வேலை முடிந்து இரவு வீட்டுக்கு சோர்வாக வந்தான் சத்யா. அவனை எதிர் பார்த்துக் காத்திருந்தார் தீனா. அவர் அருகே சென்று அமர்ந்தவன் அலுவலக தொடர்பான அனைத்து விஷயங்களையும் சொன்னான். அவனுக்கு தேவையான மாற்றத்தையும் விளக்கினான்.
“நான் உன்னை நம்புறேன் சத்யா. உனக்கு என்ன விருப்பமோ அதை செய்”, என்று முடித்து விட்டார். அவனுக்கும் அந்த நம்பிக்கை யானை பலத்தைக் கொடுத்தது. அவர் சாதாரணமாக பேசியதே போதும் என்றும் தோன்றியது.
“சரிப்பா தூங்குங்க, நான் வரேன்”, என்று சொல்லி எழுந்து கொண்டான்.
“ஒரு நிமிஷம் இரு சத்யா”
“என்னப்பா?”
“வீணாவைப் பாத்தியா? அவங்க அப்பா எதுவும் சொன்னாரா? இல்லை நான் வேணா இன்னொரு தடவை பேசவா?”, என்று எதிர்பார்ப்புடன் கேட்டார்.
அவரை நோகடிக்க மனதில்லாமல் “இன்னைக்கு கொஞ்சம் ஆபீஸ்ல வேலை பா. நாளைக்கு போய் பாக்குறேன், பேசுறேன். கண்டிப்பா உங்க மருமகளை கூட்டிட்டு வருவேன் போதுமா?”, என்றான்.
அவர்கள் தன்னைப் பற்றி நினைத்ததைச் சொன்னால் தந்தை நிச்சயம் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று சொல்லி விடுவார் என்று அவனுக்கு தெரியும். சத்யாவை அவர் என்ன வேண்டுமென்றாலும் சொல்வார். ஆனால் மற்றவர்களை ஒரு சொல் சொல்ல விட மாட்டார். அப்படி இருக்க அவருக்கு விஷயம் தெரிந்தால் அவர் உடல் நிலை மற்றும் மனநிலை இரண்டும் பாதிக்கப் படும் என்பதால் மறைத்து விட்டான்.
தன்னுடைய அறைக்கு செல்லப் போகும் போது ஸ்ரீ அவளின் அறையில் பால்கனியில் நிற்பது தெரிந்தது. ஒரு மாதிரி சோக சித்திரம் போல தான் இருந்தாள். தந்தை அவளிடம் பேசுவதில்லை என்பதே அவளை உருக்க போதுமானதாக இருந்தது.
கூடவே இப்போதெல்லாம் அவள் உடல் நிலையும் சரியாக இல்லை. இப்போது அவளிடம் சென்று பேசவா வேண்டாமா என்று எண்ணிய சத்யாவுக்கு நிச்சயம் அது முடியாது என்றே தோன்றியது. ஆனால் கூடிய விரைவில் அனைத்து விஷயத்தையும் சரி செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
“முதல்ல வீணா விஷயத்தை முடி. அப்ப தான் நீ நீயா இருப்ப”, என்று எடுத்துரைத்தது மனசாட்சி.
அவளைப் பற்றி எண்ணிக் கொண்டே அறைக்குள் சென்றான். தூக்கம் அவனை விட்டு தூரச் சென்றது. ஒரு மாதிரி குழப்ப மேகம் அவனை சூழ்ந்து நிம்மதி இழக்க செய்தது.
குல்கர்னியிடம் அவர்கள் மகளை வேண்டாம் என்று சொல்லி விட்டு வந்து விட்டான். தீனாவிடம் அவள் தான் உங்கள் மருமகள் என்றும் சொல்லி விட்டான். அடுத்து என்ன செய்ய என்று தெரிய வில்லை.
“அதான் இருங்க தம்பி பேசலாம்னு சொன்னார் தானே? நீ தானே திமிர் பிடிச்சு வந்துட்ட?”, என்று அவன் மனதே கேள்வி எழுப்பியது.
கோபத்தில் வீரப்பாக பேசி விட்டு வந்து விட்டான். இப்போது மீண்டும் சென்று உங்கள் பெண்ணை தாருங்கள் என்று எப்படி கேட்கவாம்? குல்கர்னி மீது இருந்த கோபம் கூட கொஞ்சம் அவனை விட்டுச் சென்று இருந்தது. இப்போது ஸ்ரீக்கு இப்படி நடந்தால் அவனும் தலை கால் புரியாமல் நடந்து கொள்வான் தானே?
“அவர் மேல கோபம் போச்சு. ஆனா வீணா மேல கோபம் இருக்கு? அவ எப்படி என்னை வேண்டாம்னு சொல்லலாம்? அவங்க அப்பா சொன்னா தான் என்னை கல்யாணம் பண்ணிக்குவாளா?”, என்று எண்ணினான்.
“ஏன் டா அந்த பொண்ணை பாத்ததுல இருந்து அவளை பிடிக்கலை கல்யாணம் வேண்டாம் நிப்பாட்ட போறேன்னு சொல்லிட்டு திரிஞ்சிட்டு இன்னைக்கு சண்டை போட்டுட்டு வந்துருக்க? அவ உன்னை நம்பி உன் கூட வரலைன்னு கோப பட்டது எல்லாம் ரொம்ப ஓவர்?”, என்று குத்தி காட்டியதும் தான் அவள் பக்க நியாயமும் புரிந்தது.
தன்னுடைய தலையிலே அடித்துக் கொண்டான். சிறு சிரிப்பும் அவனுக்கு வந்தது. அப்போது அவனது மொபைல் சத்தம் கொடுக்க இந்நேரம் யார் என்று எடுத்துப் பார்த்தான்.
வீணாவிடம் இருந்து தான் தகவல் வந்திருந்தது. ஆர்வமாக அதை படித்தான். “சாரி, இன்னைக்கு நீங்க டக்குன்னு கேட்டதும் என்னால எதுவும் சொல்ல முடியலை. அதுக்காக உங்க பின்னடியே வருவேன்னும் சொல்லியிருக்க மாட்டேன். இவ்வளவு வருஷம் வளத்த அப்பா அம்மாவை விட்டுட்டு நீங்க எப்படி முதல்ல என்னை கூப்பிடலாம்? என் அப்பா பண்ணினது தப்பு தான். ஆனா நான் உங்களை தப்பா நினைக்கலை. அப்பா உங்க கிட்ட மன்னிப்பு கேக்குறதுல எனக்கு உடன்பாடு இல்லை. அதான் நானே கேட்டுட்டேன். ஒரு அப்பாவா அவர் சரியா தான் இருந்துருக்கார்ன்னு உங்களுக்கு அப்பாவாகும் போது தெரியும். நீங்க எடுத்த முடிவு சரி தான். உங்க ஆசைப்படி இந்த கல்யாணம் நின்னுருச்சு. என் கிட்ட இருந்து தப்பிச்சிட்டேன்னு சந்தோஷமா இருங்க. என்னை மாதிரி கவலை எல்லாம் பட வேண்டாம். இந்த மெசேஜ் பாத்து உடனே உங்களை கல்யாணம் பண்ண தவம் இருக்கேன்னு ஒண்ணும் நினைக்க வேண்டாம். எங்கிருந்தாலும் வாழ்கன்னு ஆம்பளைங்க நீங்க தான் சொல்லணுமா? ஏன் நாங்க சொல்லக் கூடாதா? என்னை விட சுமாரான பொண்ணைக் கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழுங்க”, என்று அனுப்பி வைத்திருந்தாள்.
இதைப் படித்து முடித்த சத்யா கண்களில் கண்ணீர் வரும் வரை சிரித்தான். அவன் மனதில் இருந்த பாரம் அனைத்தும் அப்படியே பறந்து போயிருந்தது.
“நீ என்னோட தேவதையே தான் டி. அப்படியே என்னோட கவலையை எல்லாம் தூக்கிட்டு போய்ட்ட? என்ன ஆனாலும் உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன் டி பொண்டாட்டி”, என்று வாய் விட்டுச் சொன்னவன் “மிஸ் யு வீணா”, என்று மட்டும் அனுப்பி வைத்தான்.
அதைப் படித்து முடித்தவள் முகத்திலும் அழகான புன்னகை. இருவரும் காதலிக்கிறார்களா என்று தெரியாது. அந்த காதலையும் இருவரும் பகிரவும் இல்லை. ஆனால் இருவருக்கும் இடையே ஒரு நெருக்கம் அவர்கள் அறியாமலே வந்திருந்தது.
நிம்மதியாக கட்டிலில் படுத்து கண்ணை மூடினான் சத்யன். மீண்டும் அவனது மொபைல் சத்தம் கொடுத்தது. புதிதாக ஒரு எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்தத்து.
“ஒரு வேளை வீணாவா இருக்குமோ?”, என்று எண்ணி ஆவலாக அதை எடுத்து காதில் வைத்து “ஹலோ”, என்றான்.
“என்ன சத்யா ரொம்ப சந்தோஷமா இருக்க போல?”, என்ற ஆண் குரல் கேட்டது.
“யாருங்க?”
“யாருன்னு சொல்ற அளவுக்கு நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை சத்யா. எனக்கு தேவை உன்னோட சந்தோஷம் தான். கல்யாணத்தை நிறுத்திட்டேன் பாத்தியா? இப்ப தான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கு”
“ஹேய் யார் நீ? என்ன வேணும் உனக்கு?”
“அதான் சொன்னேனே மிஸ்டர் சத்யசீலன் எனக்கு தேவை உன் சந்தோஷம் தான்னு”
“யாரு டா நீ? மாலினியோட ஆளா நீ?”
“கண்டிப்பா இல்லை. இன்னும் சொல்லப் போனா மாலினி இதை செய்ய ஒத்துக்கவே மாட்டேன்னு சொல்லிட்டா. அவ்வளவு குளோஸ் பிரண்டாமே உனக்கு? அவளையும் மிரட்டி தான் சொல்ல வச்சேன்? நீ நேரடியா போய் விசாரிச்சா அடுத்த நிமிஷம் அவ செத்துருவா. நான் எல்லாம் கொள்ள மாட்டேன் பா. அவ தான் சொல்லிக்கிட்டு இருக்கா. அவன் வந்து கேட்டா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்னு. பாத்தாலும் பாத்தேன் தெய்வீக பிரண்ட்ஷிப் தான். சரி அதை விடு. உன் கல்யாணம் நின்னதுக்கு வாழ்த்துச் சொல்ல தான் கால் பண்னேன். அடுத்த பிரச்சனை வந்த அப்புறம் கால் பண்ணுறேன் பை சத்யா”, என்று சொல்லி போனை வைத்து விட்டான்.
திருப்பி சத்யா அந்த எண்ணுக்கு முயலும் போது அது அணைத்து வைத்திருப்பதாக வந்தது. குழப்பத்துடன் படுத்தவனுக்கு என்ன முயன்றாலும் அது யார் என்று தெரிய வில்லை.