அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் தளர்ந்து அமர்ந்து விட்டார். அதே நேரம் வீணாவும் அப்படி தான் இருந்தாள். அவன் தன்னை பார்க்க வந்திருப்பதாக தகவல் வந்ததும் சந்தோஷம் வந்த அதே நேரம் இந்த திருமணத்தை நிறுத்தி விட்டோம் என்று சந்தோஷப் பட வந்திருக்கிறானோ என்று பயமாக தான் இருந்தது.

தடுமாற்றத்துடன் தான் அவன் முன்னே போய் நின்றாள். அவளைக் கண்டவன் முறைத்துப் பார்த்த படி அவள் அருகே வந்தான். முன்பு அப்படி பார்ப்பான் தான். ஆனால் இப்போதெல்லாம் அவளைக் கண்டதும் அவன் முகம் மலர்ந்தே தான் இருக்கும். இன்று மீண்டும் முறைக்கவும் கஷ்டமாக இருந்தது.

“வாங்க”, என்றாள்.

“உங்க அப்பா சொன்னாருன்னு என்னைக் கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்ட. அவர் வேண்டாம்னு சொன்னதும் அப்படியே ஒதுங்கிட்டல்ல? சரி ஓகே. அதுக்குன்னு என்னோட போனைக் கூட எடுக்க முடியாதா உன்னால?”

“அது நான்.. நான் வந்து….”, என்று தடுமாறினாள்.

“எந்த பொய்யான காரணமும் எனக்கு வேண்டாம். இப்ப நம்ம கல்யாணம் வேண்டாம்னு உங்க அப்பா சொல்லிட்டார். நீ என்ன முடிவு பண்ணிருக்கன்னு கேட்டுட்டு போகலாம்னு தான் வந்தேன். சொல்லு உன் முடிவு என்ன?”

“இல்லை… அப்பா..”

“உன் அப்பா தான் எந்த காரணமும் இல்லாமல் வேண்டாம்னு சொல்லிட்டாரே? அப்ப உனக்கும் நான் வேண்டாம் தானே?”

“இல்லை.. அப்படி எல்லாம் இல்லை”

“அப்படியா? சரி வா. இப்பவே நாம கல்யாணம் பண்ணிக்கலாம். யாரும் நமக்கு வேண்டாம். இனி உனக்கு எல்லாமா நான் இருப்பேன். என் வீட்ல உள்ளவங்களை கூட விட்டுறலாம். என்னை நம்பி வருவியா?”, என்றவன் அதிக எதிர்பார்ப்புடன் அவளைப் பார்த்தான்.

அவளுக்கோ அவன் கேள்வியே சரியாக புரிய வில்லை. அவன் ஒன்றும் அவளை காதலிக்க வில்லை. இத்தனைக்கும் அவளைப் பிடிக்க வில்லை, இந்த திருமணம் வேண்டாம் என்று தான் சொல்லிக் கொண்டிருந்தான். அப்படி இருக்க இன்று இப்படி பேசினால் அவள் என்ன நினைக்கவாம்?

அவள் அமைதியாக இருக்க “சரிங்க வீணா மேடம், உங்க அப்பா பாக்குற நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருங்க. நான் வரேன்”, என்று சொன்னவன் அவள் யோசித்துக் கொண்டு நிற்கும் போதே அங்கிருந்து சென்று விட்டான்.

“எனக்கு உன்னைப் பிடிக்கும் டி”, என்று அவன் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் அவளும் அவள் மனதைச் சொல்லியிருப்பாள். அப்பாவிடம் நான் சம்மதம் வாங்குகிறேன் என்று கூட சொல்லியிருப்பாள். அவளை யோசிக்க கூட விடாமல் அங்கிருந்து சென்றே விட்டான். அப்படியே ஸ்டாப் ரூம் சென்று அமர்ந்து விட்டாள். அடுத்தடுத்து கிளாஸ் இருப்பதால் அதில் கவனம் செலுத்த நினைத்தாலும் வெகுவாக சோர்ந்து தான் போனாள்.

அவன் என்ன நினைக்கிறான்? இந்த திருமணம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறானா தன்னை பிடித்திருக்கிறதா என்று புரியாமல் குழம்பித் தவித்தாள்.

            அதே நேரம் குல்கர்னியும் அப்படி தான் இருந்தார். மாலை வரை அவருக்கு எதுவும் ஓட வில்லை. மகளை அழைக்க பள்ளிக்குச் சென்றார். அமைதியாக நடந்து வந்தாள். அவள் முகம் காலையில் இருந்த லேசான மலர்ச்சி கூட இல்லாமல் சோர்வாக இருந்தது. என்ன சொல்லியிருப்பான் என்று அவருக்கும் புரிந்தது.

“மதியம் சாப்பாடு கொண்டு வர மறந்துட்டேன் பாப்பா. சாப்பிட்டியா ஏதாவது?”, என்று கேட்டவருக்கு என்ன சொல்ல என்று தெரியாமல் “சாப்பிட்டேன் பா. பிரண்ட் கொடுத்தா”, என்று சமாளித்தாள். உண்மையில் வீணா சாப்பிட மறந்து தான் இருந்தாள். அது அவளது தந்தைக்கும் புரிய தான் செய்தது.

வீணா அவரிடம் சாதாரணமாக பேசினாலும் உள்ளுக்குள் ஒரு மாதிரி நொறுங்கி பொய் இருப்பது கண்டு கஷ்டமாக இருந்தது.

            போதா குறைக்கு “அப்பா நான் ரெண்டு நாள் லீவ் போட்டுக்கவா?”, என்று கேட்டாள்.

            “போட்டுக்கோ டா. ஆனா என்ன?”

            “ஈஸியா நடந்ததை கடந்து வரணும்னு தான் பா நினைச்சேன். ஆனா இங்க எல்லாரும் கேள்வி கேக்குறாங்க. துக்கம் விசாரிக்கிற மாறி இருக்கு. ஒரு மாறி மூச்சு முட்டுது பா”, என்ற பெண்ணை பார்க்கையில் அவர் செய்த தப்பு அவருக்கு பூதாகரமாக இருந்தது.

            “குட்டி மா உன் கிட்ட கொஞ்சம் பேசணும் டா. பார்க்ல உக்காந்து பேசிட்டு போகலாமா?”

            “சரிப்பா, ஆனா நான் ஓகே தான். என்னை நினைச்சு கவலைப் படாதீங்க”

            “இல்லை டா இது வேற விஷயம்”, என்று சொன்னவர் பார்க்கில் வண்டியை நிறுத்தி விட்டு மகளுடன் உள்ளே சென்று அமர்ந்தார்.

            அந்த மாலை வேளையும் முகத்தில் படும் மிதமான தென்றலும் அவளுக்கு சத்யாவை நினைவு படுத்தியது. நிச்சயம் நல்ல படியாக நடந்திருந்தால் அவனைக் கூட இங்கே வரச் சொல்லி இருக்கலாம் என்று எண்ணியது அவள் மனது.

            சிறிது நேரம் கழித்து தான் தந்தையும் ஏதோ யோசனையில் இருப்பது புரிந்தது. “என்ன ஆச்சு பா?”, என்று கேட்டு அவரைக் களைத்தாள்.

            “அப்பா ஒரு தப்பு பண்ணிட்டேன் டா”

            “என்ன ஆச்சு பா?”

            “கொஞ்சம் அவசரப் பட்டு எல்லாத்தையும் கெடுத்துட்டேன். அப்பா எல்லதையும் சரி பண்ணுறேன் டா. யார் கைல கால்ல விழுந்தாவது உன்னை நல்லா வாழ வைப்பேன் டா அம்மு”

            “அப்பா ரிலாக்ஸ். எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க?”, என்று கேட்ட படி அவர் நெஞ்சை நீவி விட்டவள் அவர் கையை பற்றிக் கொண்டாள். தன்னுடைய பையில் இருந்த தண்ணீரை அவருக்கு குடிக்க கொடுத்தாள்.

            அவள் கொடுத்த தண்ணீரை வாங்கிக் குடித்தவர் நடந்ததை விளக்க அவளுக்கே ஐயோ என்று தான் இருந்தது. அதுவும் அவன் இன்று நேரில் வந்து பேசியதும் அவன் வந்த காரணத்தையும் கேட்டு சந்தோஷப் படுவதா இல்லை அவன் ஒரேடியாக அவளை உதறி விட்டுச் சென்றதை நினைத்து அழுவதா என்று கூட தெரிய வில்லை.

            அவனின் தன்மானம் சீண்டப் பட்டிருக்கிறது என்னும் போதும் அவன் அப்படி தானே யோசிப்பான் என்று அவனுக்கு வக்காலத்து வாங்கியது அவள் மனது.

            “நேத்து சொல்லியிருக்கலாமே பா? அத்தனை தடவை கேட்டாங்களே?”, என்றாள்.

            “எதுக்குன்னு தெரியலை, நேரடியா அவரை அப்படி கேட்டு அசிங்க படுத்திறக் கூடாதுன்னு நினைச்சேன். ஆனா கேக்காமலும் அசிங்கப் படுத்தி தான் அனுப்பிருக்கேன்னு இன்னைக்கு அவர் சொன்ன அப்புறம் தான் புரிஞ்சது டா”

            “நீங்க கேட்டதுக்கு ஏதாவது விளக்கம் கொடுத்தாரா பா?”

            “இனி விளக்கம் சொல்லி எதுக்குனு சொல்லாம போய்ட்டார் பாப்பா. ஒரு நல்ல மனுசனை கஷ்ட படுத்திட்டேனோ?”

            “சரிப்பா விடுங்க. நீங்க என்னோட அப்பா. அந்த நிமிஷம் உங்க கண்ணுக்கு நான் மட்டும் தான் தெரிஞ்சிருப்பேன். அதனால சட்டுனு முடிவு எடுத்துட்டீங்க. இது ஒண்ணும் கொலைக் குத்தம் இல்லை. அதனால விடுங்க”, என்று சமாதானம் செய்தாள்.

            “ஆனா மாப்பிள்ளை”

            “அதுக்கு என்ன பண்ண பா? அவங்க தான் வேண்டாம்னு சொல்லிட்டு போய்ட்டாங்களே?”

            “நம்ம மேல தப்பு இல்லைன்னா அப்படியே விட்டுறலாம் டா. ஆனா இப்ப தப்பு என் பக்கம். நான் மன்னிப்பு கேக்கணும்”

            “அது உங்க விருப்பம். ஆனா எனக்காக நீங்க கெஞ்சிட்டு எல்லாம் இருக்க வேண்டாம். நடக்குறது நடக்கட்டும் பா”

            “என்ன டா இப்படி சொல்லிட்ட?”

            “உங்களைப் பாக்க வறதுக்கு முன்னாடி அவர் என்னையும் பாக்க வந்தார் பா”

“சொன்னார் மா. ஆனா என்ன பேசினார்ன்னு சொல்லலை”, என்று கேட்டதும் அவன் வந்ததை சொல்ல ஆரம்பித்தாள். அதைக் கேட்டு அவருக்கு ஐயோ என்று இருந்தது.

“நீயாவது அவரை பிடிச்சிருக்குன்னு சொல்லியிருக்கலாம்ல வீணா?”

“அவர் மனசும் எனக்கு தெரியலை. நீங்க என்ன முடிவு எடுக்குறீங்கன்னும் தெரியலை. அவரை பிடிச்சிருந்தாலும் உங்களை எல்லாம் விட்டுட்டு எப்படிப் பா அவர் கூட போவேன்?”

“அது அப்படி இல்லை வீணாம்மா. ஆம்பளைங்க மனசு ரொம்ப விசித்திரமானது. தன்னை நம்பி வரவங்களை உள்ளங்கையில வச்சு தாங்கணும்னு எதிர் பாக்கும். ஆனா இந்த இடத்துல நீ என் மேல வச்ச நம்பிக்கையை தான் அவருக்கு புரிய வச்சிருக்க. சரி விடு. எல்லாம் சரி பண்ணலாம். உனக்கு அவர் தான் துணை. கண்டிப்பா அப்பா இந்த கல்யாணத்தை நடத்தி வைப்பேன். இனி எப்பவாது மாப்பிள்ளை வந்து பேசினா நல்ல படியா பேசு டா”

“சரிப்பா”

“வீட்டுக்கு போகலாமா? அம்மா தேடுவா”, என்று சொல்லி மகளை அழைத்துச் சென்றார். இப்போதும் இருவரின் மனதிலும் சத்யாவைப் பற்றிய நினைவு தான். ஆனால் அவனை சரி செய்து விடலாம் என்ற சிறு நம்பிக்கை இருந்தது.