்லு டா”, என்றாள்.
“எங்க இருக்க வீணா? கேரளால இருந்து நேரா உன் வீட்டுக்கு தான் வந்தேன். பெரியப்பாவும் பெரியம்மாவும் வேற வீட்ல இல்லை. உன்னைத் தேடி ஸ்கூல்க்கு வந்தேன். நீ இல்லைன்னு சொல்றாங்க”
“என் ஸ்கூல் பக்கத்துல இருக்குற ஜே.கே ரெஸ்டாரண்டல இருக்கேன். கொஞ்சம் சீக்கிரம் வா”
“சரி வரேன்”, என்று சொல்லி போனை வைத்தவன் வண்டியை விரட்டினான்.
போகலாம் என்று சொன்னவள் மீண்டும் அமர்ந்திருக்கவும் “என்ன ஆச்சு வீணா? யார் ஃபோன்ல? இங்க வாராங்களா?”, என்று கேட்டான் சத்யா.
“என் தம்பி இங்க வரானாம். நம்ம என்கேஜ்மெண்ட்ல சொன்னேன்ல?”
“சரி வரட்டும்”, என்ற படி மீண்டும் அமர்ந்தான்.
மிதுன் வந்ததும் இருவருக்கும் முறையாக அறிமுகம் செய்து வைத்தாள் வீணா. மீதுனுக்கு உண்மையில் அவர்களை ஜோடியாக கண்டு கொஞ்சம் திகைப்பு தான். அவன் கேள்வி பட்டது நிச்சயதார்தத்தில் பிரச்சனையானது தான். ஆனால் இவர்களோ ஒன்றாக அமர்ந்து உணவு உண்கிறார்கள்.
அதை எப்படிக் கேட்பது என்று அவன் தயக்கத்தில் இருக்கும் போதே “ஏதாவது சாப்பிடுறீங்களா மிதுன்?”, என்று கேட்டான் சத்யா.
“ஐயோ மாம்ஸ், நீங்க என்னை வா போன்னு சொல்லுங்க. சாப்பாடு எல்லாம் அப்புறம். முதல்ல என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க. எனக்கு தலையே சுத்துது”, என்று அவன் கேட்டதும் நடந்ததை சுருக்கமாக இருவரும் சொல்லி முடித்தார்கள்.
அனைத்தையும் கேட்டவன் “எல்லாம் படத்துல நடக்குற மாதிரி இருக்குது. அக்கா சொன்னது சரி தான் மாம்ஸ். அது யாரு என்னன்னு கண்டு பிடிக்கணும். ஏதாவது உதவி வேணும்னா என் கிட்டயும் கேளுங்க. நான் வந்து நிப்பேன்”, என்றான் மிதுன்.
“தேங்க்ஸ் மச்சான்”, என்று நிறைவாக சிரித்தான் சத்யா.
“மாம்ஸ் நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்கீங்க?”, என்று மிதுன் சொல்ல “அடேய் என்னங்க டா இது? ஆள் ஆளுக்கு என் புருஷனை சைட் அடிப்பீங்களா? அந்த சின்ன குட்டி என்னடான்னா இவரை ரெண்டாவதா கல்யாணம் பண்ணிக்கட்டுமான்னு கேக்குறா?”, என்று வீணா சண்டைக்கு வர பதிலுக்கு மிதுன் ஏதோ வழக்கடிக்க சத்யாவோ அவளுடைய புருஷன் என்ற வார்த்தையில் அசைவற்றுப் போனான்.
அவனும் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் கொண்ட சாதாரண இளைஞன் தான். ஆனால் வீட்டில் தங்கை இருப்பதால் அவளிடம் உரிமையாக பழகுவதால் எந்த பெண்ணையும் தவறான கண்ணோட்டத்திலோ ரசனையாகவோ பார்த்ததில்லை. காதல் என்ற வலையிலும் அவன் விழவில்லை. ஆனால் உன்னை பிடிக்க வில்லை என்று சொன்ன பெண் தான் இன்று ஒவ்வொரு பரிமானத்திலும் அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தாள்.
அவர்கள் சண்டை இடுவதை அவன் ரசனையாக பார்த்துக் கொண்டிருக்க மிதுனின் தலையில் கொட்டிய வீணா “உன் கிட்ட பேசி டைம் ஆச்சு பாரு. சரி டா நீ ஏதாவது சாப்பிடு. நீங்களும் இவன் கூட இருங்க சத்யா. நான் ஆட்டோ பிடிச்சு ஸ்கூல்க்கு போயிறேன். பர்ஸ்ட் பீரியட் என் கிளாஸ் தான். டீச்சர் நானே லேட்டா போக முடியாது. நான் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு எழுந்து கொண்டாள்.
“ஏய் லூசு, நாங்க ரெண்டு பேர் இருக்கும் போது நீ ஆட்டோல போவியா? நீ மாம்ஸ கூட்டிட்டு கிளம்பு. எனக்கு இப்ப தான் லேசா பசிக்குது”, என்று அவளிடம் சொன்னவன் சத்யா புறம் திரும்பி “நீங்க அக்காவை ஸ்கூல்ல விட்டுருங்க மாம்ஸ்”, என்றான்.
தங்களை ஒன்றாக செல்ல தான் அப்படிச் சொல்கிறான் என்று புரிந்தது சத்யாவுக்கு. மிதுனுக்கு தேவையான உணவை ஆர்டர் செய்த சத்யா, அதற்கான பணத்தையும் கொடுத்து விட்டே வீணாவை அங்கிருந்து அழைத்துச் சென்றான்.
சத்யா அங்கிருந்து கிளம்பும் போதும் யாராவது தங்களை கவனிக்கிறார்களா என்று பார்த்த படி தான் அவளை அழைத்துச் சென்றான். போகும் போது சுற்றி முற்றி பார்த்தார்கள். அது யாராக இருக்கும் என்று ஆனால் அவர்களின் கண்ணுக்கு அது யார் என்று தெரிய வில்லை.
அவர்கள் சென்ற பிறகு மிதுனுக்கு உணவை வந்து வெயிட்டர் வைக்க அவன் கவனம் உணவில் சென்றாலும் வீணா வாழ்வைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.
“என்ன இவங்க கதைல படத்துல நடக்குற மாறி எல்லாம் நடக்குது? மாம்ஸ் அது யாருன்னு கண்டு பிடிச்சா தானே அக்கா கூட கல்யாணம் நடக்கும்? எப்படி கண்டு பிடிக்க?”, என்று யோசித்த படி வந்த உணவை சாப்பிட ஆரம்பித்தான்.
இதற்கெல்லாம் காரணமான அவன் அவர்கள் அமர்ந்திருந்த டேபிளின் எதிர் டேபிளில் தான் அமர்ந்திருந்தான். இப்போதும் மிதுனின் எதிரே தான் அமர்ந்திருந்தான்.