சேனல் சென்னையில் ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தியது. அதில் சேனலில் புகழ்பெற்ற டான்ஸர்கள், பாடகர்கள், காமெடியன்கள் கலந்து கொண்டனர். இனியாவும் தொகுப்பாளினியாகப் பங்கு பெற்றாள்.
ரோஜாவும், பரத்தும் இனணந்து நடனம் ஆடினர். அந்நடனம் எல்லோராலும் விரும்பப்பட்டது.
நிகழ்ச்சி முடிவில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் விருந்தில் இருக்க, மீண்டும் பரத் பிரச்சனை செய்தான்.
அனைவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு, ரோஜா கிளம்பிச் சென்றாள்.
இனியா மிகவும் கவலை அடைந்தாள்.
“எல்லாம் நன்றாகப் போகிறது என நினைக்கும் பொழுது, இப்படி?” என வருத்தப்பட்டாள்.
மறுநாள் ரோஜாவை அழைக்க, இரண்டு, மூன்று முறை தவிர்த்த பின்னும், இனியா விடாது அழைத்தால், ரோஜா எடுத்தாள்.
“அக்கா, எப்படி இருக்கிறீர்கள்? எல்லாம் ஓ.கே. தானே?” எனக் கவலையோடு கேட்டாள்.
“ஓ.கே. தான், கௌதமோடு ஆடினால், பிடிக்கவில்லை, பிரச்சனை வருகிறது பார்க்கலாம்…” எனச் சமாளித்தாள்.
“சரிக்கா, கவனம்…” எனப் போனை வைத்தாள்.
விக்ரமிடமும், தன்னுடைய வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டாள்.
“ஏதாவது பண்ண முடியுமா எனப் பார்க்கிறேன்….” எனச் சொல்ல,
இனியா சற்று தைரியமானாள்.
நாட்கள் அது பாட்டிற்கு ஓட, இரவு உரையாடல்களில் காதல் வளர்த்தனர்.
அவளுடைய மாலை நேர நிகழ்ச்சியில், அவளுடைய தமிழ் உச்சரிப்பும், புது வார்த்தைப் பிரயோகங்களும் பெரிதும் பேசப்பட்டன.
மூன்று வாரங்களுக்குப் பின், விக்ரம் வந்த போதும் ஒரு நாள் மட்டுமே இருக்க முடிந்தது. மேலும் வேலை அவனை இழுத்துக் கொண்டது.
இனியாவிற்கு ஒரு ஹாய் சொல்லும் அளவிற்கே நேரமிருந்தது.
நண்பர்களிடம் மறைப்பது இனியாவிற்கு, சங்கடமாக இருக்க . விக்ரமிடம் இதைப் பற்றி பேச,
“வேறு இடத்தில் வேலை பார்த்தால் கூட பரவாயில்லை, ஒரே இடம், அதான் யோசிக்கிறேன், பார்க்கலாம்….” என முடித்தான்.
மீண்டும் ஹைதராபாத் பயணம், இனியா தன் நண்பர்களுடன் வெளியே சென்று வந்தாள்.
சேனலின் தொடக்க நாளைக் கொண்டாடும் பொருட்டு, “கொண்டாட்டம்” என்னும் ஷோவின் படப்பிடிப்பை இரண்டு நாட்களுக்குப் பிளான் செய்தார்கள். ‘ருசிக்கரசிக்க’ டீமில் அனைவரையும் அழைத்திருந்தனர்.
பல மாதங்களுக்குப் பிறகு அனைவரும் சந்தித்துக் கொண்டது, ஒரு கொண்டாட்ட மனநிலையை உருவாக்கியது.
எல்லோரும் கலகலத்துக் கொண்டனர். ஜாலியாக சமையலும் நடந்தது .
ரோஜா கலகலவென இருந்தாலும், கண்கள் வரை அவள் சந்தோஷம் எட்டவில்லை என்பதை இனியா கவனித்தாள்.
“அக்கா, சேர்ந்து போவோமா…?”
ரோஜாவும், “சரி…” என்றாள்.
வீடு திரும்பும் பொழுது காரில், “ஏன் அக்கா, டல்லாக இருக்கிறீர்கள்?”
“இல்லையே இனியா,,,,” எனச் சமாளிக்க,
“இல்லை அக்கா, எப்பொழுதும் உங்களிடம் இருக்கும் ஒரு துள்ளல் மிஸ்ஸிங்….”
‘ரோஜாவிற்கும் யாரிடமாவது பேசினால் நன்றாக இருக்கும்….’ என்று தோன்ற, இனியாவிடம் பேச தொடங்கினாள்.
“ஒன்றும் புரியவில்லை இனியா, எல்லாம் பேசி, நிச்சயம் செய்தால், இன்செக்யூரிட்டி போய்விடும், பாதை கிளியராகிவிடும் என நினைத்தால், இப்போது தலையீடு அதிகமாகிவிட்டது. இந்த ஷோவில் பங்கேற்காதே…. இப்படிச் செய்யாதே…. அவனோடு பேசாதே… இவனோடு பழகாதே… எனப் பல கட்டுப்பாடுகள்… என்ன செய்வதேன்றே தெரியவில்லை?” என்று புலம்பினாள்.
பின், “ஓரு நேரம் காதல் சுகமாகயிருந்தது… இப்போது சுமையாகி வருகிறது…” என வருத்தப்பட்டாள்.
“வெளியே வந்துவிடலாம் என நினைத்தால், அதற்கும் மனம் வர மாட்டேங்குது, ஒரு தயக்கம், பயம், கவலை வந்து ஒட்டிக் கொள்கிறது. ஒரே குழப்பமும், ஒரு வித மனச்சோர்வும் தான் என்னை ஆட்கொள்கிறது…” என வருத்தப்பட்டாள்.
இனியா கவலையோடு, “என்ன சொல்வதென்று தெரியவில்லை அக்கா….” என்றவள், பின் தயங்கியவாறு, “ஏன் நீங்கள் டாக்டரிடம் உதவி பெற்றுக் கொள்ளக் கூடாது?”
“அவ்வளவு பெரிய விசயமில்லை, நான் பார்த்துக் கொள்கிறேன். பரத்தோடு பேசிப்பேசி டயர்டாகி விட்டேன் என நினைக்கிறேன்…” எனச் சமாளித்தாள் .
“அக்கா அட்லீஸ்ட், ஒரு பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள், கொஞ்சம் ஃபிரஷ்ஷாகப் ஃபில் செய்வீர்கள்.”
“கஷ்டம் இனியா, இப்போது சீரியலில் எங்கள் ஜோடிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதனால் காட்சிகளை அதிகப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். பிரேக் எடுப்பது சிரமம்..” எனத் தன் நிலையை சொன்னாள்.
“இப்போது தான் கேரியர் பிக்கப்பாகுது, சந்தோஷப்பட முடியாமல் பல பிரச்சனைகள்….”
“அக்கா பிளிஸ், வீட்டில் உள்ள பெரியவர்களை முன் வைத்தாவது பேசுங்கள்…” என மீண்டும் சொன்னாள்.
“ம்ம்… பார்க்கலாம்…” என்றாள் ரோஜா.
அதற்குள் இனியா வீடு வந்து விட, “நாளை மீண்டும் பேசுவோம்…” என இனியா இறங்கினாள்.
அடுத்த நாளும் ஷூட்டிங் தூள் பறந்தது, பாடகர் பாட,சீதாம்மா அபிநயங்கள் பிடிக்க, இனியா பாட, அதைக் கேட்டு அனைவரும் ஓட, ஓட்ட… என ஒரே கும்மாளம் தான்.
ரோஜா கூட ரிலாக்ஸ் ஆன மாதிரி தான் இருந்தது. ரோஜாவோடு கிளம்ப முனைகையில், பரத் வர, ரோஜா முகம் வாடியது. பின் சமாளித்துக் கிளம்பி்ச் சென்றாள்.
இனியா, அன்று இரவு, ஷூட்டிங்கில் நடந்த கூத்தை(தான் பாடியதை மறைத்து) விக்ரமிடம் சொல்லிச் சொல்லிச் சிரித்தாள். அவன் இதில் வேறு ஏதோ விசயம் இருப்பதைப் புரிந்து கொண்டு, சேனலில் எடிட் செய்யாத எபிஷோடை வாங்கினான்.
மறு நாள் விக்ரம், இனியா பாடிய கிளிப்பிங்கை மட்டும் கட் செய்து அவளுக்கே அதை அனுப்பி, ஓட்டு ஓட்டு என ஓட்டினான்.
காண்டான ஜில்லு, “கல்யாணத்திற்குப் பிறகு தினமும் காலையில் நான் பாடிய பின் தான், தல உங்களுக்குத் திருப்பள்ளியெழுச்சி…” என அறிவித்தாள்.
“ஏம்மா, உனக்கு இந்த கொலை வெறி? கண்டிப்பாகப் பாட்டு மட்டும் வேண்டாம்…”
“நீங்கள் தான் காரியம் யாவிலும் துணையிருப்பேன் எனச் சொன்னீங்க, நான் பாட்டு கிளாஸ் போகப் போகிறேன்…” என அடுத்த குண்டைப் போட்டாள்.
“ஜில்லு, ஜில்லு, நான் தாங்கமாட்டேன்….” எனச் சரண்டரானான்.
“அப்படி வாங்க வழிக்கு, யார்கிட்ட…?” என கெத்து காட்டிப் போனை வைத்தாள். அவர்களின் காதல் பொழுதுகள் அழகாகச் சென்றன.
அத்தியாயம் 62
இரண்டு வாரம் சென்றிருக்க, “ஜில்லு, நாளை பிஸினஸ் டிரிப்பாக லண்டன் போகிறேன். எப்படியும் இரண்டு வாரம் ஆகும்…” என அறிவித்தான்.
“ஓ….! சரி, டேக் கேர்…” என வழியனுப்ப,
“என்னடா.. மாமா வெளிநாடு போகிறானே என ஒரு சின்ன வருத்தத்தைக் கூட காணோம்…” என விக்ரம் அங்கலாய்த்தான்.
“நாங்களும் காரியம் யாவிலும் கை கொடுப்போம், மேலும் நீங்கள் சென்னையில் இல்லாத போது பெங்களூர், ஹைதராபாத், லண்டன் எல்லாம் ஒன்று தான்…..”
வழக்கம் போல் நாட்கள் நகர, ஒரு வாரம் சென்றிருக்க,அனுவிடமிருந்து அதிகாலையில் போன் வந்தது.
இனியா தூக்கக் கலக்கத்தில், “என்ன அனு இந்நேரம்?”
“செய்தி பார்த்தாயா?” எனப் பதட்டப்பட்டாள்.
“எங்கே நீ தான் திருப்பள்ளியெழுச்சி செய்தாய்…” எனப் பதட்டத்தைக் கவனிக்காமல், வழக்கம் போல் வம்பு செய்தாள்.
“ யூ டுயூப்பை ஓப்பன் செய் இனியா…” என அனு பதற,
இனியா திறக்க, அதில் ரோஜாவின் தற்கொலை செய்தி ஃப்ளாஷாகிக் கொண்டிருந்தது. இனியா அதிர்ச்சியில் போனைக் கீழே போட,
“இனியா, இனியா…” எனக் குரல் கொடுத்தபடி இருந்தாள் அனு.
இனியா ஓவென்று கதற, சத்தம் கேட்டு கவிதா உள்ளே வர, அதற்குள் காவியா போனை எடுத்து அனுவிடமிருந்து செய்தியை அறிந்தாள்.
அம்மாவிடம் சொல்ல, இனியாவை கட்டிக் கொண்டு ஆறுதல் படுத்தினார் கவிதா. அழுது ஓயட்டும் எனத் தலையைக் கோதியவாறு இருந்தார்.
இதற்குள் வசந்த அழைக்க, இனியா போனை எடுக்கும் நிலையில் இல்லாததால், காவியா எடுத்துப் பேசினாள்.
“இனியா வீட்டிலே இருக்கட்டும், நாங்கள் போகும் போது கூட்டிச் செல்கிறோம். எப்படியும் மாலை ஆகிவிடும்…” என்று தெரிவித்தான்.
விசயம் அறிந்து விக்ரம் அழைக்க, காவியாவே போனை எடுக்க, இனியாவின் நிலைமையை விளக்கி, இரவு பேசச் சொல்லிப் போனைத் துண்டித்தாள்.
“ஏன் அம்மா, இப்படிச் செய்தார்கள்?” எனப் பலமுறை அழுது ஓய்ந்தவள். அப்படியே படுத்து விட்டாள்.
ஒருவாறு கவிதா,அவளை உணவு உண்ண வைத்திருந்தார்.
பின் மாலையில் நண்பர்களுடன் ரோஜா வீட்டுக்குச் சென்று வந்தாள். எதையும் உணரும் நிலையில் இனியா இல்லை… கடமையாகப் போய் வந்தாள்.
போனில் ரோஜாவைப் பற்றிய செய்திகளும்,அவளைப் பற்றிய விசாரணைகளும், படங்களுமே வர போனைத் தள்ளி வைத்தாள்.
.
மீண்டும் இரவில் விக்ரம் அழைக்க,
இனியா இருந்த மனநிலையில் போனைக் கவனிக்காமல், எடுக்காமல் விட்டாள்.
கவிதாவும், இனியா போன் பார்க்காமல் இருப்பதே நல்லது என விட்டு விட்டார்.
இனியாவின் நிலை பார்த்து, இரண்டு நாட்களுக்கு விடுப்பு சொன்னார் கவிதா.
இனியா அமைதியாக யாருடனும் பேசாமல் இருந்தாள்.
கார்த்திகேயன் பேச முற்பட, அவர் சொல்வதைக் கவனிக்காமல் , எதையோ யோசித்தபடி இருந்தாள்.