மழைவர பூமி மறுத்திடுமா? – 27

மாலதிக்கு அண்ணன் அருளின் அந்த மௌனமான ஒதுக்கம் நெஞ்சில் வலித்தாலும், எழுந்து நின்று அவனிடம் கைகூப்பி, “நான் செஞ்சது பெரிய துரோகம்தான் அண்ணா… என்னைக்காவது உன்னால என்னை மன்னிக்க முடிஞ்சா மன்னிச்சிடுண்ணா…” என்றவள், யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக, “உங்களையும் நான் ரொம்ப நோகடிச்சிருக்கேன்… என்னை மன்னிச்சிடுங்க அண்ணி…” என்று வேதிகாவிடமும் கைகூப்பித் தன் மன்னிப்பை வேண்டினாள்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத வேதிகா அதிர்ந்து போய் அவளையே பார்த்திருக்க… மாலதி தன் கணவன் முரளியின் அருகில் நெருங்கிச் சென்று, “நீங்க ஏற்கனவே இதைப் பத்திச் சொன்னப்ப எனக்குப் புரியலைங்க… அம்மா நம்ம நல்லதுக்குத்தானே சொல்லுவாங்கன்னு கண்மூடித்தனமா இருந்துட்டேன்! இனி நான் எக்காரணம் கொண்டும் இந்த வீட்டுக்கு வர மாட்டேன்… அம்மாவையும் நம்ம வீட்டுக்கு வர வேணாம்னு சொல்லிடுறேன்! அவங்க இனி என்ன பேசினாலும் நான் யாருக்கும் கெடுதல் நினைக்க மாட்டேங்க… இந்த ஒருமுறை என்னை மன்னிச்சு ஏத்துக்கங்க! உங்களை விட எனக்கு இந்த உலகத்துல எதுவுமே முக்கியமில்லை…” என்று அவனது கைகளைப் பற்றிக் கதறி அழுதாள்.

கல்யாணிக்குத் தன் மூத்த மகளின் வாழ்க்கை இப்படி நிலையற்று இருக்கிறதே என்று பெரும் கவலை வந்தது. “மாப்பிள்ளை… மாலதிதான் இவ்வளவு தூரம் சொல்றாளே…” என்று அவளுக்காகப் பரிந்து பேச முயற்சிக்க…

மாலதி வேகமாகத் தன் அன்னையைத் திரும்பிக் கையெடுத்துக் கும்பிட்டவள், “உன்னால நான் பட்ட கஷ்டமெல்லாம் போதும்மா… இனிமே தயவுசெஞ்சு என்னை விட்டுடு! நான் உனக்குப் பிறக்கவே இல்லைன்னு நினைச்சுக்க… தயவுசெஞ்சு என் குடும்பத்தைக் கெடுக்காதம்மா…” என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்ல… கல்யாணி உடைந்து போனார். அவருக்கு கவிதாவும் அருளும் இப்படிச் சொல்லியிருந்தால் நெஞ்சில் எந்தவொரு உறுத்தலும் இருந்திருக்காது; ஆனால், இப்படிச் சொல்வது அவரது அருமை மகள் மாலதி ஆயிற்றே!

‘தான் போற்றிப் புகழும் மகள், இன்று அவளது சொந்த வாழ்க்கை என்று வரும்போது… தன்னையே தூக்கி எறியத் தயாராக இருக்கிறாளே!’ கல்யாணியால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை.

“இந்த விஷயம் பத்தி உங்க எல்லாருக்கும் சொல்லலாம்ன்னுதான் இங்க வர சொன்னேன்… இனி எல்லாரும் கொஞ்சம் கவனமா இருங்க…” என்று அங்கிருந்த அனைவரிடமும் முரளி பொதுவாகச் சொன்னவன்… “மச்சான்… நீங்களும் இவங்ககிட்ட இருந்தெல்லாம் எப்பவும் ஒதுங்கியே இருங்க! உங்களுக்கும் இப்ப பொண்டாட்டி, பிள்ளைங்கன்னு ஒரு குடும்பம் இருக்கு…” என்று அருளிடமும் நேரடியாகக் கூறினான். அருளுக்கோ, தான் ஏன் இவ்வளவு பெரிய ஏமாளியாக இருக்கிறோம் என்று நினைத்துத் தன்னிறக்கமாகப் போய் விட்டது.

அவனது தற்போதைய நிலையுணர்ந்த முரளி, அவனது தோளை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தான். அருள் தன் மச்சானை நன்றியோடு ஏறிட்டுப் பார்த்தான். இவர் மட்டும் இன்று இந்தச் சதியைக் கண்டறிந்து தடுத்திருக்கவில்லை என்றால்… அவனது ஒட்டுமொத்த நிலையும் என்னவாகியிருக்கும் என்று அவனால் யோசிக்கவே முடியவில்லை!

“ஆமா அருளு… நீ இவ்வளவு நல்லவனா இருக்காதப்பா! உங்க அம்மா மாதிரி ஆளுங்க வாயையெல்லாம் நாம என்ன செஞ்சாலும் அடைக்க முடியாது. உன்னோட உரிமையை நீ வேணும்னா அவங்களுக்காக விட்டுக்கொடுக்கலாம்… ஆனா எங்களால அதை வேடிக்கை பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது!” என அத்தைகளான புவனாவும் சந்திராவும் ஆதங்கப்பட்டனர்.

அவர்களின் அந்த மாசற்ற அன்பும் ஆதரவும் அவனது காயப்பட்ட மனதுக்கு இதம் சேர்த்தது. “பார்த்துக்கலாம் விடுங்க அத்தை… இப்போதைக்குக் கவிதா கல்யாணத்தை நல்லபடியா முடிச்சா போதும் எனக்கு…” என்றவன், தன் முகத்தை இரு கரங்களால் அழுந்தத் துடைத்துக் கொண்டான். வாழ்க்கையில் எத்தனை முறைதான் அவனும் இப்படி நிராதரவாக நிற்பது? கொண்ட காயங்கள் ஆறும் முன்பே மீண்டும் மீண்டும் இப்படிப் பலமாகக் காயப்பட்டால்… அவனும் தான் என்ன செய்வான்? உள்ளுக்குள் தூள் தூளாக உடைந்து கொண்டேயிருக்கிறான்!

வேதிகாவிற்குத் தன் கணவனை அப்படித் தளர்ந்த நிலையில் பார்க்கவே முடியவில்லை. மீண்டும் அவனது தோளினை ஆதரவுடன் அழுத்திக் கொடுத்தாள். அவளை ஏறிட்டுப் பார்த்தவன், தன் நெஞ்சில் இருந்த வலியோடு லேசாகப் புன்னகைத்தான். ‘உன்னையும் என்னோடு இந்தப் புதைகுழியில் இழுத்து விட்டுவிட்டேனே…’ என்று கலக்கத்துடன் மொழிந்தன அவனின் கண்கள்.

அவள் அவனின் பார்வையை உணர்ந்து, அவனை முறைத்துப் பார்த்தாள். அவன், அவள் வாழ்வில் என்றுமே வரம்தான்! பணக்கஷ்டம் எல்லாம் அவர்களால் கடந்து வர முடியாத ஒன்றா என்ன? பூஜ்ஜியத்திலிருந்து அவனோடு தன் வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்குக் கூட அவள் சித்தமாய் இருக்கிறாளே! அவனது உன்னதமான நேச மழையில் நனைந்த பிறகுதானே, அவளே அவளாக மீண்டிருக்கிறாள்! அப்படியிருக்க, அவனோடான இந்த வாழ்வை அவள் எப்போதாவது குறையாகப் பார்ப்பாளா என்ன? அது அவளால் முதலில் முடியுமா?

தன் மனைவியின் கோபத்தில் அவளது நேசம்தான் பிரதிபலித்தது. அருள்மித்ரனுக்குள் இப்போது தன்போல பலம் வந்தது போல உணர்ந்தான். அவளோடு இருந்தால், வாழ்க்கையில் எத்தகைய சோதனைகள் வந்தாலும் எப்படியும் முன்னேறிவிடுவானே! அவனது விழிகள் நேசத்தில் நீர் கோர்த்துக் கலங்கின.

வேதிகா, ‘கலங்காதே’ என்று தலையசைத்துத் தேற்றுவது அவனுக்கு மங்கலாகத் தெரியவும், மீண்டும் தன் முகத்தை இரு கரங்களால் அழுந்தத் துடைத்துக் கொண்டான். இப்பொழுது அவனுள் ஒரு பெரும் திடம் பிறந்திருந்தது! இனி என்ன வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்பது போல!

“இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும் மாலதி…” என்ற கடுமையான எச்சரிக்கையுடன் தான் முரளி தன் மனைவி மாலதியை மீண்டும் வீட்டுக்கு அழைத்துப்போனான்.

அங்கு யாருமே கல்யாணியிடம் மேற்கொண்டு எதுவும் பேசும் மனநிலையில் இருக்கவில்லை. கவிதாவைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்குப் புறப்பட்டார்கள். கவிதாவும் அன்னையின் முகத்தில் விழிக்கப் பிடிக்காமல் அறைக்குள் அடைந்து கொண்டாள்.

‘தனக்குத் திருமணம் என்றதுமே இப்படிப் பிரச்சனை செய்கிறார்களே!’ என்று நினைத்து, கவிதாவுக்கு மனமே வெறுத்துப் போனது.

கவிதாவின் திருமண வேலைகளில் கூட அருள்மித்ரன் தன் அன்னையிடமோ, மாலதியிடமோ மேற்கொண்டு எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவனுக்கு அந்த உறவுகளின் மீது மனம் விட்டுப்போனது. அவன் தன் சக்திக்கு உட்பட்டு மேலும் கடன் வாங்கி, இளைய தங்கை கவிதாவின் திருமணத்தையும் எவ்விதக் குறையுமின்றி நல்லபடியாக முடித்து வைத்தான்.

கூடவே… தன் தந்தையின் பழைய மெக்கானிக் கடையை அப்படியே விட்டுவிட்டு, தனக்கான ஒரு புதிய தனிக்கடையை வாடகை இடத்தில் அமைத்துக் கொண்டான். புதிய கடையில் அவன் வாங்கிய அத்தனை இயந்திரப் பொருட்களும் அவனது சொந்தப் பணத்தில் தனியாக, புதிதாக வாங்கியவைதான்.

இந்தச் செலவுகளுக்கெல்லாம் அவனுக்குப் பணம் நிறையத் தேவைப்பட்டது; மேலும் மேலும் கடன்பட வேண்டிய சூழ்நிலைதான். ஆனாலும், இனிமேலும் அவனால் தன் அப்பா விட்டுச் சென்ற கடையை உரிமையோடு உபயோகிக்க முடியாது. அன்று முரளி மச்சானின் தயவால் அவனது அம்மாவின் சதித்திட்டம் பலிக்காமல் போயிருக்கலாம்; ஆனால், ஒருமுறை அவருக்குள் அந்த எண்ணம் வந்துவிட்டதே! மீண்டும் அவருக்கு அந்த வாய்ப்பை அவன் அளிக்கக் கூடாது அல்லவா!

தன் தாயிடம் கடையின் சாவியைக் கவிதா மூலம் சேர்ப்பித்தான் அருள். கவிதா அதை அவரிடம் கொடுக்கும் போதே, “கடை, உள்ளே இருக்கிற பொருளுங்க எல்லாம் அப்படியே இருக்கு. அண்ணன் அதுல இருந்து எதையும் எடுக்கலை! நானும் அண்ணனும் பங்குக்கு வர மாட்டோம்… நீங்க என்ன வேணா பண்ணிக்கங்க!” என்று அவரது முகத்தில் அடித்தாற்போலத் சொல்லிவிட்டுத்தான் அங்கிருந்து வந்திருந்தாள்.

கல்யாணிக்குத் தனிமை என்னும் நரகம், முதுமைக் காலத்தில் பெரும் கொடுமையாக மாறியிருந்தது. முன்பெல்லாம் தனக்கு என்ன வேண்டுமோ அதைத் தன் மகனிடம் சொல்லிவிடுவார்; வீட்டுச் செலவுக்கு இவ்வளவு கொடுத்தாக வேண்டும் என்று கறாராகப் பேசி வாங்கியும் விடுவார். ஆனால் இப்பொழுதோ… அவரால் அவனிடம் பேசவே முடிவதில்லை. அவரது அலைபேசி அழைப்பை அவன் எப்போதுமே ஏற்பதில்லை. மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை மட்டும் அவரது கைக்குத் தவறாமல் வந்து சேர்ந்துவிடுகிறது; அப்படிப் பணம் தருவதற்காக வீட்டிற்கு வருபவனும், அதை அவரிடம் தந்வுடன் அங்கிருந்து கிளம்பியும் விடுகிறான். அவரோடு இருக்கவே வெறுக்கிறான் என்பது வந்தவுடன் அவசரமாக கிளம்பும் அவன் செய்கையிலேயே கல்யாணிக்குப் புரிந்தது.